திங்கள், 30 டிசம்பர், 2019

புத்தாண்டே வருக!
ஓடி யோடி வருகின்றாய்!
  ஒருநாள் கூட நிற்பதில்லை!
ஆடி யாடி அலைந்தாலும்
    அந்த நாட்கள் திரும்பவில்லை!
நாடி நாடி வந்தாலும்
    நாளும் நகர்ந்தே செல்கின்றாய்!
கோடிக் கோடிப் போனாலும்
    குறையே இன்றி வளர்கின்றாய்!

அன்று நடந்த சுவடெல்லாம்
    அழியா தென்றும் இருப்பதற்கும் 
சென்ற துன்ப வடுக்கூட
    செழிக்கும் உயர்வில் மறைவதற்கும் 
இன்றும் நாளை வருவதெல்லாம்
    இனிமை ஒன்றே நிலைப்பதற்கும்
தொன்மைத் தொடரும் புத்தாண்டே
    துடிப்பாய் வந்து பிறந்திடுவாய்!

ஊக்கம் கொண்டே உழைப்பவர்க்கே
    ஒளிரும் ஆண்டாய் வந்திடுவாய்!
நோக்கம் உயர்வைக் கொண்டோர்க்கு
    நொடியில் அருளைத் தந்திடுவாய்!
தேக்கம் எதிலும் இல்லாமல்
    தெளிந்த வழியைக் காட்டிடுவாய்!
ஆக்கும் செயல்கள் புகழடைய
    அகிலம் போற்ற வருவாயே!
.
பாவலர் அருணா செல்வம்
30.12.2019

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...