புதன், 6 நவம்பர், 2019

காதல் நிலவு!.
ஆற்றங்கரை ஓரம்
அமைதியாய் அமர்ந்திருந்தேன்!
அழகிய வானில்
அலைகழித்தாள் என்னை!
பளிங்குபோல் மின்னிய
அவளழகைப்
பாசமுடன் பார்த்தேன்.
பாவையவள்
வெண்பல் காட்டி
வெள்ளையாய்ச் சிரித்தாள்.
ஆசை அளவுமீற
அவளிடத்தில்
வார்த்தையால் கொட்டினேன்.
அமைதியுடன் கேட்டதே
அவள்மேல் என்
ஆசை அதிகமானது.
தொட முயன்றேன்.
மிக உயரத்தில் இருந்தாள்.
எம்பிக் குதித்தேன்.
எள்ளி நகைத்தாள்.
ஏமார்ந்து தலை குனிந்தேன்
என் காலடி
நீரில் கிடந்தாள்.
தொட்டுப் பிடித்தேன்.
துள்ளி ஓடினாள்.
கோபத்துடன்
எட்டி உதைத்தேன்.
கலங்கி அழுதாள்.
எழுந்து நடந்தேன்
என்னுடனே வருகின்றாள்.
என்செய்வேன் ?
அவளோ வெகு உயரத்தில்…. !
ஆனால்
ஒன்று தெரிந்தது
என் விடியல்
வெகு தூரத்தில் இல்லைஎன்று! 
.
பாவலர் அருணா செல்வம்
06.11.2019