புதன், 2 ஜூலை, 2014

சாமி இருக்கா? இல்லையா? (நிகழ்வு)


நட்புறவுகளுக்கு வணக்கம்.

     இது கொஞ்ச வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. இதில் வரும் ஆறு வயது பெண்ணைப் போன வாரம் ஒரு விழாவில் பார்த்ததும் இந்த நிகழ்வு என் ஞாபகத்தில் வந்தது.

முதலில் அன்று நடந்ததைச் சொல்கிறேன்.

    என் கணவரின் நண்பர் மகனுக்குப் பத்து வயது என்றதால் அவர்கள் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு நான் என் கணவர் என் குழந்தைகள் இருவர், மற்றும் இன்னொரு நண்பர் அவர் மனைவி அவர்களின் இரண்டு குழந்தைகள் மட்டுமே அழைத்திருந்தார்கள். எங்களுடன் பையனின் தாத்தா பாட்டியும் இருந்தார்கள்.
    சனிக்கிழமை இரவு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. ஞாயிறு அங்கேயே தங்கிவிட்டோம்.
    அன்று மதியம் பிறந்தநாள் பையனை அவன் சித்தப்பா ஏதோ பரிசு வாங்கித்தருவதாகச் சொல்லி எங்கேயோ அழைத்துச் சென்று விட்டான்.
    அதன் பிறகு நாங்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் அந்த டெலிபோன் வந்தது.
   அவர்கள் சென்ற இடத்தில், விபத்து நடந்து விட்டதாகவும் பையனுக்கு பலமாக அடிபட்டு விட்டதாகவும், மூச்சு பேச்சு எதுவும் இல்லையென்றும், உடனடியாக மருத்துவமனைக்கு வர சொல்லி அழுதுக்கொண்டே அவனின் சித்தப்பா சொன்னான்.
    இதைக் கேட்டதும் அவனின் தாய் மது முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அவள் அழுவதைக் கண்டதும் ஆண்கள் அனைவரும் எங்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் போன் பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தார்கள்.
   மது அழுதுக்கொண்டே இருந்தாள். அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நாங்களும் கவலையுடன் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்தில் மது “என் பிள்ளைக்கு ஒன்றும் இல்லை என்ற நல்ல செய்தி வரும் வரையில் நான் சாமி அறையை விட்டு வெளியில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு பூஜை அறையிலேயே அமர்ந்துகொண்டு பிராத்திக்க ஆரம்பித்து விட்டாள்.
  இதைக் கண்டதும் அவளின் மாமியாருக்குக் கோபம். “க்கும்... இவளுக்கு வேற வேலையே இல்லை. எப்பப்பாரு சாமி சாமின்னே இருப்பா. இவ கும்பிடுற அந்த சாமி மட்டும் உண்மையா இருந்திருந்தா எம்பேரனுக்கு இப்படி ஆயிருக்குமா.....? அதெல்லாம் சும்மா.... எழுந்து இங்க வந்து உக்காரு“ என்று கத்திச் சொன்னாள் மாமி.
   அந்த மாமி தீவிர திராவிடம். நண்பர் இந்தப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதால் அவளுடைய சாமி பக்தியை இவரால் மாற்ற முடியவில்லை.
   அவள் மாமியாரின் பேச்சைக் கேட்கவில்லை. இந்த மாமி தொடர்ந்து “சாமியெல்லாம் இல்லை. அதெல்லாம் சும்மா....“ என்று சொன்னபடி இருந்தாள்.

   அந்த நேரத்தில் விழாவிற்கு வந்திருந்த இன்னொரு தோழியின் மகள் பப்பு அவள் தாயிடம் வந்து, “அம்மா அன்னைக்கி சாமி இருக்குன்னு சொன்ன. இந்த பாட்டி இல்லன்னு சொல்லறா. உண்மையில சாமி இருக்கா இல்லையாம்மா...“ என்று சத்தமாகக் கேட்டாள். அந்தக் குழந்தை அப்படிக் கெட்டதும் தோழிக்கு மிகவும்  தர்மசங்கடமாகப் போய் விட்டது. “எதுவா இருந்தாலும் அப்புறமா சொல்லுறேன். இப்போ போய் விளையாடு“ என்று சற்று கோபமாக சொல்லவும் குழந்தை பயத்துடனே அங்கிருந்து சென்று விட்டாள்.

    கொஞ்ச நேரத்தில் போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.  நான் போய் எடுப்பதற்குள் பப்பு போனை எடுத்துவிட்டாள். நான் கை நீட்டிக் கேட்பதற்குள் “சாமி இருக்குதா இல்லையான்னு இன்னும் தெரியலை. நீங்க அப்புறமா போன் பண்ணுங்கள்“ என்று சொல்லிலிட்டு போனை அதனிடத்தில் வைத்து விட்டாள்.
   அதற்குள் அங்கே வந்த பப்புவின் அம்மா அவள் கையில் ஒரு கிள்ளுகிள்ளி விட்டு “உன்னை போன் எடுக்கக்கூடாதுன்னு எத்தனை முறை சொல்லுறது. கேட்க மாட்டே. சரி. பேசிட்டு எங்க கிட்டேயாவது கொடுத்திருக்கலாம் இல்ல....“ என்றாள் பல்லைக் கடித்தபடி கோபமாக.
   “போனுல ஒருத்தர், சாமி இருக்கா என்று கேட்டார். நான் சாமி இருக்கா இல்லையான்னு தெரியலை. அப்புறமா போன் பண்ணுங்கள்ன்னு சொன்னதும் போனை வச்சிட்டார். அதனால நானும் வச்சிட்டேன்.“ என்றாள் அழுதபடி.
   “பாரு அருணா.... போன் வந்தா பெரிய மனுஷிமாதிரி இவதான் உடனே போனை எடுக்கிறா. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்திட்டேன். கேட்கல. எங்க வீட்டுல போனைத் துர்க்கி உயரமான எடத்துல வச்சிட்டேன். இருந்தாலும் மேலே ஏறி எடுத்திடுறா. என்ன செய்யிறதுன்னே தெரியலை“ என்றாள் கவலையாக.
    நான், “சரி விடு. ஆனால் இந்த நேரத்தில் யார் அது இந்த மாதிரி கேள்வி கேட்டு போன் பண்ணுவது“ என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.

(தொடரும்)
பதிவு மிகவும் நீண்டு இருப்பதால் அடுத்த பதிவில் மீதியைச் சொல்கிறேன்.

அருணா செல்வம்.

02.07.2014

20 கருத்துகள்:

  1. சாமி இருக்குங்க அது என் மனைவியின் உருவத்தில்....என்ன சில சமயம் பத்திரகாளீயாக மாறிவிடும் மீதி நேரத்தில் சாந்தி சொருபமாக இருக்கும்.. பத்திரகாளியாக இருக்கும் போது மட்டும் பூரிக்கட்டையால் ஆசிர்வதிக்கும்

    பதிலளிநீக்கு
  2. தொடரட்டும் தொடரட்டும் முடிவும் சுபமாக அமையட்டும் தோழி வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  3. அந்த மாமி தீவிர திராவிடம்.-இந்த வரி புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்... விடைக்குக் காத்திருக்கிறேன்.

    Avargal Unmaigal...

    :)))))))))))))

    பதிலளிநீக்கு
  5. முடிவு சுபம் என்பது மட்டும் புரிகிறது

    பதிலளிநீக்கு
  6. அட இதிலும் சஸ்பென்ஸ்.....

    சுபமான முடிவாக இருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    அடுத்த தொடருக்காக காத்திருக்ககேன் தொடருங்கள்
    என்பக்கம் கவிதையாக
    நீஎன்நெஞ்சில் தந்தகாயங்கள் வாருங்கள் அன்புடன்
    http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/07/blog-post.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. சஸ்பென்ஸா...
    குழந்தை நல்லாயிருக்கான்னு போன் வந்ததை சொல்லியிருக்கலாமே?

    பதிலளிநீக்கு
  9. என்னுடைய ஆறாவது அறிவு என்ன சொல்லுதுனா, அந்தக் குழந்தை பொழச்சுக்கிட்டான் என்பதே..

    என்னைப் பொருத்த வரையில்..

    * அவன் அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கையுள்ளதால், இந்த க்ரிடிகல் வெய்ட்டிங் டைம்ல ப்ரேயர் செய்வது அவருக்கு நம்பிக்கை கொடுக்கும்.

    * இந்த ஒரு சூழலில் மாமியார், கடவுளை வணங்காமல் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது அவருடைய மன தைரியத்தையும், திடமான மனசையும் காட்டுது.

    தாய் உங்க தோழி, அதனால் அவர் ஹீரோயினாகிவிட்டார்.

    மாமியார், தோழியின் மாமியார், அதனால் வில்லனாக்கிட்டீங்க!

    இருந்துட்டுப் போகட்டும். அவன் அடிபட்டதுக்கும் பொழச்சதுக்கும் கடவுளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள உங்களையும் தோழியையும் பொறுத்தவரை, ப்ரேயர் பலனளித்துள்ளது எனபது.

    இதே நிலைமை வேறுமாத்ரி ஆகியிருந்தால் என்ன சொலுவீங்க?
    கடவுள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு நல்ல காரணம் இருக்க்கும். அதை அறியாமல் இருக்கும் அறீவீனர்கள் நாம் என்பீர்கள்.

    ஆக எப்படிப் பார்த்தாலும் ஆத்திகர்களுக்குத்தான் வெற்றி! வெற்றிபெற்றதாக "கணக்கு" காட்டீருவீங்க! சரிதானே? :)

    பதிலளிநீக்கு
  10. தொடரட்டும்
    நல்ல முடிவு கிட்டணும்

    பதிலளிநீக்கு
  11. சாமி இருக்கா? இல்லையா? இந்த கேள்விக்கு பொருத்தமான பதில் இதுதான் ....கடவுள் இல்லேன்னு சொல்லலே ,இருந்திருந்தா நல்லா இருக்குமேன்னு தான் சொல்றேன் !
    த ம 11

    பதிலளிநீக்கு
  12. அடுத்த பதிவை எதிர்பார்த்து ஆவலுடன்

    பதிலளிநீக்கு
  13. ஆ! சஸ்பென்ஸ்! அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க்! சுபம் என்று அறிய முடிகின்றது என்றாலும்.....ஏதோ இருப்பது போல் தோன்றுகின்றது.

    பதிலளிநீக்கு
  14. பரபரப்பா கொண்டுவந்து நிறுத்திட்டீங்க! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
    தெள்ளத் தெளிந்தவர்க்குச் சீவன் சிவலிங்கம்
    வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
    கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே - திருமூலர்

    எப்படியும் அடுத்த பதிவில் தெரியும்தானே அதுவரை பொறுத்து இருப்போம் .

    பதிலளிநீக்கு
  16. இப்போது வலைப்பதிவில் பலரும் சஸ்பென்ஸ் வைத்து தொட்ரும் என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள். நானும் தொடர்கிறேன்!
    த.ம.10
    (நான் முன்னரே அனுப்பிய இந்த கருத்துரை DASH BOARD பிரச்சினையால் வெளிவரவில்லை )

    பதிலளிநீக்கு
  17. முடிவில்லாக் கேள்வி! கண்!டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்

    பதிலளிநீக்கு