இராமன் தொட்டதில் என்னைத் தொட்டது 'கல்'
(20.11.2009 - கம்பன் விழாவில் வாசித்தக் கவிதை)
அகலிகை கல்லாய்க் கிடந்தாள்; ஆனால்
சுகத்தை இழந்து சோகம் தாங்கி
அகத்தில் இருளை அடைந்தது யாரெனத்
தகவல் அறிய தாள்களைத் திருப்பினேன்.
கவிதைக் கடலாம் கம்பனின் கருத்தோ
புவியில் புதைந்த பொன்துகள் போன்றதே!!
கம்பனின் சூத்திரம் கதையில் இருக்கும்
தெம்புடன் அதைத்தான் தேடிப் பார்த்தால்
உண்மை அங்கே ஒளிந்தே இருக்கும்
கண்டு பிடித்தால் கண்டதே சூத்திரம்!!
ஆண்கள் என்றால் அவைமுன் உரைப்பர்!
பெண்ணாய் இருப்பதால் பேசவும் கூசுதே!
தண்டனை பெற்றது தலைவனா? தாரமா?
உண்மையை உரைக்க உருவம் சாபமா?
இருப்பினும் என்னால் இயன்றதை உரைப்பேன்!
இருட்டினில் கண்கள் குருடு இல்லையே!
துன்பம் வருவதைத் தூயவள் அறியாள்.
கண்பல சாபம் காமுகன் பெறவே
பொய்யாய்க் கூவிடப் புலராப் பொழுதில்
பொய்யறி யாமல் போனார் மாமுனி!
கணவன் உருவில் கட்டி அணைத்தவன்
கணவனே என்ற கருத்துடன் கலந்தாள்!
இடையினில் தெரிந்தது இந்திரன் என்று!
தடையாய் நிறுத்தித் தடுத்திட முடியுமா?
நஞ்சினை உண்டதை நங்கை உணர்ந்ததும்
வஞ்சியின் நெஞ்சம் வாதமா புரியும்?
முடிந்து போனது மோகன ராகம்!
படிந்து போனதோ பாழும் தேகம்!
காமம் என்பது கனிந்தே அணைவது!
பாமரன் அறிவான். படிக்கவும் வேண்டுமோ?
பிரசவ நேரம் பிறக்கும் தருணம்
அரசக் கட்டளை அடக்கிட வேண்டுமாம்!
முரசு கொட்டியே முயற்சித் தாலும்
அரசனுக் காக அடக்கிட முடியுமா?
முடியும் என்றால் முனிவரின் பத்தினி
கடிந்து சாபம் கணத்தினில் தருவாள்!
அந்த நிலைதான் அகலிகை நிலையும்
எந்த மனிதரும் எளிதினில் உணருவர்!
தாரம் செய்தது தவறிய நிலைதான்
காரணம் புரிந்த கௌதம முனிவர்
பொல்லா உலகம் பொதுமை பாராது
சொல்லால் கணைபோல் சொறுகிச் சாய்க்கும்!
கல்லா மனிதன் கலங்குதல் போலே
இல்லால் இதயம் இருக்க லாகுமோ!
விலைமகள் மனம்போல் கல்லாய் விதித்தால்
கலைமகன் 'கழல்துகல் கதுவ" எழுவாள்.
என்றே நினைத்தே ஏவினார் சாபம்!
அன்றே கல்லாய் அகலிகை ஆனாள்!
அவராய்ச் சபிக்கவில் லையெனில் அதுமுதல்
சவம்போல் இருப்பாள்! சத்தியம் அதுதான்!
தவம்பல செய்தும் தண்டனைக் குரியவன்
தவறிய தானே என்பதை உணர்ந்ததும்
இல்லால் இல்லாத இல்லில் இன்பம்
இல்லை என்றே இமயம் சென்றார்!
அரக்கியைப் பெண்னென அறிந்ததும் தயங்கி
இரக்கப் பட்டான் இராமன். இருந்தும்
பெண்ணாய்ப் பிறந்தும் பேய்க்குணம் அறிந்து
மண்ணில் சாய்த்தான். மாமுனி சொல்லத்
தூயவள் அடைந்த துன்பக் கதையைத்
தூயவன் கேட்டுத் துயரம் கொண்டான்!
மாறு வடிவம் மனிதன் பூண்டால்
மாறும் உலகினில் மகளீர் அனைவரும்
கற்பினைத் தொலைத்துக் கல்லாய்க் கிடப்பர்.
கற்பனை செய்தால் கவலைதான் மிஞ்சும்!
விளக்கம் வேண்டாம். விரும்பியே இந்திரன்
விளக்கினில் விழுந்தான் விட்டில் பூச்சியாய்!
தயங்கிய பெண்ணைத் தாயாய் நினைத்தே
உயர்ந்தவள் இவளென உண்மையை உரைத்தான்!
இருவரின் தவற்றை இயம்பினும் பெண்ணின்
அருமையை உணர்ந்த அயோத்தி இராமன்
தொட்டதில் என்னைத் தொட்டது - தொட்டதும்
சட்டெனச் சாபம் விலகிய கல்லே!!
(அகவல்)
நான் உங்கள் வலைப்புவைத் தொடர
பதிலளிநீக்குarouna-selvame.blogspot.in என்று கேட்டு வேண்டினால் டாஷ் போர்டில் வருவதில்லை.
இந்தக் கவிதையும் இன்னும் மூன்று பதிவுகளும் படித்தேன். அருமையாக இருக்கிறது. நானும் ஜூன் மாதம் 2011-ல் சாதாரணன் ராமாயணம் என்று ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களும் எழுதி இருக்கிறேன் படித்துப் பாருங்களேன். இதில் காணும் மொழி ஆங்கிலம் இல்லையே.
பதிலளிநீக்குOUNGAL VAZHTHOUKKOU NANRI
நீக்குவலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குhttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
இன்றைய வலைச்சரத்தில் GMB ஐயா அவர்கள் தங்கள் தளத்தினைக் குறித்து அறிமுகம் செய்திருக்கின்றார்.,
பதிலளிநீக்குஅதன் வழியாக வந்தேன்.. மேலும் பல நல்ல பதிவுகளை அளித்திட நல்வாழ்த்துக்கள்..
அருமையான வரிகள் 👍
பதிலளிநீக்கு