செவ்வாய், 25 அக்டோபர், 2016

அவளழகு !!

மெல்லிடை இல்லையென்னும் ! மெல்லிதழ் ஆமென்னும் !
சொல்லிடை வைப்பாள் சுவையுள்ளம் ! – நல்லதையே
நாளும் நினைத்திடும் நங்கை ! அவள்சிரிப்பால்
நீளும்என் ஆயுள் நிறைந்து !
  
செல்லச் சிரிப்பும், சிணுங்கும் மொழியழகும்
வெல்லச் சுவையையும் விஞ்சுமந்தப் – பொல்லாத
பார்வைக் கணையென்னைப் பாடாய்ப் படுத்திடினும்
சோர்வை அகற்றும் சுடர்ந்து !
  
தண்ணீர்க் குடமெடுத்துத் தாமரை வந்துநின்றால்
விண்ணில் இருந்துவந்த வெண்ணிலா – மண்ணில்
இறங்கியதோ என்றே இமைக்காது பார்ப்பார் !
உறங்காது கண்கள் உணர்ந்து !

மைவரைந்த கண்கள் மதுவூட்டும் ! மங்கையவள்
கைவரையும் ! என்நினைவால் கால்வரையும் ! – தைவரும்நாள்
பார்த்துத் தவமிருக்கும் ! பாவைமனம் எண்ணத்தைக்
கோர்த்திடும் நெஞ்சில் குவித்து !

மாங்கொழுந்து மேனி ! மனமயக்கும் செந்நிறம் !
வாங்கிவந்த வாழ்வின் வரமழகு ! – தேங்கி
ஒளிந்திருக்கும் சங்கின் ஒளிப்போல மேனி
பளிங்கையும் விஞ்சும் பழித்து !

பால்போன்ற பற்கள் ! பளிங்கை உடைத்திடுத்து
நூல்பிடித்த நல்வரிசை ! நோயற்ற – ஆல்விழுதோ !
சிப்பி கொடுக்காத செம்மையான முத்துதானோ !
ஒப்பேதும் இல்லா ஒழுங்கு !

செவ்வரளிப் பூவிதழோ? செங்கமலம் வண்ணமோ?
கொவ்வை கனிநிறமோ? கோதையவள் – செவ்விதழை
எவ்வண்ணம் கொண்டு எழுதுவேன்? நானெழுதும்
இவ்வண்ணம் கூட இகழ்வு!

சாந்தம்தான் உள்ளதோ  சார்ந்திடா ஞானிபோல்!
காந்தம்தான் உள்ளதோ கண்களில்? – நீந்தியோடும்
மீன்வடிவோ ! மாவிலையோ ! மென்னழகு மான்விழியே!
தேன்குடிக்கும் வண்டுதான் தேர்வு !

சிற்பி செதுக்கிதான் செய்தானா மூக்கழகை !
கற்சிலையும் நாணிக் கவிழ்ந்துவிடும் ! – பொற்பதமே
பச்சைக் கிளியுமுனைப் பார்த்து மயங்கிடும்
இச்சைமனம் ஏங்கிடுதே இங்கு !
  
பாலாடைக் கன்னங்கள் ! பஞ்சின் மிருதெனத்
தாலாட்டும் நெஞ்சில் தவழ்ந்தது ! – சேலாட்டம்
காட்டிடும் கண்ணருகில் காமன் வரைந்தநல்
தோட்டமென ஈர்க்கும் தொடர்ந்து !

பாவலர் அருணா செல்வம்

25.10.2016

கருத்துகள் இல்லை: