வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கணினி..நீ எங்களின் கலியுகக் கணபதியோ! (கவிதை)கலக நாரதர் கடனைச் செய்யவும்
உலக நாதனை உமையுடன் சுற்றியும்
அன்னை தந்தைதாம் அகிலம் என்று
முன்னை கணபதி பெற்றது மாங்கனி!

உலக மக்கள் உறவு கொள்ளவும்
பலவும் கற்றுப் பயன்தனைப் பெறவும்
வையகம் அறிந்திட வைத்த இடத்தில்
கையகம் பற்றிடக் காட்டிடும் கணிணி!

தும்பிக் கைதான் துயரம் தீர்க்கும்!
நம்பிக் கையோ நான்கும் நல்கும்!
தூரித வேலை தொட்டதும் துளிர்க்கும்!
காரியச் சித்திநீ! கவிஞரின் சிந்தனை!

வெட்டியும் ஒட்டிய விந்தைதான் உன்முகம்!
எட்டுத் திக்கிலும் ஏற்கும்! இயந்திரம்
வெட்டியும் ஒட்டியும் வேண்டிய வேலையும்
தொட்டதும் முடியும் தோனிதான் உன்நயம்!

காலம் காலமாய் கவிஞர் போற்றினர்!
காலம் மாறினும் கவிதையும் மாறுமா?              
எலியுடன் இருக்கும் இருவரும் இணையா?
கலியுகக் கணினி..நீ! கணபதி தானோ!!

(அகவல்)

1 கருத்து: