வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாக்கடை நீராய்ப் போனதடி!

கொட்டோ  கொட்டுனு
கொட்டுதடி  வானம்! - மனம்
தொட்டோ  விட்டுடுன்னு
முட்டுதடி  பாவம்!

சின்னச்  சின்னத்  துளியெல்லாம்
சேர்ந்து  தேங்கி  போனதடி!
சின்ன  எறும்பாய்ச் சேர்த்ததெல்லாம்
சேர்ந்தே பாழாய்ப் போனதடி!

கடனோ உடனே வாங்கிநாங்கள்
கஷ்டப்  பட்டு  வைத்தததைத்
தடமே  எதுவும்  காட்டாமல்
இஷ்டம் போல  போனதடி!

பயிர்கள்  செழிக்க  மழைவேண்ட
பன்னீர்ப்  போலத்  தெளிக்காமல்
உயிர்கள்  அலற  வைத்துவிட்டு
உதவா வண்ணம்  போகுதடி!

அளவாய்க்  கிடைத்தால்  அமிர்தம்தான்!
அளவோ  மிஞ்ச  விஷமாகி
வளமாய்  இருந்த  மக்களையும்
வாழ்வைச்  சிதைத்து  விட்டதடி!

தாகம்  எடுத்தால்  உதவுவதே
தண்ணீர்  கொண்ட  பயனாகும்!
சாகும்  தருவில்  உதவாத
சாக்கடை  நீராய்ப்  போனதடி!!


கவிஞர்  அருணா  செல்வம்
05.11.2015 

செவ்வாய், 1 டிசம்பர், 2015

மணமகள் மறுவீடு அழைப்பு பாடல்!


 


புத்தம்  புதிய  புதுமலரே!
புதுத்தாலி   அணிந்த  மணமகளே!
நித்தம் இன்பம்  பெருகிடவே
நெஞ்சம்  நிறைந்து  வாழ்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே!  - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                            (புத்தம் புதிய )

அம்மி  மிதித்த  அருந்ததியே
அன்பால் மலர்ந்த  நறும்பூவே!
கம்பர்  பாடிய  நாயகியே
காதல்  நிறைந்து  வாழ்ந்திடவே 
வலது  காலை  வைத்து  வருகவே! - நல் 
வாழ்வு  மலர  வாழ்கவே!                          (புத்தம் புதிய )

தேடி  உன்னை  மணந்தவனே
தெய்வம்  தந்த  துணையவனே!
கூடி  இன்பம்  களித்திடவே
குலமும்  தழைத்துப் பெருகிடவே
வலது காலை  வைத்து வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                        (புத்தம் புதிய )

பிறந்த  வீடு  மகிழ்ந்தடவே
புகுந்த  வீடு  மதித்திடவே
சிறந்த  பெருமை  காத்திடவே 
செல்வம்  எல்லாம்  சேர்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர வாழ்கவே!                         (புத்தம்  புதிய ) 

அத்தை  மாமன்  மனம்நிறைய
அன்பு  கணவன்  அகம்மகிழ
அங்கே  வாழ்ந்த லட்சுமியும்
ஆசை பொங்கி  உனைஅழைக்க
வலது  காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!!                             (புத்தம் புதிய) 


கவிஞர்  அருணா செல்வம்
19.10.2015

செவ்வாய், 17 நவம்பர், 2015

பள்ளியறைப் பாடல் !


படிப்போமா…  பள்ளியறை
பாடத்தைச் சேர்ந்து
படிப்போம் வா.

பருவத்தில் படித்த படிப்பெல்லாம் – அந்தப்
பள்ளியறை கற்றுத் தந்த பாடங்கள் !
இருவரும் சேர்ந்து படிப்பதெல்லாம் – இந்தப்
பள்ளியறை கற்றுத் தரும் பாடங்கள் !         

ஒன்றும் ஒன்றும் இரண்டென்று – அங்கே
ஓதிய பாடம் சொல்லித் தரும் !
ஒன்றும் ஒன்றும் ஒன்றென்றே – இங்கே
உணர்ந்த நெஞ்சம் துள்ளி வரும் !          (படிப்போமா… )        

ஆக்கம் அழிவு எனவுணர்த்தும் – நல்
ஆற்றல் கொண்டது விஞ்ஞானம் !
ஏக்கம் போக்கி ஆக்கங்களை – உடன்
இயற்கை யாக்கும் மெய்ஞானம் !            

யாரோ வாழ்ந்த வரலாற்றை - நாம்
ஏட்டில் என்றோ படித்துவிட்டோம் !
ஊரே போற்ற வாழ்ந்திடுவோம் ! – அதை
உலகம் படிக்க வைத்திடுவோம் !            (படிப்போமா… )           

தொட்டால் சுடுமெனக் கற்றாலும் – தீ
சுட்டபின் உண்மை வலியறிவோம் !
எட்டி இருந்தே விட்டாலும் – வலி
இதயத்துள் இருப்பதை உடனறிவோம் !       

ஏட்டில் படித்த அறிவெல்லாம் – நம்
இளமைப் பருவ அறவழிகள் !
கூட்டில் படிக்கும் படிப்பினையால் – இன்பம்
கூடும் வாழ்வின் பிறவாழிகள் !              (படிப்போமா… )        


அருணா செல்வம். 
18.11.2015

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பாரீஸ் – குண்டு வெடிப்பு – தெரிந்த செய்திகள் !!


நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கடந்த வெள்ளிக்கிழமை 13ந்தேதி இரவு பிரான்சின் தலைநகர் பாரஸ் நகரத்தில் தீவிர வாதிகளால் ஐந்து இடங்களில் குண்டு வெடித்த சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் இதைக் குறித்து பிரான்ஸ் தொலைக்காட்சியில் நான் அறிந்த செய்திகளைக் எழுதுகிறேன்.

    கடந்த 13 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் – ஜெர்மன் கால்பந்து ஆட்டம் நடைபெற்றது. அதை நானும் என் கணவரும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தோம். அந்த மேட்ச் பார்க்க பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஒலந்த் அவர்களும் வந்திருந்தார்.
    மாட்ச் முடிவதற்கு சில நிமிடங்கள் இருந்த போது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குண்டு வெடித்த சப்தம் கேட்டது. அந்த சப்தத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடுத்த சில நொடிகளிலேயே இன்னொரு குண்டு வெடிப்பு சத்தம். மக்கள் திடிரென்று குக்குரலுடன் கிரௌன்ட்க்குள் ஓடி வந்தார்கள். மாட்ச் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
   சற்று நேரத்தில் பிளாஷ் நியுசாக விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் குண்டு வெடித்துள்ளதாகவும் மக்கள் அனைவரும் அமைதியாக மைதானத்தில் வந்து இருக்குபடி சொன்னார்கள்.
   கொஞ்ச நேரம் என்ன ஏது என்று தெரியாமல் இருந்தது. பிறகு தான் பாரீ்ஸ் நகரின் ஐந்து இடங்களில் குண்டு வெடித்தது தெரிந்தது.
   அந்த இரவு நேரத்தில் குண்டு வைத்தவர்கள் யார் எதற்காக என்பதைப் பார்க்காமல் குண்டு வெடிப்பில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதை முக்கிய கடனாகச் செங்தார்கள்.
   இதன் பிறகு ஒரு சில மணி நேரத்தில் 1500 ஆர்மி படையினர் பாரீஸ் நகரத்தில் இரக்கப்பட்டார்கள்.
   இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் 129 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டார்கள். 352 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கட்பட்டு உள்ளார்கள்.

யார் ? ஏன் ? எதனால் ? 

    இந்த அழிவுச்செயலைச் செய்தவர்கள் சிரி நாட்டு தீவிரவாதிகள் என்பது சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே தெரிந்து விட்டது. மொத்தம் 11 பேராக இருக்கலாம். இதில் எட்டு பேர் மனித வெடிகுண்டுகள். இந்த எட்டு பேரில் ஏழு பேர் ஐந்து இடங்களில் மனித வெடிகுண்டுகளாக வெடித்துச் சிதறிவிட்டார்கள். ஒருவனைப் போலிஸ் சுட்டு கொன்றுவிட்டது. மூன்று பேர் தப்பியோடி விட்டார்கள்.
   தப்பியோடிய மூன்று பேரும் பெல்ஜியம் நாட்டில் ஒளிந்திருப்பதாகச் செய்தி.
  
காரணம் என்ன ?

    சிரி நாட்டில் மதக்கலவரம் நடந்துக் கொண்டு இருக்கிறது. இதனால் பல அப்பாவி மக்கள் அவதிப்படுவதால் ரஷ்யாவும், பிரான்சும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது. இதைப் பிடிக்காத அந்நாட்டு தீவிரவாதிகள் முதலில் ரஷ்ய விமானத்தை தாக்கினார்கள். (கடந்த சில வாரத்தில் வானத்திலேயே ஒரு விமானம் வெடித்துச் சிதறிய செய்தி படித்திருப்பீர்கள்) அதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள்.
    இப்போது பிரான்ஸ் நாட்டைத் தாக்கியுள்ளார்கள்.
   இந்த குண்டுவெடிப்பில் உயிரிட்ட மனித வெடிகுண்டு ஒருவன் ஹல்லா உ ஹக்கபர் என்று கத்தியபடியும், மற்றொருவன் ஒலந்தின் செயல்களை மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள்‘ என்று கத்தியபடியும் வெடித்திருக்கிறான்.
   இவர்களின் குறி ப்ரான்ஸ்வா ஒலந்தைத் தாக்குவது தான். ஆனால் மைதானத்திற்குள் நுழைய பலத்த பாதுகாப்பு இருந்ததால் அந்த மனித வெடிகுண்டால் அரங்கத்திற்குள் நுழைய முடியவில்லை.

இப்போது என்ன நடக்கிறது ?

     சிரி நாட்டின் ஜனாதிபதி பஷார் எல் அஷாத், ‘எங்கள் விசயத்தில் தலையிடாதீர்கள். உங்கள் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்‘ என்று வாய்மொழி அறிக்கையாக வெளியிட்டதால் பிரான்ஸ் இன்று பத்துப் போர் விமானங்களைச் சிரி நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
    இந்த விமானங்கள் சிரி நாட்டில் ராக்கா என்ற இடத்தில் போட்ட 20 குண்டுகளில் சிரி நாட்டின் முக்கிய இராணுவ பயிற்சி கூடத்தைத் தகர்த்தியுள்ளது.
    இன்னும் அந்நாட்டில் என்ன என்ன தகர்த்தப்படுமோ….
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் ! 
இவை அனைத்தும் பிரான்ஸ் தொலைகாட்சி கண்டதை எழுதினேன்.

அருணா செல்வம்

15.11.2015    

சனி, 14 நவம்பர், 2015

யாரையெல்லாம் பாராட்டலாம் ?



    பாராட்டு என்பது எந்த ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. ஒருவரின் கலைத் திறமையைப் பாராட்டாமல் ஒரு பரிசை மட்டும் கொடுத்தால் அவர் செய்த வேலைக்குக் கூலி கொடுத்தது போல் ஆகும்.
    பணம் கொடுக்கும் இன்பத்தை விட ஒரு கலைஞனுக்குப் பாராட்டு அதிக இன்பத்தைக் கொடுக்கும். நீங்கள் ஒருவரைப் பாராட்டும் போது அவர் மனத்தில் நீங்கள் உயர்வாக அமர்த்தப் படுகிறீர்கள்.
   பாராட்டு என்பது ஒருவரின் திறமைக்காக என்பது மட்டுமின்றி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் ஏதுவாகிறது.
    ஒன்றுமே அறியாமல் எதோ ஒரு நல்ல செயலைச் செய்யும் குழந்தையையும் பாராட்டலாம். அதே சமயம் ஒரு கலையில் மூழ்கி அனைத்தும் கற்றவரின் திறமையையும் பாராட்டலாம்.
    ஒரு குழந்தையைப் பாராட்டுவது ஊக்குவிப்பு ஆகும். ஆனால் ஒரு கலையைக் கற்று புகழின் உச்சத்தில் இருப்பவரை ஏதும் அறியாதவர் பாராட்டலாமா ? என்று கேட்டால்…. பாராட்டலாம். பாராட்ட வேண்டும்.
    நான் அனுபவத்தில் கண்டதைச் சொல்கிறேன்.
   போன முறை இந்தியா சென்றிருந்த போது ஒரு திருமண விழாவில் தவில் வித்துவான் வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பரமணியன் ஐயா அவர்களின் கச்சேரி கேட்க நேர்ந்தது. எனக்கு பொதுவாக அதிக சத்தம் இருந்தால் பிடிக்காது. ஆனால் அன்று இந்த வித்தவானின் திறமையை வெகுவாக இரசித்தேன். எனக்கு அவரிடம் சென்று அவரைப் பாராட்டி இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது.


   ஆனால்…
   எனக்கு தவிலைப்பற்றியோ, அவர் வாசித்த இசை குறிப்புகள் பற்றியோ ஒன்றுமே தெரியாது. கேட்க நன்றாக இருந்தது. இரசித்தேன். அவ்வளவு தான். இருந்தாலும் அவரிடத்தில் அவர் திறமையால் நான் கேட்டு மகிழ்ந்ததைச் சொல்ல வேண்டும் என்றே தோன்றியதால்…. கச்சேரி முடிந்ததும் தயங்கித் தயங்கி அவரிடம் போய் என்னை அறிமுகப் படுத்திவிட்டு ‘ஐயா எனக்கு தவில் கலையைப் பற்றியெல்லாம் தெரியாது. அதனால் எதைச் சொல்லி எப்படி பாராட்டவது என்று தெரியவில்லை. ஆனால் நான் உங்கள் கச்சேரியை விரும்பி ரசித்தேன் ஐயா‘ என்றேன்.
   அவர், ‘ஏதோ விழாவிற்கு வந்தோம், கேட்டோம். சென்றோம் என்றில்லாமல், காத்திருந்து இந்த ஒரு வார்த்தையைச் சொன்னதே போதும். ஒரு கலைஞனை இப்படித்தான் பாராட்ட வேண்டும் என்ற வகை அறிந்து பாராட்டுவதை விட மனதில் பட்ட மகிழ்ச்சியுடன் பாராட்டுவது தான் எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. நன்றாக இருமா‘ என்று அவர் என்னை வாழ்த்தி அனுப்பினார்.
   இதே போலதான் ஆச்சி மனோரம்மாவைச் சந்தித்து, கொண்டு சென்ற அன்பளிப்பைக் கொடுத்த போது ‘எதுக்குமா இதெல்லாம். என் நடிப்பை ரசிச்சி என்னைப் பார்க்க வந்து பாராட்டியதே எனக்கு பெரிய சந்தோசம்…’ என்று அருகில் இருந்த தன் உதவிப்பெண்ணைப் பார்த்து பயந்த படியே( ?) சொன்னார்.
   ஆச்சியம்மாவிற்கு இல்லாத ரசிகர்களா… ? அவர்களுக்குக் கிடைக்காத பாராட்டா…. ? இருந்தாலும் என் பாராட்டையும் விரும்பினார்கள்.
   ஆக, அனைத்து உள்ளங்களுமே தான் செய்யும் காரியங்களுக்கான உரிய பாராட்டை விரும்புகிறது. திறமை உள்ள அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது பாராட்டிவிடுங்கள்.
   இவரின் திறமையைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளே இல்லை என்று நினைத்து, அவரைப் பாராட்டாமல் இருந்தால் நம் மனத்தில் கொண்ட மகிழ்ச்சி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.
   சரியான திறமையை வாய்விட்டு பாராட்டுங்கள். ஆஹா, அருமை, நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், சூப்பர், எக்ஸலன்ட், இப்படி ஏதாவது சொல்லி பாராட்டுங்கள்.
   கற்றுத் தரும்போது அவனும் கற்றுக் கொள்கிறான் என்பது போல ஒருவரைப் பாராட்டும் போது பாராட்டுபவனும் உயர்ந்தவனாகிறான்.

அன்புடன்
அருணா செல்வம்.
14.11.2015


புதன், 11 நவம்பர், 2015

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் !!


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை,
‘சப்தமிட்டு நடக்காதீர்கள்
இங்கே தான் என் அம்மா
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்‘

உலகப் பேரழகி கிளியோ பாட்ராவின் கல்லறை வாசகம்,

உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல வேலையாக பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருந்திருக்கும்‘

மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்,

‘இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்த கல்லறைக் குழி
போதுமானதாக இருந்தது‘

ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம்,

‘இங்கும் புதை குழியில் கூட
இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்‘

ஓர் அரசியல்வாதியின் கல்லறையின் மீது எழுதப்பட்ட வாசகம்,

‘தயவு செய்து இங்கே
கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்துவிடப் போகிறான்‘

ஒரு விபச்சாரியின் கல்லறை வாசகம் இது,

‘இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறாள்‘

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி வாழ்த்து !


 
பட்டுச் சட்டை புதுத்துணிகள்
   பகட்டாய் வாங்கி அணிந்துகொண்டு
லட்டும் முறுக்கும் அதிரசமும்
   தட்டு நிறைய வைத்துஉண்டு,
கட்டுக் கட்டாய் வெடிவெடித்துக்
   கணக்கே இன்றிப் பிறர்க்குதவ
கொட்டும் இன்பம் ! எனக்கூறி
   குளிர்ந்த தமிழால் வாழ்த்துகிறேன் !

நட்புறவுகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

10.11.2015

ஞாயிறு, 8 நவம்பர், 2015

சர்க்கரை வியாதியா ? இங்கே வர வேண்டாம் !!












நட்புறவுகளுக்கு வணக்கம்.

     இந்த தீபாவளிக்கு இந்த இனிப்புகளை எல்லாம் சுட்டு கொடுத்து உங்களை எல்லாம் அசத்தி விட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி நான் இனிப்புகளைச் ‘சுட்டு‘ விட்டேன். அனைவரும் வந்து கண்டு ‘சும்மா‘ எடுத்து உண்டு களியுங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

09.11.2015

வெள்ளி, 6 நவம்பர், 2015

மணமகள் வரவேற்பு பாடல்!





மஞ்சள் பூசிய மலர்க்கொடியே ! – நல்
மணமேடை காண வருகவே !
கொஞ்சும் அழகுத் தமிழ்மகளே ! – நம்
குலம்வாழக் குளிர்ந்து வருகவே !

அன்னை ஊட்டிய அன்பினையும் – உன்
தந்தை காட்டிய அறவழியும்
ஆசான் தீட்டிய அறிவினையும் – உடன்
ஆண்டான் ஈட்டிய நன்னிலையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே !                               (மஞ்சள்)

பிரம்மன் படைத்த அழகினையும் – நிதம்
பேணிக் காத்த கற்பினையும்
தரமாய்ப் பேசும் தமிழ்மொழியும் – மனம்
தளரா உழைப்பின் உயர்வினையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே !                             (மஞ்சள்)   

உடன் பிறந்தோர் பாசத்தையும் – உண்மை
உற்றோர் காட்டிய உணர்வலையும்
ஆடிப் பாடிய தோழியரும் – அன்று
அவர்கள் பேசிய கேலியையும்
மனத்தில் நிறைத்து வருகவே ! – நல்ல
குணமாய் நினைத்து மகிழவே !                  (மஞ்சள்)

உலகம் போற்றும் சீரனைத்தும் – உன்னில்
உயர்வாய் ஒளியாய் மின்னுதடி !
குலமும் தழைக்க வேண்டுமடி ! - கை
கோர்த்து இணைய வேண்டுமடி !
மணமகன் காத்தி ருப்பானே – அவன்
மனம்குளிரக் கண்டு மகிழவே !                   (மஞ்சள்)

இசைப்பாடல்
கவிஞர் அருணா செல்வம்

07.11.2015

சனி, 31 அக்டோபர், 2015

வாணிதாசன் விழா பாடல்!




கலைவாணி பெற்றெடுத்த வாணி தாசர்!
      கவிஞரேறு பேறுபெற்ற தமிழின் நேசர்!
சிலைபோன்று செதுக்கிவைத்த பாக்கள் சொல்லும்
      சீர்மிகுந்த இசைப்பாக்கள் தஞ்சம் என்று!
மலைத்தேனும் தோற்றோடும் வண்ணம் இந்த
      மாமனிதர் நூல்படித்தால் தோன்றும் எண்ணம்!
அலையல்ல வந்துபோக! நிலையாய் நிற்கும்
      அரசுடமை கொண்டதுவும் உயர்வே என்றும்!

தொடுவானம் இசைப்பாட்டாய்த் தந்தார்! நல்ல
      தோழியினைத் தேவதையாய்க் கண்டார்! மாதர்
படுவதையே “விதவைக்கோர்ச் செய்தி“ சொன்னார்!
      பாட்டும்பி றக்குமெனப் பாடி வைத்தார்!
நடுஇரவில் கடிதங்கள் வரைந்து கொண்டே
      நல்லிரவு வரவில்லை என்றார்! நன்மை
கொடுக்கின்ற வாழையடி வாழை போல
      கொடிமுல்லை காப்பியமும் சுவைக்க தந்தார்!

வீட்டுக்குச் சேர்த்துவிட்டு வெறுங்கை காட்டி
      வெள்ளைவேட்டி வேசமுடன் நடப்போர்க் குள்ளே
நாட்டுக்கு நன்மைகளைச் சொல்லிச் செல்லும்
      நன்மனது கொண்டவர்கள் சிலரே! உள்ளக்
கூட்டுக்குள் சமுதாய நலத்தைக் கோண்டோர்
      குறிப்பெடுத்தே ஒருசிலரை நோக்கிப் பார்க்க
பாட்டுக்குள் நற்கருத்தைச் சொல்லிச் சென்ற
      பாவலராம் வாணிதாசர் புகழும் வாழ்க!


கவிஞர் அருணா செல்வம்
13.02.2015

வியாழன், 29 அக்டோபர், 2015

கோபம் வந்தால்......


       இளைஞன் ஒருவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. அவனுக்குக் கோபம் வரும்போதெல்லாம் அவன் கத்தித் தீர்த்து விடுவான். மேலும் தன் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வான்.
   இதைக் கவனித்த அவனின் அப்பா, அவனை ஒரு நாள் அழைத்து, அவனிடம் ஒரு சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்து, ‘இனிமேல் உனக்கு ஒவ்வொரு முறை கோபம் வந்து போன பின்பு வீட்டின் பின்புறத்தில் இருக்கும் சுவற்றில் ஒரு ஆணி அடித்து விடு‘ என்று சொன்னார்.
    அவனும் அது போலவே செய்தான். முதல் நாள் பத்து ஆணி அடித்தான். மறுநாள் ஏழு, அதற்கும் மறுநாள் ஐந்து என்று ஒவ்வொரு நாளாக ஆணி அடிப்பது குறைந்து கொண்டே வந்து ஒரு நாள் ஆணி அடிக்காத நிலையும் வந்தது. உடனே தன் தந்தையிடம் சென்று, ‘அப்பா இது வரையில் 45 ஆணிகள் அடித்துள்ளேன். இனி எனக்குக் கோபம் வராது என்று நினைக்கிறேன்‘ என்றான்.
   உடனே அப்பா, ‘அப்படியா, நல்லது. இனிமேல் உனக்குக் கோபம் வராத நாளெல்லாம் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கிவிடு‘ என்றார். 45 நாட்களில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. இந்த விசயத்தைத் தன் தந்தையிடம் பெருமையாக சொல்லி காட்டினான்.
   அப்பாவும் அவ்விடத்தைப் பார்த்தார். பிறகு சொன்னார், ‘ஆணிகளைப் பிடுங்கிவிட்டாய். ஆனால் சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய் ? உன் கோபமும் இது போல பலரைக் காயப்படுத்தி இருக்கும் அல்லவா ?‘ என்று கேட்டார். இளைஞன் பதில் சொல்ல முடியாமல் வெட்கித் தலை குனிந்தான்.

   கோபத் தீயின் வடுவும் மறையாது. 

திங்கள், 26 அக்டோபர், 2015

சித்திரச் சிரிப்பு !



சித்திரம்  போலவள்  சிரிக்க – கண்
                     பறிக்க – மனம்
                     அரிக்க – உயர்
சிந்தையிலே அதைத் தரிக்க – நல்ல
சிறப்பாகவும் செழிப்பாகவும்
   செருக்காகவும் விருப்பாகவும்
சீரெடுத்தப் பாடி மகிழ்வேன் ! – அவள்
பேரெடுத்துப் பாடி நெகிழ்வேன் !

நித்தமும் முன்வந்து பார்க்க – கரம்
                    கோர்க்க – உயிர்
                    ஈர்க்க – மனம்
நிம்மதியாய் அதை  ஏற்க – என்
நினைவலைகளும் கனவலைகளும்
    கடலலையென நடம்புரிந்திடும்
நெஞ்சமெல்லாம் மழை பொழியும் ! – அந்த
வஞ்சியாலே கவி வழியும் !

(காவடிச் சிந்து)
கவிஞர் அருணா செல்வம்.

புதன், 21 அக்டோபர், 2015

அந்தப் பொழுது!



பூக்கள் மணம்பரப்ப ! ஈக்கள் மதுவருந்த !
தேக்கம் தெளிந்திருக்க ! தேய்நிலவு – நோக்கமின்றி
மேலிருக்க ! மேனிதொட்ட மேற்றிசைக் காற்றினிலே
சூலிருக்க ! சொர்க்கம் தர !

குயிலெல்லாம் பாட ! மயிலெல்லாம் ஆட !
பயிர்கள் தலைசாய ! பாச – உயிர்கள்
இணைத்தேட ! காற்றும் இதமாக ! காமன்
கணைதொடுக்க ! காதல் வர !

கண்ணோடு கண்பார்க்க ! கையோடு கைசேர்க்க !
விண்ணோடு மேகம் விளையாட ! – மண்ணுலகில்
என்னோடு நீயாட ! உன்னோடு நானாட !
பொன்னான அந்தப் பொழுது !

(குளக வெண்பா)
கவிஞர் அருணா செல்வம் 
12.07.2014

திங்கள், 19 அக்டோபர், 2015

சினிமா துறையில் ஜொலிக்க வேண்டுமா ?


நட்புறவுகளுக்கு வணக்கம்.
       பொதுவாகவே நிறைய பேருக்கு சினிமா உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணத்திற்காக புகழுக்காக என்ற காரணம் மட்டும் அல்லாமல் அதில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்துக் கொண்டு அனைவரையும் அது தன்பால் இழுக்கத்தான் செய்கிறது.
   ஒரு சமயம், இதில் நம் திறமைகளை வெளிகாட்டினால் அது பல்லாயிரக் கணக்கான மக்களிடம் சென்றடையும் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். எந்தத்திறமையானாலும் அதை மற்றவர்கள் கண்டு களித்துப் பாராட்டினால் தானே அந்தத் திறமைக்காண அங்கிகாரம் கிடைத்ததாக ஆகும்.
   ஏனோ கொஞ்ச நாட்களாக எனக்கும் இந்த ஆசை துளிர்விட ஆரம்பித்து விட்டது. இது சரியா தவறா என்று யோசிப்பதற்கு முன்பே என் எண்ணங்களுக்குச் சிறகு முளைத்து விட்டது. என்ன செய்வது ? நானும் சராசரி மனுஷி தானே….. ஹி ஹி ஹி.....
   சரி… சினிமாத்துறையில் நுழைந்து மின்னுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தவிர சினிமாத்துறையில் நுழைந்த அத்தனை பேருமே மின்னிவிடவில்லை. ஏதோ சிலர்தான் பிரபலங்காளாக ஆகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்.
   அப்படி பிரபலங்களானவர்களை ஒரு வரிசைப்படுத்தினேன்.
   என்ன ஓர் ஆச்சர்யம் !!!!!
   நான் வரிசைப்படுத்திய பல பிரபலங்களின் பெயரில் உள்ள எழுத்துக்களில் ஜ, ஜி, ஜோ, ஷ, ஹ, ஸ்ரீ போன்ற எழுத்துக்கள் உள்ளவர்களே நிறைய பேர்களாக இருந்தார்கள்.
உதாரணமாக

சிவாஜி
எம். ஜி. ஆர்
பாலாஜி
எஸ் எஸ் ராஜேந்திரன்
ஜெய்சங்கர்
ஏ எம் ராஜன்
நாகேஷ்
சரோஜா தேவி
டி.ஆர் ராஜகுமாரி
எம் என் ராஜம்
விஜய குமாரி
கே ஆர் விஜயா
ஜெயந்தி
வாணிஸ்ரீ
உஷா நந்தினி
ரஜினி
கமலஹசன்
ஸ்ரீதேவி
ஸ்ரீ பிரியா
சுகாஷினி
விஜய்
அஜித்
தனுஷ்
ஜோதிகா
டி எம் சௌந்தர்ராஜன்
ஜானகி
எல் ஆர் ஈஸ்வரி
ஜிக்கி
ஸ்வர்ண லதா
பாரதிராஜா
பாக்கியராஜ்
பாண்டியராஜன்
டி ராஜேந்தர்…..

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலே உள்ள நட்சத்திரங்கள் மின்னிட இப்படி ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களைத் தன் பெயரில் வருவது போல் அமைத்துக்கொண்ட காரணமாகக் கூட இருக்கலாம்.
    உடனே நானும் என் பெயரை எப்படி எப்படியோ மாற்றி எழுதிப் பார்த்தேன். ம்ம்ம்….. எதுவும் தேறவில்லை. ஆனால் உங்களில் யாருக்காவது சினிமாத்துறையில் நுழைந்து மின்னிட ஆசை இருந்தால் உங்களின் பெயரை ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ எழுத்துக்கள் சேர்ந்து வருமாறு அமைத்துப் புகழ்பெருங்கள்.

பின்குறிப்பு
    இந்த ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் அல்ல. வடமொழி எழுத்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

20.10.2015