திங்கள், 27 மே, 2019

நிகழ்வினை விலக்கு!



முன்ன விலக்கணி!

பாடலில் நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வினை விலக்கிப் பாடுவது நிகழ்வினை விலக்குஎனப்படும். (இது இருக்க அது ஏன்)

. ம்
திருமுகத்தில் தொங்கி தெளிவின்றி ஆடும்
சுருள்கொண்ட கார்குழலும் சொல்லும் அரும்பே
அழகென்று சூட்டினாய்! அஃதிலும் மேலாம்
விழல்போன்ற கூந்தலன்றோ! வீண்!

பொருள் அழகு பொருந்திய முகத்தில் தொங்கி அங்கும் இங்கும் காற்றில் அசைந்து ஆடும் சுருண்ட கூந்தலும் சொல்லும். மலராத அரும்பை அழகென்று சூட்டினாய். ஆனால் அதைவிட அழகானது விழல் போன்ற கூந்தல் தான். அதனால் அந்த அரும்பு வீண்.

பாடலில் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் மலரைவிட அந்தக் கூந்தல் மிக அழகாக இருக்கிறது. அதனால் மலர் வேண்டாம் என்று நிகழ்காலத்தில் நடப்பதை விலக்குவதால் இது நிகழ்வினை விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.05.2019

வியாழன், 23 மே, 2019

கூடா இயற்கை!



வேற்றுப்பொருள் வைப்பு அணி!
.
பாடலில் கூடாதவைகளைக் கூடுவதாக்கிக் கூறுவதுகூடாவியற்கைஎனப்படும்.

. ம்
உணவே மருந்தாம் உலகே சிறையாம்
துணையே வெறுப்பாம் துறவர்க்கு! – இணையில்லாக்
கல்வி பெறாதவன் கண்ணிருந்தும் வன்குருடன்
நல்லுலகம் சொல்லும் நயந்து!

பொருள்உலக வாழ்க்கையில் வாழ்வதற்கு வேண்டிய உணவு மருந்தாகவும் இருப்பிடம் சிறையாகவும் வாழ்க்கைத் துணையோ தேவையில்லா சுமையாகவும் துறவு பூண்டவர்களுக்கு இருக்கும். உலகில் கண் இருந்தும் கல்வி பெறாதவனைக் குருடன் என்று உலகமானது நயந்து சொல்லும்.
    பாடலில் உணவும், இருப்பிடமும், துணையும் மனிதருக்கு இன்பத்தைத் தருவதாக இருப்பவைகள். அவைகள் துறவு பூண்டவருக்குத் துன்பத்தைத் தரும் என்பது சிறப்புப்பொருள். உலகில் இணையில்லாத கல்வியைப் பெறாதவனை இவ்வுலகம் கண் இருந்தும் குருடன் என்று உரைக்கும் என்று உலகறிந்த பொதுப்பொருளை அதன் மேல் ஏற்றி வைப்பதால் இது வேற்றுப்பொருள் வைப்பாகியது. உணவு இருப்பிடம் துணை ஆகியவை இன்பத்தைத் தருவன. ஆனால் அதற்கு கூடாத தன்மைகளைக் கூடுவதாகக் கூட்டி உரைத்ததால் இதுகூடா இயற்கைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2019


செவ்வாய், 21 மே, 2019

முரணித் தோன்றல்!



வேற்றுப்பொருள் வைப்பு அணி!

பாடலில் ஒரு பொருளின் உள்ளேயே மாறுபட்டிருக்கும் இயல்பினை வைத்துப் பாடுவது முரணித் தோன்றல்எனப்படும்.
  
. ம்
அதிகம் கடல்நீரை அள்ளிக் குடிக்க
உதிக்காது நெஞ்சம் உணர்ந்து! – பொதிசுமந்த
ஓட்டையுள்ள கப்பலுக்கு ஒன்பது மாலுமி
கூட்டாய் இருந்தாராம் கூற்று!

அதிக அளவில் இருக்கும் கடல் நீரின் தன்மையை அறிந்த நெஞ்சமானது உப்பச் சுவைக்கொண்டிருப்பதால், அதை அள்ளிக் குடிக்க எண்ணாது. வணிகப் பொருட்களைச் சுமந்த பழுதடைந்து ஓட்டையாகிப் போன கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது சொல் வழக்கு.
   பாடலில் கடல்நீர் அதிகமாக இருந்தாலும் அதை அள்ளிக் குடிக்க முடியாது என்பது சிறப்புப் பொருள். இதனை முடிப்பதற்கு, ஓட்டையான கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் இருந்தாலும் அதனால் பயன் இல்லை என்பது பொதுப்பொருள். சிறப்புப்பொருளின் மேல் உலகறிந்த பொதுப்பொருளை ஏற்றிப் பாடியதால் இது வேற்றுபொருள் வைப்பாகியது. ஓட்டையுள்ள கப்பலுக்கு மாலுமி தேவையில்லை என்பதே இயல்பு. அப்படியின்றி ஒன்பது மாலுமிகள் இருந்தார் என்பதால் இதுமுரணித் தோன்றல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
21.05.2019

சனி, 18 மே, 2019

வேற்றுமை அணி!



உயர்ச்சி வேற்றுமை – (கூற்று வேற்றுமை)

   பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்களும் ஒப்பாக இருப்பினும், அதில் ஒரு பொருளை மட்டும் மற்றதைவிட இதனால் உயர்ந்தது இது என்று உயர்த்திப் பாடுவது உயர்ச்சி வேற்றுமைஎனப்படும். (கூற்று வேற்றுமை வெளிப்படையாக வேற்றுமை கூறுவது)
.
. ம்

தென்னையும் வாழையும் தீங்கின்றி நாம்வாழத்
தன்னுடலை ஒப்பாகத் தந்துதவும்! – இன்பமுடன்
நன்குண்ண ஓரிலை நல்கிடும் வாழைபோல்
தென்னைக்கோ இல்லை தெரிவு!
.
பொருள் தென்னை மரமும் வாழை மரமும் எவ்வித தீங்குகளும் இன்றி உலக மாந்தர் வாழ்வதற்கு தன் உடலை தந்து உதவுவதில் ஒப்பாக உள்ளது. ஆயினும், இன்பமுடன் அமர்ந்து உணவு உண்ண வாழையின் இலை உதவிடும். ஆனால் தென்னை இலைக்கு அந்த அகன்ற தோற்றம் கிடையாது.
….. பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்கள் ஒன்று வாழை. மற்றொன்று தென்னை. இரண்டும் தன் உடல் முழுவதையும் உலகிற்கு கொடுப்பதில் ஒப்பானது தான். ஆயினும் அகன்ற இலை கொண்ட வாழையிலையில் உணவு பரிமாறி உண்ண முடியும். தென்னை இலையில் அவ்வாறு செய்ய இயலாது என்று ஒன்றுக்கு மட்டும் உயர்வு கூறி இருப்பதால் இது உயர்ச்சி வேற்றுமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2019

புதன், 15 மே, 2019

இருபொருள் வேற்றுமைச் சமம்!



வேற்றுமை அணி!

    பாடலில் இரண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கு உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்பு இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூறி, இரண்டிற்கும் இவ்விரண்டு வேற்றுமை இருந்தாலும் இரண்டும் சமமே எனத் தோன்றுமாறு பாடுவது இருபொருள் வேற்றுமை சமம்எனப்படும்.

.ம்
மாசின்றி நம்மை மகிழவைத்தும் வாழ்ந்திடக்
காசின்றி நல்லுயிர்க் காக்குமே - வீசிடும்
தன்னலம் இல்லாத் தவழ்காற்று, மற்றொன்று
அன்னையின் கள்ளமில்லா அன்பு!
.
பொருள் உலகினில் மாசு இல்லாமல் நம்மை மகிழவைத்து, நாம் வாழ்ந்திட எதையும் கேட்டு வாங்காமல் நம்மின் நல்ல உயிரினைக் காத்திடும் வீசிடும் தன்னலம் இல்லாத காற்றும் , மற்றொன்று  கள்ளமில்லாத நம் அன்னையின் அன்பும் ஆகும்.
    பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்கள் ஒன்று அன்னையின் அன்பு. மற்றொன்று வீசிடும் காற்று. முன் இரண்டு அடிகளில் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளைச் சொல்லிவிட்டுப் பின்னிரண்டு அடிகளில் ஒன்று அன்னையின் அன்பு என்றும் மற்றொன்று வீசிடும் காற்று என்றும் இரண்டிற்கும் வேற்றுமை சொல்லி வந்திருப்பதால் இரு இருபொருள் வேற்றுமை சமம் ஆகும்.
.
பாவலர் அருணா செல்வம்
15.05.2019

திங்கள், 13 மே, 2019

ஒரு பொருள் வேற்றுமைச் சமம்!



வேற்றுமை அணி!
.
    பாடலில், இரண்டு பொருளை எடுத்துக்கொண்டு அதற்கு வெளிப்படையாக ஒப்புமைகளைக் கூறிவிட்டுப், பின்பு ஒரு பொருளுக்கு ஒரு காரணத்தை மட்டும் எடுத்துக் கூறி இது ஒன்று மட்டுமே வேற்றுமை என்றும், இருந்தாலும் இரண்டுமே சமம் என்று கூறுவது ஒரு பொருள் வேற்றுமைச்சமம் எனப்படும்.
.
. ம்
அஞ்சிட வைத்தும் அடுத்தோர் நகர்ந்திடத்
தஞ்சமிடும் தீமையும் தானிருக்கும்! – நெஞ்சமற்ற
கல்லனின் உள்மனமும் காரிருளும் ஒன்றாயின்
நல்விடியல் தான்வேறு நன்கு!
.
பொருள் மனத்தைப் பயங்கொள்ள வைக்கும், னுள் தஞ்சமிட்டிருக்கும் தீமைகளுக்குப் பயந்து மற்றவர் அவனைவிட்டு விலகி நடக்க எண்ணம் தரும் வண்ணம் நெஞ்சமுள்ள தீயவனின் உள்மனமும் இருள் சூழ்ந்த இடமும் ஒன்று. இருந்தாலும் மறுநாள் விடியல் மட்டுமே இவ்விரண்டை வேறுபடுத்துகிறது.
    …… பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்கள் ஒன்று தீயவனின் நெஞ்சம். மற்றொன்று கருமைச் சூழ்ந்த இருண்ட இடம். இரண்டுமே மனத்தைப் பயங்கொள்ள வைக்கும். இரண்டுமே தீமைகள் தஞ்சமடைய இடம் கொடுக்கும். ஆனால் மறுநாள் விடிந்தால் இருள் அகன்றுவிடும் என்று இருளுக்கு மட்டும் ஒரு வேற்றுமைக் கூறி இருப்பதால் இது ஒரு பொருள் வேற்றுமைச்சமம் ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
13.05.2019
.

வியாழன், 9 மே, 2019

அயற்காரண விபாவனை ! (இயல்பு)



விபாவனை அணி! 
    பாடலில் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பொருத்தமான, ஏற்புடைய காரணத்தைச் சொல்லாமல், அதற்கு நிகரான வேறு ஒரு காரணத்தால் சிறப்பித்துப் பாடுவதுஅயற்காரண விபாவனைஆகும். இதனை இயல்பு காரண விபாவனைஎன்றும் கூறுவர்.

. ம்
கண்மூடிக் காட்சிகளைக் காணும்! பெரும்பசிக்கு
உண்ணாமல் மேனி ஒளிர்ந்திடும்! – பண்இன்றி
நெஞ்சம் மகிழ்ந்தாடும்! நேரம் உருளாது
வஞ்சியின் நேசன் வரவு!
.
பொருள்கண்களை மூடிக்கொண்டு காட்சிகளைக் கண்டு மகிழும். நிறைந்த பசிஎடுத்தும் உணவு உண்ணாமலேயே அவளின் மேனி அழகுடன் மிளிரும். இசை இல்லாமலேயே நெஞ்சமானது நடனமாடும். நேரம் போகாமல் இருக்கும் அந்தப் பெண்ணின் மனத்தில் வாழ்பவர் வரும் நேரத்தில்.

    காட்சிகளைக் காண்பதற்கு கண்கள் திறந்தும், உடல் ஒளியுடன் மின்ன உணவும், நடனமாட இசையும், நேரம் ஓடிக்கொண்டே இருப்பதும் தான் உலகின் இயல்பு. இது உலகம் அறிந்த காரணமாகும். ஆனால் பாடலில் இவ்வாறு இல்லாமலேயே அந்த அந்தச் செயல்கள் நடந்தன என்பதால் இதுவிபாவனைஆகியது. இங்ஙனம் நடப்பதற் கெல்லாம் காரணம் அந்தப் பெண்ணின் தலைவன் வரும் நேரம் என்பது உணரப்படுவதால் இதுஅயற்காரணம்ஆயிற்று.
.
பாவலர் அருணா செல்வம்
09.05.2019

புதன், 8 மே, 2019

இடைநிலைக் குணத் தீவகம்! - தீவக அணி!




பாடலில் இடையிலிருக்கும் (நேரிசை வெண்பாவில் தனிச்சொல்லாக நிற்கும் சொல். மற்றப்பாடல்களின் நடுவில் வரும் ஒரு சொல்) ஒரு சொல்லானது பண்பைக் குறிப்பது போல் வந்து, அந்தச் சொல்லே பாடலின் எல்லா இடங்களுக்கும் சென்று இயைந்து பொருள் உணர்த்துவதுஇடைநிலைக் குணத் தீவகம்ஆகும்.
.
உ. ம்
நவமொழிப் பேச்சினால் நங்கைமுகம் நாண
அவன்தொட உள்ளம் அழகாய்சிவந்தனவே!
கன்னமும் கைகளும் கண்ணும் தலைவனின்
இன்பமெனும் மார்பில் இணைந்து!

பொருள்தலைவனின் பல்சுவைப் பேச்சினால் அந்த மங்கையின் முகம் நாணத்தால் சிவந்தன. அவன் அவளைத் தொட உள்ளமும் சிவந்தன. அவன் மார்பில் தலையைச் சாய்வதால் அவளின் கன்னமும் கைகளும் கண்களும் வெட்கத்தால் சிவந்து போனது.
    இப்பாடலின் நடுவில் இருக்கும்சிவந்தனஎன்ற பண்பைக் குறிக்கும் சொல்லானது முகம், உள்ளம், கன்னம். கைகள், கண்கள் ஆகிய சொற்களோடு இயைந்து பொருள்படுவதால் இதுஇடைநிலைக் குணத்தீவகம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.05.2019

திங்கள், 6 மே, 2019

முன்ன விலக்கு அணி - எதிர்வினை விலக்கு!



எதிர்வினை விலக்கு!
பாடலில் எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சியை விலக்குவது எதிர்வினை விலக்குஎனப்படும்.

. ம்
காற்றடிக்கும் வானத்தில் கார்மேகம் மோதமழைக்
கீற்றை நனைத்திடக் கீழிறங்கும்! – சோற்றினைக்
கூழாக்கி வற்றலிட்டால் கூடி உழைத்ததெல்லாம்
பாழாகும் என்றாள் பயந்து!

பொருள் காற்று அடிக்கும். வானத்தில் கார்மேகங்கள் மோதிட மழைப் பொழியும். அதனால் வீட்டில் வெய்த கீற்றுகள் நனைந்து மழைநீர் கீழறங்கும். சோற்றைக் கொண்டு கூழ்போன்று செய்து தரையில் வற்றல் இட்டால் நாம் கூடி உழைத்துச் செய்ததெல்லாம் பாழாய்ப் போய்விடுமென்று. பயமாக இருப்பதால் வற்றல் காய வைக்க வேண்டாம் என்றாள்.

பாடலில் எதிர்காலத்தில் வரப்போகும் மழைக்குப் பயந்து இப்போதைய செயலைச் செய்யாமல் விலக்கியதால் இது எதிர்வினை விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
06.05.2019

வெள்ளி, 3 மே, 2019

பெயரும் பொருள் தற்குறிப் பேற்ற அணி!



    ஓர் இடத்தைவிட்டு ஓர் இடத்திற்கு பெயரும் தன்மையுள்ள பொருளை அதன் தன்மையிலேயே கூறாமல் புலவன் தான் கருதிய வேறு ஒன்றினை அதன் மேல் ஏற்றிப் பாடுவது “பெயரும் பொருள் தற்குறிப் பேற்றம்“ எனப்படும்.

உ.ம்
கருமேகக் கூந்தல் களைந்திடக், காற்றாய்
வருவேகஞ் சுற்றி வளைய, - பெருந்தோகை
கான்மயில்போல் வஞ்சிநடம் கண்டதால் காரென்று
வான்மயங்கிக் கொட்டியது வார்த்து!

பொருள் - கருமேகம் போன்ற கூந்தல் களைந்ததாலும், காற்றைப் போல வேகமுடன் சுற்றி வளைவதாலும், பெரிய தோகையை விரித்து மயில் ஆடுவதைப் போல் பெண்ணானவள் ஆடியதாலும் அதைக்கண்ட வானம் கார்காலம் வந்தது என்று எண்ணி மழையைக் கொட்டியது.

    மேகம் மழையைப் பொழிவது இயற்கை. ஆனால் அதை, மாது நடனமாடியதால் மழையைப் பொழிந்தது என்று தான் கருதிய வேறொன்றைப் பாடலில் ஏற்றிச் சொல்வதால் இது “தற்குறிப் பேற்ற அணி “ ஆகியது. இதில் பெண்ணும், மழையும் இடம்விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டுள்ளதால் இது  “பெயர்பொருள் தற்குறிப் பேற்றம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
04.05.2019