ஞாயிறு, 24 மே, 2020

அத்தைமக இரத்தினமே! - இலாவணி.





.
அத்தைமக இரத்தினமே சித்தமதில் அமர்ந்துகொண்டே
ஆசையினைக் கூட்டுவதும் ஏனோ ஏனோ?
அத்தனையும் உன்செயலால் பித்தனென ஆக்கிவிட்டே
அந்நியமாய் பார்க்கிறது மீனோ மீனோ!
.
அன்புமொழி பேசிடவும் இன்பமுடன் பாடிடவும்
என்னவளே உனைநாடி வந்தேன் வந்தேன்!
பொன்மொழிகள் ஏதுமின்றிப் புன்சிரிப்பும் ஏந்தலின்றிப்
பொய்முகத்தால் ஊடியதால் நின்றேன்  நின்றேன்!
.
ஏட்டினிலே பாட்டெழுதி தீட்டுகிற உணர்வுடனே
ஊட்டிவிட இங்குவந்தேன் தேடித் தேடி!
பாட்டுலகம் எமதென்றே பாட்டெதற்கு உனக்கென்றே
பண்ணரங்கைக் கண்மறைத்தாய் மூடி மூடி!
.
ஆற்றலினைக் கண்டுகொண்டே ஏற்றமிட்ட இவ்வுலகம்
ஆதரவாய்த் தந்ததொரு விருது விருது!
ஏற்றிடவே சென்றுவந்தேன்! ஏதுமொரு தவறுமின்றி
ஏகலைவி யாகிவிட்டேன் கருது கருது!
.
அமிழ்தென்ற பண்ணிருக்கும் தமிழ்கொண்டு கவிபடைக்கும்
அன்னவளை மனம்வைத்தேன் அன்றே அன்றே!
உமிழ்கின்ற எச்சிலென இமிகூட நினைவின்றி
ஒதுக்கிடவே முன்வந்தாய் இன்றே இன்றே!
.
சொட்டுகிற மொழியினிலே சுட்டுவிடும் ஓர்வார்த்தை
சொந்தமதை அழித்திடுமா சொல்லு சொல்லு!
கொட்டகிற கவியினியே சட்டமுடன் எழுதியதைக்
காட்டிவிட்டுத் தள்ளிநின்று கொல்லு கொல்லு!
.
தவறற்ற நினைவலைகள் சுவரிருக்கும் ஓவியமாய்
தவறின்றி நெஞ்சிருக்கு மின்னி மின்னி!
எவரிடத்தில் சொல்வதிதைக் கவரிமுடிப் போல்காத்தே
எனக்குள்ளே மகிழ்கின்றேன் எண்ணி எண்ணி!
.
பொன்னிருக்கும் பொருளிருக்கும் முன்னவரின் தமிழெடுத்துப்
புண்பட்ட நெஞ்சமதை ஆற்று ஆற்று!
புன்னகையும் பொலிந்துவரும் துன்பமெதும் ஓடிவிடும்
பொய்யற்ற தேனையதில் ஊற்று ஊற்று!
.
முத்துக்கள் ஆயிரமும் மொத்தமதைக் கோர்த்தெடுத்து
முத்தழிழால் கொடுத்திடுவாய் பெண்ணே! பெண்ணே!
சொத்தெல்லாம் நீயென்றே பித்தமுடன் வாழ்கின்றேன்
சொல்லியதை வரைந்திடுவாய் கண்ணே! கண்ணே!
.
தீயென்றால் வடுவிருக்கும் நோயென்றால் உடலிளைக்கும்
சீயென்றால் என்செய்வேன் உன்னை உன்னை!
சேயென்றே அழுகின்றேன்! பேயென்று விலக்காமல்
தாயென்றே அணைத்திடுவாய் என்னை என்னை!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2020

திங்கள், 4 மே, 2020

அன்ன நடை நடந்து செல்லாதே!



(இசைப்பாடல்)
.
அன்ன நடை நடந்து செல்லாதே – உன்
சின்ன இடை அழகால் கொல்லாதே!
.
மணமான புதியதில் எனையன்றி வேறுண்டோ
மனந்துள்ளும் சொர்கமென நீயுரைத்தாய்!
குணமான கொண்டவன் நீயென்று குழந்தையாய்
கொஞ்சமும் பிரிந்தாலும் துயரென்றாய்!

பிள்ளைகள் பிறந்தாலும் பேரெழிலை நான்மகிழ
பின்னலைத் தொட்டாலும் முறைக்கின்றாய்!
கள்ளையுன் கண்ணுக்குள் வைத்தென்னைப் பார்த்துக்
காதலாய்ச் சிலநேரம் மயக்கின்றாய்!

பக்கத்தில் தாய்வீடு இருப்பதனால் தினமும்
பாசாங்கு காட்டியே செல்கிறாய்!
துக்கத்தில் நானிருப்பதைக் கண்டும் எனைத்
தொல்லையாய் எண்ணியே தள்ளுகின்றாய்!
.
ஊடலுடன் போகின்ற தேரழகே என்மீது
உள்ளாடும் ஆசையால் வந்திடுவாய்!
கூடலிலே கோபத்தை எடுத்தெறிந்து அமுதைக்
குறைவின்றி அன்புடனே தந்திடுவாய்!
.
பாவலர் அருணா செல்வம்
04.05.2020