வியாழன், 21 ஜனவரி, 2021

அணிகள் மின்னும் அருங்கோவில் !

 


    என் ஆசிரியர் பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்கள், என் “அணி இலக்கணம்“ என்ற நூலுக்காக அளித்த பாராட்டுக் கவிதையை உங்கள் முன் படைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

.

அணிமேல் ஆசை அகமேவி

          அருணா செல்வம் இந்நூலைப்

பணிமேல் பணிகள் சிறப்பனபோல்

          பாங்காய்ப் படைத்தார் வாழ்த்துகிறேன்!

மணிமேல் காணும் நல்லழகாய்

          மனத்தை மயக்கும் வெண்பாக்கள்!

அணைமேல் அணையாய்த் தமிழ்காக்கும்!

          அறிஞர் போற்றும் புகழ்சேர்க்கும்!

 

அருமைத் தண்டி ஆரமுதை

         அருணா செல்வம் தினம்பருகிப்

பெருமை பெருகும் இந்நூலைப்

          பேணிப் பெற்றார் வாழ்த்துகிறேன்!

கருணை கமழும் கோவிலெனக்

         கருத்தைக் கவரும் வெண்பாக்கள் 

அருணை அப்பன் அடிகாட்டும்!

         அகிலம் போற்றும் அறமூட்டும்!

 

அல்லும் பகலும் தமிழழகை

        அருணா செல்வம் தலைசூடி

வெல்லும் வல்ல திறமேந்தி

         விளைத்தார் இந்நூல் வாழ்த்துகிறேன்!

சொல்லும் பொருளும் சுவையேந்திச்

        சுரக்கும் தூய வெண்பாக்கள்

செல்லும் இடத்தில் சீர்மீட்டும்!

        சிறப்பே மின்னும் பேர்கூட்டும்!

 

அன்னைத் தமிழின் திருவடியை

        அருணா செல்வம் கைப்பற்றிப்

பொன்னை நிகர்த்த இந்நூலைப்

         புனைந்தார் நன்றே! வாழ்த்துகிறேன்!

முன்னைப் புலவர் புலமைநலம்

         முற்றி மணக்கும் வெண்பாக்கள்

தென்னை நீராய்க் குளிரூட்டும்!

         பின்னை உலகுக் கெழிற்சூட்டும்!

 

அறமே ஓங்கும் வண்ணத்தில்

        அருணா செல்வம் கவிகற்றுத்

திறமே ஓங்கும் இந்நூலைத்

        தீட்டித் தந்தார் வாழ்த்துகிறேன்!

மறமே ஓங்கும் வண்டமிழின்

        மாண்பை வார்க்கும் வெண்பாக்கள் 

நிறமே ஓங்கும் மொழிசூட்டும்!

         நிலமே ஓங்கும் வழிகாட்டும்!

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

07.05.2020