Wednesday, 2 July 2014

சாமி இருக்கா? இல்லையா? (நிகழ்வு)


நட்புறவுகளுக்கு வணக்கம்.

     இது கொஞ்ச வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. இதில் வரும் ஆறு வயது பெண்ணைப் போன வாரம் ஒரு விழாவில் பார்த்ததும் இந்த நிகழ்வு என் ஞாபகத்தில் வந்தது.

முதலில் அன்று நடந்ததைச் சொல்கிறேன்.

    என் கணவரின் நண்பர் மகனுக்குப் பத்து வயது என்றதால் அவர்கள் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு நான் என் கணவர் என் குழந்தைகள் இருவர், மற்றும் இன்னொரு நண்பர் அவர் மனைவி அவர்களின் இரண்டு குழந்தைகள் மட்டுமே அழைத்திருந்தார்கள். எங்களுடன் பையனின் தாத்தா பாட்டியும் இருந்தார்கள்.
    சனிக்கிழமை இரவு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. ஞாயிறு அங்கேயே தங்கிவிட்டோம்.
    அன்று மதியம் பிறந்தநாள் பையனை அவன் சித்தப்பா ஏதோ பரிசு வாங்கித்தருவதாகச் சொல்லி எங்கேயோ அழைத்துச் சென்று விட்டான்.
    அதன் பிறகு நாங்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் அந்த டெலிபோன் வந்தது.
   அவர்கள் சென்ற இடத்தில், விபத்து நடந்து விட்டதாகவும் பையனுக்கு பலமாக அடிபட்டு விட்டதாகவும், மூச்சு பேச்சு எதுவும் இல்லையென்றும், உடனடியாக மருத்துவமனைக்கு வர சொல்லி அழுதுக்கொண்டே அவனின் சித்தப்பா சொன்னான்.
    இதைக் கேட்டதும் அவனின் தாய் மது முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அவள் அழுவதைக் கண்டதும் ஆண்கள் அனைவரும் எங்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் போன் பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தார்கள்.
   மது அழுதுக்கொண்டே இருந்தாள். அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நாங்களும் கவலையுடன் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்தில் மது “என் பிள்ளைக்கு ஒன்றும் இல்லை என்ற நல்ல செய்தி வரும் வரையில் நான் சாமி அறையை விட்டு வெளியில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு பூஜை அறையிலேயே அமர்ந்துகொண்டு பிராத்திக்க ஆரம்பித்து விட்டாள்.
  இதைக் கண்டதும் அவளின் மாமியாருக்குக் கோபம். “க்கும்... இவளுக்கு வேற வேலையே இல்லை. எப்பப்பாரு சாமி சாமின்னே இருப்பா. இவ கும்பிடுற அந்த சாமி மட்டும் உண்மையா இருந்திருந்தா எம்பேரனுக்கு இப்படி ஆயிருக்குமா.....? அதெல்லாம் சும்மா.... எழுந்து இங்க வந்து உக்காரு“ என்று கத்திச் சொன்னாள் மாமி.
   அந்த மாமி தீவிர திராவிடம். நண்பர் இந்தப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதால் அவளுடைய சாமி பக்தியை இவரால் மாற்ற முடியவில்லை.
   அவள் மாமியாரின் பேச்சைக் கேட்கவில்லை. இந்த மாமி தொடர்ந்து “சாமியெல்லாம் இல்லை. அதெல்லாம் சும்மா....“ என்று சொன்னபடி இருந்தாள்.

   அந்த நேரத்தில் விழாவிற்கு வந்திருந்த இன்னொரு தோழியின் மகள் பப்பு அவள் தாயிடம் வந்து, “அம்மா அன்னைக்கி சாமி இருக்குன்னு சொன்ன. இந்த பாட்டி இல்லன்னு சொல்லறா. உண்மையில சாமி இருக்கா இல்லையாம்மா...“ என்று சத்தமாகக் கேட்டாள். அந்தக் குழந்தை அப்படிக் கெட்டதும் தோழிக்கு மிகவும்  தர்மசங்கடமாகப் போய் விட்டது. “எதுவா இருந்தாலும் அப்புறமா சொல்லுறேன். இப்போ போய் விளையாடு“ என்று சற்று கோபமாக சொல்லவும் குழந்தை பயத்துடனே அங்கிருந்து சென்று விட்டாள்.

    கொஞ்ச நேரத்தில் போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.  நான் போய் எடுப்பதற்குள் பப்பு போனை எடுத்துவிட்டாள். நான் கை நீட்டிக் கேட்பதற்குள் “சாமி இருக்குதா இல்லையான்னு இன்னும் தெரியலை. நீங்க அப்புறமா போன் பண்ணுங்கள்“ என்று சொல்லிலிட்டு போனை அதனிடத்தில் வைத்து விட்டாள்.
   அதற்குள் அங்கே வந்த பப்புவின் அம்மா அவள் கையில் ஒரு கிள்ளுகிள்ளி விட்டு “உன்னை போன் எடுக்கக்கூடாதுன்னு எத்தனை முறை சொல்லுறது. கேட்க மாட்டே. சரி. பேசிட்டு எங்க கிட்டேயாவது கொடுத்திருக்கலாம் இல்ல....“ என்றாள் பல்லைக் கடித்தபடி கோபமாக.
   “போனுல ஒருத்தர், சாமி இருக்கா என்று கேட்டார். நான் சாமி இருக்கா இல்லையான்னு தெரியலை. அப்புறமா போன் பண்ணுங்கள்ன்னு சொன்னதும் போனை வச்சிட்டார். அதனால நானும் வச்சிட்டேன்.“ என்றாள் அழுதபடி.
   “பாரு அருணா.... போன் வந்தா பெரிய மனுஷிமாதிரி இவதான் உடனே போனை எடுக்கிறா. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்திட்டேன். கேட்கல. எங்க வீட்டுல போனைத் துர்க்கி உயரமான எடத்துல வச்சிட்டேன். இருந்தாலும் மேலே ஏறி எடுத்திடுறா. என்ன செய்யிறதுன்னே தெரியலை“ என்றாள் கவலையாக.
    நான், “சரி விடு. ஆனால் இந்த நேரத்தில் யார் அது இந்த மாதிரி கேள்வி கேட்டு போன் பண்ணுவது“ என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.

(தொடரும்)
பதிவு மிகவும் நீண்டு இருப்பதால் அடுத்த பதிவில் மீதியைச் சொல்கிறேன்.

அருணா செல்வம்.

02.07.2014