வெள்ளி, 12 ஜூலை, 2013

பாமாலை!!




                       

கம்பனுக்குப் பாமாலை!


கோமான்கள் செய்கின்ற வெறும்செய் கையை
   கும்மாளம் போட்டுக்கை தட்டி நின்றேன்!
காமாலை கண்ணாக இருந்து வந்தேன்!
   கம்பகவி கண்டபின்னால் காதல் கொண்டு
பூமாலை தொடுத்துவந்தால் துவளும் என்றே
   பொற்றமிழில் சொல்லெடுத்து வார்த்தைக் கோர்த்துப்
பாமாலை ஒன்றினையே செய்து வந்தேன்!
   பக்குவமாய் அதையேநான் பாடி நின்றேன்!

கண்ணிறைந்த கற்பனைகள் கவியில் நீந்த
   காணகண்கள் கோடிவேண்டும்! கம்பா உன்றன்
விண்ணிறைந்த விருத்தமெல்லாம் விழியில் ஆட
   விருப்பமுடன் உன்புகழைப் பாட வந்தேன்!
எண்ணிறைந்த கவிதைகளை எண்ணி எண்ணி
   ஏட்டிலதைக் கூட்டிநல்ல வார்த்தைக் கோர்த்துப் 
பண்ணிறைத்துப் பாமாலை செய்திட் டாலும்
   பாவலனே உன்புகழின் எல்லை காணேன்!

தித்திக்கும் உச்சரிக்கும் சொற்கள் எல்லாம்
   தீந்தமிழின் பூக்களிலே சொட்டும் தேனோ!
எத்திக்கைப் பார்த்தாலும் மிளிரும் சொற்கள்
   எத்திசையும் ஒளியுமிழும் உதயன் தானோ!
சித்தத்தை மகிழவைக்கும் சீர்கள் எல்லாம்
   சிறப்பாகச் செய்துவந்த மதுவும் தானோ!
இத்தரையில் இக்கவியைப் போற்றி நானோ
   இன்கவியாய் ஒருகவியைப் பாடு வேனோ!

கற்றவர்கள் போற்றுகின்றார்! கல்வி மான்கள்
   கற்றதனை மற்றவர்க்குச் சொல்ல கேட்க
பற்றவர்கள் கொள்வார்கள் கம்பன் மேலே!
   பற்றின்றிக் கற்காமல் குறையாய்ச் சொல்லும்
குற்றமதைப் பெற்றவர்கள் குருடர் அன்றோ!
   குற்றமதைப் போக்கிவிட வழியும் உண்டே!
நற்றமிழால் நூற்றெய்த கம்பன் பாவை
   நாட்டமுடன் படித்தாலே புகழோ ஓங்கும்!

எண்ணத்தில் வந்தமர்ந்த வார்த்தை எல்லாம்
   இன்கம்பன் கொண்டுவந்த செல்வம் தானோ!
வண்ணத்தில் பளபளக்கும் வர்ண னைகள்
   வாக்கியத்தால் பூத்துநின்ற பூக்கள் தானோ!
மண்ணுலகில் வாழ்கின்ற மக்கள் எல்லாம்
   மனம்மகிழ கம்பனையே கற்று வந்தால்
விண்ணுலக தேவர்களின் இன்ப வாழ்வை
   விஞ்சிநின்று வாழ்ந்ததாக இருக்கும் அன்றோ!


(பாரீசில் நடந்த பத்தாமாண்டு கம்பன் விழாவில் “கம்பனுக்குப் பாமாலை“ என்ற தலைப்பில் வாசித்தக் கவிதை)
அருணாசெல்வம்
07.11.2011

24 கருத்துகள்:

  1. கோமான்கள் செய்கின்ற வெறும்செய் கையை
    கும்மாளம் போட்டுக்கை தட்டி நின்றேன்!
    காமாலை கண்ணாக இருந்து வந்தேன்!
    கம்பகவி கண்டபின்னால் காதல் கொண்டு
    பூமாலை தொடுத்துவந்தால் துவளும் என்றே
    பொற்றமிழில் சொல்லெடுத்து வார்த்தைக் கோர்த்துப்
    பாமாலை ஒன்றினையே செய்து வந்தேன்!
    பக்குவமாய் அதையேநான் பாடி நின்றேன்!

    அருமையான இப் பாமலைக்கு என் வாழ்த்துக்கள் தோழி !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு

  2. வணக்கம்!

    பூமாலை வாடிவிடும் என்றே எண்ணிப்
    புகழ்க்கம்பன் மனம்மகிழ என்றும் வாடாப்
    பாமாலை படைத்துள்ளீா்! பாக்கள் யாவும்
    பழம்மாலை போல்இனிமை படைத்த தென்பேன்!
    வா..மாலை நற்பொழுதே! வண்ணம் மின்னும்
    வளா்தமிழை வடித்திடவே! அருணா செல்வம்
    மாமாலை பலசூடி மகிழ வேண்டும்!
    வலையுலகின் அரசியென ஆள வேண்டும்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “வலையுலகின் அரசியென ஆள வேண்டும்!“

      ஏட்டினிலே தீட்டிய வாழ்த்தினை என்இதயக்
      கூட்டினிலே வைத்தேன் குளிர்ந்து!

      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  3. தித்திக்கும் உச்சரிக்கும் சொற்கள் எல்லாம்
    தீந்தமிழின் பூக்களிலே சொட்டும் தேனோ!//உங்கள் கவிதையும் அப்படித்தானே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனித்ததா...?

      உண்ணும் உணவின் சுவையைவிட நற்சுவை
      எண்ணம் இனிக்கும்நற் சொல்!

      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  4. கம்பன் கொடுத்த வார்த்தைகளை (செல்வங்களை) ரசித்தேன்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. கவிதை நல்லா இருக்கு. ஆனா, எனக்குதான் புரியலை!! கோனார் நோட்ஸ் ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கவிதை நல்லா இருக்கு.“

      இப்படி சொல்லிவிட்டப்பிறகு கோனார் நோட்ஸ் எதற்கு என்று தான் புரியலை.)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் “அருமை“ என்ற
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி ராஜி அக்கா. ஓ... மன்னிச்..மேடம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பூமாலை கொடுத்து வாழ்த்துக் கூறியமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ரொம்ப நாள் ஆச்சே உங்களை ஒரு தபா கண்டுக்கினு போகலாமே என்று வந்தேன்; + ஓட்டும் போட்டாச்சு!

    ----------------------
    [[ராஜி: கவிதை நல்லா இருக்கு. ஆனா, எனக்குதான் புரியலை!! கோனார் நோட்ஸ் ப்ளீஸ்]]

    ராஜி அவர்களுக்கு அப்படி; எனக்கோ 'கவிதைகளை' படிக்க பொறுமையில்லை...!

    தயவு செய்து கட்டுரை எழுதுங்கள். அடிக்கடி வந்து கலந்து கொள்கிறேன்.
    ---------------------
    மிக மிக முக்கியமான கேள்வி...நீங்களும் ராஜியும் அடிக்கடி ஒரு விஷயத்தில் ஒத்துப் போவதில்லை...அதற்க்கு முடிவு தெரிந்ததா? இல்லையா? தெரிந்தால் கூறவும்.

    அதாங்க...உங்க ரெண்டு பேர்லே யார் அக்கா யார் தங்கை என்று???




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் நாந்தான் தங்கைன்னு முடிவாகிட்டுது

      நீக்கு
    2. ராஜி மேடம்... நீங்கள் நம்பள்கிக்குத் தங்கை தான் என்று
      எனக்குத் தெரியும். இதை நீங்கள் வேற சொல்லனுமா...?

      நீக்கு
    3. வாங்க நம்பள்கி நைனா... எப்படிகீறீங்க? ரொம்ப நாளாச்சி இந்தப்பக்கம் பாத்து. வந்து கண்டக்கினதுக்கும் ஓட்டு போட்டதுக்கும் ரொம்ப நன்றிப்பா...!

      “தயவு செய்து கட்டுரை எழுதுங்கள். அடிக்கடி வந்து கலந்து கொள்கிறேன்.“

      சுறுங்கச் சொல்லி விளங்க வைப்பது தான் ரொம்ப ஈசி எனக்கு.
      கட்டுரையெல்லாம் எழுத வருமான்னு தெரியலை. ம்ம்ம்... முயற்சி பண்ணுறேன்.

      “அதாங்க...உங்க ரெண்டு பேர்லே யார் அக்கா யார் தங்கை என்று???“

      நான் ராஜிக்குத் தோழி!
      ராஜி எனக்குத் தோழி.
      “மேடம்“ போட்டு பேசிக்கிறது எல்லாம் எங்க நட்புல சகஜமப்பா... கண்டுக்கக் கூடாது.

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  8. கம்பனுக்கு பாமாலை படைத்திட்ட உங்களுக்கு ஒரு பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... இந்த பாமாலைக்கு எனக்கு இரண்டு பூங்கொத்து கிடைத்துவிட்டது... (அப்படி என்ன நான் எழுதிவிட்டேன்...?)

      தங்களின் வருகைக்கும் பூங்கொத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  9. தித்திக்கும் உச்சரிக்கும் சொற்கள் எல்லாம்
    தீந்தமிழின் பூக்களிலே சொட்டும் தேனோ!
    எத்திக்கைப் பார்த்தாலும் மிளிரும் சொற்கள்
    எத்திசையும் ஒளியுமிழும் உதயன் தானோ!
    சித்தத்தை மகிழவைக்கும் சீர்கள் எல்லாம்
    சிறப்பாகச் செய்துவந்த மதுவும் தானோ!
    இத்தரையில் இக்கவியைப் போற்றி நானோ
    இன்கவியாய் ஒருகவியைப் பாடு வேனோ!


    அருமையான கவிதை.
    கம்பனுக்கு பாமாலை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  10. உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன். வந்து பார்த்து தொடருங்க ப்ளீஸ் http://rajiyinkanavugal.blogspot.in/2013/07/blog-post_8644.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாத்துட்டேன்... பாத்துட்டேன்...

      கூடிய சீக்கிரம் எழுதி வெளியிடுகிறேன்.
      நன்றி தோழி.

      நீக்கு
  11. கம்பனுக்கு நீங்கள் பாடியிருக்கும் பாமாலை வாசித்து மகிழ்ந்தேன்.
    பாராட்டுக்கள்.
    இன்றைய வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கம் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு