டிசம்பர் மாதத்துக் குளிர்.
நான்கடி தூரத்தில் ஆள் இருந்தால் கூட கலங்கலான உருவத்தைக் காட்டி பயமுறுத்தும்
அளவு மேக மூட்டம் இறங்கி பூமியை ஆக்கிரமித்து இருந்தது. இவ்வளவு நேரமாகப்
பெய்த பனிமழையால் ஊரே வெண்மையாகி இலை இல்லாத நிர்வாண மரங்களுக்குத் தற்காலிக உடை
அளித்திருந்தது.
நரேன் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்
மாடி அறையில் இருந்துக்கொண்டு மூடிய கண்ணாடி சன்னலின் வழியாக பூமழையாகப் பொழிந்து
கொண்டிருந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தான். நரேன் பிரான்சுக்கு வந்த இந்தப்
பத்தாண்டுகளில் இன்றுதான் முதன்முதலாக இயற்கையைக் கண்டு ரசிக்கிறான்.
இதே வேறு ஒரு நாளாக இருந்தால்....
“சே என்ன ஊர் இது? எப்பப்பார் மழை பனி குளிர்ன்னு.... ஊரா இது?“ என்று வாய்
விட்டுத் திட்டுவான்.
ஆனால் இன்று....?
அவனுக்கு இதைப் பார்க்கும் பொழுது
ஏதோ தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வு!
இருக்காதா...?
இன்று அவனுக்கு முதலிரவாயிற்றே....
மனத்தில் மகிழ்ச்சி நிறைந்தால்
எதுவும் அழகாகத் தான் தோன்றும்.
ஆனால்... இன்னும் தேவ கன்னி....
அதுதான் அவன் காலையில் தாலி கட்டிய மனைவி மிலானி தான் இன்னும் வரவில்லை.
முதலிரவு அறையில் தனித்திருப்பது
எவ்வளவு அவஸ்த்தை என்பதை அனுபவித்தவரால் கூட விவரித்துச் சொல்ல முடியாது.
எப்போது வருவாள்....? கைகடிகாரத்தைப்
பார்த்தான். மணி பத்து பத்து. இன்னும் ஏன் வரவில்லை? வருவாள். வரும் போது
வரட்டும். இனி அவள் எனக்குத்தான் சொந்தம். கிணற்று நீரைக் காட்டு வெள்ளமா
அடித்துக்கொண்டு போக முடியாது.
இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்ற
வைத்தான். அது தன்னைக் குடிப்பவரையும் சாம்பலாக்குவது போல அதுவும் கொஞ்ச நேரத்தில்
நெருப்புக்கு இறையாகி சாம்பலானது.
அதற்குள்ளேவா....? மற்றொரு சிகரட்டை
வாயில் வைத்து பற்ற வைக்கமல் செல்போனை எடுத்தான்.
அவள் வீட்டுக்குப் போன் செய்து ”ஏன் இவ்வளவு நேரம்....?” என்று கேட்கலாமா...?
வேண்டாம். முதலிரவு அதுவுமா
“இன்னுமா பெண் வரவில்லை” என்று கேட்டால்... மாப்பிள்ளைக்கு ரொம்பதான் அவசரம்” என்று கேலி பேசுவார்கள். வேண்டவே வேண்டாம்.
என்ன பண்ணலாம்.... எழுந்து அறையின்
குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அறையில் அழகுக்காக வைக்கப்பட்ட ரோமன் நாட்டு
கையில்லாத பெண் பளிங்குச் சிலை அவன் கண்ணில் பட்டது. அழகான வடிவம். அதைப் பார்த்ததும்
அவனுக்கு மிலானி ஞாபகம் உடனே வந்தது.
அவள் நினைவு வந்ததும் அவன்
உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. இந்தப் பொம்மையைப் போல தான் அவளும்! அழகோ அழகு.
ஆனால் கையிருந்தும் எதுவும் செய்ய முடியாத ஊனம். இல்லை. இல்லை. ஊனமாக்கப் பட்டவள்.
இப்படி அவளை ஊனமாக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது...
அந்த அழகு தேவதையின் உடல் இன்னும்
சிலமணி நேரத்தில்... இல்லை. இல்லை... அதற்குள் வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக....
இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அனுபவித்து அவளே கேட்கும் வரையில் காத்திருந்து...
அவளே லேசாக கெஞ்சியப் பிறகு தான் அவளை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும்.
அவ்வளவு சீக்கிரம் எதையும்
முடித்துவிட்டால் எந்த வித சுவாரசியமும் இருக்காது. அப்போது தான் அவளை அடைய நான்
போட் பிளேனுக்கான பலன் கிடைக்கும்.
இருக்காதா பின்னே....? அவளைத்
தன்னவளாக ஆக்கிக் கொள்ள எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது.
ஒரு வருடம் இருக்குமா....?
இருக்கும். அதற்கு மேலேயும் இருக்கும்.
நரேனுக்குக் கடந்த காலம் அவன்
மனத்திரையில் மறு ஒளிபதிப்பானது.
அந்த மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு
நரேன் தான் கடந்த ஐந்து வருடமாக மானேஜர். ஓட்டல் முதலாளி ஜெர்மனி நாட்டுக்காரர்
என்றாலும் இந்தியனான நரேனை அனைவருக்கும் பிடிக்கும். காரியத்தில் கண்ணாயிருப்பான்
என்பதால்.
அதனால் தனக்கு ஓர் உதவியாளர் தேவை
என்றதும் ”உன் விருப்பம் போல் செய்துக்கொள்” என்று முழுஉரிமை
அளித்திருந்தார். அதன்படி விளம்பர படுத்தியத்தில் பல பேருக்கு நடுவில் மிலானியும்
வந்திருந்தாள்.
அவளை
முதன்முறையாகப் பார்த்ததில் இருந்து நரேனுக்கு தன் நினைவு தன்னிடம் இல்லை என்றாகி
விட்டது.
கோதுமை
நிறம் என்று சொல்லலாமா? இல்லை அதைவிட சற்று வெளுப்பு. உயரம் அவனுக்குத் தகுந்த
அளவு தான் என்றாலும் அவள் போட்டிருந்த ஹை ஷீல்ஸ் மேலும் மூன்று அங்குலத்தைக்
கூட்டிக் காட்டியது.
முகம்.....
கை தேர்ந்த சிற்பியால் செதுக்கிய சிலை. உடல்....? உடம்பை இறுக்கமாகப்
பிடித்திருந்த ஜீன்சும் வெளிர் நீலநிற பனியனில் ”த்துர்ஸ் ம்முவா” (என்னைத் தொடு) என்று
அழுத்தமான நிறத்தில் எழுதிய வாக்கியம்... ”என்னைத் தொ...வா” என்று அழைப்பது போன்ற
உடல்கட்டு!
கழுத்து
வரையில் வெட்டிய செம்பழுப்பு நிற முடியை ஒரு பக்கமாகத் தூக்கி வாரி இருந்தது
மேலும் அழகைக் கூட்டியது.
அவள் குறுக்காக மாட்டியிருந்த ஷான்ட் பேக்
மார்பகங்களுக்கு நடுவில் புதைந்து பார்ப்பவர் விழியை அகலவிடாமல் தடுத்தது.
இப்படிப்பட்ட
அழகிதான் தனக்குத் தேவை. முதலில் வேலைக்கு. பிறகு தனக்காக மட்டும்.
அவனுடைய
கணிணி மூளை உடனே அவளுக்கு வேலை கொடுக்க கட்டளை இட்டது.
துவக்கத்தில் ஒரு சில வார்த்தைகளோடு கழிந்த நாட்கள் ஒரு வாரத்தில் சூடு
பிடித்தது. அவளாக இவனிடம் பேசவில்லை என்றாலும் இவனே அவளிடம் வலியபோய் பேசி அவளைத்
தெரிந்து கொண்டான்.
பல வருடங்களுக்கு
முன்னால் வட இந்தியாவிலிருந்து குடியேறிய இந்தியத் தம்பதியருக்குப் பிறந்த ஒரே
மகள் மிலானி. நிறைய செல்லம். நிறைந்த செல்வம். அப்பா அம்மாவிற்கு அரசு வேலை. கை
நிறைய சம்பளம்.
எவ்வளவு
பரம்பரை சொத்து இருந்தாலும் தானே சம்பாதிப்பது தான் பெருமை என்றெண்ணும் பிரான்ஸ்
நாட்டவரின் உள்ளம் அங்கேயே பிறந்து வளர்ந்த மிலானிக்கும் இருந்ததால் வேலைக்கு
வருகிறாள்.
இது போதும் அவனுக்கு. இங்கே பத்து வருடமாக
உழைத்து வயிற்றுப் பசிக்கும் உடல்பசிக்கும் பணம் கொடுத்து தீனி போட்டது போக
இப்போது மனப்பசிக்கும் உணவு தேவைப்பட்டது. அதற்கு இவள் தான் நல்ல விருந்து.
மனத்தில்
கணக்கு போட்டுப் பார்த்து அதை அவளுக்குத் தெரிவிக்க அவளை ஒரு நாள் இரவு ரெஸ்டெரான்டுக்கு
அழைத்தான். அவளும் வருவதாக ஒப்புக்கொண்டாள்.
வந்தாள்.
தனியாக இல்லை. தன் காதலன் டேவிட் என்ற வெள்ளைக்காரனுடன்.
நரேனின்
இதயம் அப்போதே சுக்கு நூறாக வெடித்துவிட்டது.
அந்த
நிகழ்வை மறக்க அவனுக்கு சில நாட்கள் பிடித்தது. அதன் பிறகு தெளிந்தான் என்பதை விட
அந்த டேவிட்டை அவளிடமிருந்து எப்படி பிரிப்பது என்று தெளிவான முடிவை
எடுத்திருந்தான் என்பதே உண்மை.
(தொடரும்)
(நட்புறவுகளே..... கதை மிகவும் நீண்டு விட்டதால்
முடிவை அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்.
அதுவரையில் நரேன் எப்படி அவர்களின் காதலைப்பிரித்து
மிலானியை மணந்தான் என்பதை...... யோசித்து வையுங்கள்)
நன்றியுடன்
அருணா செல்வம்.