போன வாரம் என் ஆசிரியர் கவிஞர் கி.பாரதிதாசன்
அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு எப்பொழுதும் போல “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?“ என்று
கேட்டார்.
அந்த நேரத்தில் என் வீட்டில் இண்டர்நெட் பிரட்சனையால்
தொலைக்காட்சி பெட்டி நடக்கவில்லை. அதனால் நான் புத்தகம் ஒன்றைப் படித்துக்
கொண்டிருந்தேன்.
நான் உடனே ” என் வீட்டில் டீ.வி
நடக்கவில்லை கவிஞரே. அதனால் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்“ என்று உண்மையைச்
சொன்னேன்.
அவர் உடனே “ டீ.வி எப்படி
நடக்கும்...? அதற்கு தான் கால்கள் இல்லையே“ என்றார்.
நானும் சட்டென்று அவர் சொன்னதைப்
புரிந்து கொண்டாலும் “என் வீட்டில் இண்டர்நெட் பிரட்சனையால் டீ.வி ஓடவில்லைங்க“
என்றேன்.
அவரும் விடாமல் “டீ.வி எப்படி
ஓடும்...? அதற்கு கால்கள் இல்லை என்று தான் சொன்னேனே...“ என்றார்.
எனக்கு கொஞ்சம் கடுப்பு...! உண்மையில்
டீ.விக்கு கால்கள் இல்லை. டீ.வி என்ற வார்த்தையிலும் கால்கள் இல்லை... நாம்
எப்பொழுதும் டீ.வி நடகவில்லை. வாட்ச் ஓடவில்லை, மிக்ஸி ஓடவில்லை, என்று தான்
சொல்வோம்... இவர் கேட்பதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “உங்கள்
வீட்டிலெல்லாம் டீவி நடக்கவில்லை என்றால் நீங்கள் எப்படி சொல்வீர்கள்...?“ என்று
கேட்டேன்.
அவர் “ஹா ஹா ஹா “ என்று வீரப்பா
சிரிப்பு சிரித்துவிட்டு “நன்றாக யோசித்துப்பார்” என்று சொல்லிவிட்டு போனை
வைத்துவிட்டார்.
நானும் சற்று யோசித்தேன். எந்த
வார்த்தையும் வரவில்லை.
நண்பர்களே.... நீங்களும்
யோசித்துப் பாருங்கள். இங்கே டீ.வி நடக்காததை எப்படி சொல்வது? என்று. நான் இங்கே
பிரான்சுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நான் இருக்கும் இடத்தில் தமிழ்
பேசுபவர்கள் அதிகம் கிடையாது என்றாலும் பேசும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. (அதனால்
தான் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் இணையத்திலாவது பேசலாம் என்று வலைக்குள்ளே
இருப்பேன்.) அதனால் தான் எனக்குத் தெரியவில்லையோ... என்று சற்று நேரம்
யோசித்துவிட்டு அதை அப்பொழுதே மறந்தும் விட்டேன்.
என்ன....? நீங்கள் கண்டுபிடித்து
விட்டீர்களா....? கண்டு பிடித்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கண்டு
பிடிக்காதவர்கள் தொடருங்கள்.
--
--
--
--
--
--
திரும்பவும் அவர் என்னை நேற்று
தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரிப்புகளும் மற்ற விசயங்களும் பேசிவிட்ட பிறகு “என்ன
செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்பொழுது டீ.வியைச்
சரிசெய்து விட்டிருந்ததால் நான் டீவி பார்த்துக்கொண்டு இருந்தேன். அதனால்
தப்பித்தோம் சாமீமீமீ... என்று நினைத்துக்கொண்டே “டீ.வி பார்த்துக்கொண்டு
இருக்கிறேன்” என்றேன்.
உடனே அவர் “ஓ.. இப்பொழுது உங்கள்
வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இயங்குகிறதா...?” என்றார்.
அப்பொழுது தான் எனக்கு “இயக்கம்“
என்ற வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. என் மரமண்டையைத் தட்டிவிட்டு “இயங்குகிறதுங்க” என்றேன்.
அவர் “தமிழைத் தமிழாகவே பெசிக்கொண்டிருங்கள்.
மூளையும் நன்றாக இயங்கும்“ என்று சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.
(இது மிகச்சாதாரண பதிவு தான். (மொக்கை பதிவு என்று அர்த்தம் புரியாமல் முதலில் எழுதி விட்டேன். மன்னிக்கவும்) இருந்தாலும் நான் கற்றதை நம்முடன் இருப்பவர்களுக்கும்
தெரிவிக்கலாம் என்று தான்....)
நன்றி
அருணாசெல்வம்.
நீங்க தடுமாறும் போதே என் மூளையில் இயக்க்கம் என்ற வார்த்தை வந்து விட்டது... ஆனால் அது தூய தமிழ் சொல் ...
பதிலளிநீக்குநடைமுறையில் பேசும் போது அப்படி சொன்னால் சிறிப்பார்கள் நீங்கள் சொன்னதுதான் சரியா தோன்றும்...
சிட்டுக்குருவி... நான் சொன்னது சரியாக தோன்றினாலும்
நீக்குஅதற்கான உஒ்மை வார்த்தை என்ன என்பதை அறியாமல் நான் இருந்தேன் இல்லையா...?
இப்பொழுது தெரிந்து கொண்டதை உங்களுக்கும் பகிர்ந்தேன்.
அதற்காக நாம் இனி தொலைக்காட்சிப் பெட்டி இயங்குகிறது என்றா சொல்லப்போறோம்...?
நன்றி சிட்டுக்குருவி.
இவ்வளவையும் சொல்லி விட்டு மொக்கை என்றால் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் வருத்தப்பட போகிறார்... (தொலைபேசி ஒலிக்கிறது... எடுத்து பேசுங்கள்...)
பதிலளிநீக்குதனபாலன் ஐயா... என் ஆசிரியர் நான் போடும் மொக்கை எல்லாவற்றையும் படித்துத் திட்டிவிட்டார்.
நீக்குஅவரை நான் சும்மா திட்டி எழுதினாலும் அதில் உள்ள இலக்கண பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்துவார். அவ்வளவு தமிழ்பற்று உடையவர்.
நம் வலையுகத்தில் “மொக்கை“ என்பது நகைச்சுவையைக் குறிக்கிறது என்பதையும் அவர் அறிவார். அதனால் நிச்சயம் வருத்தப்பட மாட்டார் என்பது தெரியும்.
தவிர என் அறியாமையைத் தான் நான் மட்டம் தட்டிக் காட்டினேன்.
நன்றி தனபாலன் ஐயா.
என்னது இது மொக்கையா??
பதிலளிநீக்குமனசாட்சி.... பலருக்கு இந்த “இயக்கம்“ விசயம் தெரிந்திருக்கலாம்...
நீக்குஅவர்களுக்கு இது சாதாரண மொக்கை பதிவு தான் இல்லையா...?
அதனால் தான் மொக்கை நிகழ்வு என்று எழுதினேன்.
நன்றி மனசாட்சி.
இயல்பான பேச்சு வழக்கிலிருந்து இவையெல்லாம் மறைந்து போய் வெகு நாட்களாகின்றன! இப்போது தமிழில் பேச்சு வழக்கில் இருப்பது 50% கலப்பு சொற்களாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!
பதிலளிநீக்குஉண்மைதான் “வசு”.
நீக்குஅதை நம்மால் மாற்ற முடியவில்லை என்றாலும்...
இதற்கான தமிழ் வார்த்தை இதுதான் என்று அறிந்து வைத்துக்கொள்வது நல்லது தானே...
நன்றி வசு.
பலர் ’வொர்க் ’பண்ணவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.அதுதான் அவலம்!
பதிலளிநீக்குஅவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் போலும்...
நீக்குநன்றி குட்டன் ஐயா.
தொலைக்காட்சியில் நிகழ்சிகள் நடக்கின்றன,நடைபெறுகின்றன என்றுதானே சொல்கிறோம்.இயங்குகிறது என்பது இன்னும் மேலதிகமான வார்த்தைப் பிரயோகம்.நடக்கிறது என்பது சரியானதே என்பது என் கருத்து !
பதிலளிநீக்குஅப்பாடா... என் இனிய தோழி ஹேமா...
நீக்குநீங்கள் ஒருவராவது இதுவே சரிதான் என்று கருத்து சொன்னீர்களே...
ஆனால் நடக்கிறது என்ற சொல்லிற்கான சரியான சொல்லாட்சியை அறிந்து கொண்டோம் இல்லையா...?
நன்றி தோழி.
வணக்கம்
பதிலளிநீக்குபக்கைக் கூண்டு பார்த்ததுண்டு!
பொக்கை வாயைப் புகழ்ந்துண்டு!
சுக்கைக் காய்ச்சிக் குடித்ததுண்டு!
சுவைத்தேன் கதைகள் படித்ததுண்டு!
தக்கைச் செயல்கள் புரிபவரைத்
தடுத்துத் திருந்த வைத்ததுண்டு!
அக்கை என்று சிலபேரை
அன்பாய் அழைத்து மகிழ்ந்ததுண்டு!
கொக்கைக் கண்டு! குயில்கண்டு
கோலக் கவிதை படைத்ததுண்டு!
சக்கை யாக என்னுயிரைச்
சரியாய்ப் பிழிந்த பெண்ணுண்டு!
எக்..கை என்னை எதிர்த்தாலும்
எலும்பை முறித்து எறிந்ததுண்டு!
மெக்கைப் பதிவா? தமிழ்பூக்கும்
மொக்கை நிகா்த்த படைப்பன்றோ!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
“பக்கை கூண்டை“ என்னென்று
நீக்குபடித்த நினைவோ எனக்கில்லை.
தக்கை யாகப் படித்ததனால்
தமிழில் சிலசொல் அறியவில்லை.
சிக்கை யுடைய கூந்தலினைச்
சீவ அழகு கூடுதல்போல்
மொக்கைப் பதிவைப் பாராட்ட
மொக்கும் பூத்த மனமானேன்!
கவிஞர் அவர்களுக்கு நன்றி.
.
பதிலளிநீக்குகவிதையிலேலையே குருவும் சிஹ்யனும் விளையாடுறீங்க.நடத்துங்க
தமிழ்மணம் கருவிப் பட்டை இணைத்து விட்டீர்களா நன்று
இதோ உங்களுக்கு எனது வோட்டு
நான் அறியாததையும் அறிந்ததையும் அவர் பாணியிலேயே கேட்டேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி முரளிதரன் ஐயா.
ஓட்டு போட்டீர்களா...? அதற்கும் நன்றி. (ஆனால்.. அதனால் பயன் என்ன என்று நான் இன்னும் அறியவில்லை)
மிக நல்ல தமிழ் அலசல்.
பதிலளிநீக்குசுவை. ரசித்தேன்.
உங்கள் ஆசிரியர் தொடர்பு எனக்கும் வந்துள்ளது.
மகிழ்ச்சியடைந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கோவைக்கவி.