ஞாயிறு, 29 டிசம்பர், 2013

தாடி வைத்தவன் அறிவாளியா? (நகைச்சுவைகள்)




   ஒரு சமயம் ஸ்பெயின் நாட்டு அரசர், இளைஞன் ஒருவனை டென்மார்க் நாட்டுக்குத் தூதுவராக அனுப்பினார்.
   டென்மார்க் மன்னர் அந்த இளைஞனைப் பார்த்து, “ஸ்பெயின் நாட்டில் மனிதர்களே இல்லை போலிருக்கிறது. அதனால்தான் ஸ்பெயின் மன்னர் தாடி முளைக்காத ஒரு சிறுவனை எனது நாட்டுக்குத் தூதுவராக அனுப்பி இருக்கிறார்“ என்று கிண்டலாகக் கூறினார்.
   அதைக் கேட்ட அந்த இளைஞன் டென்மார்க் மன்னருக்குச் சரியான பாடம் கற்பிக்க எண்ணினான்.
   உடனே அவன், “அரசே... அறிவு என்பது தாடியில் தான் இருக்கிறது என்ற தங்களின் கருத்து எமது அரசருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஓர் வெள்ளாட்டை இங்கு தூதுவராக அனுப்பியிருப்பார்“ என்றான்.
   அதைக் கேட்டதும் டென்மார்க் மன்னருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.
***************************************************************************

 
நாய்க்குப் பழமொழி தெரியாது! (நகைச்சுவை)

   இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலம். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்த பாஷ்யம் ஐயங்கார், ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார்.
   ஒரு நாள்...
   சமஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பதற்காக பாஷ்யம் ஐயங்கார், அந்த வெள்ளை அதிகாரியின் வீட்டிற்குள் நுழைநதார்.
   அப்போது... அந்த அதிகாரி வளர்த்த பிரம்மாண்ட நாய் குரைத்துக் கொண்டே அவரை நோக்கிப்பாய்ந்தது.
   அதைக் கண்டு பயந்து போன பாஷ்யம் ஐயங்கார், வாசலை நோக்கி ஓடினார்.
   அதைப்பார்த்த அந்த வெள்ளை அதிகாரி சிரித்தபடியே ஓடிச் சென்று நாயை அடக்கினார்.
   “என்ன ஐயங்கார்... நாய்க்குப் போய் இவ்வளவு பயந்து விட்டீர்? குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா?“ என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.
   உடனே ஐயங்கார், “அந்தப் பழமொழி உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் அந்த நாயிக்குத் தெரியாதே“ என்றார் மூச்சிறைக்க.
   வெள்ளைக்கார அதிகாரி, “உண்மைதான்“ என்றாராம் யோசித்தபடி.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஆணின் காதல் தவிப்பு!



கொ
ல்லை புறத்து மரங்களிலே
     கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
     முத்துப் பல்லை ஒத்திருக்க  
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
     காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
     சொக்கிப் போனேன் இவைகண்டு!!

காற்றில் வந்த நறுமணத்தில
     காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
     சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
     இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
     சின்னக் கிளியே செங்கனியே!

வீட்டில் பாயில் படுத்தாலும்
     விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
     காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்?
     கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!  
வாட்டி வதைக்கும் வடிவழகே
     வாடி என்தன் பக்கத்தில்!

சொட்டும் தேனை இதழினிலே
     சொக்க எனக்குத் தந்தவளே!
கட்டும் குழலைப் பாயாக்கிக்
     காதல் களிப்பைத் தந்தவளே!
திட்டும் போதும் பல்காட்டித்
     திகட்டா இன்பம் தந்தவளே!
தொட்டுப் பேச அழைக்கின்றேன்
     தொடுத்த சரமே அருகேவா!!

வட்ட நிலவு வானத்திலே
     வந்த உடனே உன்நினைப்பே!
சிட்டு போலப் பறப்பவளே
     சிந்தை முழுதும் உன்நினைப்பே!
சட்டம் போட்டுச் சண்டையிட்டுத்
     தனியே தாயின் வீட்டிற்குத்
திட்டம் போட்டுப் போனவளே
     திட்ட மாட்டேன் வந்துவிடு!

முன்னே தெரியும் முகமெல்லாம்
     முத்துப் பெண்ணே உன்முகமாய்
என்னே அழகாயத் தெரியுதடி!
     ஏங்கிக் கிடக்கும் என்னைப்பார்!
கண்ணே! மணியே! கற்கண்டே!
     கட்டி அணைக்க வந்துவிடு!
சொன்னேன் கவியில் இனிப்பாக
     சுவைக்க இதழைத் தந்துவிடு!!

(அறுசீர் விருத்தம்)

 அருணா செல்வம்.

புதன், 25 டிசம்பர், 2013

பிடித்த புத்தகம் எது? (நகைச்சுவை)



எது உயர்ந்த புத்தகம்?

 
   ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
 
 ஒரு சமயம் இந்திய தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் புகழ்பெற்ற வங்காள நாவலாசிரியர் சரத்சந்திரரும் சுவையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
   சிறிது நேரத்தில் அவர்களின் பேச்சு முடிந்தது.
   சரத் சந்திரர் வெளியே வந்தார்.
   அப்போது...
   வெளியே காத்திருந்த ஓர் புத்தக வெளியீட்டாளர் அவரை நெருங்கி, “ஐயா... என்ன நீங்கள் தாகூரோடு சமமாக உட்கார்ந்து பேசுகிறீர்கள்? இலக்கியத்தில் தாங்கள் தாகூரை விட உயர்ந்தவர். தங்களின் நூல்கள் இருபதினாயிரம் வரை விற்பனையாகின்றன. தாகூரின் நூல்கள் ஆயிரம் கூட விற்பனையாவதில்லை“ என்றார்.
   அதற்கு சரத் சந்தர், “என் நூல்களை உம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தாம் படிக்கின்றனர். ஆனால் தாகூரின் நூல்களை என் போன்றவர்களே படிக்கின்றனர்“ என்றார்.
   தாகூரை மட்டம் தட்டிப் பேசிய அந்தப் புத்தக வெளியீட்டாளரின் முகம் தொங்கி போயிற்று.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.
***********************************************************************************


பிடித்த புத்தகம் எது? (நகைச்சுவை)

   வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து நாடகத் துறையில் புகழ் பெற்றவர், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. (George Bernardshaw 1856 - 1950)
   அவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
   ஒரு சமயம் பத்திரிக்கை நிருபர் ஒருவர், “மிஸ்டர் ஷா... கடைசியாக ஒரு கேள்வி. தாங்கள் எத்தனையோ புத்தகங்களை வாசித்து இருப்பீர்கள். ஏராளமாக எழுதியும் இருக்கிறீர்கள். இந்த புத்தக அனுபவத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்தமான புத்தகம் எது என்று கூற முடியுமா?“ என்று கேட்டார்.
   “ஓ... எனக்குப் பிடித்த ஒரே புத்தகம் செக் புத்தகம் (Cheque Book) தான்“ என்றார் ஷா.
   நிருபர் வாயடைத்துப் போனாராம்.

படித்ததில் சிரித்தது.
அருணா செல்வம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

யாரெல்லாம் சோம்பேறிகள்? (நகைச்சுவை)



  
 
  ஒரு சமயம் சந்தை கூடுமிடத்தில், ஓர் மேடான இடத்தில் முல்லா நஸ்ருதீன் ஏறி நின்றார்.
   அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்தார்.
   அனைவருமே அவரவர் கடமையில் இருந்தார்கள்.
   திடீரென்று அவர், “அன்பார்ந்த மக்களே...“ என்று பேச்சை ஆரம்பித்தார்.
   மக்கள் அனைவரும் அவரைப் பார்த்தனர். சிலர் அவர் அருகில் வந்து அவர் பேச்சைக் கேட்க ஆவலாயினர்.
   மீண்டும் முல்லா, “மக்களே... நீங்கள் கஷ்டம் இல்லாமல் சிறந்த அறிவு பெற ஆசைப்படுகிறீர்களா...? பொய்யே இல்லாத முழு உண்மையை அறிய ஆசைப்படுகிறீர்களா...? முயற்சி சிறிதும் இன்றி முன்னேற ஆசைப்படுகிறீர்களா...?“ என்று சத்தமாகக் கேட்டார்.
   அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரே உற்சாகம்.
   “ஆமாம்... ஆமாம்... அவற்றிற்கு வழி கூறுங்கள்“ என்று உரத்த குரலில் கேட்டனர்.
   அதைக் கேட்ட முல்லா அவர்களை எரித்து விடுவது போல் பார்த்தார்.
   “வழியாவது மண்ணாங்கட்டியாவது. சோம்பேறியாக இருந்தால் எப்படி முன்னேற முடியும் என்று யாராவது யோசித்தீர்களா? உங்களில் யாரெல்லாம் சோம்பேறிகள் என்று தெரிந்து கொள்ளத்தான் அப்படி பேசினேன். இப்போது இங்கு நிற்கும் அனைவருமே சோம்பேறிகள் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன். போய் உழைத்து வாழுங்கள்“ என்றார் முல்லா நாஸ்ருதீன்.
   அங்கே கூடியிருந்த மக்கள் அனைவரும் முல்லாவைக் கோபத்துடன் பார்த்தபடி நகர்ந்தனர்.

படித்ததில் சிரித்தது.
அருணா செல்வம்.

சனி, 21 டிசம்பர், 2013

கண்ணே கண்ணுறங்கு!!



 

கண்ணே! மணியே! கற்கண்டே!
  கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
   பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
   முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
   பேசும் கிளியே கண்ணுறங்கு!

இன்றோ உனக்கு வேலையில்லை!
   இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
   திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
   அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
   இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!

காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
   காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
   விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
   மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
   நலமாய் இன்றே கண்ணுறங்கு!

அருணா செல்வம்
11.12.13