புதன், 30 ஜூலை, 2014

சாதிகள் உள்ளதடி பாப்பா....



    “சாதி, சாதி என்கிறார்களே... அது எதை வைத்துப் பிரித்திருக்கிறார்கள் மாமா...?“ என்று கேட்ட காமினியை யோசனையுடன் பார்த்தார் மாமா.
    “சாதி என்பது அவரவர் செய்யும் தொழிலை வைத்துப் பிரித்தார்கள் அம்மா“ என்றார் மாமா.
    “அப்படியா....? அப்போ நிறைய சாதி இருக்குமே“
    “ஆமாம்மா. இப்போ அப்படித்தான் ஆகிவிட்டது“
    “எதனால் இப்படி ஆனாது?“ கேள்வி வாயிலிருந்து உதித்தாலும் அவளின் கண்களில் அதை அறியும் ஆவல் இருந்ததைக் கவனித்தார் மாமா.
   “காமினி.... விளக்கமாகச் சொல்கிறேன் கேள். பழைய காலத்தில் ஒவ்வொருவர் செய்யும் தொழிலை வைத்து அதை ஆறு சாதியாகப் பிரித்தார்கள். ஆனால் அதைக்கூட காளமேகப் புலவர் தொழிலை வைத்துப் பார்க்காமல் அதனுள் கடவுளை வைத்துப் பாடி இருக்கிறார்“
   “அப்படியா....? சாதியைப் பற்றி காளமேகப் புலவர் பாடினாரா....? என்னவென்று பாடினார் சொல்லுங்கள் மாமா.....“ கெஞ்சளாகக் கேட்டாள் காமினி.
   “ம். சொல்கிறேன் கேளம்மா“ என்று காளமேகத்தைப் பாடினார் மாமா.
  
கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார்
செம்மான் சதுரரைத் திருவரசை – அம்மாகேள்
வாணியனும் பொன்னேரி வாழும்வெள் ளாழனுமே
சேணியனு மன்றே தெரிந்து.

அம்மா கேள் – அம்மையே கேட்பாயாக
வாணியனும்– வாணியைக் கொண்டோனான பிரம்மனும்
பொன்னேரிவாழும் வெள் ஆழனும்  - திருமகளாகிய அழகியைத் தன் மார்பிலே வீற்றிருக்கப் பெற்றோனாகிய பாற்கடலிலே பள்ளிகொள்கின்ற திருமாலும்
சேணியனும் – இந்திரனும்
அன்றே தெரிந்து – அந்நாளிலே (சாதியை அறிந்து கொண்டு) உண்மையை அறிந்து கொண்டு
செம்மான் சதுரரை – சிவந்த மாலையினைக் கொண்ட சதுரரான பெருமானை
திரு அரசை – நடராசப் பெருமானை
கம்மாளன் – கபாலத்தை ஏந்தியவன் என்றும்
அங்கிக் கண் நக்கன் எனவே துதித்தார் -   நெருப்புக் கண்ணாலே சிரித்துப் புரமெரித்தவன் என்றும் வாழ்த்தினார். என்றார்.

   “மாமா.... எனக்குப் புரியும் படி விளக்கமாகச் சொல்லுங்கள்“ என்றாள் காமினி. மாமா தொடர்ந்தார்....

அதாவது
தொழிலைக் குறித்து வந்த சாதிகளான வணியன் (வியாபாரம் செய்வோன்), வெள்ளாழன் (உழவன்), சேணியன் (நெய்வோன்), சதுரன் (அறிஞன்), கணக்கன் (சோதிடன்), வேதியன் (வேதம் கற்றவன்) என்ற ஆறு சதிகளும் மனிதரின் பெயரால் வராமல் கடவுள்களின் பெயரில் பாடி சரி செய்து இருக்கிறார் காளமேகம்.
    “அப்போ.... இந்த ஆறு சாதிகள் இல்லாமல் வந்திருக்கும் மற்ற சாதிகள் எல்லாம் எப்படி வந்தது...?“ ஆச்சர்யமாகக் கேட்டாள் காமினி.
    “மற்ற சாதிகள் எல்லாம் ஒவ்வோர் சாதியிடம் இருந்து வந்த கிளைகள் தான் காமினி. ஆமாம்.... உனக்கு ஏன் இன்று சாதியைப் பற்றிய எண்ணம் வந்தது...?“
    “இன்று பள்ளியில் ஒரு பையன் நீ என்ன சாதி?என்று கேட்டான். நான் பெண்சாதிஎன்றேன். அதற்கு அவன், “ஆமா.... நான் ஆண் சாதின்னா நீ எனக்குப் பெண்ஜாதி தான் என்றான் கொஞ்சம் நக்கலாக. அது தான் உங்களிடம் விளக்கம் கேட்டேன் மாமா“ என்றாள்.
    “நல்ல குறும்புக்கார பையன் தான். அவனிடம் இப்படி சொல்லு. உலகில் ஆண்,பெண் என்று இரண்டு சாதிகள் தான். ஆனால் ஆண்தான் பலசாதிகளில் பிரிந்து கிடக்கிறான். பெண்களுக்குப் பெண்கள் என்ற ஒரே சாதி தான் என்று சொல்லம்மா.....“ என்று சொல்லியபடிச் சிரித்துக் கொண்டே சென்றார்.

அருணா செல்வம்

30.07.2014

திங்கள், 28 ஜூலை, 2014

குழந்தை மொழி!!



கள்ளம் இல்லாப் புன்சிரிப்பில் - என்
உள்ளம் கொள்ளை போகிறதே!

தெள்ளு தமிழின் சொல்போல – மழலைச்
சொல்ல நெஞ்சம் இனிக்கிறதே!!

கானம் பாடும் பறவைமொழி
காதில் புகுந்தால் சங்கீதம்! – உண்மைக்
கருத்தைத் தேடிப் பார்த்துநின்றால்
கற்பனை தருமே நல்யூகம்!               (கள்ளம்)

வாணி கையில் தவழ்ந்திருக்கும்
வீணை மீட்ட மெல்லிசைகள்! – கவி
வல்லுநர் வழங்கும் வார்த்தைகளால்
வடிவம் பெறுமே நல்லிசைகள்!           (கள்ளம்)

பூவிதழ் மொழியும் ஓசையெல்லாம்
புரியா மொழிபோல் தானிருக்கும்! – அதைப்
பொன்னாய்ப் பெற்றவள் நெஞ்சத்தில்
புலமைப் பொருளாய் உயர்ந்திருக்கும்!!   (கள்ளம்)

அருணா செல்வம்
28.07.2014


(இணையத்திலிருந்து எடுத்தப் படம்)

வெள்ளி, 25 ஜூலை, 2014

தலை எழுத்தையும் மாற்றலாம்!!



    இளைஞன் ஒருவனுக்கு ஆன்மீக ஆர்வம் வந்ததால் அவன் ஒரு முனிவரிடம் சீடனாகிப் படிப்படியாக ஞானி ஆனான்.
    முனிவனின் மனைவி கருவுற்றிருந்தாள். அந்தச் சமயத்தில் முனிவர் தன் பொறுப்புகளைத் தன் சீடரிடம் ஒப்படைத்து விட்டு முனிவர் இமயம் சென்று விட்டார். (ஏன் என்றெல்லாம் கேட்காதீர்கள்....)))
   முனிவரின் மனைவி பிரசவ வலியால் துடித்த போது, அந்த அறைக்குள் ஒருவர் நுழைந்தது சீடனின் ஞானக் கண்ணுக்குத் தெரிந்து விட்டது. உடனே....
   “யார் அது? நில்லும்“ என்றார்.
   வந்தவர் தன்னை இவன் கண்டுகொண்டானே என்று விழித்து, சற்றுக் கழித்து “ஏன்?“ என்று கேட்டார்.
    “பெண் பிரசவிக்கும் இடம் அது. அங்கே நீர் போகக்கூடாது“ என்றார் சீடர்.
   “நான் பிரம்மன். பிறக்கும் பிள்ளைகளுக்குத் தலையெழுத்து எழுதப் போகிறேன். என்னைத் தடுக்காதே“ என்றார் வந்தவர்.
   சீடன்... “பிரம்மாவா? வணக்கம். சரி. குழந்தைக்கு என்ன தலையெழுத்து எழுதப்போகிறீர்கள்?“
   “அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. நேரமாகிறது. வழியை விடு“ என்றார் பிரம்மா.
   “வரும் போதாவது சொல்வீர்களா....?“ வழியை விடாமல் கேட்டான் சீடன்.
   “சரி. முதலில் என்னை உள்ளே விடு“ என்று சொல்ல அவன் வழிவிட உள்ளே சென்றார்.
   பிரசவம் நடந்தது. இரட்டைக் குழந்தை. ஆண் ஒன்று. பெண் ஒன்று. தலையெழுத்தை எழுதிவிட்டு பிரம்மா வெளியில் வந்தார்.
   வந்ததும், “என்ன எழுதீனீர்?“ என்று கேட்டான் சீடன்.
   “சொல்ல மாட்டேன்“
   “சொல்லாமல் செல்ல உம்மை விடமாட்டேன்“ என்றான் பிடிவாதமாக சீடன்.
   “அது மோசமான விதி. ஆண் குழந்தை மாடு மேய்த்துப் பிழைக்க வேண்டும். பெண் வேசியாகப் பிழைத்து வாழ வேண்டும்“ என்றார் பிரம்மா.
   “அப்படியா....?“ என்று கவலைப்பட்ட சீடன், “இவர்கள் இருவருக்கும் உள்ள செல்வ நிலை என்ன?“ என்று கேட்டான்.
   “அதிகம் இல்லை. ஆணுக்கு ஒரே ஒரு மாடுதான் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு ஒரே ஒரு ஆழாக்கு முத்து தான் விதிக்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு தான் புத்தியுடன் அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டும்“ என்றார் பிரம்மா.
   “அந்த ஒரு மாடும் ஆழாக்கு முத்தும் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்குமா?“ என்று கவலையுடன் கேட்டான் சீடன்.
  “நிச்சயம் கிடைக்கும்“ என்று சொன்ன பிரம்மா மறைந்து விட்டார்.

   சில நாட்கள் கழித்து வந்த முனிவரிடம் நடந்த உண்மையைச் சொல்லி விட்டு சீடன் தனியாக தவம் செய்ய போய்விட்டான்.
   இந்த உண்மையை அறிந்த முனிவரும் அவர் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள்.
   
   ஆண்டுகள் பல கழிந்த பிறகு சீடன் ஞானம் பெற்ற ரிஷியாக திரும்பி அவ்வூருக்கு வந்தான். அங்கிருந்த மாடு மேய்ப்பவனைக் கண்டதும் தன் ஞானத்தால் யார் இவன் என்பதைக் கண்டு கொண்டான்.
   ரிஷி அவனைப்பற்றி சொன்னதும் அவன் மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது. மற்றபடி எதுவும் இல்லை. அவனின் வறுமையைப் பார்த்த ரிஷி “இந்த மாட்டை விற்று வீட்டிற்கும் உன் மனைவி குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கு“ என்றார்.
   “ஐயோ என்னிடம் இருப்பது இந்த ஒரே ஒரு மாடு தான். அதனால் நாங்கள் கால் வயிறு கஞ்சியாவது குடிக்கிறோம். இதுவும் இல்லை என்றால்...“
   “நான் சொல்வதைச் செய்.“ என்றார் ரிஷி.
   அவன் மறுநாளே சென்று மாட்டை விற்றுவிட்டு வீட்டிற்கு வேண்டியதை வாங்கினான். அவன் மனைவிக்குச் சந்தோஷம். ஆனால் மாடு போச்சே என்று இரவெல்லாம் தூங்காமல் கவலைப்பட்டான் அவன்.
  காலை விடிந்ததும் பார்த்தால் அவன் முற்றத்தில் ஒரு மாடு நிற்கிறது.
   அதைக்கண்ட ரிஷி, “இதையும் விற்று விடு.“ என்றார். அதன்படி அவன் செய்ய மறுநாளும் ஒரு மாடு.... இப்படியாக அனைத்து மாடுகளையும் விற்று பொருள் சேர்த்து வளமாக வாழ்ந்தான்.
 
   ஒரு நாள் “உன் சகோதரி எங்கே?“ என்று கேட்டார் ரிஷி. “அவள் பக்கத்து ஊரில் விபச்சாரம் பண்ணுகிறாள்“ என்றான் கவலையாக.
   உடனே அவர் அங்கே சென்று நடந்ததைக் கூறி, “உன்னிடம் எவ்வளவு முத்து இருக்கிறது?“ என்று கேட்டார். அதற்கு அவள் “ஒரு ஆழாக்கு முத்து இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக விற்று தான் பிழைக்கிறேன்“ என்றாள் கவலையாக.
   “அந்த ஆழாக்கு முத்தையும் விற்று விடு. இனி ஆழாக்கு முத்து கொண்டு வராதவர் யாரும் இங்கே வரக்கூடாது என்று சொல்லிவிடு“ என்றார்.
   அவளும் அதன்படி செய்தாள். அன்றிரவு வந்தவன் ஆழாக்கு முத்துடன் வந்தான். மறுநாளும் அப்படியே என்று... அவள் ஒவ்வொரு நாளும் ஆழாக்கு முத்தை விற்று சந்தோஷமாக வாழ்ந்தாள்.

   ரிஷி அவர்களை விட்டு விலகி நிஷ்டையில் ஆழ்ந்தார். பிரம்மா அவன் முன் தோன்றி, “என்னை இந்த மாதிரி சிரமப்படுத்தி விட்டீரே!“ என்றார்.
   “ஏன்? என்ன செய்தேன்?“ என்று கேட்டார் ரிஷி.
   “தினசரி அவனுக்கு ஒரு மாடும், அவளுக்கு ஆழாக்கு முத்தும் கொடுக்க ஆளைத் தேடி சிரமப்படுகிறேனே“ என்றார் பிரம்மா.
   “இது உம் விதி. அவர்களுடைய விதியை அவ்வாறு ஆக்கியதற்கு தண்டனையாக உமக்கு விதித்த விதி இது“ என்றார் சிரித்தவாறு ரிஷி.

கதை சொல்லும் நீதி என்னவென்றால் “விதியையும் மதியால் வெல்லலாம்“ என்பதே.

நன்றி.
அருணா செல்வம்

(எப்போதோ கேட்ட கதை)

புதன், 23 ஜூலை, 2014

இம்சை தத்துவங்கள்!! (இது வெறும் மொக்கை)



1. டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...

2. பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?

3. என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் “சுட்டு“தான் சாப்பிடனும்.

4. என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும்.

5. நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.

6. ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.

7. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.

8. தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.

9. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.

10. நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?

சும்மா ஒரு மாறுதலுக்காக..... யாரும் கல்லை எடுக்காதீங்க.... ப்ளீஸ்....


அருணா செல்வம்.


செவ்வாய், 22 ஜூலை, 2014

காசா? கல்யாணமா? (முடிவு)



    “கௌரி மேடம் மீட்டிங்குல இருக்கிறாங்க. முடியிற நேரம் தான். நீங்கள் காத்திருப்பதென்றால் அந்த ஹாலில் காத்திருங்கள்“ என்று அந்த அலுவக ஊழியர் சொல்லிவிட்டுச் சென்று அரை மணிநேரம் கடந்த பிறகு தான் கௌரி ஒரு கும்பல் புடைசூழ ஓர் அறையைவிட்டு வெளியில் வந்தாள். வந்தவள் மற்றவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இவளைக் கடந்து சென்றாள்.
    மலர் அவளை வியப்புடன் பார்த்தாள். கௌரிக்குப் படிப்பு முடிச்சதும் அவள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தது என்றும் அதே அலுவலகத்தில் மேலும் மேலும் பதவி உயர்வுகள் கிடைத்திருக்கிறது என்றும் விக்ரம் சொல்லி கேட்டிருக்கிறாள். அப்பொழுது அதையெல்லாம் மலர் பெரியதாக எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால் இங்கே பார்க்கும் பொழுது மலருக்குப் பிரமாண்டமாகத் தெரிந்தது.
   அவள் பலபேருக்கு உத்தரவு இடுபவள் போல் தெரிகிறாள். இவள் சொல்வதைத் தலையாட்டிக்கொண்டே குறிப்பு (நோட்ஸ்) எடுத்தபடி மற்றவர்கள் அவள் பின் செல்கிறார்கள்.
   இதையெல்லாம் பார்த்த போது மலர், இவளே பலபேருக்குப் புத்தி சொல்கிற அளவிற்கு இருக்கிறாள். இவகிட்ட நாம என்னவென்று பேசுவது.... பேசாமல் போய்விடலாமா.... என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே.... “ஐ... மலரக்கா. ஐய்யோ. உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சி? எப்படி இருக்கிறீங்க....?“ என்று குழந்தைத் தனமாக கேட்டபடி அவள் எதிரில்வந்து அவளைக் கட்டி முத்தமிட்டாள் கௌரி. 
    மலர் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாள்.
   “நல்லா இருக்கேன் கௌரி. ஒரு வேலையா இங்க வந்தேன். வந்த வேலை முடிஞ்சிடுச்சி. நீ இங்க தானே வேலை செய்யிற? அப்படியே உன்கூடவே வீட்டுக்குப் போயிடலாம்ன்னு தான் உன் ஆபிசுக்கு வந்தேன்“ என்றாள் மலர்.
   கௌரி இதை நம்பாதது அவளின் முகத்தில் தெரிந்தாலும் அதை மறைத்து “அப்படியா? சரி வாங்க போகலாம்“ என்று சொல்லியபடி இறங்கி நடந்தாள். மலரும் அவளைப் பின்தொடர்ந்தாள்.

   காரை ஒரு திறந்தவெளி ரெஸ்டெராண்டில் நிறுத்திவிட்டு ஓர் அமைதியான சூழல் உள்ள இடத்தில் மலரை அமர வைத்துவிட்டு எதிரில் அமர்ந்ததும், “இப்போ சொல்லுங்க அக்கா. என்ன விசயமா என்னைப் பார்க்க இவ்வளவு தொலைவு வந்திருக்கிறீங்க?“ மெல்லிய புன்முறுவலுடன் கௌரி கேட்டாள்.
   மலர் அவளின் புத்திசாலி தனத்தை உணர்ந்து அதற்கு மேல் இவளிடம் பொய் சொல்வது தவறு என்ற எண்ணத்துடன் நேரிடையாக விசயத்திற்கு வந்தாள்.
   “நான் உண்மையைச் சொல்லிடறேன். உன்னோட கல்யாணத்தைப் பற்றி பேச தான் வந்தேன்.“ என்றாள்.
   “விகரம் அண்ணா எங்கிட்ட பேச சொல்லி உங்கள அனுப்பினாரா....?“ கௌரி கேட்டாள்.
   “விக்ரம் அண்ணா இருக்கட்டும். நானே ரொம்ப நாளா கேட்கனும்ன்னு இருந்தேன். நீ ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுற?“
   இவளின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமலிக்க... “உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்கா? இருந்தா சொல்லு. நானே பக்கவமா விக்ரம் கிட்ட சொல்லுறேன்“ என்றாள் மெதுவாக.
   “அப்படியெல்லாம் எதுவும் இல்லைக்கா.“
   “நெஜமா சொல்லு. நீ யாரையும் காதலிக்கல.....?“
   கௌரி வெறுப்பாய் ஒரு புன்னகையை வெளியிட்டாள். “காதலிக்கிற வயசு வந்த போது, மனசைப் படிக்கனும் என்ற லட்சிய சங்கிலியால கட்டி போட்டிக்கினு இருந்தேன். அது ரொம்ப இறுக்கிடுச்சின்னு நினைக்கிறேன். அதனால இப்போ மனசு மறுத்துப் பேச்சின்னு நினைக்கிறேனுக்கா.“ என்றாள் கௌரி.
   சற்று யோசித்த மலர், “வாழ்க்கையில லட்சியம் எல்லாம் இருக்க வேண்டியது தான். அதுக்காக மனசை கட்டுப்படுத்தி வாழுறதும் நல்லது தான். ஆனால் இப்போ உன் லட்சியம் எல்லாம் நிறைவேறிடுச்சே. இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் தானே....“ கேட்டாள்.
   “இல்லக்கா. எனக்கு இப்போ அந்த ஆசையெல்லாம் வரலை.“
   “அப்போ இப்படியே இருந்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா...?“
   “இன்னும் அந்த முடிவுக்கெல்லாம் வரலை. பார்ப்போம்“ பொதுப்படையாகச் சொன்னாள் கௌரி.
   “இனிமேல என்ன பாக்குறது? எனக்கெல்லாம் வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிற வயசு வர்றதுக்கு முன்னாடியே பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணிட்டாங்க. உன் வயசுல என்னோட குழந்தைங்க ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிட்டது தெரியுமா?“
   “தெரியும்க்கா. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அந்த பதினெட்டு வயசுல எதுவுமே தெரியாத பெண்ணை ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நல்லது. எதைப்பற்றியுமே யோசிக்காத வயது அது. இது தான் வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை தொடங்கிடலாம்“ கௌரி சாதாரணமாக சொன்னாள்.
   “என்ன சொல்ல வர்ற நீ? புரியலை. எங்களை மாதிரி நீங்களும் எதுவும் தெரியாமல் வாழ்க்கையைத் தொடங்கிடக் கூடாதுன்னு தான் பெண்களைப் படிக்க வைக்கறாங்க. அவ காலுல அவ நிக்கனும்ன்னு நெனச்சி தான் வேலைக்கி அனுப்புறாங்க. இப்போ படிச்சதால உனக்கு நல்ல தெளிவு வந்திருக்கும். வாழ்க்கை என்றால் என்னன்னு புரிஞ்சிருக்கும். இவனைத்தான் நீ கட்டிக்கனும்ன்னு யாரும் உன்னை கட்டாயப் படுத்த முடியாது. உனக்கு பிடிச்சி நீயே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் பண்ணிக்கிற பக்கவம் வந்திருக்கு இல்லையா?“ சற்று கோபமாகவே கேட்டாள் மலர்.
    கௌரி ஒரு பெருமூச்சு விட்டாள். “பக்குவம். அது வந்ததால தான் நமக்குச் சரியானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாற வைக்கிறது. எல்லாமே நமக்கு மேட்சாகனும்ன்னு நினைக்க வைக்கிறது. படிச்சிட்டு வேலைக்குப் போய் வெளியுலகத்தைப் பார்க்கிறதால யோக்கியன் யார் என்று மனசு அலசிப்பார்க்க நினைக்கிறது.“ என்றாள் வெறுப்பாய்.
   மலர் யோசித்தாள். கௌரி சர்வர் கொண்டு வந்து வைத்தக் காபியைக் குடித்து முடித்தாள். மலர் காபியைக் கலக்கிக் கொண்டே பேசாமல் இருந்தாள்.
   “அக்கா.... உண்மையான காதல் என்று வர்ற வயசுல என்னையும் சிலபேர் காதலிப்பதாக சொன்னார்கள். காதலில் விழுந்தால் நாம் படிக்கனும், சம்பாதிக்கனும் என்ற லட்சியம் எல்லாம் போயிடும் என்ற பயத்தாலே அதெல்லாம் கூடாது என்ற மனக்கட்டுபாடோட இருந்தேன். இப்போ அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி பிள்ளைகளோட இருக்கிறார்கள். என்னை உயிரக்குயிராய் காதலிப்பதாக சொன்னவன் கூட இன்னைக்கு தன் குழந்தையை ஸ்கூலுல சேர்க்க லைனுல நிக்கிறான். என்னைவிட நன்றாக படித்தவர்கள் கூட காதல், கல்யாணம் என்ற ஒரு வட்டத்துக்குள் விழுந்து அதில் கஷ்டப்படுவதையும் சுகமாகத் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பது வேறு விசயம். ஆனால் எனக்கு அந்த வட்டத்துக்குள் விழ ஆசை இல்லை மலரக்கா“ என்றாள் கௌரி.
   மலர், இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
    கௌரியே தொடர்ந்தாள். “இவ்வளவு காலத்துல ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்க்கா. வாழ்க்கையில பணம் என்ற ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமா வாழலாம்“ என்றாள் கௌரி.
   நல்ல பாயிண்ட் கிடைத்தது என்ற நினைப்பில் மலர் நிமிர்ந்து உட்கார்ந்து “அதுக்காக காசையே கட்டிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா? உடம்பு என்று ஒன்று இருக்கிறது. அதில் உணர்வு என்ற ஒன்று இருக்கிறதே.... அதை நீ யோசிக்கிறதில்லையா...?“ கேட்டாள்.
   “வெறும் உடல் சுகத்திற்காக மனம் ஒட்டாமல் வாழனும்மின்னு எனக்கு ஆசையில்லையக்கா.“ என்றாள் சட்டென்று கௌரி.
   “சரி கௌரி. இந்த வயதைவிடு. பிற்காலத்தில் உனக்கு என்று ஒருவர் வேண்டாமா....? இப்படியே வாழ்ந்தால் கடைசியில் தனிமரமாகத்தான் இருக்கனும்“ கொஞ்சம் கோபமாகச் சொன்னாள் மலர்.
   கௌரி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சொன்னாள். “கல்யாணம் பண்ணி பல பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எடுத்தவர்கள் கூட இன்னைக்கி முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறார்கள். இந்தப் பேச்சை இதோட விடுங்க அக்கா“ என்று சொல்லியபடி எழுந்து விட்டாள்.

------------------------------------------------------
    மலர் யோசித்தாள். இவள் சொல்வதும் உண்மை தான். அதற்காக இவளை இப்படியே விட்டுவிடவும் கூடாதே.
   என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்.....?

நட்புறவுகளே.... உங்கள் முன் இந்தக் கேள்வியை வைக்கிறேன்.

“என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்....?“

   இந்தக் கதையைச் சிறுகதையாக எடுத்துக்கொள்ளாமல் உண்மைக் கதையாக எடுத்துக் கொண்டு பதில் கூறுங்கள்.
      
நட்புடன்
அருணா செல்வம்.

22.07.2014

ஞாயிறு, 20 ஜூலை, 2014

காசா? கல்யாணமா?



   
  மலர் கொண்டு வந்து கொடுத்தக் காபியை ஒரு வாய் குடித்துவிட்டு மலரை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம். மலர் சினேகிதமாக புன்னகைத்தபடி அவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
   “மலர்.... உங்கிட்ட தனியாகப் பேச வேண்டும் என்று தான் மஞ்சுவைக் கூட கூட்டிட்டு வரவில்லை.“ என்று பீடிகையுடன் தொடங்கினான்.
    தன் கணவரின் நண்பன். எப்பொழுதும் மனைவியுடன் வரும் விக்ரம் இந்த முறை தனியாக வந்திருக்கிறானே... என்று யோசனையில் இருந்த மலர், இவன் இப்படி சொன்னதும், இவருக்கு நம்மிடம் பேச என்ன இருக்கிறது என்பது போல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
    “மலர்.... இந்த நவம்பர் வந்தால் என் தங்கை கௌரிக்கு முப்பது வயசு தொடங்குது. உனக்குத் தெரியுமில்ல....?“ அவன் கேட்டதும்..... கொஞ்சம் தெளிந்து, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு “ம் தெரியும்“ என்றாள்.
   “அவ கிட்ட நீயாவது பேசி பாரேன்“ என்றான் கவலையாக.
   “நான் என்னங்க பேசுறது. நீங்கள் தான் ஒரு முடிவுக்கு வரணும். கௌரி மேல உங்களுக்கு இல்லாத அக்கரையா எனக்கு வந்திட போகுது....?“
    “உண்மைதான் மலர். ஆனால் எங்க பேச்சை அவ கேட்கலையே.... நீ அவ கிட்ட கொஞ்சம் நெருக்கமா பேசுவே. அதோட பெண் என்றால் அவளும் மனம் விட்டு பேசுவா இல்லையா...?“
    “ஏன்... உங்க மனைவி மஞ்சு கௌரிகிட்ட நல்லா தானே பேசுவாங்க. பிறகென்ன?“
    “பேசுவாங்க தான். ஆனாலும் அண்ணி நாத்தனார் என்ற டிஸ்டன்ஸ் இருக்கத்தான் செய்யுது. அதனால நீ பேசு. அவளோட கல்யாணத்தைப் பத்தி அவ எந்த முடிவுக்கு வந்தாலும் நான் ஏத்துகிறேன்ன்னு சொல்லு.....“
    “எந்த முடிவா.... அப்படியென்றால்....?“ புரியாமல் கேட்டாள் மலர்.
    “மலர்... உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை. எனக்கு படிப்பு முடியறதுக்குள்ள காதல் கல்யாணம் என்று அவசர அவசரமாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதாகி விட்டது. கௌரிக்கு என்னை விட்டா யாரும் இல்லை. வாழ்க்கையில கொஞ்சம் வசதியா வாழனும்ன்னா பணம் வேணும். அதுக்கு நல்லா படிச்சி பெரிய வேலைக்குப் போகனும். அதுக்கு முன்னால காதல் கீதல் என்று வந்துவிட்டால் என்னை மாதிரித்தான் கஷ்டப்படனும் என்று அவளிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
   படிப்பை முடிச்சிட்டா. நல்ல வேலை கெடைச்சுது. நானும் அவ வேலைக்குப் போனதும் வரன் தேட ஆரம்பிச்சேன். எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். ரெண்டு மூனு வருஷம் சம்பாதிக்கிறேன். அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா. நானும் சரின்னு விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறா. அஞ்சு வருஷமா மாசாமாசம் சம்பளத்துல பாதிய கொடுத்திடுறா. நானும் ரெண்டு வருஷம் கழிஞ்சதும் வரன் தேட ஆரம்பிச்சேன். வரன் தேடித் தேடி எந்த வரனைக் காட்டினாலும் வேண்டாம். என்னை இப்படியே விட்டுடுங்க என்கிறாள். கொஞ்சம் கோபமாகப் பேசினால்.... நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க. வீடு தனியாக எடுத்துக்கொண்டு போய் விடுறேன்னு சொல்லுறா.... அவ சம்பளத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறதால தான் நான் அவளைக் கல்யாணம் செஞ்சி குடுக்க மாட்டேங்கிறேன்னு வெளிப்படையாவே சிலர் பேசுகிறாங்க மலர். எனக்கு இதுவே பெரிய கவலையா இருக்குது“ என்றான் கவலையுடன் விக்ரம்.
   மலர் கௌரியுடன் சினேகிதமாகப் பேசி இருந்தாலும் இதுவரையில் அவளின் திருமணத்தைக் குறித்துப் பேசியதில்லை. ஆனால் அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஓர் ஓரத்தில் இருந்து அரித்துக் கொண்டே தான் இருந்தது. இப்பொழுது அவளின் அண்ணனே இது குறித்துப் பேச வந்த்தும் வெளிப்படையாகப் பேச அரம்பித்தாள்.
   “மத்தவங்க பேசுறதையெல்லாம் விடுங்க. ஆமா.... ஏன் கௌரி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றா...? ஏதாவது காதல் கீதல் இருக்குமோ.....?“ சந்தேகத்துடன் கேட்டாள் மலர்.
   “எனக்கு தெரிஞ்சி அதெல்லாம் இல்லை. ஆனால் இப்போ இருக்கிற நிலையில அவ யாரை கை காட்டுறாளோ அவனை கட்டி வைக்கத் தயாரா இருக்கேன்.“ என்று சொல்லி நிறுத்தியவன், “ப்ச்சி.... ஒரு காலத்துல படிப்பு மட்டும் தான் முக்கியம். காதல் கீதல் என்று வந்திடாதே என்றேன். அவ வேலைக்கு போக ஆரம்பிச்சதும்... ஏதாவது நம்ம ஊரு காரன், நம்ம ஜனமா இருந்தா கட்டி வக்கிறேன்னு ஜடைமாடையா சொன்னேன். ஆனா இப்போ.... எந்த சாதி மதமா இருந்தாலும் பரவாயில்ல, எந்த நாடு மொழி மாறி இருந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு எறங்கி வந்திட்டேன்.“ என்றான் கவலையாக.
   விக்ரமைப் பார்க்கும் பொழுது மலருக்குச் சற்று கவலையாகத் தான் இருந்தது.
   என்ன செய்வது? பிடிவாதத்தைத் தளர்த்தும் போது தானே தெரிகிறது.... நாம் பிடித்திருந்தது பிடிக்காத ஒன்றை என்று.
   “சரி விக்ரம். நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன்“ என்று மலர் சொன்னதும் பெருமூச்சுடன் கிளம்பினான்.

(தொடரும்)


(இன்று நேரமில்லை. நாளைக்குப் பேசி (கதையை) முடித்து விடுகிறேன்.....)

வெள்ளி, 18 ஜூலை, 2014

இதயத்தைப் பிச்சை இடு!



உறக்கம் கலைய
உணர்வு வந்தது.
உடம்பு உள்ளது
உயிரும் உள்ளது.

மூச்சி என்பது
எங்கே தொலைந்தது?
இதயம் என்பதும்
எங்கே போனது?

ஓ... அதை நீ
என்றோ ஒருநாள்
எடுத்துச் சென்றாயே...
இன்றும் என்னிடம்
தர வில்லையே...!!

தெரிந்தே அதனைக்
கொண்டு சென்றாயோ...
உனக்கே தெரியாமல்
உடன்கொண்டு சென்றாயோ...?

பத்திரம் போல்
பத்திரமாக வைத்தாயா?
பார்சல் பேப்பெரென்று
தூக்கி எறிந்தாயா?

பார்க்க நினைத்துப்
பார்த்து மகிழ்வாயா?
பார்க்காதிருந்து
தவிக்க வைப்பாயா?

நினைத்த போது
நெகிழ்ந்து மகிழ்வாயா?
நினைக்காதிருந்து
அதனை மறந்தாயா?

எனக்குத் தெரியாமல்
என் இதயத்தைத்
திருடி விட்டு
என்னையே முடம்
என்பது சரியா?

இதயம் இழந்த
முடம் தான் நான்.
என் இதயத்தை
உன்னிடத்தில்
பிச்சைக் கேட்கிறேன்.

கொடுத்தால் தான்
உயிர் வாழ்வேன்.
கொடுத்து விடு
உன் இதயத்தை!!



அருணா செல்வம்.

வியாழன், 17 ஜூலை, 2014

வாட்டுதே உன் நினைப்பு!!


 கொல்லைப் புறத்து மரங்களிலே
      கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க,
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
      முத்துப் பல்லை ஒத்திருக்க,
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
      காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
      சொக்கிப் போனேன் இவைகண்டு!!

காற்றில் வந்த நறுமணத்தில்
      காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
      சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
      இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
      சின்னக் கிளியே செங்கனியே!!

வீட்டில் பாயில் படுத்தாலும்
      விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
      காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்
      கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!
வாட்டி வதைக்கும் வடிவழகே
      வாடி எந்தன் பக்கத்தில்!!

அருணா செல்வம்

செவ்வாய், 15 ஜூலை, 2014

சொல்கிறவர் சொன்னால்.... (நிமிடக்கதை)




      “ஏங்க... கொஞ்சம் தலையையாவது வாரிக்கொண்டு வாங்க.“
    “உன் சொந்தக்காரங்க வீட்டு நலங்குக்குத் தானே போறோம். எல்லாம் இது போதும் வா“
     “அதுக்கில்லைங்க... என் தோழி சாந்தியும் வருவாள்.. நிச்சயம் அவ உங்களைப் பார்த்தாள்ன்னா திரும்பவும் நாளைக்கு இதற்கென்றே வீட்டுக்கு வந்து உன் புருஸன் நல்லா டிரஸ்தான் பண்ண மாட்டுறார். தலையையாவது நல்லா சீவிக்கொண்டு வரச் சொல்லக்கூடாதா...?“ என்று கேவலமாக கேட்பாள்... அதுக்குத்தான்..“
     “தோபாரு ராதா... உன் ஃபிரெண்டுக்காக எல்லாம் என்னை நான் மாத்திக்க முடியாது. என்ன பண்ணினாலும் இருக்கிறது தான் இருக்கும். வா. போகலாம்.“ அவன் அவசரப் படுத்தினான்.
      “அதுக்கில்லைய்க... நான் நல்லா டிரஸ்பண்ணிக்கினு வர்றேன். நீங்களும் கொஞ்சம் அழகா வந்தா...“ அவள் முடிக்கவில்லை. “ஏன் நான் இப்படி வந்தா உனக்கு புடிக்கலையா...? என் கூட வர்றதுக்குக் கௌரவ கொறைச்சலா இருக்குதா...? அப்படின்னா என் கூட நீ வரவேணாம். நானே தனியா போயிட்டு வர்றேன். இல்லைன்னா நீ தனியா போயிக்கோ.“ முகத்தில் அடிப்பது போல் செல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
     
      தன் தோழியுடன் செர்ந்து படித்துக்கொண்டிருந்த நிவேதாவிற்குத், தோழியின் அக்கா ராதாவும் அவள் கணவரும் பேசிகொண்டது காதில் விழுந்தது. யோசனையுடன் எழுந்து கூடத்திற்கு வந்து நின்று கொண்டாள்.

     அவர்கள் இருவரும் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தார்கள். உடனே நிவேதா அவன் எதிரில் வந்து நின்று... “ரெண்டு பேரும் பங்ஷனுக்குப் போறீங்களா...? மாமா நீங்க படுசூப்பர். என் காலேஜ் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் நீங்க தலையைக் கொஞ்சம் லைட்டா சீவிவிட்டு... சட்டையை அழகா இன் பண்ணினால் நடிகர் சசிகுமார் மாதிரி இருப்பீங்கன்னு சொன்னாங்க. நான் நம்பலை. ஆனால் இப்போ தெரியுது. மாமா... உங்களுக்கு இருக்கிற அழகிற்கு நீங்க கொஞ்சம் கேர் எடுத்து டிரஸ் பண்ணுனீங்கன்னா... அந்த நடிகரை விட ரொம்ப அழகா இருப்பீங்க.....“ என்றாள் ஆச்சர்யத்தைக் கண்களில் வரவழித்துக் கொண்டு.
    அவன் மனமகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு மனைவியிடம் திரும்பி “கொஞ்சம் இரும்மா... தோ வர்றேன்“ என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தவன் அரைமணி நேரம் கழித்தே வந்தான்...
    அவனைப் பார்த்து விட்டு கண்களால் நன்றியுடன் நிவேதாவைப் பார்த்தாள் ராதா.

அருணா செல்வம்.
(மறுபதிப்பு)

   

ஞாயிறு, 13 ஜூலை, 2014

இது தான் காதலோ!!


பெண்ணைப் புரியாப் புதிரென்று
    பெரியோர் சொல்லைப் படித்திருந்தும்
மண்ணில் இருக்கும் தேவதையாய்
    மங்கை உன்னைக் கண்டவுடன்
உண்மை கருத்தை உடன்மறந்தேன்!
    உயிரில் உன்னைக் கலந்துவிட்டேன்!
கண்ணில் மறைந்து நீயிருந்தும்
    கருத்தாய்க் கவியில் பார்த்திடுவேன்!

கண்ணன் நிறத்தில் மையூற்றி
    காதல் கவியாய் வடித்திடுவேன்!
வண்ணம் அற்ற காகிதத்தில்
    வார்த்தை கோர்த்துத் துடித்திடுவேன்!
எண்ணம் எழுந்து பறந்திடவே
    எழுதில் சிறகை விரித்திடுவேன்!
விண்ணில் கலக்கும் நாள்வரையில்
    விரும்பி மனத்துள் சுமந்திடுவேன்!

என்னில் உன்னை வைத்திருந்தே
    எழுதும் ஒவ்வோர் வார்த்தைகளும்
பொன்னில் நனைத்த பூக்களைப்போல்
    பொலிர்ந்தே அழகாய்ச் சொலிக்கிறதே!
உன்னில் நானோ இல்லையென்ற
    உண்மை நன்றாய்த் தெரிந்திருந்தும்
மின்னும் வானில் விண்மீனாய்
    என்னுள் இருந்து மின்னுவதேன்?


அருணா செல்வம்
13.07.2014