சனி, 11 ஜனவரி, 2014

இவள் தான் தைமகள்!நேர்மை யற்ற நெஞ்சங்கள்!
   நீதி யற்ற தலைவர்கள்!
ஓர்மை யற்ற உணர்வுடனே
   உழைத்துத் தேயும் உழவர்கள்!
கூர்மை யற்ற குடிகளையும்
   கொண்டி ருக்கும் நாட்டுக்குள்
சீர்மை யுடனே வருகின்றாள்
   சிரித்த முகமாய்த் தைமகளே!

அரசுப் பணியர் எனும்பேரில்
   அளவில் சிறிய வேலைக்கும்
பரிசு போன்று பெயர்வைத்துப்
   பணத்தைப் பெறுவார் இலஞ்சமென!
சிரசு இருந்தும் முண்டமான
   சிறியோர் செயலைக் கண்டிடவே
முரசு கொட்டி வருகின்றாள்
   முடிவே அறியாத் தைமகளே!

வாங்கி வாழும் மனிதர்கை
   வாரி வழங்கும் எனநினைத்தே
ஏங்கித் தவிக்கும் ஏழைகளின்
   ஏக்கம் தெளிதல் எந்நாளோ!
தேங்கி நில்லாப் பழக்கத்தில்
   தெளிவு இல்லா மக்களிடம்
ஓங்கி ஒளிர்ந்து வருகின்றாள்
   உறக்கம் அறியாத் தைமகளே!

நாட்டில் ஏதும் நடந்தாலும்
   நரகத் துன்பம் அடைந்தாலும்
ஏட்டில் பழமை இருந்தாலும்
   ஏதும் இல்லை என்றாலும்
பாட்டில் புதுமை படைத்தாலும்
   பழமை புதுமை ஆனாலும்
கூட்டிப் பெருக்க வருகின்றாள்
   குறையை அறியாத் தைமகளே!!

அருணா செல்வம்.

8 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

தைமகளுக்கு நல்ல வரவேற்பு!

Yaathoramani.blogspot.com சொன்னது…

வித்தியாசமான அருமையான சிந்தனை
சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

நம்பள்கி சொன்னது…

தைமகளுக்கா?
அத்-தைமகளுக்கு என்றால் டபிள் ஒகே!
+1

நம்பள்கி சொன்னது…

தைமகளுக்கு வரவேற்பு கொடுப்பதை விட..
அத்-தைமகளுக்கு கொடுத்தால் போற வழிக்கு புண்ணியம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான வரிகள்... இனிய பொங்கல் மற்றும் உழவர் தின வாழ்த்துக்கள்...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!

பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

அம்பாளடியாள் சொன்னது…

வியக்க வைக்கும் கவிதை வரிகளில் உண்மையை விளக்கிச் செல்லும் என் தோழிக்கு இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !