நாடுவிட்டு நாடுவந்த
பின்பும் கூட
நம்மொழியின் மேல்பற்றே உள்ள தையா!
கூடுவிட்டுக் கூடுபாயும்
மாயம் போலக்
குடிகொண்ட நாட்டுமொழி வந்த தையா!
வீடுவிட்டு
வெளிசென்றால் விருப்ப மின்றி
வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா!
கோடுபோட்டு வாழ்ந்தாலும்
கொள்கை தன்னைக்
கூறுபோட்டு விற்கவேண்டி உள்ள தையா!
மேசைநிறைய
புத்தகங்கள் இருந்த போதும்
மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!
வீசைஎன்ன விலையென்று
கேட்டுக் காசை
வீசுவதால் உண்மையன்பு கிடைத்தி டாது!
ஓசையுடன்
பாட்டெழுதிப் படைத்திட் டாலும்
உள்ளிருக்கும் வாசகங்கள் புரிந்தி டாது!
காசைத்தே டும்உலகில்
வாழ்ந்த போதும்
கவிதைமொழி தமிழருக்குக் கசந்தி டாது!
தென்னவரின் தேமதுரத்
தமிழின் ஓசை
தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே
அன்னமிடும் அம்மாகைப்
பக்கு வத்தை
ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே
விண்ணமுதம்
என்பதெல்லாம் விண்ணில் இல்லை!
வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்
மண்ணுலகில்
விண்ணுலகம் வந்து சேர்ந்து
எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!
நம்மொழியின்
மேல்பற்று நன்றே கொண்டு
நாட்டமுடன் வந்துநாமும் பேசு கின்றோம்!
எம்மொழிக்கே இணையாக
மொழியும் உண்டோ?
இருந்திருந்தால் மனமங்குச் சென்று தங்கும்!
செம்மொழியாய்த்
தேமதுரத் தமிழின் ஓசை
செழிப்பாகக் கேட்டிடவே காத்து நிற்போம்!
எம்முறையும் எம்தமிழின்
இனிமை கேட்டால்
இன்பமிதே! வேறில்லை என்றே சொல்வோம்!
அருணா செல்வம்.