திங்கள், 16 ஏப்ரல், 2012

தாய் மொழி!!தாயின் மொழிக்கோர்ப் பாட்டெழுதத்
      தானே அமர்ந்தேன் தாளெடுத்து!
வாயில் வார்த்தை வதைந்தாலும்
      வடிவாய்ச் சேர்த்தேன் கோலெடுத்து!
தீயின் தன்மைச் சேர்க்காமல்
      சிறந்த சீரால் சொல்லெடுத்துச்    
சேயின் குரலால் செப்புகிறேன்
      செம்மைத் தமிழில் கவிதொடுத்து!

இம்மாம் பெரிய உலகத்தில்
     இனிய மொழிகள் பலவுண்டு!
தம்மா தோண்டு சொன்னாலும்
     தமிழின் சொல்லில் இனிப்புண்டு!
அம்மா என்றே சொல்லிப்பார்!
     அமிர்தம் ஊறும் உன்வாயில்!
சும்மா நானோ சொல்லவில்லை
     சொல்லும் போதே சுவையறிவாய்!

நாடு விட்டு நாடுவந்தோம்
     நல்ல நிலையில் வாழுகின்றோம்!
வீடு விட்டு வெளிசென்றால்
     வேற்று மொழியைப் பேசுகின்றோம்!
ஓடு கின்ற காலமதில்
     ஒருநாள் ஒன்றாய்ச் சேருகின்றோம்!
கூடும் இந்த இடத்தினிலும்
     கொஞ்சும் மொழியை மறக்கலாமா?

சிறந்த நாட்டில் இருந்தாலும்
     சீரும் சிறப்பாய் வாழ்ந்தாலும்
பிறந்து வளர்ந்த பொழுதினிலே
     பேசி வந்த மொழியென்றோ
மறந்து போக வழியுண்டா?
     மயக்கம் வேற்று மொழிமேலா?
கறந்த பாலோ மடிபுகுமோ?
     கருத்தில் தாயை மறப்போமோ?

எங்கள் இதயம் ஏற்றமொழி
     எண்ணம் எழுத்தில் மின்னுகிறாள்!
எங்கள் பிள்ளைச் செல்வங்கள்
     ஏனோத் தமிழைத் தள்ளுகிறார்!
சங்கம் அமைத்தச் சான்றோர்கள்
     சரியாய் இதனைக் கவனித்தால்
தங்கம் போன்ற மொழிகற்றுத்
     தாயாம் தமிழை அறிந்திடுவார்!
  
அன்னை மொழிக்கோர் அழகுண்டு
     ஆழ்ந்து கற்றால் பயனுண்டு
பொன்னை விடவும் மதிப்பதுண்டு
     புதிய பொருளும் உதிப்பதுண்டு
முன்னை இருந்த மொழிக்கெல்லாம்
     முன்னில் பிறந்து வந்ததென்று
தொன்மை நுர்ல்கள் சொல்வதுண்டு
     தொழுது படித்தால் உயர்வதுண்டு!

                    அருணா செல்வம்
                        14.04.2012

(பிரான்சு தமிழ்க் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடந்த சித்திரைத் திருவிழாவில் வாசித்தக் கவிதை) o:k

10 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

நம்
தாய்மொழியாம் தமிழை
பற்றிய அழகிய கவிதை

அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

இங்கு அமீரகத்தில்
நிறைய உறவுகள் தமிழ் உறவுகளிடத்தில்
தமிழில் பேச சங்கோஜப் படுகிறார்கள்

Unknown சொன்னது…

முத்திரைக் கவிதை படித்தீர்கள் முத்தமிழ் தன்னை வடித்தீர்கள் சித்திரை விழாவில் நன்றாக சீரொடு மரபும் ஒன்றாக சா இராமாநுசம்

மகேந்திரன் சொன்னது…

இயல்புத் தமிழில் அழகிய
மரபுக் கவிதை ...
நல்லா இருக்குது...

அருணா செல்வம் சொன்னது…

தமிழ்நாட்டிலே தமிழர்களே தமிழில் பேச சங்கோஜம் படுகிறார்களே...
அதை நீங்கள் கவனிக்கவில்லையா...??

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றிங்க செய்தாலி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க புலவர் ஐயா!

அருணா செல்வம் சொன்னது…

தய்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க
நன்றிங்க மகேந்திரன் அவர்களே!

சசிகலா சொன்னது…

சித்திரையில் சிறப்பாய் உதித்த சீர்மிகு கவி மிகவும் அருமை .

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க சசிகலா.

ஹேமா சொன்னது…

மொழியின் பற்றுதல் காற்றுவழி உங்கள் கரம் பிடிக்க வைக்கிறது அருணா !

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றிங்க ஷேமா.