கண்ணே! மணியே!
கற்கண்டே!
கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே!
பூஞ்சரமே!
பொக்கை
வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
முத்துப்
போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில்
பிறந்தவளே
பேசும்
கிளியே கண்ணுறங்கு!
இன்றோ உனக்கு
வேலையில்லை!
இதுபோல்
வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு
தீருதல்போல்
திரும்ப
வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே
அன்னைசொன்னாள்
அதைநான்
உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா
ஏங்காமல்
இன்றே
சேர்த்தே கண்ணுறங்கு!
காலை பூக்கள்
மலர்ந்துவிடும்!
காலம்
விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும்
வேளைவரும்!
விருப்பம்
பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும்
மனம்வந்தால்
மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல்
பாடவரும்
நலமாய் இன்றே கண்ணுறங்கு!
அருணா செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக