செவ்வாய், 4 டிசம்பர், 2012

மீண்டும் ஓர் ஆசை!!ஒன்றா இரண்டா எனக்காசை?
   ஓரா யிரத்தைத் தாண்டிவிடும்!
என்றோ நினைத்தே ஏங்கினாலும்
   இன்றும் நினைத்தால் துளித்துவிடும்.
குன்றாய் மனத்தில் அமர்ந்தவையில்
   குதித்து முன்னால் வருவதைநான்
நன்றாய்த் தமிழில் பாடுகிறேன்.
   நாளை வருமா? ஏங்குகிறேன்!

துள்ளிக் குதித்து விளையாடி
   தூக்கம் மறந்து சிரித்தோடி!
அள்ளி அணைத்தத் தந்தையிடம்
    அகண்டே முகத்தை மறைத்தோடி
கள்ளி போன்ற குணமின்றிக்
   கபட எண்ணம் எதுவுமின்றி
முள்ளில் பூத்த ரோசாப்போல்
   முகமும் மலர்ந்த நாள்அவைகள்!

கனவைக் கண்ணுள் மறைத்துவைத்து
   காதல் என்றால் முகஞ்சிவந்து
மனத்தின் உள்ளே சிறகுவைத்தே
   மாய மாகப் பறந்தோடும்!
தினமும் புதிய கருத்துரைத்துத்
   திட்டும் தாயை முறைத்திருக்கும்!
வனத்து குயிலாய்ப் பாடியாடி
   வாழும் வாழ்வில் தனைமறக்கும்!

உருவ அமைப்பில் ஊர்வசியாய்
   உள்ளம் மயங்கும் தேரசைவாய்
அரும்பு மனத்தில் பூக்கின்ற
   ஆசை அளவைப் பார்க்காதப்
பருவ கால வசந்தமான
   பறக்கும் வயது பதினாறைத்
திரும்பிப் பார்த்தே ஏங்குகிறேன்.
   திரும்பி டுமாஅந் நாளென்றே!!


அருணா செல்வம்

31 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

உடலுக்கு மட்டுமே வயது ஏறும் உள்ளத்துக்கு இல்லைத் தோழி .ஆதலால் இந்த ஆசை இக்கணமே நிறைவேறவும் வாய்ப்பு உண்டு எண்ணும் எண்ணத்தால் குழந்தைபோலும் ஆகலாம் :) வாழ்த்துக்கள் .....

மகேந்திரன் சொன்னது…

எல்லோருக்கும் உண்டான ஆசைதான் நண்பரே...
அந்த வரம் நமக்கு இல்லையே என்ற வருத்தமும் கூட..

கவிதை அழகு...

ezhil சொன்னது…

எல்லோரிடமும் முகிழ்க்கும் ஆசைதான் . ஆனால் நிகழாதது. மனதால் பதினாறு வயதாகலாம்

ஆத்மா சொன்னது…

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமே...

அழகான கவிதை
ரசித்தேன்

சசிகலா சொன்னது…

வசந்தமான அந்த பருவ வயதிற்கே மனம் திரும்பிப் போகிறது சகோ தங்கள் வரிகளால்.

Unknown சொன்னது…

மரபின் வழியே கவிபாடு=எனை
மயங்க வைத்தீர் அருணாவே
சுரபி அமுத சுரபியென-சுவை
சுரக்க வைத்தீர் அருணாவே

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்ல ஆசைகள்! நிறைவேறட்டும்! வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அருமையான கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

கடந்த காலங்கள் ஒரு
கனவு கூடம் போல் ஆகிவிடுகிறது.
நினைத்து நினைத்துப் பார்த்துச்
சந்தோஷப்பட்டுக் கொள்வோம்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மி்க்க நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

நமக்கு மனத்தால் என்றுமே பதினாறு வயது தான்.
ஆனால் கவலைகள் என்று வந்து அந்த எண்ணத்தைச்
சில நேரம் கலைத்துவிடுகிறது.

தங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

settaikkaran சொன்னது…

இந்த ‘ரிவர்ஸ் கியர்’ வசதி வாழ்க்கைக்கும் இருந்திருந்தா உண்மையிலேயே நல்லாத்தான் இருந்திருக்கும்! நல்ல கவிதை! :-)

மாதேவி சொன்னது…

மனதனதில் பறக்கும் பதினாறாய் வாழ்ந்திடுவோம்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

எல்லோருக்குமுள்ள ஆசைதான்
ஆயினும் எத்தனை பேரால் இப்படி
படிப்பவர்களும் அநுபவித்து உணரும்படியாகச்
சொல்ல முடியும்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 8

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மலரும் நினைவுகள்.

பெயரில்லா சொன்னது…

// கள்ளி போன்ற குணமின்றிக்
கபட எண்ணம் எதுவுமின்றி
முள்ளில் பூத்த ரோசாப்போல்
முகமும் மலர்ந்த நாள்அவைகள்! //

கொன்னுட்டிங்க !!!

அட நான் தாங்க ...

அருணா செல்வம் சொன்னது…

அதை ஏன் சொல்லுறீங்க ஆத்மா....

“மீண்டும் ஓர் ஆசை” என்று தலைப்புக் கொடுத்து என்னிடம் எழுத சொன்னதும் அப்பொழுது யோசித்தப் போது தான் நமக்கு இவ்வளவு ஆசைகளா என்று வியந்தேன்.

ஆனால் ஒர் ஆசையை மட்டும் தான் எழுத சொன்னார்கள்.
இதை எழுதினேன் சிட்டு.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

நமக்கு என்றுமே பதினாறு என்று நினைத்துக்
கொள்ளுங்கள் சசிகலா.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

உங்களின் கருத்து உண்மைதான்.

தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சேட்டை ஐயா.

(பாம்பு கதைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்)

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பருவ கால வசந்தமான
பறக்கும் வயது பதினாறைத்
திரும்பிப் பார்த்தே ஏங்குகிறேன்.

Endra varikal en pazhaya pathivondrai ninaivupaduthiyathu..

இளமை இதோ.. இதோ...
http://www.gunathamizh.com/2011/11/blog-post_28.html

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி முனைவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி (?????)

ஓ.... அவர் தானா நீங்கள்...?

அருணா செல்வம் சொன்னது…

அப்படிங்களா...?
இதோ... இதோ.... பார்க்கின்றேன் முனைவர் ஐயா.
பார்த்து கருத்தெழுதுகின்றேன்.
நன்றி.

பெயரில்லா சொன்னது…

எல்லோருக்கும் உள்ள ஆசையைச் சொன்னீர்கள்!
ஏங்காதார் யார்!
இனிய கவிதை .
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
(சிறுகதைகளில் ஆர்வமில்லை அதனால் தள்ளிவிட்டு கவிதைக்கு வந்தேன்.)

அருணா செல்வம் சொன்னது…

பிடித்ததைப் படியுங்கள்.

தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோவைகவி அவர்களே...

ஹேமா சொன்னது…

ஏக்கங்களை சேமித்துக்கொண்டிருக்கிறது மனம்.ஆனால் மனதை இளமையாக வைத்துக்கொள்வது முக்கியமாம் !

அருணா செல்வம் சொன்னது…

அழகான கருத்தை அளித்த
என் இனிய தோழி ஹேமாவிற்கு நன்றி.