Wednesday, 3 December 2014

பிரட்சனை!!


    வேலையை முடித்துவிட்டு களைப்புடன் வெளிவந்தவளிடம், “நர்மதா.... உங்கிட்ட கடைசியா கொஞ்சம் பேசனும்“ என்று வழிமறைத்துச் சொன்ன சுரேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையே “என்ன?“ என்று கேட்பது போல் இருந்தது.
    “என் ஆசையை சொல்லி இத்தனை நாளா உங்கிட்ட கெஞ்சி பார்த்திட்டேன். நீ என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து என்னிடம் இதுவரையில் ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை. இவ்வளவு நாளா நீ பேசாதது கூட பரவாயில்லை. ஆனால் இன்னைக்கி நீ பதில் சொல்லியே ஆகணும்.“
    அவன் சொல்ல அவள் அப்போதும் பேசாமலேயே இருந்தாள். அவனே தொடர்ந்தான்..... “வீட்டுல பெண் பார்க்க போகிறார்கள். முடிவு எது வேண்டுமானாலும் இருக்கும். நீ என்ன சொல்கிறாய்....?“ கேட்டான்.
    “உங்களுக்கு விருப்பம் என்றால் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்“ பட்டும் படாததுமாக பதிலளித்தாள்.
    “என் விருப்பம் உன்னுடன் வாழறது தான்“
    “எனக்கு அந்த ஆசை இல்லை. எனக்குன்னு அமுதவன் இருக்கிறான். அவன் மட்டும் எனக்கு போதும். வழியை விடுங்கள். அவன் காத்திருப்பான்“ சுரேந்திரனைச் சற்று நகர்த்திவிட்டு நடந்தாள்.

    கவலையுடன் நின்றிருந்த சுரேந்திரனிடம் “என்னடா சொன்னா நர்மதா?“ அவன் நண்பன் சரண் ஆதங்கத்துடன் கேட்டான். “அவளுக்கு அமுதவன் மட்டும் போதுமாம். நான் வேண்டாமாம்“ என்றான் கவலையுடன் சுரேந்தர்.
    “விடுடா. நீயும் வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து எவ்வளவோ நாளாய் கெஞ்சி பார்த்திட்ட. அவ பிடி கொடுத்து பேசலை. அது மட்டுமில்லாம அமுதவன் மட்டும் போதும்ன்னு உங்கிட்டேயே சொல்லுறா. அவளுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது...... உனக்கென்னடா. வெளிநாட்டுல கைநிறைய சம்பாதிக்கிறே. அப்பா அம்மா பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கினு சந்தோஷமா இருப்பியா..... அதை விட்டுட்டு....“ சரண் கோபமாகச் சொல்ல....
      “சரண்.... எனக்கும் அமுதவன் வேணுமடா“ என்றான்  சுரேந்திரன்.
    “என்னடா சொல்லுற...? அவன் உனக்கெதுக்குடா....?“ சற்று கேவலமான முக பாவனையில் கேட்டான் சரண்.
    “டேய் சரண்.... அமுதவன் கூட இருக்கிற தைரியத்துல தான் இவ இப்படி திமிரா நடக்கிறா. நாளைக்கே அவனைத் தூக்கிடலாம்.....“ முடிவுடன் சொன்ன சுரேந்தரனைப் பார்த்து நடுங்கிக் கொண்டே “ சரி“ என்று தலையாட்டினான் சரண்.

    கோபத்துடன் வீட்டில் நுழைந்த நர்மதாவை, “வாம்மா..... இப்போ தான் இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா உனக்கு....?“ என்று கேட்டவளை அலட்சியப் படுத்திவிட்டு, “எங்கே அமுதவன்....?“ என்றாள் கோபமாக.
    “அவன் மாடியில் சுரேந்தரனிடம் இருக்கிறான்...“ என்று சொல்லவும் மாடிக்கு ஓடினாள். அவளைக் கண்டதும்...
     “டேய்..... கோவம் தெளிஞ்சி உன் அம்மா நம்ம வீட்டுக்கு வந்திட்டா பாருடா......“ என்று கையிலிருந்த அமுதவனிடம் கொஞ்சிய படி சொன்னான் சுரேந்திரன்.
    “என் குழந்தையைக் கொடுங்க. நான் போகனும்“ என்ற படி குழந்தையை இழுத்தாள். அவன் விடவில்லை. “இவன் எனக்கும் குழந்தை. அவன் இனி இங்கே தான் இருப்பான். அவன் வேண்டுமானால் நீயும் இங்கேயே இரு.“ என்றான்.
    “ஓ..... இவன் உங்க குழந்தைன்னு இப்போதுதான் தெரிஞ்சிதா....? குழந்தை பிறந்து முதன் முதலில் படம் அனுப்பியதும் நம்ம ரெண்டு பேர் குடும்பத்து ஜாடை கூட குழந்தை முகத்தில் தெரியலையேன்னு சொன்னீங்க..... இப்போ மட்டும் ஜாடை தெரியுதோ.....“ என்றாள் கோபமாக.
    “ஐயோ நர்மதா..... இது தான் உன் கோபமா? நான் குழந்தையை நேரில் பார்க்க முடியவில்லையே.... என்ற ஆதங்கத்தில் வெறும் படத்தைப் பார்த்து எனக்கு எந்த ஜாடையும் தெரியலையே என்று கவலையுடன் சொல்லி இருப்பேன். அதற்காகவா இப்படி ஒரு வருஷமா பேசாமல் இருக்கிறது? நீ பேசாமல் இருந்ததாலேயே எனக்கு என்ன பிரட்சனை என்ற விசயம் புரியாமல் குழம்பி போய் விட்டேன். நல்லவேலை இப்போதாவது பேசினியே....“ என்றான் சுரேந்திரன்.
     “நம்பிக்கை இல்லாதவரிடம் என்ன பேசுவது?“ என்றவளின் அருகில் வந்தான் சுரேந்திரன். “நம்பிக்கை இல்லை என்றால் நான் வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து உன்னையே சுற்றி சுற்றி வந்திருப்பேனா.....?“
     அவன் மூச்சுக்காற்று கழுத்தில் பட, “ஏதோ பொண்ணுபார்க்க போறேன்னு சொன்னீங்க...?“ என்றாள் சற்று தள்ளி.
    “அது தான் பார்த்துக்கொண்டே இருக்கிறேனே....“ என்று அணைத்தவனை விலக்க நினைத்தாள்... நினைத்தாள்.... நினைக்க மட்டுமே முடிந்தது.

அருணா செல்வம்

04.12.2014