Friday, 26 December 2014

நமக்காக!!    “என்னங்க...“
    மாதவி கெஞ்சளானக் குரலில் கணவனை அழைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த மனோகரன் நிமிர்ந்து “என்ன“ என்பது போல் பார்த்தான்.
    “ஒன்னுமில்லை.... நம்ம பிள்ளைகளுக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சி. இந்த லீவுல ஊட்டி கொடைக்கானல்ன்னு எங்கேயாவது அழைச்சிக்கினு போங்கன்னு ஆசையா கேக்குதுங்க...“
   அவன் அவள் சொன்னதைக் காதில் வாங்காதது போல் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
   “ஏங்க... நான் சொன்னது காதுல விழுந்துச்சா?“
   “ம்“
   “அப்போ நான் பசங்ககிட்ட அப்பா போக சம்மதிச்சிட்டாருன்னு சொல்லிடட்டுமா...?“ ஆவலுடன் கேட்டாள்.
    “அதெல்லாம் எதையும் சொல்ல வேணாம். நாம் எங்கேயும் போக முடியாது.“
   “ஏங்க...“ என்றாள் ஏமாற்றமாக.
   “என்ன மாதவி, புரிஞ்சிக்காமல் பேசுறே. இப்போ தான் ராதா கல்யாணக் கடனே முடிஞ்சது. இன்னும் ஒரு வருஷத்துல மஞ்சு பெரியவளாயிடுவா. அவளுக்குச் சடங்கு செய்ய நாலு காசு வேண்டாமா? இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தால் தானே அந்த நேரத்துல உதவும். அதை விட்டுட்டு ஊட்டி சுற்றுலான்னு செலவு செய்ய சொல்லுறியே....“ என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.
    “பிள்ளைங்க ஆசைப்படுதுங்க.... எனக்கும் ஆசையா இருக்குதுங்க.... போயிட்டு வர.....
    அவள் சொல்லி முடிப்பதற்குள் சாப்பாட்டை முடிக்காமலேயே எழுந்து, சே. மனுசன் நிம்மதியா சாப்பிட கூட முடியலை... என்று முணுமுணுத்தபடியே கையலம்ப போய்விட்டான்.

    மாதவி மற்ற வேலைகளைச் செய்துக் கொண்டிருந்த போது மஞ்சு வந்து கேட்டாள். “அம்மா... அப்பா என்னம்மா சொன்னாரு....?“
    அவள் பதிலெதுவும் சொல்லாமலேயே இருந்ததைப் பார்த்து, அப்பா வேண்டாம் என்று சொல்லியிருப்பார் என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து கவலையாகப் படுக்கச் சென்றாள்.
    மஞ்சு போனதைப் பார்த்த போது அவளும் சிறு வயதில் அம்மாவிடம் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. அன்றும் இப்படி தான்.
    மாதவி பள்ளிக்குப் போய்விட்டு வந்து அவள் அம்மாவிடம் கேட்டாள். “அம்மா என் ஃபிரென்ஸ் எல்லாம் இந்த லீவுல நிறைய ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாங்களாம். என்னையும் எங்கேயாவது அழைச்சிக்கினு போங்கம்மா....“
    அவள் அம்மாவும் மகளின் ஆசையை தன் கணவனிடம் தெரிவித்தாள். அவரும் “இன்னும் வீடு கட்டிய கடனே அடையலை. ரெண்டு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணணும். பெரியவனைப் படிக்க வைக்கனும். இதையெல்லாம் நினைக்காம ஊர் சுத்தலாம்ன்னு சொல்லுறீயே....“ என்றார்.
    “பிள்ளைங்க ஆசைப்படுதுங்க. அதுங்க ஆசையை நாம தானே நிறைவேத்தனும்...“
    அம்மா பிடிவாதமாகச் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அப்பாவின் முடிவு தான் முடிவானது. “நாம நல்லபடியா பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்போம். அது தான் நம்முடைய கடமை. கல்யாணம் ஆன பிறகு புருஷனோட சந்தோஷமா போயிட்டு வர போவுதுங்க....“ என்று முடித்து விட்டார்.

    அப்பா சொன்னது போல நல்லபடியாகத் தான் கல்யாணம் முடிந்தது. ஆனால் ஊட்டிக்குப் போகனும் என்ற ஆசை தான் இது வரையில் மாதவிக்கு நிறைவேறவே இல்லை.
    கல்யாணம் ஆன புதியதில் கணவரிடம் தன் ஆசையைச் சொன்னாள் தான். ஆனால் உறவினர்கள் வைத்த கல்யாண விருந்து முடிவதற்குள்ளேயே கர்ப்பமாகி விட்டாள். குழந்தையைச் சுமர்ந்து கொண்டு ஊர் சுற்றக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
    குழந்தை பிறந்தவுடன் பச்சை உடம்பு. கைப்பிள்ளைகாரி என்ற காரணங்கள். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் நாத்தனார் கல்யாண கடன். கடனை அடைப்பதற்குள் இரண்டாவது குழந்தை. இதோ பத்து வருடம் ஓடிவிட்டது.
   இப்போதாவது அவளது ஆசை நிறைவேறும் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லை.
   மாதவிக்கு கோபமாக வந்தது. எழுந்து போய் கட்டிலில் குப்புற படுத்தாள். ஆத்திரம் அழுகையாக வந்தது. இல்லை. அவளுடைய இயலாமை தான் அழுகையாக மாறியது.

    எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது! கணவனின் கை மேலே பட்டு அவளைத் தன் பக்கமாக இழுக்கும் போது தான் தூக்கம் களைந்தது. சற்று நேரம் அழுத்தில் கோபம் அடங்கி இருந்தது. மனதும் யோசித்திருந்தது.
    ஆசையாக அணைத்த கணவனின் அருகில் நெருக்கமாகப் படுத்தாள்.
   “என்னங்க... நான் ஒன்னு கேட்பேன். பதில் சொல்லுறீங்களா...?“
   “என்ன திரும்பவும் ஊட்டிக்குப் போவதைப் பத்தியா..?“
   “இல்லை. நம்மை பற்றி நாமே பேசிக்கனும்.“
   “என்ன பேசிக்கனும்...?“
   “கல்யாணமாச்சி. குழந்தை பெத்தோம். ராதாவுக்கு கல்யாணமாச்சி. கடன் வாங்கினோம். அதை அடைச்சோம். அடுத்து மஞ்சுவுக்குச் சடங்கு செய்யனும். அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கனும். சின்னவனைப் படிக்க வைக்கனும். இதுக்கெல்லாம் பணம் வேணும். அதுக்காகச் சம்பாதிக்கனும். இதெல்லாம் நம்ம கடமை. இதை நாம செஞ்சித்தான் ஆகனும். ஆனால் நமக்குன்னு ஒரு சந்தோஷம் கூட தேவையில்லையா? வெறும் கடமைக்காக வாழுற வாழ்க்கை சந்தோஷம் தானா... அப்படின்னா நாம வாழுற வாழ்க்கை ஒரு சன்னியாசி வாழ்க்கையா? ஒரு நல்ல துணி வாங்கி கட்டிப்பார்க்க முடியலை. நகை வாங்கி போட்டுப் பார்க்க முடியலை. ஆசையா சந்தோஷமா ஒரு ஊர் சுற்றிப் பார்க்க முடியலை..
    வெறும் கடமைக்காக வாழுறதுல எனக்கு சந்தோஷமா தெரியலைங்க. ஓரளவிற்காவது சந்தோஷங்களை அனுபவிக்கனும். வயசானப்பிறகு கடமையெல்லாம் முடிஞ்சபிறகு அனுபவிக்கிறது சுகம்ன்னு நினைக்கிறீங்களா...? அது சுகமில்லைங்க. ஏதோ பழைய ஆசையை நிறைவேத்திக் கொண்டோம் என்ற திருப்தி மட்டும் தான் இருக்கும். அப்படிப் பார்த்தால் அதுவும் ஒரு கடமை தாங்க.
   அதனால நாமும் நமக்காக வாழ்ந்து பார்ப்போம்ங்க. இதுல நமக்கு ஓரளவுக்கு பணம் நஷ்டமானாலும் மனம் சந்தோசத்தை அனுபவிக்கும் இல்லையா... என்ன நான் சொல்லறது...?“
   கணவனை அந்த மெல்லிய வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் யோசித்ததில் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.
   “நீ சொல்லுறதும் உண்மை தான். நமக்காக நாம வாழனும் தான். இந்த லீவுல போய் வரலாம்“ என்றான்.
   மாதவி மன நிறைவுடன் கணவனைப் பார்த்தாள்.
   “ஆனால் மாதவி....“ அவன் சொல்ல... அதற்குள்  என்னவாயிற்று என்பது போல் அவனை ஏறிட்டாள்.
   “இந்த சந்தோஷம் நம் எல்லோருக்காகவும். ஆனால் இப்போ என் சந்தோஷத்திற்காக மட்டும் நீ வாழணும்....“ என்று சொல்லியபடி அவளை இழுத்து அணைத்தான்.
    சந்தோஷம் என்பது நம்மால் கொடுக்க முடிந்ததைப் பொறுத்து வருவது. வாங்குவதைப் பொறுத்தது அல்ல என்பதைப் புரிந்து அவளும் அவனை இறுக்கி அணைத்தாள்.

அருணா செல்வம்.

27.05.1998