ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தாகம்!!





நாக்கு வரண்டு வாய்உலர்ந்து
    நனைக்கக் கொஞ்சம் நீர்வேண்டித்
தேக்கி வைத்த குடத்தினுள்ளே
    தெளிந்த நீரை எடுக்கும்முன்
பாக்கள் நிறைந்த நூல்ஒன்று
    பக்கம் கிடக்க! படித்தவுடன்
நாக்கின் தாகம் நளித்தேனால்
    நனைத்த உணர்வை நான்பெற்றேன்!!


அருணா செல்வம்.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

கம்பன் கவியே கவி!! (பதிற்றந்தாதி)







கம்பன் கவியே கவியென்று பாடுவோம்

இம்மண் மகிழ்ந்தே இசையமைக்கும் - கம்பனால்

செம்பொன் தமிழுக்குச் சேய்கள் பலகிடைக்கும்

எம்மண்ணும் போற்றும் எழுந்து!



எழுந்து வருமே எழுத்துலகம்! பண்பாய்

தொழுது தொடர்ந்து படிக்கும் - முழுதும்

வழுவற்ற காவியத்தின் வர்ணனையைக் கண்டால்

பொழுதை மறக்கும் பொதிந்து!



பொதிந்து படிக்கும் மனம்புகழும்! கம்பன்

பதித்த உவமைநலன் யாவும் - விதித்த

விதியின் வழியை அறியும்! புதிதாய்

உதித்திடும் கற்பனை ஊர்ந்து!



ஊர்ந்துயர் எண்ணம் உருவாகும்! கம்பனால்

சேர்ந்துயர் கற்பனைச் சீராடும்! பார்புகழ

சார்ந்துயர் வாழ்வும் சதிராடும்! துன்பமெலாம்

தீர்ந்துயர் போகும் தெளிந்து!



தெளிவான சிந்தனையால் காணும் பொருளோ

பளிங்காகப் பார்க்கப் புரியும்! - உளியால்

எளிதாகக் கல்செதுக்கும் சிற்பிபோல் கம்பன்

அளித்தநல் சிற்பம் அது!



அதுவோர் அதிசயம்! ஆழ்ந்த கருத்தால்

புதுப்புதிதாய் அர்த்தங்கள் பூக்கும்! - பொதுவாய்

எதுவும் சுவைத்தால் இனிக்கும்! படிக்க

இதுவோ இனிக்கும் விருந்து!



விருந்தாய் விருந்தங்கள் தந்தகவி! சொற்கள்

பருந்துகண்ணின் நுண்மதிப் பார்வை! - பொருந்தும்

கருத்தெல்லாம் காலத்தின் கண்ணாடி! கற்போர்

திருவென்றே காப்பார் சிறந்து!



சிறப்பான செய்திகள் சீராக நின்றே

அறம்பொருள் கூறிடும்! அன்பின் - திறத்தைப்

புறமெனக் கொண்டும் பொலிந்தாடும்! போற்றும்

இறவா புகழ்நூல் என்று!



என்றும் பலகேள்வி என்னிடத்தில் வந்தாலும்

உன்றன் கதையில் ஒளிந்திருக்கும்! - என்றென்றும்

இன்றும் இலக்கணத்தில் கேள்வியாய் கேட்டிடவே

ஒன்றுண்டோ கம்பா உனக்கு!



கம்பா உனக்குநிகர் நற்கவியாய் இங்கெந்த

கொம்பனும் இல்லையய்யா! நாடறிந்தால் - கும்பிடும்!

செம்மையுடை செந்தமிழ் செல்வமே என்றுசொல்லும்

கம்பன் கவியே கவி!



அருணாசெல்வம்

வியாழன், 27 டிசம்பர், 2012

இப்படி தான் இருக்க வேண்டும் பொம்பளை!! (நிகழ்வு)



  நட்புறவுகளுக்கு வணக்கம்.
     நான் பிரான்சுவிற்கு வந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சி. என்ன அருணா செல்வம் இதையெல்லாம் எழுதுகிறார்களே என்று நினைக்க வேண்டாம். நான் கண்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஆரோக்கியமானது தானா? என்ற கேள்விகளை எழுப்பி உங்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு உதவும் என்று நினைத்தே உங்களுடன் பகிர்கிறேன்.


     ஒரு நாள் நான் என் கணவருடன் சூப்பர் மார்க்கெட் (தமிழில் எப்படி சொல்வதென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் எழுதுங்கள்.) சென்றேன். அங்கே வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிவிட்டு பணம் கட்டுவதற்காக வரிசையில் நின்றிருந்தோம்.
     அங்கே பொருளுக்கான பில் போடும் வெள்ளைக்காரப் பெண் மிக அழகாக இருந்தாள். வயது இருபதுக்குள் தான் இருக்கும். எங்களுக்கு முன்னால் வெள்ளைக்காரர் ஒருவர். அவருக்கு வயது முப்பது முப்பத்தைந்து இருக்கும். அந்தப் பெண் பில் போட்டுவிட்டப் பிறகும் தேவையில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். (நம்ம பாஷையில் சொல்வதென்றால் ஜொல்லு வடிந்து கொண்டிருந்தார்)
     அந்தப்பெண்ணும் “பணத்தைக் கொடுங்கள். மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்“ என்று நாசுக்காகச் சொன்னாள். அவர் எங்களைத் திரும்பிப் பார்த்தார். நாங்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருக்கும் நன்றாகத் தெரிந்தது. அவர் அதைப் பெரிது படுத்தாமல் பணத்துடன் தன் விசிட்டிங் கார்டையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் பணத்தை எண்ணி வேண்டிய மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்துடன் கார்டையும் அவரிடமே திருப்பித் தந்தாள்.
    அவர் “இது உனக்குத் தான். வீட்டில் இன்றிரவு யாரும் இல்லை. நீ வா.“ என்றார் பல்லிளித்தபடி.
    அவர் அப்படிச் சொன்னதும் அவள் கோபப் படுவாள் என்று எதிர்பார்தேன். ஆனால் அவள் சிரித்துக்கொண்டே... “என்னால் அப்படியெல்லாம் வர முடியாது. வீட்டில் என் கணவர் வேலை முடித்துவிட்டு வந்து காத்திருப்பார்“ என்றாள்.
    அவர் உடனே... “அதனால் என்ன? வந்து சீக்கிரமாக போய்விடு“ என்றார். (எனக்கோ அதிர்ச்சி)
    ஆனால் அவளோ முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல் “சார்... எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. நான் இல்லையென்றால் தூங்கமாட்டார்கள். தவிர எனக்கு இப்படியான உறவுகள் பிடிப்பதில்லை. உங்களின் ஆசை நிறைவேறாத்தற்கு வருந்துகிறேன்“ என்றாள்.
    அந்த வெள்ளைக்காரர் அதன் பிறகு எதுவும் பேசாமல் தன் பணத்தையும் கார்டையும் வாங்கிக் கொண்டு நகர்ந்துவிட்டார். அவர் முகத்தில் எந்த விதமான ஏமாற்றமும் தெரியவில்லை.
    இந்தப் பெண் முகத்திலும் எந்தக் கோபமோ கவலையோ தெரியவில்லை. அவள் தன்பாட்டுக்குத் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.
    எப்படி அந்தப் பெண்ணால் இவ்வளவு சாதாரணமாக இதை ஏற்றுக்கொள்ள முடிந்தது...? ஆனால் என்னால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. “அவள் அவனைத் திட்டியிருக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் அடுத்தப் பெண்களிடம்  இப்படியெல்லாம் பேச பயப்படுவான்.“ என்று என் ஆதங்கத்தை என் கணவரிடம் கொட்டினேன்.
    அவர் சொன்னார்.... “இல்லை அருணா.... இது தான் ஆரோக்கியமான முறை. அங்கே அந்தப் பெண் அவனைத் திட்டிக் கூப்பாடு போட்டிருந்தால் நாலு பேருக்குத் தெரியும். அவனுக்கும் அது அவமானமாகப் போய்விடும். அதனால் அவனும் கோபப்படுவான். இவளைப் பழிவாங்க நினைப்பான். தேவையில்லாமல் ஒரு வில்லன் உருவாகி விடுவான். எதற்கு இதெல்லாம். அவன் விருப்பத்தைச் சொன்னான். அவள் முடிவை அமைதியாகச் சொன்னாள். கதை முடிந்தது.“ என்றார் இவரும் சர்வ சாதாரணமாக.
    இந்த பதில் சரிதானா என்ற கேள்வி என் மனத்தில் இன்றும் இருக்கிறது.


நட்புடன்
அருணா செல்வம்.

புதன், 26 டிசம்பர், 2012

அன்னை கிடைப்பாளா?





ஆசை கொண்டு  அணைத்திடுவாள்!
     அன்பை என்றும் பொழிந்திடுவாள்!
பூசை செய்யும் தெய்வமவள்!
     பொன்னைப் போன்று உயர்ந்தவளே!
ஓசை கொண்ட இராகமவள்!
     ஒளிரும் வண்ண ஓவியமே!
காசைக் கொட்டிக் கொடுத்தாலும்
     கடையில் அன்னை கிடைப்பாளா?

அருணா செல்வம்.