திங்கள், 8 ஏப்ரல், 2013

முல்லை மலர்!!




அரும்பாய் இருக்கும் பொழுதினிலே
    அழகன் வேலை ஒத்திருப்பாள்!
திரும்பிப் போகும் சூரியனின்
    திசையை எண்ணி மகிழ்ந்திடுவாள்!
விரும்பும் காதல் நோயுள்ளோர்
    வீழ்த்தும் ஆசை பெருக்கிடவே  
பொருந்தும் நேரப் பொழுதிறங்க
    புதுபெண் போல புன்னகைப்பாள்!

வெள்ளை இதழை விரித்திட்டால்
    வீசும் மணத்திற்(கு) ஈடேது?
முள்ளைக் கொண்ட ரோசாவும்
    முகர்ந்து பார்க்கத் தோற்றோடும்.
கள்ளை உள்ளே வைத்ததனால்
    காதல் பாடும் வண்டினத்தைக்
கொள்ளை கொள்ள வைக்கின்ற
    கொஞ்சி அழைக்கும் அழகியிவள்!

மொட்டு பூக்கும் முன்னாலே
   முடிந்து வைத்த வாசமெல்லாம்
பட்டுப் போன்ற இதழ்விரிக்கப்
   பருவ உணர்வைத் தூண்டிவிடும்!
சிட்டு போன்ற பெண்களெல்லாம்
   சீராய் பறித்துத் தொடுத்திட்டு
கட்டுக் குழலில் சூடிநின்றால்
   காளை மனங்கள் கூடவரும்!

தேடி வந்து தழுவியோடும்
    தென்றல் காற்றில் அசைந்தாடிப்
பாடி வரும் வண்டினத்தைப்
    பளிங்கின் இதழால் சுவையூட்டிக்
கூடிக் கொஞ்சும் காதலர்க்குச்
    சூடிக் கொடுத்து மகிழ்வூட்டி
வாடி வதங்கும் மறுநாளே
    வாழ்வின் சுயத்தை நமக்கூட்டி!
   
இன்று பூத்து நாளைவாடும்
    இதுதான் வாழ்க்கை முறையதற்கு!
என்றும் இருக்கும் குன்றுபோலே
    என்றும் இருக்கும் நிலையில்லை!
அன்றே ஒருநாள் இருந்தாலும்
    அதனின் வரவில் குறையில்லை!
ஒன்றாய்ப் பலநாள் நாமிருந்தும்
    ஒருநாள் கூட நிறைவில்லை!

அருணா செல்வம்.
05.04.2013

37 கருத்துகள்:

  1. \\ இன்று பூத்து நாளைவாடும்
    இதுதான் வாழ்க்கை முறையதற்கு!
    என்றும் இருக்கும் குன்றுபோலே
    என்றும் இருக்கும் நிலையில்லை!
    அன்றே ஒருநாள் இருந்தாலும்
    அதனின் வரவில் குறையில்லை!
    ஒன்றாய்ப் பலநாள் நாமிருந்தும்
    ஒருநாள் கூட நிறைவில்லை!//

    அருமையான வரிகள். நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  2. என்னவோ சொல்றீங்க! ஒன்னும் நமக்கு புரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      எல்லாம் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வதை விட
      இப்படி நீங்கள் எழுதியது எனக்கு மகிழ்ச்சி தான்.

      (அப்பால ஒருதபா உங்களுக்குப் புரிஞ்ச
      மெட்ராசு தமிலில் கவித எழுதுறன்... சர்தானா?)

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  3. வாடும் மலரைப் புனைந்து உள்ளத்தில்
    வாடா மலராய் நின்ற கவிதை
    அருமை !....தொடர வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாடாத வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. முல்லை மலரின் அருமையும் அதன் சூழலும் பிணையப்பட்ட விதம் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அகல்.

      நீக்கு
  5. மயக்கும் கவிவாசனை மிகமிக அருமை!
    வாழ்த்துக்கள் தோழி!

    அருமையாக சொல்லெடுத்து
    அழகாய் முல்லை மலர்தொடுத்து
    வருவோர் எமக்கு மிகவேதான்
    வாசனைக் கவிமாலைதந்தீர்
    புவியில் காணும்யாவையுமே
    புனையும் பொருள்தான் உந்தனுக்கு
    வியப்பாய் இருக்குதேயெனக்கு
    விழைந்தேன் வாழ்திட நானுனக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் பார்த்த இடத்தினிலே
      இதயம் ஏற்றால் கவிவளரும்!
      இதையும் எழுதக் கொடுத்தானால்
      எண்ணி சற்றே யோசித்தேன்!
      விதைக்குள் இருக்கம் மரம்போலே
      விந்தை தமிழுள் இருப்பதனால்
      புதைந்த பொருளை எழுதிட்டேன்.
      பூவை வாழ்த்தால் பூரித்தேன்!

      தங்களின் வருகைக்கும் அழகிய கவிதை வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு

  7. வணக்கம்!

    முல்லை மலரின் மணத்தினிலே
    முழுகிப் நெஞ்சம் களித்ததுவே!
    எல்லை இல்லா இன்பத்தை
    ஏந்திக் கருத்தை வடித்ததுவே!
    பிள்ளைச் சிரிப்பைப் பெண்ணழகைப்
    பெற்ற பூவே! உன்போன்று
    வெள்ளை நிறத்தை உன்னுள்ளம்
    மேவும் காலம் வந்திடுமோ?

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவிஞர்!

      பிள்ளைச் சிரிப்பைப் பெண்ணழகைப்
      பெற்ற பூவின் நல்லுள்ளம்
      கள்ளத் தனத்தைக் கொண்டிடுமோ?
      கவிஞர் கேள்வி சரிதானோ?
      கொள்ளை கொள்ளும் அழளழகைக்
      கொஞ்சும் வண்டின் இனத்திற்குக்
      கள்ளை உள்ளே வைத்தஅந்த
      கடவுள் செய்த குறையன்றோ!!

      தங்களின் வருகைக்கும் பாடலுக்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. அழகன் கைவேலை ஒத்திருப்பாள் - சூப்பர் அருணா! முத்தாய்‌ப்பாய்

    அன்றே ஒருநாள் இருந்தாலும்
    அதனின் வரவில் குறையில்லை!
    ஒன்றாய்ப் பலநாள் நாமிருந்தும்
    ஒருநாள் கூட நிறைவில்லை!//

    என்ற வரிகள் மனதில் நிறைந்தன. முல்லையின் மணம் கவிதையிலும் கமகமவென்று வீசியது. இளமதி சிஸ்டர் மாதிரி கவிதையில வாழ்த்தத்தான் ஆசை எனக்கு. ஆனா முடியலையேஏஏஏஏ! (நல்லவேளை, த்பபிச்சீங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பால கணேஷ் ஐயா.

      வாழ்த்த வேண்டும் என்று
      மனத்தினுள் நினைத்தாலே போதும்.
      அதை வரிகளில் தெளிப்பது ஆனந்தம்.
      அதையும் கவிதையில் வடிக்க நினைத்தது பேரானந்தம்.

      உங்களின் எண்ணமே எனக்குப் பேரானந்தத்தைக்
      கொடுத்தது பால கணேஷ் ஐயா.
      மிக்க நன்றி.


      நீக்கு
  9. முல்லையின் மனம் கவரும்
    மணத்தினை - உள்ளம் கொள்ளையிடும்
    தமிழ் மணத்தோடு வழங்கிய
    கவிமலர் அருணா செல்வம்
    அவர்கட்கு - மனமார்ந்த
    நல்வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தமிழ் முகில்.

      நீக்கு
  10. அருமையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  11. அற்புதம் அற்புதம் முல்லைக்கு ஈடேது ரோசவோ ராசாவோ போட்டிக்கு வர முடியாது .அந்த முல்லையைபோல பளிச்சென்ற அற்புதம் ஒவ்வொரு வரியும் பொற்பதம் உண்மையில் இதுதான் சொற்சரம்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்புதம்! அற்புதம்! என்றென்னைப் பாராட்டி
      சொற்சரம் சூட்டினீர்! சொற்களெல்லாம் - நற்றமிழின்
      பொற்பதம் பாடும்! பொலியும் கவிவரிகள்
      நற்பதம் என்பேன் நவின்று!

      நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  12. //அரும்பாய் இருக்கும் பொழுதினிலே
    அழகன் வேலை ஒத்திருப்பாள்!//
    அருமையான கற்பனை. அருணா
    கவிதை முல்லை போல் மணம் வீசியது என்று சொல்லவும் வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  13. கவிதையில் முல்லையின் வாசனை மயக்கியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  14. சொல்லை மலராக்கி தொடுத்த கவிமாலை -நல்
    முல்லை மலராகிய மணமாலை நன்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  15. முத்தாய் பூத்திருக்கும் வரியை வாசிக்கவா ?
    வாசத்தால் எமை அழைக்கும் மலரை ரசிக்கவா ?
    அழகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  16. ரசித்தேன்
    காப்பி எடுத்துக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மனசாட்சி.

      (ஏற்கனவே இனிப்பு சேர்த்தக் காப்பி அது.)

      நீக்கு
  17. அழகான கவிதை வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி வீரா ஐயா.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுகுமார் ஐயா.

      நீக்கு
  19. முல்லையின் நறுமணம் விரிந்து நிற்கின்றது கவியாக.

    பதிலளிநீக்கு