வெள்ளி, 30 நவம்பர், 2012

குளிர்காலத்தில் உடம்பு வலிக்கிறதா..? (எளிய நிவாரணம்)




   நட்புறவுகளே... உங்களுக்கு அல்லது உங்களில் யாருக்காவது இந்தக் குளிர்காலம் வந்தால்...
உடம்பு வலிக்கிறதா...?
முதுகு தண்டில் வலிக்கிறதா?
கழுத்தெலும்பு வலிக்கிறதா..?
இடுப்பெலும்பு குடைகிறதா..?
வயிறு உப்பலாக இருக்கிறதா?
சோம்பலாக இருக்கிறதா?
சாப்பிடப் பிடிக்காமல் ஏதோ சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறீர்களா...?
நிறைய வேலையிருந்தும் எந்த வேலையையும் செய்ய பிடிக்கவில்லையா..?

    கவலையை விடுங்கள்.
    இதையெல்லாம் இரண்டே நாட்களில் போக்க ஓர் எளிய வழியைச் சொல்கிறேன். மிகவும் சாதாரண வழி. என் பாட்டி சொன்ன வழி.
    டாக்டருக்கு பணம் அழுவ வேண்டாம். மருந்து வாங்கி கடினப்பட்டு அதை விழுங்க வேண்டாம்.
    நான் சொன்ன பிறகு ப்பு இவ்வளவு தானா என்பீர்கள். ஆனால் சிறந்த வழி.
    நான் சொல்வதைப் போல் பக்குவம் செய்து சாப்பிடுங்கள். இந்த வலியெல்லாம் ஓடியே போய்விடும்.

இரண்டு டம்ளர் நீரில்
ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
ஒரு ஸ்பூன் நெல்சீரகத் தூள்
கொஞ்சம் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் பெருங்காயத் தூள்
ஒரு தக்காளி
நான்கு பல் நசுக்கிய பூண்டு விழுது
கொஞ்சம் புளி அல்லது எலுமிச்சை சாறு.
கொத்த மல்லித் தழை கைப்பிடி அளவு
விருப்பத்திற்கேற்ற உப்பு  

இந்த எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கையால் பிசைந்து வையுங்கள். இன்னொறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிகக் கொஞ்சமாக ஊற்றிய எண்ணையில் கடுகு உளுத்தம்பயிரு ஒரு காய்ந்த மிளகாய் போட்டு வெடித்ததும் கரைத்து வைத்ததை அதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் நிறுத்தி ஆறவிடுங்கள்.
    பின்பு அதை ஒரு டம்ளரில் வடிகட்டி அப்படியே குடிக்கலாம். அல்லது சோற்றில் கலந்தும் சாப்பிடலாம்.
    இது போல் இரண்டு நாட்கள் சாப்பிட்டாலே உடம்பில் இருக்கும் வலியெல்லாம் ஓடிவிடும்.

   இநதப் பக்குவத்தை எங்கேயோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா...? உங்களின் எண்ணம் சரிதான்.


                             ரசம்...!!

    இதுதானா... என்று எல்லோரும் என்னை முறைப்பது எனக்கு இங்கிருந்தே தெரிகிறது. என்ன செய்வது... கோபப் படாதீர்கள்.
    இந்த குளிர்காலம் வந்தாலே உடலில் சேர்ந்துள்ள வாயு எல்லாம் மூட்டுக்கு மூட்டு தங்கி இப்படி உபத்திரவம் கொடுக்கும் தான். அதைப் போக்க எளிய வழி நாம் அடிக்கடி உணவில் சேர்க்கும் இந்த எளிய ரசம் தான். நம் உணவே நமக்கு மருந்து என்பதை இளைய தலைமுறை அறிவதில்லை.
   அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு. அதனால் குளிர் காலத்தில் உணவில் அடிக்கடி ரசம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
   
 ஆனால் ஒன்று...
    மேற் சொன்ன வலிகளுடன் காய்ச்சலும் இருந்தால் அவசியம் மருத்துவரிடம் செல்வது தான் நல்லது.


அருணா செல்வம்.

புதன், 28 நவம்பர், 2012

இரட்டை நாக்கு!! (நிமிடக்கதை)



 
    பக்கத்துத் தெரு மதியம்மா வாசலில் நுழையும் பொழுதே... “பிருந்தா... பக்கத்துத்தெரு மதியம்மா வர்றாங்க... எதையாவது பேசிவிட்டு எதையாவது கேட்பாங்க. ஏமார்ந்து கொடுத்திடாதே...“ பிருந்தாவிடம் அவள் கணவன் சொல்லிவிட்டு வெளியே போய் விட்டான்.
    மதியம்மா அறைக்குள் நுழைந்த போது பிருந்தா மெதுவாக எழுந்து கட்டிலில் சாய்வாக அமர்ந்தாள். “என்னம்மா... பிருந்தா... கேள்விபட்டேன்ம்மா... எப்படிம்மா இப்படி ஆச்சி...?“
   “என் தவறு தான் மதிமாமி. போன ரெண்டு கொழந்தையும் நாலாம் மாசத்துலேயே கலஞ்சிடுச்சி. அதனால இந்த முறை ரொம்ப ஜாக்கிரதையா தான் இருந்தேன். ஆனால் இதுவும்...“ அதற்கு மேல் பேச முடியாமல் உதட்டைக் கடித்துக் கலங்கிய விழியை மறைத்தாள்.
   “சரி போவட்டும் விடும்மா. இந்தக்கொழந்தைக்குக் கொடுத்து வக்கலைன்னு நினைச்சிக்கோம்மா...“ என்று சொல்லிவிட்டு “கொஞ்ச நாள் உன் அம்மா வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றது தானே...?“ என்றாள்.
   “ரெண்டு நாளுக்கு முன்ன அங்க போயிட்டு வரும் போது தான் இப்படி ஆயிடுச்சி மாமி...“ என்றாள் கவலையாக.
    “அப்படியா...? உன் மாமியா சும்மா இருக்க மாட்டாளே... உன் குடும்பத்தாரைக் கரைச்சிக் கொட்டியிருப்பாளே...
    “அப்படியெல்லாம் இல்ல மாமி. எனக்கு இப்படி நடந்ததுக்கு அவங்க என்ன செய்வார்கள் என்பதை நல்லா புரிஞ்சிக்கினு அன்பா தான் பேசினாங்க. அவங்க என்கிட்ட மொதோ மாதிரி சண்டையெல்லாம் போடுறது இல்ல மதிமாமி“ என்றாள் பிருந்தா.
    “என்னவோ போம்மா... உன் மாமியாளைப் பற்றி எனக்குத் தான் தெரியும். நான் ரெண்டு நாளா ஊருல இல்ல. இருந்திருந்தா எங்கிட்ட வந்து உன்னைப்பத்தித் தாறுமாறா பேசியிருப்பா... நான் தான் அப்படியெல்லாம் பேசாதேன்னு சொல்லுவேன்.... ம்ம்ம்...“
    பெருமூச்சி விட்டுவிட்டு... “அம்மா பிருந்தா... எனக்கு ரெண்டாயிரம் ரூவா அவசரமா தேவைப்படுது. குடும்மா... மாச தொடக்கத்துல தந்திடுறேன்.“ என்றாள்.
    பிருந்தாவிற்கு கணவன் சொல்லி சென்றது ஞாபகம் வந்தது.
   “ஐயோ... ரெண்டு நாளா ஆஸ்பிடல் செலவே அதிகமா ஆயிடுச்சி. இப்போ கையில காசு இல்லையே மதிமாமி..என்றாள்.
    “வேற ஏதாவது முயற்சி பண்ணி கொடுக்க முடியுமா பிருந்தா. அவசரம்... அதான்...“ இழுத்தாள் மதிமாமி.
    “தற்போது எதுவும் என்னால முடியாது மாமி.“ பிருந்தா சொல்லும் பொழுதே இவளிடம் இருந்து கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு வெளியேறினாள் மதிமாமி.

    வாசலில் நுழைந்த பிருந்தாவின் மாமியாரைக் கண்டதும் “என்ன அஞ்சலை... இப்படி ஆயிடுச்சே...“ கவலையுடன் சொன்னாள்.
    “ஆமாம் மதி. என்ன செய்யறது...? எல்லாம் கடவுள் விட்ட வழி...“ கவலையுடன் மேலே கையைக் காட்டினாள் அஞ்சலை.
    “இங்க நீதான் பெரிசா கவலைப் பட்டு கடவுள் மேல பழியப் போடுற. ஆனா உன் மருமக சொல்லுறதை உண்மைன்னு நம்புற... என்ன பொம்பளையோ நீ...“ கிசுகிசுப்பாகச் சொன்னாள்.
    “என்ன சொல்லுற மதி...?“
    “உன் மருமகளுக்குத் தானா கொழந்த கலைஞ்சிருக்காது. வேலைக்கி போறாளில்ல... இப்போ எதுக்கு குழந்தைன்னு அம்மா வீட்டுக்குப் போற சாக்குல கலச்சிட்டு வந்து இருப்பான்னு நினைக்கிறேன். அதுதான் அவ மொகமே காட்டுதே...“
    அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவளிடம் “அஞ்சலை இன்னும் நிறைய விசயம் இருக்குது. எனக்கு இப்போ நேரம் இல்ல. அவசரமா ரெண்டாயிரம் தேவப்படுது. குடு. மீதியை நாளைக்கி வந்து சொல்லுறேன்...“ கையை நீட்டியவளிடம் ரெண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பினாள் அஞ்சலை.
   இதை அனைத்தையும் உள்ளறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பிருந்தா இனி நடக்கப் போவதை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.


 அருணா செல்வம்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

விழிகள்!! (துளிபாக்கள்)





இருட்டு!!

மின்சாரம் வந்தும்
அவளைக் காணாத
மனத்துள் இருட்டு!
 

விழிகள்!!

கம்பியில்லாத் தொடர்பு
காதல் பேசும்
அவள் விழிகள்!!

எப்படி?

கண்ணுள் கரங்களா?
எப்படி எடுத்தாள்
என் இதயத்தை?


அருணா செல்வம்.

திங்கள், 26 நவம்பர், 2012

படித்ததால் கிடைத்தது..!! (சிறுகதை)



         
     இராகவி வந்தவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு அமர்ந்தாள்.
    'என்ன இவ்வளவு தூரம்? காரணம் இல்லாமல் வர   மாட்டீங்களே..!"
    அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தார்கள்  அப்படியென்றால் காரணம் எதுவோ இருக்கின்றது.
    'அது வந்துமா ராகவி.. நம்ம அண்ணாமலை பல்கலைக் கழகத்தோட ஆண்டுவிழா நடக்க இருக்குது. அதுல நீ 'படித்ததால் கிடைத்தது" என்ற தலைப்பில் பேசணும்."
    'என்ன நானா..?" குரலில் ஆச்சர்யம் தெரிந்தது.
    'ஆமாம்மா. இந்தத் தலைப்புல நீ பேசினால் தான் மிகச்சரியாக இருக்கும்."
    'நான் என்னன்னு பேசணும்ன்னு நீங்க எதிர் பாக்குறீங்க?" யோசனையுடன் கேட்டாள்.
    'நீ வெறும் +2 படிச்சிட்டு இந்த நாட்டிற்கு வந்த பிறகு உனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனுபவங்களையும் பேசு. பிறகு இந்த அண்ணாமலை பல்கலை கழகத்துல சேர்ந்து பட்டப்படிப்புப் படிச்சதைச் சொல்லு. அதனால உனக்கு ஏற்பட்ட நன்மைகளைச் சொல்லு. படிப்பதனால ஏற்படுற பயன்களைப் பற்றிப் பேசு. என்னம்மா.. நீயே ஒரு எழுத்தாளர். உனக்கு நாங்க சொல்லிக் கொடுக்கணுமா? தைரியமா வந்து பேசு. நாங்களெல்லாம் ஒங்கூடத்தான இருக்கிறோம். பயப்படாத. வா."
    அவளுக்கு அவர்கள் சொன்ன போதும் அதைக்கேட்டுக் கொள்ளும் போதும் ஏதோ தைரியம் வந்து விட்டது போல் தான் இருந்தது.
    'என்னைக்கி விழா வச்சியிருக்கிறீங்க..?"
    'வர்ற சனிக்கிழமை"     
    'வர்ற சனிக்கிழமையா..? அன்னைக்கி காலையில என் மாமியார் இந்தியாவுல இருந்து வர்றாங்க."
    'காலையில தான வர்றாங்க? நம்ம ப்ரோகிறாம் மதியம் நாலுமணிக்கு மேல தான். கண்டிப்பா வந்திடு. நாங்க கிளம்புறோம்."
    எழுந்துக் கொண்டார்கள். இராகவி பதில் சொல்லாமல் எழுவும் அவர்கள் கிளம்பினார்கள்.



    இராகவி அந்த நிகழ்ச்சியைப் பற்றியே அசைபோட்டபடி இருந்தாள். அவர்கள் சொன்னது போல் அவள் வெறும்   +2  படித்து விட்டுத்தான் இந்த நாட்டிற்கு வந்தாள். இந்தப் படிப்பால் அவளுக்கு எந்தப் பிரட்சனையும் இல்லை தான்.
    வசதியான வீட்டில் பிறந்து விட்டதினால் +2 முடித்தவுடனே நல்ல வரன் வர உடனே திருமணம் முடிந்து விட்டது. உடனே வெளிநாட்டு வரவு. அவளுக்கும் புதிய தேசம் என்ற பிரட்சனையும் இல்லை. அக்கா அண்ணன்கள் அத்தை மாமா என்று நிறைய சொந்தங்கள் ஏற்கனவே இங்கே குடும்பத்துடன் இருந்ததினால் அன்னிய தேசம் என்ற அச்சமும் இல்லை.
    நல்ல வசதியான குடும்பம் என்றதால் வேலை தேடவேண்டிய அவசியமும் இல்லை.
    ஆனால்.. சிறுவயது முதல் படித்து ஏதாவது ஒரு பட்டமாவது வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது.. அவளது மனத்தை அறித்துக் கொண்டிருந்த ஒரே ஏக்கம்!
    அதுமட்டும் அல்லாமல் விடுமுறைக்கு இந்தியாவிற்குச் சென்ற போழுது அவளுடன் படித்தத் தோழிகள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதைக் கண்டதும் ஏக்கம் இன்னும் அதிகமாகியது.
    தன்னுடைய லட்சியத்திற்கு திருமணம் தடையாக வந்து விட்டதை எண்ணி சில நேரங்களில் தெய்வத்தை நிந்தித்திருக்கிறாள்.
    அன்பானக் கணவன். அழகானக் குழந்தைகள். அமைதியானக் குடும்ப வாழ்க்கை தான்! இருந்தாலும் இலட்சியத்தை அடைய முடியாத அலட்சிய வாழ்க்கையாகத் தான் தெரிந்தது அவளுக்கு.
   தவிர அவளுக்குக் கவிதை கட்டுரை சிறுகதைகள் நாவல் போன்றவைகள் எழுதும் ஆற்றல் இயற்கையாகவே இருந்தது இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் ஆகும்!
    இந்தியாவில் இருந்த போழுது வாரஇதழ்கள் நாளிழதழ்கள் போன்றவைகளுக்கு எழுதி தன் படைப்புத் திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள்.
    ஆனால் இங்கே வந்த பிறகு எழுதியக் கை குடும்பம் என்ற சங்கிலியால் பிணைக்கப் பட்டுவிட்டது போன்ற ஓர் எண்ணம்.
    அதை அறுத்து எறிந்து விட்டுத்தான் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அவள் உணர்ந்த போது மீண்டும் எழுதத் துவங்கினாள்.
    மீண்டும் பாராட்டு மழையில் நனைந்தாள்.
    படித்தவர்கள் பாராட்டுடன் என்ன படித்திருக்கிறாய் என்று கேட்ட போது வெறும் +2 தான் என்பதை கூற மனம் கூசியதை உணர்ந்தாள்.
    இதைக்கூட படிக்காதவர்கள் எவ்வளவோப் பேர் எவ்வளவோ உயரத்தில் பறக்கிறார்கள் என்பதை அவள் அறியாமல் இல்லை.
    அதிகம் படித்தவர்கள் அனைவரும் தன்னைப் போல எழுதும் திறன் உள்ளவர்கள் கிடையாது என்று மனத்தைத் தேற்றிக் கொண்டாலும் தான் ஒரு பட்டம் வாங்கவில்லையே என்ற குறை அவளுக்கு இருந்துக் கொண்டேதான் இருந்தது.
    அந்த நேரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் அங்கேயேத் திறந்திருப்பதைக் கேள்விப் பட்டதும் தன் கணவரின் அனுமதியுடன் உடனே போய் சேர்ந்து விட்டாள். இதோ இந்த வருடத்துடன் எம்.ஏ வையும் முடித்துவிட்டாள்.
    தன்னுடைய இலட்சியக் கனவு பலித்துவிட்டது. இனி யாரிடம் வேண்டுமானாலும் தான் ஒரு பட்டாதாரி என்பதைத் தலை நிமிர்ந்து சொல்லலாம்.
    கல்வி கற்பது என்பது தலைகுனிந்து படிப்பவர்களை தலை நிமிர வைப்பதேயாகும்.
    கல்வியைக் கற்கும் போதுதான் நம்முடைய அறியாமை நமக்கு புரிகிறது.
    படிக்காததினால் எவ்வளவு காலத்தை நாம் வீணாக்கி இருக்கிறோம் என்பதை உணரும் பொழுது இந்த அண்ணாமலை பல்கலைக் கழகம் எப்போதோ திறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
   பரவாயில்லை. நினைத்தபடி படித்தாயிற்று. கல்வியைக் கற்க உதவியவர்களே இன்று அதன் பயனைப் பற்றி பேச அழைக்கிறார்கள்.
   பேசலாம். நிறைய பேசலாம். கல்வி கண் போன்றது. எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் கல்வியை முறையாகப் பயிலாமல் பெற்றுவிட முடியாது. கல்வி கற்பது வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல. நம்முடைய அறியாமையை அகற்றிக் கொள்ளலாம். உலகத்தில் இருக்கும்: பல நல்ல விசயங்களை தெரிந்துக் கொள்ளலாம். இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். 
    கல்வியின் பயனை கற்றவர்கள் அனைவரும் உணர்ந்த விசயம் தான்.
    ஆனால் கல்லாதவர்களிடம் என்னவென்று சொல்லி விலக்குவது..?
    உதாரணத்திற்கு அவளின் மாமியார் கற்பகம்..
    'பொண்ணுங்களுக்கு எதுக்கு படிப்பு? கடிதம் கிடிதம் வந்தாக்க அதை பிரிச்சி படிக்கத் தெரிஞ்சிருந்தா போதும். எம்புள்ளைக்கி அடக்கமான பொண்ணு தான் தேவ. வேலைக்கி போயி சம்பாறிக்கவா பொண்ணு கேக்கிறேம்? உங்க பொண்ணு இவ்வளவு படிச்சிருப்பதே அதிகம் தான்" என்று பெண் பார்க்கும் போழுதே சொன்னவர்.
    ஒரு முறை ஒரு வாரஇதழில் அவள் எழுதிய சிறுகதை வெளியாகி இருந்ததை அவள் தாயார் தொலைபேசியில் சொன்னதும் உடனே போய் அந்த வாரஇதழை வாங்கிவிட வேண்டும் என்று அவள் தன் கணவனிடம் கேட்டாள். அப்போழுது அங்கே வந்த அவள் மாமியார்
     'பொல்லாத கத எழுதிட்டா. யாரும் எழுதாத கதய. ஊருல முக்காவாசி பேர் கத எழுதுறாங்க. இவ எழுதறது தான் அதிசயம் பாரு.. ஊருல வெள்ளம் ஓடுறப்ப ஏரி தண்ணிக்கி மவுசு கெடைக்காது. போடி போ. போயி வேல இருந்தா பாரு."
    முகத்தைச் சுளுக்கிக் கொண்டு சொன்னார்.
    அவருக்குப் பெண்கள் படிக்கக் கூடாது. ஆண்கள் தான் படிக்கணும். குடும்ப நிர்வாகம் ஆண்களிடம் தான் இருக்கணும். அதனால் தான் தன் கணவர் இறந்தவுடன் பி.ஏ படித்த தன் மூத்த மருமகனிடம் எல்லா பொறுப்பையும் விட்டுவிட்டார்.
    மருமகன் நல்லவரோ.. கெட்டவரோ.. ஆனால் சொத்து என்று பிரிக்கும் போழுதுதான் சொத்தின் முக்கால் பாகம் அவரின் மனைவியின் பெயரில் உள்ளது என்பது தெரிய வந்தது.
    'ஏன் இப்படி செய்தீங்க..?" என்று கேட்ட பொழுது 'நானா எடுத்துக் கொண்டேன். எல்லாம் உங்க பொண்ணு பேருல தான் இருக்கிறது.. உங்க பிள்ளைங்க எல்லாம் பிரான்சுல இருந்தாங்க. சொத்துன்னு வாங்கும் போது யாராவது கூட இருக்கணும். உங்க பேருல வாங்கினா உங்கள யாராவது ஏமாத்திடுவாங்கன்னு தான் உங்க பெரிய பொண்ணு பேருல வாங்கினேன்." என்றார்.
    படித்தவர்களின் படிப்பு சில நேரங்களில் படிக்காதவர்களை ஏமாற்றவும் உதவுகிறது.
    'பரவாயில்லை. இப்போ அந்த சொத்தையெல்லாம் பிரிச்சி கொடுத்திடுங்க"ன்னு சொன்ன போழுது தான் மூத்த மகளின் மூர்க்க குணமே தெரிய வந்தது.
    'இது என்னுடைய சொத்து. எம் புருஷன் எனக்காக வாங்குனது. நா யாருக்கும் பிரிச்சி குடுக்கமாட்டேன்." என்று பிடிவாதமாக சொல்லிவிட்டாள்.
    சொத்து பத்திரம் அனைத்தும் சட்டப்படி அவள் பெயரில் இருந்ததால் யாராலும் எதையும் செய்ய முடியாத நிலை.
    கற்பகத்திற்கு தான் ஏமார்ந்தது தெரியும். ஆனால் அதன் மதிப்பு தெரியாது.
    இருந்தாலும் தன்னுடைய சொத்து எங்கேயும் போகவில்லை. தன் பெரிய பெண்ணிடத்தில் தான் உள்ளது என்ற திருப்த்தி.
    ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் கொஞ்சமும் இல்லை. ஆண் பிள்ளைகளுக்கு கொடுத்தால் மருமகள் தானே அனுபவிப்பாள்.. மகளே அனுபவிக்கட்டும் என்ற நல்ல எண்ணம்;..!!
    இந்த மாமியார் மட்டும் தானா..? உலகில் எல்லா மாமியார்களும் இப்படித்தானா..? என்ற கேள்வி அடிக்கடி இராகவிக்கு எழும்.
    தானே மாமியார் ஆகும் போது புரிந்து கொள்வோம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வாள்.
    தான் எழுதினதை அச்சியில் பார்க்க முடியாவிட்டாலும் எழுதுவதை விட்டுவிடாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருந்தாள்.
    தன்னை மதிக்காமல் எழுதுகிறாளே என்ற கோபம் இருக்கும் போதே மேற்படிப்பு படிக்கப் போகிறாள் என்று கேள்விப் பட்டதும் இராகவியின் மேல் வெறுப்பு அதிகமானது.
    தன் மகனிடம் அவளைப் படிக்கவெல்லாம் அனுப்பக் கூடாது. படிப்பதற்காகப் பணம் எதுவும் கட்டக்கூடாது என்று சொல்லிப் பார்த்தாள்.
    அவன் படித்தவன். படிப்பின் அருமையை உணர்ந்தவன். அதனால் தன் தாய் சொன்னதை எதையும் காதில் வாங்காமல் அவள் படிக்க அவனால் இயன்ற உதவிகளைச் செய்தான்.
    ஆனால் கற்பகம்.. என்னென்ன பிரட்சனைகளை எழுப்பிளாள்!
    அவள் படிக்க உட்கார்ந்தவுடன் இதைக் கொண்டா.. அதைக்கொண்டா.. என்று ஏதாவது புதியதான வேலையை விடுவாள். வேண்டும் என்றே தொலைக்காட்சியின்  சத்தத்தை அதிகப்படுத்துவாள்.
    ஏதாவது தொடர் நாடகத்தை போட்டுக்கொண்டு நேற்று என்ன நடந்தது என்று கேள்வி கேட்பாள். தான் பார்க்கவில்லை என்று சொன்னால் 'காதுல வாங்காமலா படிச்சே.. ஆச்சிரியமா இருக்குது" என்பாள்.
    அதிலும் தேர்வு நேரம் என்றால் சொல்லவே வேண்டாம். அன்று தான் அவருக்கு அதிசயமாக தலைவலி காய்ச்சல் என்று ஏதாவது வரும். தண்ணிர் கேட்பாள். கஞ்சி கேட்பாள். தன் அருகிலேயே இரு என்று கையைப் பிடித்துக் கொள்வாள்.
    இது நடிப்பு என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் இதை அறிந்த அவள் கணவன் தான் தன் தாயை சமாதானம் படுத்தி அவளை தேர்வு எழுத அனுப்பி வைப்பான்.
    ஒரு முறை தேர்வு நேரம் என்று தெரிந்தும் தன் மகளின் நிச்சயதார்த்தத்தை அந்த தேதியில் வைத்தாள். வேறு வழியில்லை. நிச்சயம் நிச்சயத்தார்த்தத்தில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம்.
    கலங்கிய மனத்துடன் வேலை செய்து கொண்டு இருந்தவளை 'அண்ணி.. நீங்க கெலம்புங்க. நான் பாத்துக்கிறேன். இங்க நிறைய பேர் இருக்கிறாங்க. உங்கள யாரும் தேட மாட்டாங்க. அப்படி தேடினா நான் சொல்லிக்கிறேன்.." என்று உறுதி மொழியளித்து அனுப்பி வைத்தாள் நாத்தனார்.
    அவளுக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு கடைசி பரிட்சையை எழுதிவிட்டு வந்தாள்.
    வந்த பிறகு தான் தெரிந்தது. தன் மகளின் நிச்சயத் தார்த்தத்தில் கலந்து கொள்ளாத மருமகள் வீட்டில் நான் இனிமேல் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தன் இன்னொரு மகன் வீட்டிற்கு சென்று விட்டாள் என்று!
   மறுநாள் இராகவி தன் கணவருடன் போய் மன்னிப்பு கேட்டும் அவள் மன்னிக்கவும் இல்லை. முகம் கொடுத்து பேசவும் இல்லை.
    அதுமட்டுமல்லாமல் ஒரே வாரத்தில் இந்தியாவிற்கு சென்று விட்டாள். கோபம் இன்று வரை குறையவில்லை.
    திடீரென்று நேற்று தான் போன் செய்து 'நான் சனிக்கிழமை காலை பிரான்சுக்கு வர்றேன். ஏர்போர்ட்டுக்கு வாங்க." என்று சொன்னாள்.
    ஏதோ இந்த அளவுக்காவது கோபம் குறைந்ததே.. அதுவே போதும் என்று எண்ணும் பொழுது.. அதே நாளில் தான் படித்த அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து கல்வியைப் பற்றி பேசுவதற்கு அழைப்பு வந்திருக்கிறது.
    இது தான் விதியின் செயல் என்பதா..?
    நிச்சயம் அந்த நிகழ்ச்சிக்கு போக முடியாது என்பது மட்டும் புரிந்தது.


    சனிக்கிழமை. மாமியார் சாப்பிட்டுவிட்டு தன் மகனுடன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது தொலைபேசி அழைத்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் எண்களைப் பார்த்ததும் அவர்களிடம் என்ன பேசி எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போனை எடுக்கவே இல்லை இராகவி.
    கதறிய தொலைபேசி சற்று நேரம் அமைதியாகி திரும்பவும் கத்தியது. மாமியார் திரும்பி தன் மருமகளை முறைத்தார். இராகவி பேசாமல் அமர்ந்திருந்தது அவருக்கு எரிச்சலை யுட்டியது.
    'போன் அடிக்கிறது காதுல உழல..?  எடுத்து பேசேன்."
    'வேணுன்னு தான் அத்தை போன எடுக்கல."
    'ஏன்..?"
    அதற்குள் அழைப்பு ஒலி நின்று விட்டது. இராகவி எதுவும் பேசாமல் இருக்கவும் அவள் கணவனே விசயத்தை சொன்னான். விசயத்தைக் கேட்டதும் மாமியாரே எழுந்து மருமகளிடம் வந்தார்.
    'ஏம்மா தயங்குற? நான் தான் படிக்காதவ. படிப்பு வாசனைன்னா என்னன்னு தெரியாதவ. நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கிற. நெறைய விசயங்கள எழுதற. ஒன்னோட கதைகள படிச்சிட்டு நெறைய பேர் உன்ன பாராட்டுறாங்க. நா வெளிய எங்கையாவது போனாகூட எழுத்தாளர் ராகவியோட மாமியார்ன்னு சொல்லுறாங்க. எனக்கு பெருமையா இருக்கு.
    கண்ணுகிட்டேயே இருக்கிற இமையை கண்ணல பாக்க முடியாதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நானும் ஒங்கிட்ட இருந்துக்கினு ஒன்னோட அருமைய தெரிஞ்சிக்காம இருந்துட்டேன். ஒன்னைவிட்டு வெலகி இருந்தப்பத்தான் தெரிஞ்சது ஒன்னோட அருமை. நீ எதுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது.
    ஒனக்குன்னு நெறைய திறமைங்க இருக்குது. நா ஒன்னத் தடுத்து அத வீணாக்க விரும்பல. நீ கௌம்பி போ. போயி பொண்ணுங்களுக்கு படிப்பால ஏற்படுற நன்மைங்கள பத்தி சொல்லு. என்னை மாதிரி படிக்காம ஒலக அனுபவங்களை தெரிஞ்சிக்காம இருக்கக்கூடாதுன்னு சொல்லு. ஒரு ஆம்பள படிச்சா அவனுக்கு மட்டும் தான் ஒதவும். ஒரு பொண்ணு படிச்சா அந்த குடும்பத்துக்கே ஒதவும்ன்னு சொல்லு.
    படிக்க ஆச இருந்து படிக்கமுடியாம போனவங்களுக்கு அண்ணாமலை பல்கலைக் கழகம் ஒரு வரப்பிரசாதம்ன்னு சொல்லு. படிப்புக்கு வயசு தடை இல்லைன்னு சொல்லு.. ..
    இப்படி அவர் சொல்லிக்கொண்டே போக இராகவி யோசித்தாள்.
    தான் படித்தப் படிப்பு தன் மாமியாருக்கே தன்மேல் மதிப்பை வரவழைத்து விட்டதா..? இது, தான் கற்றக் கல்விக்கல்லவா பெருமை!! இதைவிட வேறு என்ன வேண்டும்.
    கற்றாரைக் கற்றோரே காமுறுவர் என்பது மட்டும் அல்ல.
    கல்வியின் பெருமையை அறிந்தால் கல்லாதவர்களும் அதன் மேல் காதல் கொள்வர்.
    மனம் ஆனந்தக் கூத்தாடியது. மனத்தில் புது தெம்புவர தன் மாமியாருடன் விழாவிற்குக் கிளம்பினாள்.
    
அருணா செல்வம்.