வியாழன், 25 ஏப்ரல், 2019

கையறல் விலக்கு!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
கையறல் விலக்கு!  -- 16
(அணி இலக்கணம்)
.
பாடலில் தனக்கு வேண்டிய ஒன்றினைப்பெற முயலும்போது அதற்கான ஒழுக்கம் இல்லாமைக் காரங்களைக் கூறி அது தனக்குக் கிடைக்காது என்று விலக்குவது கையறல் விலக்குஎனப்படும். (கையறல் என்பது செய்யாமல் விடுத்த செயலுக்காக வருந்துவது).
.
. ம்
அன்னையையும் அப்பனையும் நானடைந்த தொல்லையெனத்
துன்பம் கொடுத்தே தொலைத்துவிட்டேன்! – இன்றென்னை
அன்பாய் அரவணைக்க ஆளின்றி நிற்குமெனக்(கு)
இன்பம் கிடைக்கா(து) இனி!
.
பொருள் எனக்குக் கிடைத்த அன்னையையும் அப்பாவையும் தொல்லை என்று அவர்களுக்குத் துன்பங்கள் கொடுத்ததனால் தொலைந்தார்கள். (இறந்தார்கள்) அதனால் இன்று என்னிடம் அன்பாய்ப் பேசி அரவணைத்திட ஆட்கள் இல்லாமல் நிற்கின்றேன். நான் செய்த தவறால் எனக்கு இன்பம் என்பது இனி கிடைக்காது.
    …..பாடலில் தான் செய்த தவற்றைக்  (கையறல் நிலையை) கூறுவதாலும், அதனால் தனக்கு வாழ்வில் கிடைக்க வேண்டிய அன்பு, அரவணைப்பு, இன்பம் போன்றவை கிடைக்காது என்று சொல்லி அதனை விலக்குவதாலும் இது கையறல் விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
25.04.2019

2 கருத்துகள்: