வியாழன், 28 ஆகஸ்ட், 2014

விநாயக வெண்பா!!



மங்கள வேளையில் மஞ்சள் பொடியிலும்
தங்கமாய் மின்னும் தலைவனே! - எங்களின்
சங்கடம் போக்கிநல் சக்தி தருபவனே!
இங்கென் எழுத்தில் இரு!

முக்கண் முதல்வனின் மூத்தவனே! முத்தமிழைத்
தக்கண் அளித்துத் தருபவனே! – சிக்கலாய்
எக்கண் இருக்கும் எதிர்ப்பினை வந்துடனே
இக்கண் இருந்தே எடு!

சித்திபுத்தி கொண்ட சிரத்தவனே! எங்களின்
உத்திசக்தி எல்லாம் உனதாகும்! – சித்தத்தில்
தத்தியோடும் எண்ணத்தைத் தட்டியடக்கி என்றும்நல்
புத்தியோடு வாழ புகட்டு!

பானை வயிற்றிடையில் பாம்பை அணிந்தவனே!
யானை முகத்தவனே! என்றென்றும் – வானைப்போல்
தேனைப்போல் உள்ளம் திளைக்க உயர்ந்தியென்
ஊனையும் காப்பாய் உடன்!

தும்பிக்கை தூயவனே! தொந்தி வயிற்றோனே!
அம்பிகை மைந்தனே! ஐம்பூதம் – எம்பிஎம்பி
வம்பாய்க் குதித்தாலும் வந்தருளும் உன்துணையோ
நம்பிக்கை தந்திடும் நன்கு!

எலிமேல் எழுந்தருளி இன்னளைப் போக்கும்
கலியுகத் தெய்வமே காப்பாய்! – மலிவாய்ப்
புலிபோல் நடந்திடும் போலி மனத்தைப்
பொலிவாய் அழித்துப் போக்கு!

உண்டை கொழுக்கட்டை யோடு கறுநிற
கொண்டை கடலையும் கொள்பவனே! – அண்டத்தில்
உண்ணும்தின் பண்டமும் ஊனுடலைக் காத்திடும்
தண்ணீரும் என்றென்றும் தா!

கந்த பெருமானின் காதலைக் காத்திட
முந்தி உதவிய மூத்தவனே! – அந்தமில்லா
இந்த உலகில் இயல்பாய் வளருமன்பைச்
சொந்தமாய்ச் சேர்த்தால் சுகம்!

அன்னையுடன் தந்தை அகிலமெனச் சுற்றிவந்து
நன்மையிது என்று நவின்றவனே! – பொன்னுலகில்
அன்புடன் பெற்றெடுத்து ஆக்கியரைத் தன்னுடனே
என்றென்றும் வைத்தல் இனிது!

விண்ணளைந்த கோளினை வீழ்த்தி விளையாடி
மண்ணளக்கும் மக்களைக் காப்பவனே! – பெண்நானோ
கண்ணகல உன்னருங் காட்சியால் பாடிவந்தால்
பண்ணகலும் உன்பெருமை பாட்டு!

அருணா செல்வம்

29.08.2014

புதன், 27 ஆகஸ்ட், 2014

நாற்பது வயது அறிவுரைகள்!!



     ஒரு முறை என் தோழியின் கணவருக்கு நாற்பதாவது வயது பிறந்த நாளைக் கொண்டாட எங்களையும் அழைத்து இருந்தார்கள். அவர்கள் பிரென்சு தம்பதியர். எங்களுடன் இன்னும் இரண்டு பிரென்சு குடும்பம் மட்டுமே அழைத்திருந்தார்கள்.
    விழாவில் கேக் வெட்டி விருந்து எல்லாம் முடிந்தவுடன் சற்று நேரம் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அப்பொழுது ஒரு தோழி நாற்பது வயதான ஆணின் மனைவி ஜோஸ்ஸிடம் “ஜோஸ்... அவருக்கு நாற்பது வயதாகி விட்டது. இனி நீதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்“ என்றாள்.
   அதற்கு ஜோஸ், “அவருக்குத் தான் வயதாகிறது. அவர் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனக்கு எதற்கு கவலை?“ என்றாள்.
   அதற்கு இந்தத் தோழி.... “ஆண்களுக்கு நாற்பது வயதானால் நமக்குத் தான் எல்லா கஷ்டமும். நான் படும் கஷ்டத்தைச் சொல்கிறேன் கேள். நான் அனுபவப்பட்டவள்“ என்று புதிருடன் சொல்ல துவங்கினாள்.
   அவள் சொல்வதைக் கேட்க நாங்களும் ஆர்வமானோம். அவள் சொல்ல துவங்கினாள்...

   “இந்த வயதிலிருந்து தான் ஆண்களுக்கு மனம் மாறுகிறது. எதைச் செய்யக் கூடாது என்று நாம் சொல்கிறோமோ அதைத் தான் செய்வார்கள். காரணம்... ஒரே மாதிரியான வாழ்வைச் சற்று மாற்றிப் பார்க்க விரும்பும் வயது இதுதான்.
   எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்பை வரவழிக்கும்.
   புதியதை விரும்புவார்கள்.
   நாம் ஒரு சின்ன கோபம் கொண்டாலும் அவர்கள் அதைப் பெரிது படுத்தி சண்டையிடுவார்கள்.
   இப்போது லேசாக தொப்பை விழும். அதை மறைக்க எக்ஸர்சைஸ் என்று வெளியில் போக ஆரம்பிப்பார்கள். அதுவே வழக்கமாகவும் ஆகி விடும் என்று சொல்வதை விட இதையே காரணமாக்கி வெளியில் செல்வார்கள்.
   நரையை மறைக்க டை போட்டு முதலில் இருந்ததைவிட இளமையாக காட்சி தருவார்கள். அதாவது மனைவியைவிட இளமையாக இருக்கும்படி அழகைப் பாதுகாப்பார்கள்.
   வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மேல் எப்போதும் எறிந்துவிழுவார்கள்.
   வீட்டில் தான்தான் ராஜா. மற்றவர் எல்லாம் அடிமை என்ற நினைப்புடனே பேசுவார்கள்.
   எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.
   வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே எதையோ பறிகொடுத்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார்கள்.
   நாட்டில் தனக்கு மட்டுமே எல்லா கஷ்டமும் வந்து விட்டது போல் வேதாந்தம் பேசுவார்கள்.
   அதிக சிக்கனம் பார்ப்பார்கள்.
   சில நேரங்களில் தேவைக்கும் அதிக “பந்தா“ காட்டுவார்கள். இதையெல்லாம் புரிஞ்சி நீதான் அனுசரித்துப் போகனும்“ என்றாள்.
   நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் “அப்படியா?“ என்பது போல் பார்த்துக் கொண்டோம்.
   “ஆமாம் ஜோஸ். அவள் சொல்றது உண்மைதான். என் கணவருக்கு அடுத்த வருடம் தான் நாற்பது வயது. ஆனால் அதற்குள் இதையெல்லாத்தையும் தொடங்கி விட்டார்“ என்றாள் இன்னொரு தோழி.
   “ஐயோ இதெல்லாம் நாற்பது வயதில் தானா..... இவர் தொடக்கத்திலிருந்தே இப்படித் தானே இருக்கிறார்...“ என்று சத்தமாகச் சொன்னாள் ஜோஸ்.

    “சியர்ஸ்.....“
    எங்களுக்குப் பின்னால் இருந்து கண்ணாடி டம்ளர்கள் இடிக்கும் ஓசை. திரும்பிப் பார்த்தோம். நாங்கள் பேசியது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் அது எதுவும் தங்களுக்காகப் பேசியது இல்லை என்பது போல எதையும் லட்சியம் பண்ணாமல் ஆண்கள் தங்கள் பார்ட்டியை மீண்டும் தொடங்கினார்கள்.
   என்னத்தைச் சொல்லுறது?

அருணா செல்வம்
26.08.2014

    

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயம்!! (4)



      உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயம் இத்தாலி நாட்டில் ரோம் நகரத்தில் உள்ளே உள்ள சிறு நாடான “வாட்டிகான்“ல் உள்ளது.
    இந்த “வாட்டிகான்“ என்பது தனி நாடாகத்தான் குறிப்பிடப் படுகிறது. இந்த நாட்டின் சுற்றளவு 44 கிலோ மீட்டர் தான். கிட்டத்தட்ட 8000 பேர் வசிக்கிறார்கள். இந்த நகரத்தைச் சுற்றி மிகப்பெறிய சுற்றுச் சுவர் உள்ளது.

சுற்றுச் சுவர்

   இந்த நகரத்தில் தான் உலகின் மிகப்பெரிய கிருஸ்துவ ஆலயமான “சேன் பியர்“ ஆலயம் உள்ளது. இந்த “சேன் பியர் ஆலயத்தை ஆலயம் என்று குறிப்பிடாமல் கிருஸ்துவர்களின் முக்கிய புனிதத் தளம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

பிளேஸ் சேன் பியர்

    நாங்கள் 06.08.2014 அன்று காலை ஆலயத்திற்குச் சென்றோம். நாங்கள் ஆலய வளாகத்தில் நுழைந்ததும் பார்த்த போது கோவில் அருகிலேயே உள்ளது போன்று தான் தெரிந்தது. ஆனால் சற்று உற்றுப் பார்த்தால் தான் அதன் அருகில் இருந்த மக்கள் எவ்வளவு சிறியதாகத் தெரிகிறார்கள் என்பதை உணர முடிந்தது. அவ்வளவு உயரம்!

வரிசையாக நிற்கும் மக்கள்

   இது வெறும் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட மிகப் பெரிய ஆலயம். ஆலயத்திற்கு முன் பாகம் “பிளேஸ் சேன் பியர்“ என்ற இடம் உள்ளது. இந்த இடத்தின் நீளம் 198 மீட்டர். அகலம் 148 மீட்டர். அந்த இடத்தில் தான் முக்கிய நாட்களில் நடைபெறும் பூசைகள் நடைபெறுமாம். இவ்வளவு பெரிய இடத்தின் முன்பாகத்தில் மட்டும் மக்கள் அமர்ந்து பூசையில் கலந்து கொள்ளும் விதமாக உள்ளது. மற்ற இடத்தில் மக்கள் நின்று கொண்டே கலந்து கொண்டாலும் இடம் போதாத அளவில் தான் உள்ளதாம்(!) இங்கே 150 000 பேர்கள் தாராளமாக நின்று பலிபூசைகளில் கலந்து கொள்கிறார்கள்.


   நாங்கள் ஒன்பதரை மணியளவில் சென்றாலும் கோவிலுக்குள் செல்லும் வரிசையில் நின்று 11.30 மணிக்குத் தான் கோவிலுக்குள் நுழைந்தோம். வரிசையில் நின்று கொண்டே இருக்கவில்லை. நடந்துக்கொண்டே இருந்தாலும் இரண்டு மணிநேரம் பிடித்தது.

உயரமான தூண்கள்

   கோவிலுக்குள் குறைந்தது 50000 பேர்களுக்கு மேல் தாராளமாக கொள்ளும் என்பதால் வரிசை நிற்காமல் சென்றதில் கொஞ்சம் திருப்தி தான். இந்த ஆலயம் 154 மட்டர் அகலம் கொண்டுள்ளது. உயரம் 219 மீட்டர். அனைத்தும் சேர்த்து 2.30 எக்டேர் பரப்பளவு.
   இந்தக் கோவில் முதலாம் போப் “யார் செயின்ட் பீட்டர்“ என்பவரின் கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. கி.பி 1506 ல் துவங்கி 1626 ல் முடிக்கப்பெற்றதாம்.

மேல்கைகள் தெரியமலிருக்க துணியைச் சுற்றிய பெண்கள்.

   அன்று மிகவும் அதிக வெயில் (30 டிகிரி) பொதுவாக ஆண்கள் தொண்ணூறு சதம் பேர் அரைக் கால்சட்டையை முட்டிவரையில் அணிந்திருந்தார்கள். பெண்களில் 50 சதம் பேர் மிகவும் சிறிய கால்சட்டை அல்லது குட்டை கவுன், கையில்லாத சட்டையும் தான் அணிந்திருந்தார்கள். இதில் என்ன பிரட்சனை என்றால்..... இப்படி கால்சட்டையும் குட்டை கவுனும்  கையில்லா பனியனையும் அணிந்த பெண்களைக் கோவிலுக்கு உள்ளே போக அனுமதிக்க வில்லை.

ஆலயத்தின் அருகில்

   ஆனால் அவ்விடத்திலேயே பாக்கிஸ்தான் காரர்கள் சின்ன சின்ன துண்டு துணிகளை ஐந்து யுரோவிற்கு விற்கிறார்கள். வேறு வழியில்லாத பெண்கள் இந்தத் துணியை வாங்கி இடுப்பில் வேட்டி போலவும் கை பகுதி மூடும் வகையில் கழுத்தைச் சுற்றியும் கட்டிக் கொள்கிறார்கள்.


   கோவிலுக்குள் எந்த இடத்திலும் மெழுகுவத்திகள் கிடையாது.
   இங்கே மெழுகு ஏற்றும் இடங்களில் அந்த மெழுகு வத்திகள் பிளாஸ்ட்டிக்கில் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளார்கள். விருப்பப்பட்டவர்கள் அங்கிருக்கும் உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு அந்த மெழுகை எடுத்து மெழுகு வைக்கும் ஸ்டேண்டில் செறுகினால் மேல் உள்ள திரியில் லைட் எறிகிறது. ஒரு சிலர் அந்த மெழுகை ஏற்றினார்கள்.
   தவிர கோவிலைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்றால்..... சொல்லிக்கொண்டே போகலாம். மிகப் பெரிய பெரிய சிலைகள். பழங்கால ஓவியங்கள். தரையும் பளபளப்பாக.... கோவிலின் மேல் சுவற்றுப்படங்கள்..... அனைத்துமே கண்கொள்ளா காட்சிகள். வாயால் சொல்ல முடியாது என்பதால் படங்களை வெளியிட்டு விடுகிறேன்.

மேல் புறச் சிலைகள்


நுழைவிடம்

புனித நீர் 

ஆலயத்தின் உட்புறம்


மேல் கூரைப்பகுதி


 உள்ளிருந்த சிலைகள்







கருவறை

 கோவிலுக்குள் வேறு வேறு பாகத்தில் வேறு வேறு மொழிகளில் பூசைகள் நடக்கிறது. அந்த நேரத்தையும் இடத்தையும் ஏற்கனவே குறிப்பிட்டு விடுவதால் அந்த மொழி மக்கள் சரியாக பூசையில் கலந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 500 பேர்கள் ஒரு பூசையில்கலந்துகொள்கிறார்கள்.






தவிர கோவிலின் ஹண்டர் கிரௌன்டில் (தமிழில் தெரியவில்லை) போப் ஆண்டவர்களின் கல்லறைகள் நூற்றுக்கும் மேற்பட்டது இருக்கிறது. புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

கல்லறையின் நுழைவாயில்

போப் ஆண்டவரின் பதப்படுத்தப் பட்ட உடல்
மிகவும் துர்ரத்தில் இருந்ததால் சூம் செய்தாலும் இவ்வளவு
தான் எடுக்க முடிந்தது.







    இப்படி பூசையில் கலந்துக்கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் கடவுளை வணங்க வேண்டும் என்றால் அதற்கென்றும் தனித்தனி இடங்கள் உள்ளன. அவ்விடத்தில் ஆயிரம் பேர்கள் இருந்தாலும் யாருமே இல்லாத இடம் போல் அமைதியாக இருக்கிறது.
   நாங்கள் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் கோவிலின் உள்ளேயே சுற்றிவிட்டு இரண்டு மணிக்கு வெளியில் வந்தோம்.
    அன்று மதியம் வாட்டிகானில் உள்ள உலகப் புகழ் பெற்ற பழங்கால மியுசியத்தைப் பற்றி எழுதுகிறேன்.

அருணா செல்வம்
25.08.2014


கொம்போசன்டோ மொனிமென்டலில் பாதிரியாரின் பதப்படுத்தப் பட்ட உடல். (போன பதிவில் ஸ்ரீராம் ஐயா அவர்கள் கேட்டு எழுதியிருந்தார். அவருக்காக வெளியிட்டுள்ளேன்.) 

நட்புறவுகளே.....
   எல்லா பெரிய படைப்பாளிகளைப் போல நாமும் பயணக்கட்டுரை எழுதலாம் என்று எழுதத் துவங்கினால்..... பிறகுத் தான் தெரிந்தது அதில் உள்ள கஷ்டங்கள். முதலில் அந்த அந்த இடங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நான் தெரிந்துக் கொண்டதை மட்டுமே உங்களுடன் பகிர்கின்றேன். இதில் மாற்றுக் கருத்துக்களும் இருக்கலாம். தெரிந்தவர்கள் தெரிவித்தால் நானும் அறிந்துக்கொள்வேன்.
   தவிர நான் பிடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நல்ல படங்களைத் தேடிப்பிடித்து வெளியிடும் கஷ்டம்...... சில நேரம் சலிப்பை வரவழிக்கிறது.
   ஒரு குட்டிக்கதையை எழுதினோமா வெளியிட்டோமா என்றில்லாமல்...... ஏன்தான் இதைத் துவங்கினேனோ என்ற சோர்வு வரக் காரணத்தைத் தேடுகிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

சட்டென்றே ஒருமுத்தம் !!



ஒத்தையடிப் பாதையிலே
ஒத்தையிலே நடக்கையிலே
அத்தைமகன் முன்வந்தான்
ஆசையிலே வழிமறித்தே

முத்தமொன்று கொடுத்துவிட்டு
முன்னேறிப் போவென்றான்!
கத்திஊரைக் கூப்பிடுவேன்
கணப்பொழுதில் சொன்னாலும்

ஏக்கத்தில் அவன்பார்வை
ஏதெதுவோ செய்ததனால்
தாக்கத்தில் வழிவிட்டும்,
தயங்கியேதான் நின்றுவிட்டாள்!

நோக்கத்தைப் புரிந்துகொண்டும்
நூதனமாய்த் தனைப்பார்க்க
ஏக்கமொன்றும் எனக்கில்லை
என்றுசொல்லித் தள்ளிவந்தாள்!

அஞ்சியஞ்சி நில்லாமல்
அலட்சியமாய் வந்தாலும்
மஞ்சத்தில் அனல்பறக்க
மங்கையவள் உறங்காமல்

கொஞ்சுமொழி கண்பேச
குறும்பாகச் சிரித்தவனை
நெஞ்சுனுளே சுமந்துகொண்டு
நெடுநேரம் விழித்திருந்தாள்!

தொட்டணைக்க உரிமையுள்ள
தோதான அத்தைமகன்!
சட்டென்றே ஒருமுத்தம்
தந்துவிட்டு வந்திருந்தால்

கட்டான காளையவன்
கனவினிலே வந்திருப்பான்!
பட்டென்றே ஏன்வந்தோம்?
பண்பின்றி ஏக்கமுற்றாள்!

நட்புறவுகளுக்கு வணக்கம்.

    இந்த “சட்டென்று ஒரு முத்தம்“ என்ற கவிதை, “தயக்கம் ஏனோ அதைச் சொல்ல“ என்ற எனது அடுத்த புத்தகத்தில் வர இருக்கிறது.
    இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் இந்தக் குறிப்பிட்டக் கவிதையைப் பற்றி பாராட்டி எழுதி இருக்கிறார்கள். இந்தக் கவிதையில் அப்படி என்ன விசேசம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
   படிக்கும் உங்களுக்கு ஏதாவது சிறப்பாக உணருகிறீர்களா என்பதை அறிவதற்காகவே இந்தக் கவிதையை மறுபதிப்பாக வெளியிடுகிறேன்.
   தாங்கள் அறிந்த கருத்தை அவசியம் பின்னோட்டத்தில் தெரிவித்தால்..... நானும் தெரிந்துக் கொள்வேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

23.08.2014

புதன், 20 ஆகஸ்ட், 2014

“பைசா“ கோவில்!! (COMPO DEI MIRACOLI - இத்தாலி-3)

  
நட்புறவுகளுக்கு வணக்கம்.
    போன பதிவில் “பைசா“ சாய் கோபுரம் வரையில் எழுதியிருந்தேன். இன்று அதன் அருகில் உள்ள கோவிலையும் கல்லறையையும் பார்த்த அனுபவத்தைத் தொடர்கிறேன்.
  நீங்கள் எல்லாம் திட்டுவது மனக்காதில் விழுவதால்.... அதிகமாக வளவளவென்று எழுதாமல் மிகச் சுறுக்கமாக எழுத முயல்கின்றேன்.

    மறுநாள் 05.08.2014 காலை பைசா அருகில் இருந்த ஒரு தோட்டத்திற்குச் சென்றோம். உள்நுழைய ஒருவருக்கு 2.50 யுரோ. அங்கே சென்றால் மிகப்பெரிய பெரிய மரங்கள்... செடி கொடிகளை மட்டும் தான் பார்த்தோம். பூக்கள் எதுவும் இல்லை. நாங்கள் போன நேரம் சீஸன் இல்லையாம். ஒரே ஒரு தாமரை குளம் மட்டும் தான் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அதை மட்டும் ஒரு கிளிக்.

தாமரைக் குளம்


    திரும்பவும் பைசா கோபுரம் அருகில் வந்து கொம்போசன்டோ மொனிமென்டல், பத்திஸ்டர் இரண்டு இடங்களையும் பார்க்க நுழைந்தால்.... அதிக மக்கள் இருப்பதால் கொம்போசன்டோ மொனிமென்டல் மட்டுமே பார்க்க டிக்கெட் கிடைத்தது.
   அதற்கு முன் நேற்று இருந்த டிக்கட்டுடன் மிராக்கொலி (COMPO DEI MIRACOLI) கோவிலுக்குள் நுழைந்தோம்.


COMPO DEI MIRACOLI - கோவில்- கி.பி 1161

 சுற்றுச் சுவர்

கோவில் மேல் சுவர்.

கோவில் உள்

   கோவிலில் பூசை (மேஸ்) நடப்பதில்லையாம். வெறும் பார்வையாளர்கள் வந்து போகும் இடமாக மட்டுமே உள்ளதாம்.

சாம் ரெனியர் (SAM RANIER

   கோவிலைக் கட்டிய சாம் ரெனியர் (SAM RANIER) அவர்களின் உடலைப் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த உடலைப்பற்றி எழுதிய பலகை முழுவதும் இத்தாலி மொழியிலே இருந்தது. அதனால் அதன் முழு வரலாறும் தெரியவில்லை.


   ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கைடுகள் பக்கம் காதை நீட்டினால்..... பழைய மாதிரி இல்லைங்க இங்கே இருக்கும் கைடுகள். இப்பொழுதெல்லாம் கைடுகள் பார்வையாளர்களைக் கூட்டமாகச் சூழ வைத்துச் சத்தமாக பேசி விளக்குவது இல்லை. அப்படி விளக்கினால் நம் காதகளிலும் விழுந்து.... ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கே இவர்கள் அனைவரிடமும் ஒரு சிறிய மசினுடன் கூடிய எட்போன் கொடுத்து விடுகிறார்கள். கைடு தன்னிடம் உள்ள சிறு மைக்கில் இடத்தைப் பற்றி மிகவும் மெதுவாகவே விளக்குகிறார். பார்வையாளர்கள் எங்கே வேண்டமானாலும் இருந்து கொண்டு அவர் சொல்வதைக் கேட்டு அறிந்துக் கொள்கிறார்கள். அதனால் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இரைச்சல் இல்லாமல் இருக்கிறது.


   ஆனால் நமக்கு எதுவும் காதில் விழாதது கொஞ்சம் கவலை தான்.....(( கவலையடன் கொம்போசன்டோ மொனிமென்டலுக்கு வந்தோம்.
  
கொம்போசன்டோ மொனிமென்டல் (COMPOSANTO MONUMENTALE)

நுழைவு

   இதனுள் நுழைய ஒருவருக்கு 5.00 யுரோ. இது கிருஸ்த்தவ பாதிரிமார்களின் கல்லறை. இது எத்தனை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மிக மிக பழமை வாய்ந்தது என்று மட்டும் சொல்லப்படுகிறது. ஆனால் இத்தாலியின் போருக்குப் பிறகு 1944 ல் இதைப் புதுப்பித்து இருக்கிறார்கள். இன்றளவும் வேலை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

பாதிரிமார்களின் கல்லறை. 

கடைசி கல்லறை

                       பாதிரிமார் எலும்பு

பாரிதிமார்களின் எலும்புகள்

உள் பக்கம்

   போர் முடிந்த பிறகு கிடைத்த பாரிதிமார்களின் எலும்புகளைப் பாது காத்து வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. கல்லறையின் கீழ் எழுதி இருக்கும் ஆண்டுகள் பழைய ரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்டு உள்ளன.

   நாங்கள் முதல் பாதி நாளைப் பைசாவில் கழித்துவிட்டு ரோமில் இருக்கும் வாட்டிகானுக்குப் பயணமானோம். இங்கிருந்து மூன்று மணிநேர இரயில் பயணம். கிட்டத்தட்ட அறுநூறு மிலோ மீட்டர். ஒருவருக்கு 26 யுரோ. ரோம் நகரம் வந்து ஓட்டலில் சேர இரவு ஒன்பது ஆகிவிட்டது.
   அடுத்தப் பதிவில் ரோம் நகர வட்டிகான் நகரத்தில் உள்ள உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயத்தைப் பற்றி எழுதுகிறேன்.
   
அருணா செல்வம்
20.08.2014