சனி, 29 டிசம்பர், 2018

நிந்தை உவமை! - 8




     பாடலில் ஓர் உவமையைப் பழித்துப் பின்பு அதையே உவமிப்பதுநிந்தை உவமைஆகும்

உ. ம்
பருவமங்கை போல் பசுமையிடும்! பின்னர்
உருவமெழில் கோர உதிரும்! – பெருமரம்
காலத்தின் மாற்றம்போல் காட்சிகளே மாறிடும்
ஞாலம் நடத்தும் நிகழ்வு!

பொருள்பெரிய மரமானது பருவகாலம் வந்ததும் மங்கையைப் போல் பூத்துக் காய் கனி தரும், குளிர்காலம் வந்ததும் இலைகள் உதிர்ந்து தன் பசுமை நிலையின் எழில் அழிந்து நிற்கும். இது காலமாற்றத்தால் உலகத்தில் நடக்கும் நிகழ்வு.
     பாடலில் தொடக்கத்தில் பெரிய மரத்தைப் பருவ மங்கை போல் பசுமையாக இருக்கும் என்று உவமை கூறி, பின்பு அதன் எழிலை அச்சம் தரும் கோரமாய் உதிரும் என்று உவமையை நிந்தித்து வந்துள்ளது. ஆனால் அது அதன் தவறல்ல உலக நிகழ்வு என்று உவமித்ததால் இது ²நிந்தை உவமை² ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2018

வெள்ளி, 28 டிசம்பர், 2018

புகழ் உவமை! - 7


   


பாடலில் வந்திருக்கும் உவமைகளைப் புகழ்ந்து கூறுவதுபுகழுவமைஆகும்.

. ம்
மேலிருந்து கீழ்ப்பாயும் வெண்மயில்போல் நீரருவி
வேலிருக்கும் கூர்,பாறை வீற்றிருக்கும்! – வேலியெனச்
செவ்வேல் முருகனுடன் எந்நாளும் வாழ்வதனால்
எவ்வுயர்வு வேண்டும் இதற்கு!

பொருள்மேலிருந்து கீழ்ப்பாயும் வெண்மயிலைப் போன்ற அருவியும், கந்தனின் வேலில் இருக்கும் கூர்மை போன்று கூர்மை நிறைந்த பாறைகளும் மலையில் வீற்றிருக்கும். உலகின் வேலியென காக்கும் முருகனுடன் இவைகள் எந்நாளும் வாழுவதால் இதைவிட வேறு உயர்வு இதற்கு வேண்டுமா ?
    பாடலில் அருவிக்கு ஒப்பாக வந்த மயிலும், கூர்மையான பாறைகளுக்கு ஒப்பாக வந்த வேலும் முருகனுடன் இருப்பவைகள். மயிலும் வேலும் உவமையாக வந்து அவை இரண்டும் முருகனுடன் எந்நாளும் இருப்பவைகள் என்றும், இதைவிட உயர்வு இதற்கு வேறில்லை என்றும் உவமைகளைப் புகழ்ந்து வந்துள்ளதால் இது “புகழுவமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2018

வியாழன், 27 டிசம்பர், 2018

மறுபொருள் உவமை! - 6




     பாடலில் முதலில் ஒருபொருளுக்கு ஒரு பொருளை உவமையாக வைத்துக் கூறிய பிறகும், பின்பு அதற்கு நிகரான மற்றொரு பொருளை மீண்டும் உவமையாக கூறி முதலில் உள்ள பொருளுக்கு இதை உவமையாக வைப்பது  மறுபொருள் உவமைஆகும்.

உ. ம்
காற்றைப்போல் நெஞ்சுள் கமழ்ந்திடும் தாய்மொழியே
ஊற்றைப்போல் உன்னால் உளம்நிறைபோல்! ஏற்று
மகிழும் மறைபோல், மறையாமல் வாழும்
அகிலத்தில் அன்னையின் அன்பு!

பொருள்காற்றைப்போல் நெஞ்சுக்குள் என்றும் நிறைந்து இருப்பது தாய்மொழி. அதைப்படிக்க ஊற்றின் குளிர்வினைப் போல் உள்ளம் நிறையும். அதுபோல் உலகத்தில் இருக்கும் மறைந்திடாத திருமறையைப்போல நாம் வாழுமட்டும் அன்னையின் அன்பு நெஞ்சுள் மறையாது நிறைந்திருக்கும்.

    இப்பாடலில் முன்னர் வைத்த பொருள் தாய்மொழி. பின்னர் வைத்த பொருள் அன்பு. நெஞ்சத்துள் காற்றுபோல் தாய்மொழி இருப்பதைப் போல, வாழும் வாழ்வில் தாயின் அன்பு நிறைந்து ஒத்திருக்கும் எனக் கூறி இருப்பதால் இதுமறுபொருள் உவமை அணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.12.2018

புதன், 26 டிசம்பர், 2018

உண்மை உவமை! - 5




    பாடலில் முதலில் உவமையைக் கூறிவிட்டு, பின்பு அதை மறுத்து உண்மைப் பொருளினையே கூறி முடிப்பதுஉண்மை உவமை அணிஎனப்படும்.

கார்மேகம் அன்று கருங்குழலே! செம்மையெனும்
நேர்வழி அன்றவள் நீள்வகிடு! – சேர்த்திருக்கும்
முத்தன்று பல்வரிசை! முத்தமிடும் என்னவளோ
சொத்தில் உயர்வென்று சொல்லு!

பொருள்மழைதரும் கார்மேகம் இல்லை. கருங்கூந்தல் தான். வாழ்வைச் செம்மையாக்க நடக்கும் நேர்வழிப்பாதை இல்லை, அது அவளின் வகிடு, கோர்வையாக கோர்த்திருக்கும் முத்து மாலை அல்ல, அது அவளின் பல்வரிசை. என்னை முத்தமிடும் என்னவளின் சொத்தானது மற்றதற்கு ஓப்பாகாதுஎன்று முதலில் உவமையைக் கூறி பின்பு அதை மறுத்து உண்மை பொருளையே கூறியதால் இதுஉண்மை உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.12.2018

சனி, 22 டிசம்பர், 2018

சமுச்சய உவமை! - 4




    பாடலில், ஒரு பொருளை இன்னொரு பொருளோடு ஒப்புமை கூறும் போது, அந்தப் பொருள் இதனோடு மட்டுமின்றி மற்றொன்றாலும் ஒக்கும் என்று சொல்வதுசமுச்சய உவமை அணிஆகும். சுறுக்கமாக, இதனை ஒப்பது இதனோடு இன்றி இதனாலும் ஒக்கும் என்பதாம்.
    இவ்வணி இரண்டு மூன்று ஒப்புதலைக் கூட்டிச் சொல்ல வரும். அதாவது ஒரு பொருளோடு ஒருபொருள் உவமிக்கப்படும் போது, இந்த காரணம் மட்டும் இன்றி இன்னும் இரண்டு மூன்று காரணங்களாலும் உவமை படுவதைக் கூட்டிச் சொல்வது ஆகும்.

வளைவுக்கே ஒப்பாக வந்ததன்றி, மேனி
இளைத்தலும், மென்பூ இதழும்! – கிளைவள
காய்கனியும், வாழ்வின் கருசூழ் இடமொக்கும்
நோய்த்தல் கொடியிடை நோக்கு!

பொருள் பெண்ணின் இடையானது வளைவதனால் மட்டும் கொடியிடை என்று ஒப்பாக சொல்வதன்றி, மேனி இளைத்தலை ஒப்பதும், மென்மையான மலரிதழை ஒப்பதும், வளமான கிளைகளில் உள்ள காய்கனிகளை ஒப்பதும், மகரந்தம் சூழும் இடத்தை ஒப்பதாலும் பெண்ணின் கொடியிடை ஒக்கும் என்பதனால் இந்த உவமைசமுச்சயம் உவமைஆகியது.
(நோய்த்தல்மெலிதல்)
.
பாவலர் அருணா செல்வம்
22.12.2018

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

இதரவிதர உவமை! - 3



ஒரு பாடலில் உள்ள ஒரு பொருளுக்கு உவமை கூறி, பின்பு, அந்த உவமைக்கு அந்த பொருளையே திரும்பவும் கூறி வருதல்இதரவிதர உவமைஆகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒன்றுக்கொன்று உவமையாக வருதலே ஆகும். இதைத்தடுமாறு உவமைஎன்று தொல்காப்பியம் கூறுகிறது.

உ. ம்

கூர்விழி போல்வாலோ! கொன்றிடும் வால்போன்று
கூர்விழியோ! என்னவள் கூந்தல்போல்கார்முகிலோ!
கார்முகில்போல் கூந்தலோ! கண்ணிருந்தும் என்சொல்வேன்?
தேர்ந்தெடுத்துச் சொன்னால் சிறப்பு!

பாடலில் கூர்விழியைப் போல் வால் என்று உவமை கூறியபின் அவ்வாலுக்கே விழியை உவமை கூறப்பட்டு வந்துள்ளதால் இதுஇதரவிதர உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
16.12.2018

செவ்வாய், 11 டிசம்பர், 2018

2. தொகை உவமை!




இதைச்சுட்டிக் கூறா உவமைஎன்கிறது தொல்காப்பியம்.

பாடலில் உவமை, பொருள், உவம உருபு, பொதுத்தன்மை ஆகிய நான்கும் அல்லது ஒன்றேனும், இரண்டேனும், மூன்றேனும் விரியாமல் தொக்கு வருவது தொகை உவமை“ ஆகும்.

உ.ம்

குமுத முகமுடன் கொவ்வை உதட்டால்
அமுத மொழியால் அழைக்க அமுதமழை
கொட்டும் நிலையில் கொழித்திடும் நெஞ்சமதோ
சிட்டாய்ப் பறக்கும் செழித்து!

பொருள் – குமுதமலரைப் போன்ற முகமும், கொவ்வைக் கனியைப் போன்ற உதடும், அமுதம் போன்ற மொழியால் அவள் என்னை அழைக்க, அம்மொழி, கடவுள் கொடுத்த மழையால் கொட்டிடும் குளிர்நிலைபோல் என் நெஞ்சமானது சிட்டுப்போல் செழிப்பாய் பறக்கும்.
   பாடலில் குமுதம் போன்ற முகம், கொவ்வைப் போன்ற உதடுஎன்று உருபு விரியாமல் வந்துள்ளதால் இதுதொகை உவமைது.

பாவலர் அருணா செல்வம்
12.12.2018

திங்கள், 10 டிசம்பர், 2018

1 விரி உவமை!




    விரி உவமை என்பது பண்பும், தொழிலும், பயனும் பொருளுக்கும் உவமைக்கும் பொதுத் தன்மையாக உவம உருபு விரிந்து நிற்பதும், உவமையும், பொருளும், உருபும், பொதுத்தன்மையும் ஆகிய நான்கும், அல்லது ஏதேனும் சிலதோ பாடலில் விரிந்து வருவது விரி உவமை ஆகும்.

உ.ம்

மீன்போலத் துள்கண்ணும் மேகம்போல் கார்குழலும்
தேன்போல வார்த்தைத் தெளிந்தவளே! – வான்மழை
நீர்போல் வளம்தரும் நெஞ்சமதில் செந்தமிழின்
சீர்போல் செழிப்பாய் சிறந்து!

பொருள் மீன் போலத் துள்ளும் கண்களும், மேகம் போல கூந்தலும், இனிய தேனின் சுவைப்போல வார்த்தைகளைச் சொல்ல தெளிந்தவளே நீ வானிலிருந்து கொட்டும் மழையின் நீரைப்போல வளத்தைத்தரும் என் நெஞ்சத்தில் செந்தமிழின் சீரைப்போல செழிப்புடன் இருந்து சிறந்திடுவாய்.
    மீன்போலத் துள்கண்கள் என்பதில் பொருளும் உவமையும் தொழிலும் வந்துள்ளது., போல என உவம உருபுகள் விரிந்தும் வந்துள்ளது. மேகம் போல் கூந்தல் என்பதில் கருமை பண்பு வந்துள்ளது. பாடலில்  பல இடங்களில்போல என்ற உவம உருபு விரிந்து வந்துள்ளதால் இது விரி உவமை ஆகும்.

பாவலர் அருணா செல்வம்
10.12.2018

சனி, 8 டிசம்பர், 2018

தொழில்தன்மை அணி (தொழிற்றன்மை)



உயர்திணையோ அஃறிணையோ…. அதனதன் செய்யும் தொழிலின் தன்மையை மாறாமல் பாடுவது தொழில் தன்மை அணி எனப்படும்.

.ம்

தானுண்ட மீதி தனதிடத்தில் சேர்த்திருக்கும்!
வானுண்ட நீரோ வடியுமுன்! – தானுரையும்
வாழ்விடத்தை நேராய் வரிசையாய் சென்றடையும்!
ஏழ்மை எறும்புக்கோ ஏது?

பொருள் வானிலிருந்து மாழைநீர் கொட்டும் முன்பு, தான் உண்டது போக மீதியைத் தன் இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்து வைத்திடும். தான் வாழும் இடத்திற்கு வரிசையாய்ச் சென்றடையும். சுறுசுறுப்பாய் உழைத்திடும் எறும்புக்கு ஏழ்மை இல்லை.
    எறும்புகள் செய்யும் தொழிலின் தன்மை மாறாமல் கூறியதால் இது தொழில்தன்மை அணி ஆகியது.

பாவலர் அருணா செல்வம்
08.12.2018

செவ்வாய், 4 டிசம்பர், 2018

சாதித்தன்மை அணி!



ஓர் இனத்தின் பலவிதமான தன்மைகளைக் குறித்துப் பாடுவது சாதித்தன்மை அணி எனப்படும். (குரங்கினம், பாம்பினம், மாட்டினம்….)

.ம்.
ஓரிடம் நில்லாமல் ஓடிமரம் தாவிடும்!
கூரிய பல்இளிக்கும்! கோரமுகம்! – சூரிய
செம்பழத்தைத் தேடியதாம்! சீரான வாலினால்
நம்மினத்தில் மாறியது நன்கு!

பொருள் ஓரிடத்தில் நில்லாமல் மரத்திற்கு மரம் தாவிடும். கூரிய பற்கள் காட்டி இளிக்கும். கோரமுகம் கொண்டது. அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் ஒரு காலத்தில் சூரியனைச் சிகப்பான பழம் என்று எண்ணி அதைப்பிடிக்க வானத்தில் தேடி ஓடியது. அதற்கு இருக்கும் வால் ஒன்றினால் தான் மனித இனத்திலிருந்து மாற்றத்துடன் நன்றாய்த் தெரிகிறது. என்று குரங்கு சாதியின் தன்னையை மாறாமல் கூறியதால் இது சாதித்தன்மை அணி ஆகியது.

பாவலர் அருணா செல்வம்
04.12.2018

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

குணத்தன்மை அணி!



ஒவ்வொரு உயிரையோ பொருளையோ அதனதன் குணத்தின் தன்மையை மாற்றாமல் பாடுவது குணத்தன்மை அணி எனப்படும்.

.ம்.
குயிலெல்லாம் கூவ, குரங்குகள் தாவ,
மயில்கள் அகவ மகிழும்! – பயிரோ
வணங்க விளைந்திடும்! வாழும் உயிரின்
குணத்தன்மை மாறாத கூற்று!

பொருள் குயில்கள் கூவும், குரங்குகள் தாவும், மயில் அகவும், பயிர் மண்ணில் சாய்ந்தால் தான் விளையும் என்று உலகில் வாழும் உயிர்களின் குணங்களின் தன்மை மாறாததாக உள்ளது.
   பாடலில் அதன் அதன் குணங்களின் தன்மை மாறாமல் கூறியதால் இது குணத்தன்மை அணி ஆகியது.

பாவலர் அருணா செல்வம்
02.12.2018