ஊரே கூடிச் சேர்ந்திழுக்க
ஓடும் அழகாய் ஊர்வலமாய்!
ஈரேழ் உலகத் தலைவியவள்
இன்பம் பொங்க அமர்ந்திருப்பாள்!
பாரே பக்திப் பரவசமாய்ப்
பார்த்தும் பணிந்தும் வணங்கிடவே
தேரே நகரும் அழகுடனே
தேனாய் நன்மை செய்திடவே!
இழுத்த இழுப்புக்(கு) அதுவோடும்!
என்றே இருந்தால் என்னாகும்?
தொழுத உயிர்க்கும் தொடர்பவர்க்கும்
தொல்லைக் கண்டே துவண்டிடுமே!
நழுவி யோடா திருந்திடவும்
நடக்கும் செயலை நிறுத்திடவும்
பொழுதில் வைப்பார் காலின்கீழ்
பொதிக்கும் முட்டுக் கட்டையாகும்!
முட்டுக் கட்டை எடுத்தாலே
முறையாய்ச் செல்ல முடிந்தாலும் ,
தட்டுத் தவறும் நேரத்தில்
கட்டிப் போட்டு விடுவதற்கே
முட்டுக் கட்டைப் போட்டிடுவார்!
முந்திச் செல்லல் மட்டுமின்றிக்
கட்டுக் கொப்பாய்ச் செல்வதற்கும்
முட்டுக் கட்டைத் தேவையன்றோ!
ஒருவர் செய்யும் செயலுக்கோ
உந்தும் திறனே உயர்த்திவிடும்!
கருத்தில் தொண்டாய்ச் சேர்ந்தோர்க்கோ
கருத்தும் பலவும் நின்றாடும்!
ஒருசொல் முட்டுக் கட்டையாக
ஒடுக்க வந்து நின்றாலும்
பொருத்தே அதனின் இடம்நகர்த்த
பொதுமை தேரோ நகர்ந்திடுமே!
.
பாவலர் அருணா செல்வம்
28.10.2019

அருமை...
பதிலளிநீக்கு