வெள்ளி, 13 ஜனவரி, 2023

போகி பண்டிகை வாழ்த்து ! (2023)

 


எத்தனையோ துரோகங்கள்
       எடுத்தெறியா(து) உள்ளிருக்கும்!
எத்தனையோ கோபங்கள்
      எந்நாளும் உழன்றிருக்கும்!
அத்தனையும் போகியன்றே
      அழுக்கென்றே எரித்திடுங்கள்!
புத்தாண்டு நாளன்று
     புதிதாகப் பிறந்திடுங்கள்!
.
தோழ தோழியர் அனைவருக்கும்
இனிய போகி திருநாள் வாழ்த்துகள்!
.
அன்புடன்
அருணா செல்வம்
14.01.2023

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தங்கமொழி! (சந்தக் கலிவிருத்தம்)

 


.
தந்ததன தந்ததன தந்ததன தந்தா
.
விந்தையென எண்ணுகிற விண்ணுலகு மேலாய்
வந்தொளிர நின்றொளிர வந்ததெது கூறு!
சந்தமிகு தன்மையொடு சன்னமிசை யான
சிந்தையொடு வண்ணமிகு செந்தமிழை நாடு!
 
அன்னையொடு வந்தவழி அன்புமிக மேவும்!
புன்னகையில் இன்பமொளிர் பொங்குவது பாடும்!
தன்னிறைவு கொண்டநிலை தன்னிசையி லாடும்!
அன்னமென உண்டுணர ஐயநிலை யோடும்!
 
பஞ்சநிலை என்பதிலை பண்ணொலியு மஞ்ச
விஞ்சிவரும் இன்பநிலை வெண்டளையி லொன்ற
கொஞ்சுகிற இன்பமது கொண்டமொழி யென்று
தஞ்சமிட நம்புகிற தங்கமொழி யன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2023

சனி, 31 டிசம்பர், 2022

புத்தாண்டு வாழ்த்து ! 2023

 

.

அன்பைக் கொட்டும் அன்னையைப்போல்
        அறிவைக் காட்டும் தந்தையைப்போல்
இன்பங் கூட்டும் நட்பைப்போல்
       எழுமை ஊட்டும் கல்வியைப்போல்
நன்மை பயக்கும் செல்வம்போல்
       நல்ல துணையின் உறவைப்போல்
இன்று பிறக்கும் புத்தாண்டு
      இணைந்து வளமாய் வரவேண்டும்!
 
வருக வருக புத்தாண்டே !
       வாழ்வும் வளமும் கொடுத்தருள்க !
தருக தருக புகழ்யாவும்
      தமிழைப் போன்று உயர்ந்தோங்க !
உருகி யாடும் மனம்யாவும்
      உயர்ந்து நிறைந்து மகிழ்வோங்க !
அருமை ஆண்டாய் இருந்திடவே
       ஆசை கொண்டு அழைக்கின்றோம் !
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2023

 
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

வியாழன், 29 டிசம்பர், 2022

இனிமை கொடுக்க நீவேண்டும்!

 

.   

கருத்தில் கல்வி ஒளியிருந்தும்
       கண்ணில் குருடாய் நடந்துவந்தோம்!
மருட்டும் வழியில் மாவிடர்கள்
      மறைந்தும் தெரிந்தும் கடந்துவிட்டோம்!
இருட்டைக் கிழித்த ஒளிவிளக்காய்
       இனிமை கொடுக்க நீவேண்டும்!
உருண்ட உலகோர் மகிழ்வுறவே
      உயர்த்தும் ஆண்டாய் வரவேண்டும்!
.
பாவலர் அருணா செல்வம்
30.12.2022

செவ்வாய், 13 டிசம்பர், 2022

மகிழ்ந்தே பயில்வோம்!

 



(சந்த கலிவிருத்தம்)
.
உணவே மருந்தாய்! உழவே தொழிலாய்! 
உணர்வே கலையாய்! உடலே மலராய்!
குணமே உயர்வாய்! குவிந்தே தலைமேல்
பணமே இருந்தால் பயமே வருமே!

மலையாய் விரைந்தே மலிவாய் பொருளால்,
அலையாய் விழுமே அறியா தெதுமே!
நிலையாய் அமர்ந்தே நெடிதாய் வரைவே
கலையாய் எழுமே கவியாய் வருமே!

மனமே அதைநாம் மதியா திருந்தால்
கனமாய் அதுவே கடிதா கிடுமே!
கனவே எனநாம் கனிந்தே இருந்தால்
தினமே வருமே திறனோ டிடுமே!
 .
முதிரா வயதோ முளையாப் பயிராம்!
கதிராய் வளர்ந்தால் கடிதோ இலையாம்!
விதியால் நடந்தால் வியந்தே அறிவோம்!
மதியால் புரிந்தால் மகிழ்ந்தே பயில்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.12.2022

செவ்வாய், 6 டிசம்பர், 2022

அண்ணாமலையாரே!

 




(பிரிந்திசை வண்ணம்)

.
தன்னாதன தனதன
தன்னாதன தனதன
தன்னாதன தனதன தனதான (அரையடிக்கு)
 
அண்ணாமலை யுறைகிற
    பொன்மேனியி லொளியிடு
    மன்பாய்நல மருளிடு மனலோனே!
அஞ்ஞானமொ டலைகிற
    சந்தானிகை மனமுட
    னன்றாடஉ மதுமலை நினைந்தேனே!
 
பெண்ணாகிய வடிவுற
    பண்பாகிய குணநிலை
    பெம்மானென மழலையு மடைந்தேனே!
பின்னாளினி லுளமுனை
    நெஞ்சோடெனை அடைகிற
    பிண்டீதக மணநிலை எதனாலே!
 
விண்மோதும லையழகு
   செந்தீபமொ ளியழகு
   விண்ணோரும தனழகி லுழல்வாரே!
விஞ்ஞானவி வரமொடு
   பஞ்சானனு ருமறைய
   மெய்ஞ்ஞானமு ருவடிவி லருள்வாயே!
 
பண்பாடுட னசைபொரு
    ளொன்றோடிட இசையொடு
    பண்பாடிட வருமெனை மனதாலே
பஞ்சீகர அருளொடுஉ
    டம்போடுயிர் நலமொடு
    பண்ணோதிட அருளிடு பெருமானே!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2022

 
சந்தானிகை - பாலேடு
சந்தாபம் - துன்பம்
பிண்டீதகம் - மருக்கொழுந்து
பஞ்சானன் - சிவன்
பஞ்சீகரம் - ஐம்பூதங்களும்

வெள்ளி, 25 நவம்பர், 2022

திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“!

 



.
     திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“ யின் இலக்கணத்தில் வந்த அழகிய பாடல் இந்தப் பாடல்.
    நேரொன்றாசியத் தளை என்பது நேர் முன் நேர் வருவதாகும். ஆனால் இப்பாடலில் வெகு சில இடங்களில் நிரை அசை அருகி வந்திருந்தாலும் பாடலின் இசையில் எந்தக் குறையும் தெரியவில்லை.
.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள (கண்ணன்)
.
தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக் கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன (கண்ணன்)
.
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சைச் சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம் (கண்ணன்)
.
பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
படம் வெண்ணிற ஆடை (1965)

செவ்வாய், 15 நவம்பர், 2022

பெண்ணின் உள்மனப் பேறு !

 


(கலிவிருத்தம்)

.
அன்பாய் பேசிய அன்றைய நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சினுள் இருந்தே இனித்திருக்கும்!
துன்பப் பொழுது தோழியர்ச் சூழ்ந்துவர
நின்று போயிடும் நெகிழ்ந்த கனவலைகள்!
.
சொல்லச் சொக்கிடும் சுவையாய்க் கவிகளையும்
மெல்லப் பேசிடும் மென்மொழி இனிமையையும்
நல்ல நேரமும் நிறைந்து கிடைத்தாலும்
மல்லுக் கட்டிடும் மனத்தைக் குழப்பிவிடும்!
.
கற்றோர் காட்டிய காலமெ னும்நிகழ்வோ
உற்றுக் கடக்கும் ஊழ்வினை என்றரிந்து
பற்று வைத்தலே படைப்பின் நிறைவென்றே
முற்றும் அன்பினால் முயன்று நெகிழ்ந்துவிடும்!
.
பெண்ணின் உள்மனப் பேற்றினைக் கண்டவளின்
கண்கள் நோக்கிடக் கவிகள் பிறந்துவிடும்!
வண்ணங் கூட்டிடும் வடிவில் கலந்துவிட்டால்
எண்ணந் தீட்டிடும் இதயம் இனிதுறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2022

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

தீபாவளி வாழ்த்து!

 



.
பட்டாசின் ஒளியில் மின்ன,
     பலகாரச் சுவையைத் தின்ன,
பட்டாடை கட்டிக் கொள்ள,
   பகட்டாக உள்ளஞ் செல்ல,
ஒட்டாத உறவுஞ் சேர
     ஒன்றாக தீபா வளியை
இட்டாட வேண்டும் என்றே
     இன்போடு வாழ்த்து கின்றேன்!
.
தோழ தோழியர் அனைவருக்கும் என்
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
24.10.2022

 
(அனைவருக்கும் பலகாரம் அனுப்பி இருக்கிறேன்.
“சும்மா“ எடுத்துச் சாப்பிட்டு மகிழுங்கள்)

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

மயூர வெண்பா!

 


.

அமுது கொடுக்கும் அழகும் அறிவும்  8
குமுத மலர்போல் குளிர்ந்து கமழ்ந்தும்  8
வரைந்து வகுக்கும் வளமை புரிந்தும்  7
விரைந்தறிவார் நம்மொழியுள் வீழ்ந்து!  10
.
பாவலர் அருணா செல்வம்
02.08.2022

 
(மற்ற அடிகளைவிட ஈற்றடி எழுத்துக்கள் மிக்கு வரவேண்டும். புள்ளியும், ஆய்தமும், குற்றுகரமும் நீக்கி எழுத்தெண்ண வேண்டும்.(குற்றுகரம் என்பது கு சு டு து பு று ஆகும்)