புதன், 28 மார்ச், 2012

அவள் அழகு... (கவிதை)




மீன்விழிப் பார்வை என்னை
    மின்னலாய் வெட்டித் தாக்க
தேன்மொழி வார்த்தை என்னைத்
    தென்றலாய் வருடிச் செல்ல
மான்நடை நடந்த மேனி
    மனத்தினைக் குடைந்து தள்ள
வான்வழி நான்ப றந்தேன்
    வஞ்சியைக் கண்ட போதே!

தேடிடும்  மலரை வண்டு
   தேவியின் கண்ணைக் கண்டு
நாடிடும் தேனை உண்ண
   நயமுடன் அருகில் வந்து
மூடும் இமையைக் கண்டு
   முன்னிலும் மோகம் கொண்டு
ஆடிடும் அழகாய்! நீதான்
   அழகிய மலரே என்று!!

முத்தினைக் கோர்த்த வண்ணம்
   முறையுடன் பற்கள் மின்னும்!
சத்தமாய்ச் சிரித்த போதும்
    சங்கீதம் இனிமை நல்கும்!
எத்தனை முறைதான் கேட்டும்
    ஏங்குதே என்தன் உள்ளம்!
பொத்தியே வைக்க வேண்டும்
    பொல்லாத உலகம் அன்றோ!

பாதனில் உள்ள தெல்லாம்
    பைங்கிளி உன்னி டத்தில்
பேதமின் றிருக்கக் கண்டேன்!
    பெண்ணே!உன் கண்ணின் காந்த
காதலில் கலந்த நானோ
    கவிதையை எழுதிப் பார்க்க
காதலும் கவிதை யும்தாம்
    கலந்திட இன்பம் என்பேன்!!

15 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான படைப்பு
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    புளிமா மா தேமாவில் படைக்கப் பட்ட
    கவிதைகள் எப்போதுமே தனிச் சுவைதான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரபுக் கவிதைக்கு மதிப்பில்லாமல்
      போய்விட்டதே என்ற வருத்தத்தை
      உங்கள் வாழ்த்து நீக்கி விட்டது ஐயா.
      நன்றிங்க.

      நீக்கு
  2. நிறைய பேர் மறந்தது...நல்லதொரு மரபுக் கவிதை....தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றிங்க ரெவெரி.

      நீக்கு
  3. //மான்நடை நடந்த மேனி
    மனத்தினைக் குடைந்து தள்ள
    வான்வழி நான்ப றந்தேன்
    வஞ்சியைக் கண்ட போதே!//நல்ல வர்ணனை அன்பரே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க பிரேம்.

      நீக்கு
  4. சித்திரமும்
    தித்திக்கும் கவிதையும்
    நயமான நன் தமிழும்
    கொள்ளையழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும்
      மிக்க நன்றிங்க செய்தாலி.

      நீக்கு
  5. அழகழகான உவமைகளோடு விரியும் கவிதையில் காதலும் கவிதையும் கலக்கும் அந்தக் கடைசிவரிகள் அசத்தல். பாராட்டுகள் அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்
      மிக்க நன்றிங்க கீதமஞ்சரி.

      நீக்கு
  6. காதல் வந்ததும் கவிதை வந்ததா ?
    கவி பிறந்ததும் காதல் வந்ததா ?
    அருமைங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை சசிகலா.
      பிறகு கண்டுபிடித்து வேறு ஒரு கவிதையில் சொல்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் பதில் காணமுடியாத கேள்விகளுக்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  7. அன்பின் அருணா செலவம் - முனைவரின் முதல் மறுமொழி - மரபுக் கவிதை - அருமை அருமை - புளீமா தேமா - இரமணீயின் மறுமொழியும் கவிதையில் பயன் படுத்திய சொற்களூம் அருமை - காதல் கவிதை இரண்டற்க் கலந்தால் .... படிக்கப் ப்டிக்க இன்பம் - இரசிக்க இரசிக்க் மகிழ்ச்சி - அருமையான கவிதை - சொற்கள் தேடிப் பிடித்து இயல்பான நடஒயில் சேர்க்கப் ப்ட்டு உருவான கவிதை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு