புதன், 17 நவம்பர், 2021

காதலைச் சொல்லாக் காரணம்!

 


ஓரக்கண்ணால் எனைப்பார்த்தே
ஒய்யார நடைநடப்பாள்!
ஓரமாகப் பார்த்திருந்தே
ஓயாமல் ரசித்திருப்பேன்!
.
இதழெல்லாம் விரியாமல்
இதமாகப் புன்னகைப்பாள்!
இதழில்லா மலரென்றே
எனைமறந்து பார்த்திருப்பேன்!
.
குயில்கூட்டம் நடுவினிலே
மயிலாகக் காத்திருப்பாள்!
உயிர்சுமந்த பேரூந்தோ
ஓடிவர நானிருப்பேன்!
.
தேரேறி விட்டவுடன்
தேடுகின்ற விழியிரண்டைக்
காரேறிய தூணோரம்
கண்டுகொண்டே மறைந்திருப்பேன்!
.
சொல்லாத காதலைச்
சொல்லிவிட வேண்டுமென்று
பொல்லாத தைரியத்தைப்
பொய்யாக வரவழிப்பேன்!
.
தேவியவள் வரும்நேரம்
தெளிவின்றி மனம்வாடும்
பாவியெனச் சொல்லிவிடப்
பாவமெதும் செய்யவில்லை!
.
மறுநாளும் சென்றிடுவாள்
மகிழ்ந்திருந்தே மறைந்திருப்பேன்!
வெறுங்கையில் முழம்போடும்
வேலையில்லா காரணமே!
.
பாவலர் அருணா செல்வம்

18.11.2021