செவ்வாய், 15 நவம்பர், 2016

காத்திருத்தால் அன்பு கூடும்!!அலைகள் உரசும் கடலருகில்
  அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
  கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடலழகி!
  சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
  நேரம் கடந்தும் வரவில்லை!

பொன்னை நிகர்த்த சூரியனோ
  புதைந்து போனான் கடல்நடுவில்!
முன்னே தெரிந்த கடல்வானம்
  முகத்தில் கருமை பூசியது!
அன்பாய்க் காக்கச் சொன்னவளை
  அந்தோ ! இன்னும் காணவில்லை!
என்னே அவளின் அலட்சியமோ
  என்னை என்ன நினைத்துவிட்டாள்?

தணியாக் கோபம் மூண்டுவிட
  தாபம் நெஞ்சைத் தாக்கிவிட
இனியும் எனக்குப் பொறுமையின்றி
  எழுந்து போகக் கிளம்பிவிட்டேன்!
பனிபோல் எதிரில் ஓர்உருவம்!
  பார்வை குறுக்கிப் பார்த்தாலோ
தனிமைக் கொடுமை துயர்போக்க
  தனியே அவள்தான் வருகின்றாள்!

அவளைப் பார்த்த மறுநொடியே
  அடங்கா கோபம் ஓடியதேன்?
கவலை போக்கும் மருந்தாகக்
  காய்ந்த மனத்தில் நீராகக்
குவளைக் கண்ணைக் கண்டவுடன்
  கோடி இன்பம் கூடியதேன்?
இவளை நினைத்துக் காத்ததெல்லாம்
  இன்பம் மேலும் கூட்டிடவோ!!


பாவலர் அருணா செல்வம்

கருத்துகள் இல்லை: