புதன், 26 ஆகஸ்ட், 2020

குறளின் குரல்!

 


உறவொன்றும் கேட்கவில்லை! அன்னைக் குள்ளே
     உருவொன்று கருவாகி உயிரைப் பெற்றோம்!
அறமொன்றும் அறியவில்லை! வயிற்றுக் குள்ளே
    அறிவொன்றும் வளரவில்லை! பத்தாம் திங்கள்
பிறப்பென்று பூமிதனில் பிறந்து விட்டோம்!
    பிற்கால வாழ்வில்நற் பயனைக் கொள்ளக்
குறளென்ற திருமறையைக் கொடுத்துச் சென்ற
    கோவிலில்லா வள்ளுவரின் வழியில் செல்வோம்!
 
அன்புடைய வாழ்க்கைவாழ அறத்துப் பாலில்
    அழுக்காறாமை, வெகுளாமை, மெய்யு ணர்தல்,
இன்பமதைப் பெறுவதற்கே புறங்கூ றாமை,
    இனியதையே கூறல்,மெய் உணர்தல், ஈகை,
துன்பத்தைப் போக்கிடவே மக்கட் பேறு,
    துறவு,அவா அறுத்தலுடன் ஊழும், வாய்மை,
பொன்பொதிந்த தலைப்புகளில் புலமை கொஞ்சப்
    புகழ்பெற்று வாழ்ந்திடவே வழியைத் தந்தார்!
 
பண்புடனே வாழ்ந்துயர்ந்து வீரம் கொள்ளப்
    படைமாட்சி, படைச்செருக்கு, பொச்சா வாமை,
கண்ணோட்டம், வினைசெயலின் வகைகள், தூது,
    காலமறிந்(து) அவையறிவைப் பொருளில் சேர்த்தார்!
பெண்வழிசேர்ந்(து) உட்பகையும், பழைமை, சூதும்,
    பேதைமையும், தீநட்பும், இகலும் போக
மண்ணுலகில் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
    மானமுடன் குடிமைதந்து பெருமை சேர்த்தார்!
 
வஞ்சியுடன் கற்புநிலை வாழ்வில் வாழ
    வகைபிரித்துக் காதற்சீர் உரைத்தல், பெண்ணின்
நெஞ்சிற்குள் நின்றாடும் அலர்அறிவு றுத்தல்
    நிறைஅழிதல், நலம்புனைந்(து) உரைத்தல், தன்னுள்
விஞ்சிவரும் படர்மெலிந்(து) இரங்கல், கண்கள்
    விதுப்பழித்தல், உறுப்புநலன் அழிதல், கற்பாய்க்
கொஞ்சிவர அவர்வயின்வி தும்பல் போன்ற
    குறிப்புகளை இன்பத்தில் இனிதாய்ச் சேர்த்தார் !
 
நூற்றுமுப்பத் துமூன்(று) திகாரம் எல்லாம்
    நுட்பமாய்நன்(கு) ஆராய அருளே வேண்டும்!
நாற்றுப்போல் நானிருக்கேன்! நவின்ற சொற்கள்
    நற்றமிழின் மழையினிலே பொதிந்த வேர்கள்!
காற்றைப்போல் தொடமுடியா உயர்வைக் கொண்ட
    கருத்துள்ள குறள்நெறியில் உலகில் வாழ்ந்தால்
கூற்றுவனே கொண்டுசென்ற பின்பும் கூடக்
    குறள்கொடுத்த உறவாலே உயர்ந்தே நிற்போம்!

பாவலர் அருணா செல்வம்

1 கருத்து: