திங்கள், 28 செப்டம்பர், 2020

இராவணின் உண்மைக்காதல்!



கவிகள் சொல்லும் காதலெல்லாம்
   கருத்தில் மிதக்கும் கற்பனைதான்!
தவிக்கும் இதயத் துடிப்புகளைத்
   தணிவாய்ச் சொல்ல முடியாமல்
செவிக்குள் விழுந்த செய்திகளைச்
   சிறந்த தமிழில் எழுதுவதால்
புவியில் பெறுவார் நற்பெயரே
   புதுமை  கவிகள்  படைப்பாரே!
 
அன்பின் பேரில் ஆசைகொண்ட
   அயோத்தி பெண்கள் காதலையும்
மன்னன் இடத்தில் பாசமுடை
   மக்கள் கொண்ட காதலையும்
கன்னி மாடப் பார்வையினால்
   கனிந்த சீதை காதலையும்
நன்றே அறிந்தோம் உண்மையென
   நவின்ற கதையின் மேன்மையென!
 
இம்மண் போற்ற நின்றிருக்கும்
   என்றும் அழியா தொன்மையையும்
வம்பாய் வந்த ஆசையினால்
   வளர்ந்த காதல் வன்மையையும்
நம்பி மீது நங்கையவள்
   நயந்த காதல் மென்மையையும்
கம்பன் சொன்ன காதலெல்லாம்
    கருத்தை மயக்கும் இன்பம்தான்!
 
உண்மைக் காதல் எதுவென்றால்
    உணர்வு குள்ளே விதையாக்கிக்
கண்ணுக் குள்ளே அதைவிதைத்துக்
    கருத்துக் குள்ளே நீர்தெளித்து
விண்ணின் அளவில் வளரவிட்டு
    விரும்பும் வகையில் வளம்அமைத்து
மண்ணில் இருக்கும் நாள்வரையில்
    மறவா திருக்கும் உணர்வன்றோ!
  
உள்ளம் இரண்டும் ஒன்றாகி
    உருவில் அழகு மெருகேறிக்
கள்ளம் கண்ணுள் உருவாகிக்
    கவிதை நடையில் உறவாடித்
துள்ளும் இன்பம் கனவாகித்
    துயிலை மறந்த நிலையேந்திக்
கள்போல் மயக்கும் காதலினைச்
    கதையாய்ச் சொல்லல் இன்பம்தான்!
 
கண்ணும் கண்ணும் கவ்வியப்பின்
   கரத்தைப் பிடித்த பின்னாலே
எண்ணச் சிறகை விரிக்கின்ற
   இன்ப காதல் கடமைதானே!
மண்ணில் கண்ட மங்கையினை
   மனத்துள் ஆழச் சுமந்துகொண்டு
வண்ண வாழ்வின் சுகமிழந்தும்
   மாண்ட காதல் நெகிழ்வன்றோ!
 
கடமை சேர்ந்த காதலுடன்
   கணவன் சேர்ந்தான் சீதையுடன்!
மடமை யான காதலினால்
   மதியை இழந்தாள் சூர்ப்பணகை!
உடமை என்றே தனையிழந்தும்
   ஊரும் உயிரும் போனாலும்
திடமாய் இருந்த இராவணனின்
   திளைத்த காதல் உண்மையன்றோ!
 
தவறு என்றே தெரிந்திருந்தும்
   தன்னுள் நிலைத்த காதலினால்
கவர்ந்து வந்த சீதையவள்
   காலில் விழுந்தான் ஏக்கத்தில்!
அவளின் ஏச்சு பேச்சுகளில்
   அசையா திருந்தான் ஆணவமாய்!
கவனம் முழுதும் சிதறாத
   கயமைக் காதல் உண்மையன்றோ!
 
கன்னித் தமிழில் சொல்லெடுத்துக்
   கருத்துச் செறிவில் அதைத்தொடுத்துப்
பொன்னின் அழகைப் பிணையவிட்டுப்
   பூவின் அழகில் நனையவிட்டு
அன்பும் பண்பும் உயர்ந்தோங்கும்
   அகிலம் போற்றும் காதலினைக்
கம்பன் காட்டிச் சென்றவிதம்
   கனிந்த உண்மைக் காதலடி!
 
உண்மை பொய்மை என்பதெல்லாம்
   உழலும் காதல் தனிலில்லை!
நன்மை தீமை பார்க்காமல்
   நன்றே இதயம் தொட்டபின்பே
மென்மை யாக அரும்புவிட்டு
   வன்மை யாக வளரவிட்டுத்
தொன்மை யாக்கி நலஞ்சேர்க்கும்
   துணிந்த காதல் உண்மையடி!

.
பாவலர் அருணா செல்வம்
.
(பிரான்சு கம்பன் கழகத்தில் 19.09.2017 அன்று நடந்த, “கம்பனில் எத்தனை காதலடி“ என்ற கவியரங்கத்தில் “இராவணன்“ என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக