தொட்டோ அணைக்க முடியாது!
தொடாமல்
இருக்க முடியாது!
கட்டுக் கடங்கி நிற்காது!
கண்ணால்
பார்க்க முடியாது!
கொட்டிக் கொடுக்க முடியாது!
கூட்டித்
தள்ள முடியாது!
பட்டு உணர்வைத் தரும்தென்றல்
பருவ கால
வசந்தமது!
மெல்லத் தவழும் வேளையிலே
மேலும்
கேட்டு மனமேங்கும்!
வல்லத் தனமாய் ஆகையிலே
வலிமை
மிகுந்து பயங்கொடுக்கும்!
எல்லை எதுவும் அதற்கில்லை!
எழிலாம்
உலகில் இதன்வரவோ
இல்லை என்றால் இயக்கமில்லை!
இனிமை
பொங்கும் வாழ்வுமில்லை!!
தண்ணீர் குளத்தில் தவழ்ந்துவந்தால்
தனிமை
ஏக்கம் தரும்தென்றல்!
பெண்ணின் மேனி தொட்டுவந்தால்
பெண்மை
தொட்டச் சுகதென்றல்!
கண்ணைத் தொட்டுப் போனாலும்
கண்ணீர்
சிந்த வைக்காமல்
மண்ணில் மட்டும் வாழுகின்ற
மாசே அற்ற
நறுந்தென்றல்!!
சின்னச் சின்ன உயிர்களுக்கும்
சீராய்
இதயம் துடிக்கவைக்கும்!
வண்ண வண்ண மலர்களையும்
வளமாய் வாழ
வழிவகுக்கும்!
எண்ணி எழுத முடியாத
இயலாய்
வாழ்வில் இருப்பதனால்
சின்னச் சின்னக் கவிச்சிறையில்
சிக்கி
அடைக்க முடியவில்லை!
(இந்த மாத பிரான்சு குறளரங்கத்தில் கொடுக்கப்பட்ட
“தென்றல்“ தலைப்பில் நான் எழுதி வாசித்தக் கவிதை)
அருணா செல்வம்
27.04.2013