புதன், 31 டிசம்பர், 2014

புத்தாண்டுக் கவிதை!


  
நாளை நாளை என்றெண்ணி
    நாளை நாமும் ஓட்டிவிட்டோம்!
வேலை வேலை என்றோடி
    வேலை இன்றித் தவித்துவிட்டோம்!
மாலை தந்து மணந்தவரை
    மாலை வந்தும் மறந்துவிட்டோம்!
நாளை காலை இதைமாற்றி
   நாளும் நமதாய் ஆக்கிடுவோம்! 

நட்புறவுகள் அனைவருக்கும் 
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 


மலைப்புடன் நினைத்த வாழ்க்கை
    மகிழ்ச்சியாய் நிலைக்க வேண்டும்!
அலைகடல் உப்பாய் இன்பம்
    அனைத்திலும் இருக்க வேண்டும்!
நிலைத்திடும் கல்வி பெற்று
    நேர்மையாய் வாழ வேண்டும்!
கலைத்திறன் மிளிரும் ஆண்டாய்க்
    கவிதையாய் வரவே வேண்டும்!!

அருணா செல்வம்

31.12.2014

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நமக்காக!!



    “என்னங்க...“
    மாதவி கெஞ்சளானக் குரலில் கணவனை அழைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த மனோகரன் நிமிர்ந்து “என்ன“ என்பது போல் பார்த்தான்.
    “ஒன்னுமில்லை.... நம்ம பிள்ளைகளுக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சி. இந்த லீவுல ஊட்டி கொடைக்கானல்ன்னு எங்கேயாவது அழைச்சிக்கினு போங்கன்னு ஆசையா கேக்குதுங்க...“
   அவன் அவள் சொன்னதைக் காதில் வாங்காதது போல் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
   “ஏங்க... நான் சொன்னது காதுல விழுந்துச்சா?“
   “ம்“
   “அப்போ நான் பசங்ககிட்ட அப்பா போக சம்மதிச்சிட்டாருன்னு சொல்லிடட்டுமா...?“ ஆவலுடன் கேட்டாள்.
    “அதெல்லாம் எதையும் சொல்ல வேணாம். நாம் எங்கேயும் போக முடியாது.“
   “ஏங்க...“ என்றாள் ஏமாற்றமாக.
   “என்ன மாதவி, புரிஞ்சிக்காமல் பேசுறே. இப்போ தான் ராதா கல்யாணக் கடனே முடிஞ்சது. இன்னும் ஒரு வருஷத்துல மஞ்சு பெரியவளாயிடுவா. அவளுக்குச் சடங்கு செய்ய நாலு காசு வேண்டாமா? இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தால் தானே அந்த நேரத்துல உதவும். அதை விட்டுட்டு ஊட்டி சுற்றுலான்னு செலவு செய்ய சொல்லுறியே....“ என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.
    “பிள்ளைங்க ஆசைப்படுதுங்க.... எனக்கும் ஆசையா இருக்குதுங்க.... போயிட்டு வர.....
    அவள் சொல்லி முடிப்பதற்குள் சாப்பாட்டை முடிக்காமலேயே எழுந்து, சே. மனுசன் நிம்மதியா சாப்பிட கூட முடியலை... என்று முணுமுணுத்தபடியே கையலம்ப போய்விட்டான்.

    மாதவி மற்ற வேலைகளைச் செய்துக் கொண்டிருந்த போது மஞ்சு வந்து கேட்டாள். “அம்மா... அப்பா என்னம்மா சொன்னாரு....?“
    அவள் பதிலெதுவும் சொல்லாமலேயே இருந்ததைப் பார்த்து, அப்பா வேண்டாம் என்று சொல்லியிருப்பார் என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து கவலையாகப் படுக்கச் சென்றாள்.
    மஞ்சு போனதைப் பார்த்த போது அவளும் சிறு வயதில் அம்மாவிடம் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. அன்றும் இப்படி தான்.
    மாதவி பள்ளிக்குப் போய்விட்டு வந்து அவள் அம்மாவிடம் கேட்டாள். “அம்மா என் ஃபிரென்ஸ் எல்லாம் இந்த லீவுல நிறைய ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாங்களாம். என்னையும் எங்கேயாவது அழைச்சிக்கினு போங்கம்மா....“
    அவள் அம்மாவும் மகளின் ஆசையை தன் கணவனிடம் தெரிவித்தாள். அவரும் “இன்னும் வீடு கட்டிய கடனே அடையலை. ரெண்டு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணணும். பெரியவனைப் படிக்க வைக்கனும். இதையெல்லாம் நினைக்காம ஊர் சுத்தலாம்ன்னு சொல்லுறீயே....“ என்றார்.
    “பிள்ளைங்க ஆசைப்படுதுங்க. அதுங்க ஆசையை நாம தானே நிறைவேத்தனும்...“
    அம்மா பிடிவாதமாகச் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அப்பாவின் முடிவு தான் முடிவானது. “நாம நல்லபடியா பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்போம். அது தான் நம்முடைய கடமை. கல்யாணம் ஆன பிறகு புருஷனோட சந்தோஷமா போயிட்டு வர போவுதுங்க....“ என்று முடித்து விட்டார்.

    அப்பா சொன்னது போல நல்லபடியாகத் தான் கல்யாணம் முடிந்தது. ஆனால் ஊட்டிக்குப் போகனும் என்ற ஆசை தான் இது வரையில் மாதவிக்கு நிறைவேறவே இல்லை.
    கல்யாணம் ஆன புதியதில் கணவரிடம் தன் ஆசையைச் சொன்னாள் தான். ஆனால் உறவினர்கள் வைத்த கல்யாண விருந்து முடிவதற்குள்ளேயே கர்ப்பமாகி விட்டாள். குழந்தையைச் சுமர்ந்து கொண்டு ஊர் சுற்றக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
    குழந்தை பிறந்தவுடன் பச்சை உடம்பு. கைப்பிள்ளைகாரி என்ற காரணங்கள். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் நாத்தனார் கல்யாண கடன். கடனை அடைப்பதற்குள் இரண்டாவது குழந்தை. இதோ பத்து வருடம் ஓடிவிட்டது.
   இப்போதாவது அவளது ஆசை நிறைவேறும் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லை.
   மாதவிக்கு கோபமாக வந்தது. எழுந்து போய் கட்டிலில் குப்புற படுத்தாள். ஆத்திரம் அழுகையாக வந்தது. இல்லை. அவளுடைய இயலாமை தான் அழுகையாக மாறியது.

    எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது! கணவனின் கை மேலே பட்டு அவளைத் தன் பக்கமாக இழுக்கும் போது தான் தூக்கம் களைந்தது. சற்று நேரம் அழுத்தில் கோபம் அடங்கி இருந்தது. மனதும் யோசித்திருந்தது.
    ஆசையாக அணைத்த கணவனின் அருகில் நெருக்கமாகப் படுத்தாள்.
   “என்னங்க... நான் ஒன்னு கேட்பேன். பதில் சொல்லுறீங்களா...?“
   “என்ன திரும்பவும் ஊட்டிக்குப் போவதைப் பத்தியா..?“
   “இல்லை. நம்மை பற்றி நாமே பேசிக்கனும்.“
   “என்ன பேசிக்கனும்...?“
   “கல்யாணமாச்சி. குழந்தை பெத்தோம். ராதாவுக்கு கல்யாணமாச்சி. கடன் வாங்கினோம். அதை அடைச்சோம். அடுத்து மஞ்சுவுக்குச் சடங்கு செய்யனும். அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கனும். சின்னவனைப் படிக்க வைக்கனும். இதுக்கெல்லாம் பணம் வேணும். அதுக்காகச் சம்பாதிக்கனும். இதெல்லாம் நம்ம கடமை. இதை நாம செஞ்சித்தான் ஆகனும். ஆனால் நமக்குன்னு ஒரு சந்தோஷம் கூட தேவையில்லையா? வெறும் கடமைக்காக வாழுற வாழ்க்கை சந்தோஷம் தானா... அப்படின்னா நாம வாழுற வாழ்க்கை ஒரு சன்னியாசி வாழ்க்கையா? ஒரு நல்ல துணி வாங்கி கட்டிப்பார்க்க முடியலை. நகை வாங்கி போட்டுப் பார்க்க முடியலை. ஆசையா சந்தோஷமா ஒரு ஊர் சுற்றிப் பார்க்க முடியலை..
    வெறும் கடமைக்காக வாழுறதுல எனக்கு சந்தோஷமா தெரியலைங்க. ஓரளவிற்காவது சந்தோஷங்களை அனுபவிக்கனும். வயசானப்பிறகு கடமையெல்லாம் முடிஞ்சபிறகு அனுபவிக்கிறது சுகம்ன்னு நினைக்கிறீங்களா...? அது சுகமில்லைங்க. ஏதோ பழைய ஆசையை நிறைவேத்திக் கொண்டோம் என்ற திருப்தி மட்டும் தான் இருக்கும். அப்படிப் பார்த்தால் அதுவும் ஒரு கடமை தாங்க.
   அதனால நாமும் நமக்காக வாழ்ந்து பார்ப்போம்ங்க. இதுல நமக்கு ஓரளவுக்கு பணம் நஷ்டமானாலும் மனம் சந்தோசத்தை அனுபவிக்கும் இல்லையா... என்ன நான் சொல்லறது...?“
   கணவனை அந்த மெல்லிய வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் யோசித்ததில் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.
   “நீ சொல்லுறதும் உண்மை தான். நமக்காக நாம வாழனும் தான். இந்த லீவுல போய் வரலாம்“ என்றான்.
   மாதவி மன நிறைவுடன் கணவனைப் பார்த்தாள்.
   “ஆனால் மாதவி....“ அவன் சொல்ல... அதற்குள்  என்னவாயிற்று என்பது போல் அவனை ஏறிட்டாள்.
   “இந்த சந்தோஷம் நம் எல்லோருக்காகவும். ஆனால் இப்போ என் சந்தோஷத்திற்காக மட்டும் நீ வாழணும்....“ என்று சொல்லியபடி அவளை இழுத்து அணைத்தான்.
    சந்தோஷம் என்பது நம்மால் கொடுக்க முடிந்ததைப் பொறுத்து வருவது. வாங்குவதைப் பொறுத்தது அல்ல என்பதைப் புரிந்து அவளும் அவனை இறுக்கி அணைத்தாள்.

அருணா செல்வம்.

27.05.1998

புதன், 24 டிசம்பர், 2014

சின்னக் குடிலில் சூரியன்!!



கன்னி மரியாள் வயிற்றினிலே
    கருவாய் உருவாய் ஆகிவந்தே
மண்ணில் போற்றும் மாமணியாய்
    மாலைப் பொழுதில் உதிப்பாயே!
விண்ணில் வாழும் தெய்வம்நீ
    மண்ணில் வந்து பிறப்பதைநான்
கன்னித் தமிழில் பாட்டெழுதிக்
    கவிதை படைத்து மகிழ்கின்றேன்!

நெஞ்சம் காய்ந்த மக்களெல்லாம்
    நீதி எதையும் மறந்துவிட்டார்!
கொஞ்சம் கூட இரக்கமின்றிக்
    கொள்கை மறந்து திரிகின்றார்!
பஞ்சம் இன்றிப் பணமிருந்தும்
    பாதை மாறி போகின்றார்!
நஞ்சை நனைத்த வார்த்தையினால்
    நன்றாய்ப் பேசி மகிழ்கின்றார்!

என்னே வாழ்க்கை இதுவென்றே
    ஏங்கித் தவிக்கும் நல்லவர்க்கு
முன்னே உள்ள நல்வழிகள்
    முள்ளால் மூடி உள்ளதென்று
கண்ணை நன்றாய்த் திறந்துவைத்துக்
    கருணை மனத்துள் கொண்டுநட
என்றே சொல்லி வழிநடத்த
    இறையே வந்து பிறப்பாயே!

துன்பம் எல்லாம் அகன்றுவிடத்
    தூய்மை மனத்தில் பதிந்துவிட
இன்பம் இல்லில் நிறைந்துவிட
    இனிமை பொங்கி ஒளிபரப்ப
பொன்னாய் வாழ்க்கை வாழ்ந்தாலும்
    போற்றும் வழியைக் காட்டிடவே
சின்னக் குடிலில் சூரியனாய்ச்
    சிந்தை மகிழப் பிறப்பாயே!!

அருணா செல்வம்.

25.12.2009

திங்கள், 22 டிசம்பர், 2014

இல்லாததும் இன்பம் தான்!!



இனிய இதமான ஓரிரவில்
இயற்கை தந்த உணவாலே
நீர்த்துளியாய் விதைத்த ஓர்விதையே
நிலத்தில் காலூன்ற வயிற்றில் முளைத்தாயே!

மனமோ மதிமயங்கி மசக்கை உண்டாக
மாதமோ இரண்டானப் பின்னே, முன்நினைவு!
கண்ணீர் குலத்தினிலே கண்கள் கயலாக
காலமெல்லாம் தண்ணீரில் தாமரை இலையாக...

முதல்வித்தை சிரிதேவி எனவாழ்த்த
இரண்டாவது மூதேவி என தூற்ற
மூன்றாவதும் பெண்ணாக வந்துவிட்டால்...
நாளாகாமல் முதலிலேயே முடிவானாய்!

பத்து மாதம் சுமக்காமல்
பத்தியங்கள் இருக்காமல்
வலி அதிகம் எடுக்காமல்
கரைந்து விட்ட கண்மணியே...

உன் கண்கள் நட்சத்திரங்களோ
இதழ் செவ்வாயோ
முகம் திங்களோ
உடல் செந்தாமரையோ

ஏதென்று அறிந்துவிட மனம் துடிக்க
என்றுமே இல்லையென போனயே...
பெண்ணாக பிறந்து விட்டால்
பின் விளைவு எவ்வளவோ...!!

ஒன்றில்லை இரண்டில்லை
ஒவ்வொன்றும் ஓர் விதியே!
மண்ணின்று வாழும் வரையில்
மனமே நீ தயங்காதே!

இன்பம் தான் இவ்வுலகம்
இருப்பதெல்லாம் கிடைக்கும் வரை!
துன்பம் ஒன்றும் அடையாமல் நீ
இல்லாததும் இன்பம் தானே!

அருணா செல்வம்.

13.12.2006

வியாழன், 18 டிசம்பர், 2014

காத்திருங்கள்.... காதலிக்கிறேன்!!!



    மாலை வேலை முடித்துவிட்டு ஐந்தரை மணியளவில் பேருந்துக்காகக் காத்திருந்த சங்கீதாவிற்கு வெய்யிலின் அனலால் ஏற்பட்ட கசகசப்பு எரிச்சலைத் தந்தது.
    அன்று முழுவதும் நெருப்பை அள்ளி வீசிய சூரியன் ஓரளவிற்கு இறங்கிவிட்டாலும் அனலை வாரிவிட்டே சென்றிருந்தது. கழுத்தில் ஏற்பட்ட கசகசப்பைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவளை நோக்கி அந்த சிறுமி நான்காக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினாள்.
    “என்னம்மா இது...?“ சிறுமியிடம் கேட்டாள்.
     “தெரியாதுக்கா.... அந்த அண்ணன் தான் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்“ என்றாள்.
    அவள் கைநீட்டிய திசையில் பார்த்தாள். இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க வாலிபன். சற்று மிடுக்கான தோற்றம். அவனுடைய குளிர் கண்ணாடியும், அவன் அமர்ந்திருந்த பைக்கும் அவனின் அழகை அதிகப்படுத்திக் காட்டின.
    “இந்தாங்கக்கா...“
     சிறுமிக்கு என்ன அவசரமோ....!!
     பக்கத்தில் பேருந்துக்காக அவளுடன் காத்திருந்த சிலர் அவளை ஒரு மாதிரியாகப் பார்ப்பது தெரிந்தது. சட்டென்று சிறுமியிடம் குனிந்து,
    “இந்தாம்மா... இதை அவரே வந்து என்னிடம் கொடுக்கச் சொல்லு“ என்றாள்.
    சிறுமி அங்கிருந்து நகர்ந்ததும் அவள் போக வேண்டிய பேருந்து வந்துவிட அங்கிருந்த அனைவரும் ஏறினார்கள் சங்கீதாவைத் தவிர.
     பேருந்து கிளம்பும் போது அங்கிருந்து கடைசியாக ஏறிய மூதாட்டியின் சொற்கள் காதில் விழுந்தது.
    பாத்தா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. மனசைக் கட்டுப்படுத்தினா நல்லா இருக்கும்
    பேருந்து போய் விட்டது.
   
    எதிரில் இருந்த அவன், தன் வண்டியை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து அவள் இருக்கும் இடத்தை நோக்கி வருவது தெரிந்தது. நடையில் ஒருவித உற்சாகம். அவளை மயக்கிவிட்டோம் என்ற நினைப்பா? அல்லது அவள் திட்டினாலும், ஓர் அறை கொடுத்து காரித் துப்பினாலும் பார்ப்பதற்கு அங்கே யாரும் இல்லை என்ற தைரியமா? அவளுக்குத் தெரியவில்லை.
     அருகில் வந்தவன் சிநேகிதமாகப் புன்னகைத்தான். அவள் சிரிக்கவில்லை. மாறாக முகத்தைக் கடுகடுப்பாக மாற்றிக் கொண்டு கேட்டாள்.
    “என்ன அது லட்டர்?“
    “நீங்களே படிச்சிப் பாருங்களேன்“ கடிதத்தை நீட்டினான்.
    “அது தான் எழுதின நீங்களே இருக்கிறீங்களே. என்ன எழுதி இருக்கிறீங்கன்னு சொல்லுங்க.“ என்றாள்.
    “அது வந்து....“ சொல்லத் தயங்கினான்.
    “லவ் லட்டரா...?“ அவளே கேட்டாள்.
     அவன் சற்று நேரம் கழித்து ஆமாம்என்பதற்கு அறிகுறியாகத் தலையாட்டினான். அவன் முகத்தில் தெரிந்த சாயல் தான் அசடு வழிதல் என்பதா...!!!
     “நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்களா?“ கேட்டாள்.
     இதற்கும் தலை அசைப்பு தான்.
     “சரி. காதலிச்சிக்கோங்க! அதுக்கு ஏன் லட்டர்?“
     இந்தப் பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை போலும். இனிமேல் பேசாமல் இருந்தால் நல்லதில்லை என்று நினைத்தானோ என்னவோ...
     “என்ன இப்படி சொல்லிட்டிங்க? காதல் என்றால் இரண்டு பேரும் மனம்விட்டு பேச வேண்டாமா?“
     “எதைப்பற்றி பேசனும்...?“
     “எல்லாத்தையும் பத்தி தான். நம் எதிர்காலத்தைப் பற்றிப் பேச எவ்வளவோ இருக்குது“
     “எதிர்காலத்தைப் பற்றித் தானே..... எனக்கு இப்பவே உங்களைக் காதலித்தால் எதிர்காலத்தில் ஏற்படும் முடிவு தெரிகிறதே...“ என்றாள் அலட்சியமாக.
     “என்ன தெரிஞ்சிக்கினீங்க?“
     “ஒரு கடிதத்தைக் கொடுக்கவே தயங்கி இன்னொருவருடைய உதவியை நாடுகிற நீங்கள் கடைசி வரைக்கும் எப்படி உறுதியாய் இருப்பீங்க? அது மட்டுமல்லை. காதல்ன்னு சொல்லிவிட்டு என்னை பார்க், பீச், சினிமான்னு கூப்பிடுவீங்க. நானும் உங்களுக்காக வருவேன். ஒரு நாளைக்கு அப்பா அம்மாவுக்குத் தெரியும். உங்கள் வீட்டுல வசதி குறைவான என்னைப் பெண்கேட்க சம்மதிக்க மாட்டாங்க. அப்படியே சம்மதிச்சாலும் ஒரு நாள் வந்து பார்த்துட்டு என் அப்பா போடுற பத்து பவுன் நகை பத்தாதுன்னு சொல்லிட்டு போவாங்க. நான் ஒருவனை காதலிச்சேன் என்பதற்காக வேற யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன் வர மாட்டாங்க. என்னால என் ரெண்டு தங்கையோட வாழ்க்கையும் பாழாகும். இதெல்லாம் எனக்கு அவசியம் தானா?“
     அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை அமைதியாகப் பார்த்தான். அவள் சொன்னதில் உண்மை இருந்தது. வசதியான வீட்டில் பிறந்து கைநிறைய சம்பாதிக்கும் அவனுக்கு வசதியான வரன்கள் வரிசையில் இருந்தது உண்மை தான். ஆனால் அவனுக்குப் பிடித்ததென்னவோ அழகும் அடக்கமும் நிறைந்த இந்த சங்கீதாவைத் தான். இந்த சங்கீதா அவனுடைய இதயக் கோவிலில் தெய்வமாக அமர்ந்துவிட்டாள். அவளை விட மனமில்லாமல் கேட்டான்.
    “அப்படின்னா என்னை நீ காதலிக்க மாட்டியா? உன்னை நான் நிச்சயமா கைவிட மாட்டேன். இது சத்தியம்“ குரலில் கெஞ்சளின் சாயலும் அதே சமயம் சற்று உறுதியும் இருந்தது.
    அவனுடைய உறுதியைப் பார்த்துவிட்டு சொன்னாள்.
    “சரி காதலிக்கிறேன். ஆனால் இப்போ இல்லை. உங்க அம்மா அப்பா சம்மதத்தோட என்னைப் பெண் கேட்டு, என் அப்பா போடுற பத்துப் பவுனை ஏத்துக்கினு எனக்குத் தாலி காட்டுறீங்க பாருங்க... அந்த நொடியிலிருந்து உங்களை நான் காதலிப்பேன். அது வரையி நீங்கள் யாரோ. நான் யாரோ தான். உங்களை மட்டுமில்லை. வேற யாரையுமே காதலிக்க மாட்டேன்.“
    அவள் சொல்லி முடிக்கவும் அவள் செல்லும் பேருந்து வரவும் சரியாக இருக்க அவள் அதில் ஏறி கிளம்பி விட்டாள். அவளைச் சுமர்ந்து சென்ற வண்டி கண்ணிலிருந்து மறைந்தாலும் அவள் சொன்ன சொற்கள் அவனின் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
    அவனின் காதலை அவள் மறுக்கவில்லை. அதே சமயம் அவள் ஏற்கவும் இல்லை. காத்திருக்கச் சொல்லியிருக்கிறாள். அடுத்தவருக்குத் தெரியாமல் பயந்து பயந்து காதலிக்க வேண்டாம். சுதந்திரமாகவும் உரிமையுடனும் காதலிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.
    அவனுக்கு அவள் மேலிருந்த அன்பு காதல் மேலும் அதிகமாகியது.
    காத்திருப்பேன்.... இவளது காதல் கிடைக்கும் வரையில் விடாமல் காத்திருப்பேன்... என்ற உறுதியை மனத்தில் எடுத்ததும் மனநிறைவுடன் வீடு நோக்கிச் சென்றான்.

அருணா செல்வம்
01.04.1998


(இந்தக் கதை எந்த இதழில் வெளிவந்தது என்ற ஞாபகம் இல்லை)

செவ்வாய், 16 டிசம்பர், 2014

“லிங்கா“ படம் பார்த்தேன்!




நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இந்தப் பதிவு “லிங்கா“ பட விமர்சனம் இல்லை. என் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் மட்டுமே சொல்லும் பதிவு. அவ்வளவே!
   சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றால் எல்லோருக்கும் இருக்கும் ஆவலைப்போல எனக்கும் படம் பார்க்க ஆவல் உண்டு. ரஜினி படம் என்றால் மனத்தில் நிற்கும் பஞ்ச் டைலாக்குகள் பிடிக்கும். (அதை மற்றவர்கள் தான் எழுதினார்கள் என்பது தெரிந்திருந்தும்...)
   படத்தில் பிரமாண்ட காட்சிகள் இருக்கும். எந்திரன், சிவாஜி.... போன்று கதையில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எனக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே இருப்பது தான்.
    லிங்கா படம் இந்த மூன்று நாட்களில் 100 கோடி வசுலைத் தாண்டி விட்டது என்ற செய்தி கூட படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியது. தவிர படம் மூன்று மணி நேரமாம். டைட்டானிக் போல அலுப்பில்லாமல் சென்றது என்ற விமர்சனங்கள் மேலும் மேலும் ஆவலைத் தூண்டியது.

அதனால்....

   நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி நேர படம். (படம் மூன்று மணி நேரம் ஓடியது மக்களுக்கு அலுப்பு வந்ததால் படத்தில் வேண்டாத 26 நிமிட காட்சிகளைக் குறைத்துள்ளார்களாம்)
   கதை இன்றைய நாளிலும், இன்றிலிருந்து எழுபது வருடம் ஆதாவது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பும் நடந்த நிகழ்ச்சியையும் படமாக எடுத்திருக்கிறார்கள்.
   ஆனால், உண்மையில் முல்லை பெரியார் அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையின் தழுவல் தான் இந்த லிங்கா படத்தின் பழங்கால கதையமைப்பு.
   கதையில் இன்றைய நிலையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நயம்படவும் நகைச்சுவையாகவும் சொல்லி இருந்தாலும் முற்காலத்தில் நடந்தக் கதையைச் சொல்லிச் சென்ற விதம் சொதப்பல் தான். கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கமா இந்தப்படம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்ற வைக்கிறது.
   ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவைப் பல இடங்களில் பாராட்டலாம். ஆனால் கிராஃபிஸ் காட்சிகளில் கோட்டை விட்டுவிட்டார்.
   ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தியா.... பாடல் மனத்தை வருடுகிறது. மற்றப்பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் தான் பிடிப்பு ஏற்படும் என்ற அளவிலேயே உள்ளது.
   சூப்பர் ஸ்டார் கொடுத்த வேலையை மிகவும் நன்றாக செய்திருக்கிறார். அவர் நடிப்பில் குறையே சொல்ல முடியாது. நடிப்பு, நடனம், அவரின் ஸ்டெய்ல்.... எதிலும் அவரிடம் குறைகாண முடியவில்லை என்பது படத்தின் முக்கிய பிளஸ் பாயிண்ட்.
   கதாநாயகிகள் அனுஷ்கா, சோனாக் ஷி இருவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். சோனாக் ஷியை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம்.
   இடையிடையே ரஜினி சந்தானத்தின் நகைச்சுவை படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.
   
   இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், ரஜினி ரசிகர்களோ, ரசிகராக இல்லாதவரோ..... சூப்பர் ஸ்டாரின் படம் என்ற எதிர்ப்பார்ப்புடன் படம் பார்க்க வந்தவர்களுக்குப் படம் முழு திருப்பியைத் தந்திருக்குமா என்பது சந்தேகமே.

அருணா செல்வம்

16.12.0214

புதன், 10 டிசம்பர், 2014

நினைவுகள்!!



இன்று வாழும் வாழ்க்கையிலே
    இனிக்கும் இன்பம் இருந்தாலும்
அன்று வாழ்ந்த வாழ்வதனின்
    அழிக்க முடியா நினைவுகளே!
நன்றே அல்ல என்றாலும்
    நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
    இயங்கிச் சுற்றும் நினைவுகளே!

பிள்ளை நெஞ்சம் புதுவகையைப்
    பிரித்துத் தெளிந்த பொழுதினையும்
உள்ளம் உவகை கொண்டவுடன்
    கொள்ளைச் சிரிப்பாய்ச் சிரித்ததையும்
கள்ளம் இல்லா அவ்வயதில்
    காதல் வந்த பொழுதினையும்
தள்ளி விடவே முடியாமல்
    தானே சுற்றும் நினைவுகளே!

சொல்லிக் கொடுத்த ஆசானும்
    சொக்க வைத்த செந்தமிழும்
வல்ல புகழின் முதலடியாய்
    வாய்க்கப் படைத்த நற்கதையும்
மெல்ல நினைக்க முகஞ்சிவக்
    மேனி தொட்ட அந்நாளும்
நல்ல சுவையாய் முன்வந்து
    நடன மாடும் நினைவுகளே!

நல்லோர் என்று நினைத்தவரோ
    நயமாய்த் துரோகம் செய்ததையும்
கல்லாய் இதயம் கொண்டவர்கள்
    கருணை அற்று நடந்ததையும்
பொல்லாப் பழியைப் பிறர்சுமக்கப்
    பொய்மேல் பொய்யாய்ச் சொன்னதையும்
நில்லாக் காலச் சுவடுகளாய்
    நெஞ்சில் பதிந்த நினைவுகளே!

மண்ணில் பிறந்த மாந்தர்க்கு
    மறத்தல் என்ற ஒன்றிருந்தும்
எண்ணிப் பார்க்க எழுந்துவரும்
    எண்ணில் அடங்கா நினைவுகளே!
உண்மை மட்டும் அதில்காட்டி
    உலகிற் கதனைக் காட்டாமல்
மண்ணில் மறையும் நாள்வரையில்
   கண்ணுள் மின்னும் நினைவுகளே!

அருணா செல்வம்

09.12.2014

திங்கள், 8 டிசம்பர், 2014

பொரி அரிசி உருண்டை!!



நட்பறவுகளுக்கு வணக்கம்.
    நேற்று புதியதாக திருமணமான தம்பதியர் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வருவதாக போன் செய்தார்கள். அவர்களுக்கு அவசர அவரசமாக இந்தப் பொரி அரிசி உருண்டையையும் முறுக்கும் செய்து வைத்து உபசரித்தேன்.
    அதிலிருந்து உங்களுக்கும் கொஞ்சம்... “சும்மா“ சாப்பிட்டுப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்.

அரிசி – 2 டம்ளர்.
சர்க்கரை – ஒரு டம்ளர் (வேண்டுமானால் மேலும் சேர்த்துக் கொள்ளலாம்)
ஏலக்காய் – ஐந்து (நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்)
முற்றிய தேங்காய் – ஒன்று (துருவி வைத்துக்கொள்ளங்கள்)
உப்பு – கொஞ்சம்.

செய்முறை


     
அடிகனமான பாத்திரத்தில் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக பூக்க வறுக்க வேண்டும்.


    வறுத்தப் பிறகு ஆற வைத்து அதை மிக்ஸியில் இட்டு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
    திரும்பவும் அதே பாத்திரத்தில் ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும்


உப்பு,
சர்க்கரை,
ஏலக்காய் சேர்க்க வேண்டும்.


அரிசிமாவைத் துரலாக சேர்த்து நன்கு வேகவிட வேண்டும். நன்கு என்றால் இரண்டு மூன்று நிமிடத்திலேயே வெந்து கட்டியாகி விடும். கட்டி கட்டியாக வராமல் நன்றாக கிளறிக்கொண்டே  இருக்க வேண்டும். 


வெந்து உருண்டைப் பிடிக்கும் அளவிற்கு வந்ததும் துருவிய தேங்காயில் கொஞ்சம் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.


    பின்பு சிறு சிறு உருண்டையாகப் பிடித்துத் துருவிய தேங்காயில் உருட்டி தட்டில் அடுக்கி வையுங்கள்.

    இது தான் பொரி அரிசி உருண்டை

செய்வதற்கு மிகவும் எளிது. சாப்பிடவும் சுவையாக இருக்கும். செலவும் கம்மி தான்.

நட்புறவுகளே..... இந்தப் பலகாரத்தை நம் தமிழ்ப்பெண்கள் அனைவருமே மிக நன்றாக செய்வார்கள். நான் எதற்காக இதைச் செய்து வெளியிட்டேன் என்றால்...... நான் சரியாகத்தான் செய்திருக்கிறேனா? என்று தெரிந்துக் கொள்ளத்தான். தவறு இருந்தால்... தோழிகளே பின்னோட்டத்தில் சொல்லிக்கொடுங்கள்.

அன்புடன்

அருணா செல்வம்.

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?



    
   வாழ்க்கையை மிகவும் சீரியஸாக நினைத்துச் செயல் பட்ட இளைஞன் ஒருவன், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து மிகவும் நொந்து போன நிலையில் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவைச் சென்று சந்தித்தான்.
    “பெருந்தகையே.... வாழ்க்கையில் தொடர்ந்து நான் தோல்வியையே சந்தித்து வருகிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முயன்றும் வெற்றியை என்னால் காணமுடியவில்லை. மிகவும் மனமொடிந்த நிலையில் தங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தாங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் புகழுக்கும் வெற்றிக்கும் தாங்கள் எப்படி எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.“ என்றான்.
    “தெரிந்து என்ன செய்யப் போகிறாய்,“ என்று கேட்டார் பெர்னார்ட் ஷா.
     “அதையே என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வெற்றி பெறலாம் என நினைக்கிறேன்.“ என்றான் இளைஞன்.
    “நல்ல முயற்சி. செய்துப்பார்.... நீ ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறாய்?“
    “தெரியவில்லை.“
    “தெரிந்து கொள்ளவாவது முயற்றி செய்தாயா?“
    “ஆமாம். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அடுத்தடுத்து முயற்சிப்பேன். தொடர்ந்து தோல்வியே வரும். அதனால் மனமொடிந்து போய்விடுகிறேன். அடுத்து வேறு விஷயங்களை நினைக்கிறேன். செயல்படுகிறேன். அவற்றிலும் தோல்வி தான் வந்தது.“ என்றான் கவலையாக.
    “இளைஞனே.... நானும் உன்னைப் போல இளைஞனாக இருந்தபோது பத்துக் காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது காரியங்களில் தோல்வியைத் தான் தழுவினேன். ஆனால் அதற்காக அந்தத் தோல்வியை நான் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஒன்பது காரியங்களிலும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் ஒரு உண்மை பளிச்சிட்டது. தொண்ணூறு முறை முயன்றால் அந்த ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்ற உண்மை தான் அது.
    அதாவது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.“ என்று விளக்கமளித்தார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
    வெற்றியின் ரகசியத்தை அறிந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.