வெள்ளி, 6 நவம்பர், 2015

மணமகள் வரவேற்பு பாடல்!





மஞ்சள் பூசிய மலர்க்கொடியே ! – நல்
மணமேடை காண வருகவே !
கொஞ்சும் அழகுத் தமிழ்மகளே ! – நம்
குலம்வாழக் குளிர்ந்து வருகவே !

அன்னை ஊட்டிய அன்பினையும் – உன்
தந்தை காட்டிய அறவழியும்
ஆசான் தீட்டிய அறிவினையும் – உடன்
ஆண்டான் ஈட்டிய நன்னிலையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே !                               (மஞ்சள்)

பிரம்மன் படைத்த அழகினையும் – நிதம்
பேணிக் காத்த கற்பினையும்
தரமாய்ப் பேசும் தமிழ்மொழியும் – மனம்
தளரா உழைப்பின் உயர்வினையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே !                             (மஞ்சள்)   

உடன் பிறந்தோர் பாசத்தையும் – உண்மை
உற்றோர் காட்டிய உணர்வலையும்
ஆடிப் பாடிய தோழியரும் – அன்று
அவர்கள் பேசிய கேலியையும்
மனத்தில் நிறைத்து வருகவே ! – நல்ல
குணமாய் நினைத்து மகிழவே !                  (மஞ்சள்)

உலகம் போற்றும் சீரனைத்தும் – உன்னில்
உயர்வாய் ஒளியாய் மின்னுதடி !
குலமும் தழைக்க வேண்டுமடி ! - கை
கோர்த்து இணைய வேண்டுமடி !
மணமகன் காத்தி ருப்பானே – அவன்
மனம்குளிரக் கண்டு மகிழவே !                   (மஞ்சள்)

இசைப்பாடல்
கவிஞர் அருணா செல்வம்

07.11.2015

7 கருத்துகள்:

  1. மனதை அள்ளுகிற மணமகள் வரவேற்பு பாடல்.
    இதமாக இருக்கிறது.
    இதயத்தை ஈர்க்கிறது .
    பாரம்பரிய மெட்டில்
    பாடிக்கொண்டே படித்தேன்.
    உங்கள் அனுமதி இருந்தால்,
    பாடி, யூ ட்யூபில்
    போஸ்ட் செய்வேன்.

    மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும்
    ஆசிகளையும் சொல்லுங்கள்.

    சுப்பு தாத்தா.
    மீனாச்சி பாட்டி.
    www.subbuthathacomments.blogspot.com
    meenasury@gmail.com

    பதிலளிநீக்கு
  2. வாராயோ தோழி வாராயோ என்ற மெட்டில் பாடினால் அருமையாக இருக்கின்றது சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு