திங்கள், 29 பிப்ரவரி, 2016

கோழிக்கறி குழம்பு!



தேவையானப் பொருட்கள்

வெட்டிய கோழிக்கறி - 1 கிலோ
பட்டை, கிராம்பு, இலை, பெருஞ்சீரகம் - கொஞ்சம்
உருளைக் கிழங்கு - கால் கிலோ.
வெங்காயம் பெரியது - இரண்டு
பச்சை மிளகாய் - மூன்று
தக்காளி  - மூன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
தனியா தூள் - 1  மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 1 மேசைக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணை - 4 மேசைக்கரண்டி

செய்முறை


ஓர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, பிரியாணி இலை, பெருஞ்சீரகம் போட்டு வெடித்ததும்,


வெட்டி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும்


வெட்டி வைத்த தக்காளிப்பழம்


இஞ்சி, பூண்டு விழுதுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின்பு,


கோழிக்கறியைச் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் வேகவிட வேண்டும். கறி இலேசாக தண்ணீர் விட ஆரம்பிக்கும் போது


தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதனுடன்


குருமாவிற்குத் தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து மூடி  வேகவிட வேண்டும்.


குழம்பு  நன்கு கொதித்துக் கறி பாதி அளவு வெந்ததும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு அல்லது முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்துக் கொதிக்க விடவேண்டும்.


கறி, உருளைக்கிழங்கு நன்கு வெந்து குழம்பு கட்டியானதும் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து, கொஞ்சம் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி விட வேண்டும்.


சுவையான கோழிக்கறி குழம்பு தயார்.

குழம்பு கொதிக்கும் போது தேங்காய்ப் பால் சேர்த்து, கொஞ்சம் கசக்கசா முந்திரிப்பயிர் சேர்த்து அரைத்து ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கினால் அதன் பெயர் ‘‘கோழிக்கறி குருமா‘‘

       குழம்பு, கொஞ்சம் காரம்சாரமாக இருக்கும். குருமாவில் தேங்காய்ப்பால் முந்திரி கசக்கசா சேர்ப்பதால் கட்டியாக மேலும் சுவையாக இருக்கும்.

நன்றியுடன்
அருணா செல்வம்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஆண்கள் அழகாக எளிய ஏழு வழிகள் !





1. ஆண்களுக்கு முழங்கை மூட்டுகள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச்சாறு, தயிர், தேன், கடலைமாவு ஆகிய நான்கையும் கலந்து குழைத்து, வாரம் இரண்டு முறை கைகள் முழுவதிலும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுகள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளிர்ச்சிக்கும் தோல் பொலிவுக்கும் நல்லது. வெயில் காலங்களில் கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்துக் கை, கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவியப் பிறகு வெளியே போனால் சூரியக் கதிர்களில் இருந்து கை கால்களைப் பாதுகாக்க முடியும்.

3. முகம் பொலிவு அடைய அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபில் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றைக் கலந்து முகத்துக்குப் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வெண்டும். அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்தக் கலவையைக் கை, கால்களிலும் போட்டுக் கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும், பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜீஸ், வெள்ளரி ஜீஸ், ஆரஞ்சு ஜீஸ், எலுமிச்சை ஜீஸ், ஸ்டாபெர்ரி ஜீஸ் அருந்தலாம்.

5. ரோஜா இதழ்களைச் சேகரித்து, அதை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும். உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

6. சூடான உடல் வாகு கொண்டவர்கள், தினமும் குளித்தவுடன் புதினா இலைகளைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறியதும் அந்த தண்ணீரை ஒரு பருத்தித் துணியில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். அது உடலில் உள்ள வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

7. முகத்தில் உள்ள கருப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.


பெண்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் இயற்கையிலேயே அழகு என்பதால்.

நட்புடன் 
அருணா செல்வம்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

காந்திக்குக் கணக்கு உண்டு!



    கடன் கொடுத்து அது திரும்பி வரவில்லை என்றால், ‘‘காந்தி கணக்குல எழுதிக்கோ‘‘ என்பார்கள். இதுபோல கொடுத்த பணம் திரும்ப வராது என்பது உறுதியாகத் தெரிந்ததும் அதை, ‘‘காந்தி கணக்குல எழுதிட வேண்டியது தான் என்பார்கள்.
    அதாவது மகாத்மா காந்தி பேங்க்கில் கணக்கு எதுவும் வைத்திருக்க வில்லை என்ற எண்ணத்தில் இப்படி சொல்வது உண்டு.
    ஆனால், ஈரோடு பேங்க் ஆஃப் இந்தியா, இது குறித்துத் தனது பாங்கில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒரு அறிவிப்பை அறிவித்தள்ளது.
    ‘‘1940- ஆம் ஆண்டில் பூனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் மகாத்மா காந்தி சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்போது பூனேயில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவில் 10,000 ரூபாய் பணம் போட்டு சேமிப்புக் கணக்கைத் தொடங்கினார். அடிக்கடி பணம் எடுத்ததால், இருப்பு குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் வெறும் 248 ரூபாய் மட்டுமே மீதியாக நின்றது. இப்போதும் அப்படியே உள்ளது. இன்றும் இந்த வங்கி, காந்தியின் கணக்கை அப்படியே வைத்திருக்கிறது‘‘
    இது தான் அந்த அறிவிப்பு !

    அப்படியானால் இதுதானே ‘‘காந்தி கணக்கு‘‘.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

இவளும் அம்மா தான்! (நிமிடக்கதை)



    கதவைத் தட்டியதும் உடனே திறந்த ரேவதியைப் பார்த்த குமரனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இத்தனை நாள் வேலை முடித்துவிட்டு அசதியாக வந்து பலமுறை கதவைத் தட்டிய பிறகே மெதுவாக வந்து கதவைத் திறக்கும் ரேவதி, இன்று ஒருமுறை கதவைத் தட்டியவுடன் ஓடிவந்து திறந்துவிட்டாளே....
   குமரன் கையிலிருந்த மாலையைப் பார்த்ததும் கற்றுக் கவலையாக இன்றோடு உங்களுக்கு வேலை முடிந்துவிட்டது இல்லையா.... இனிமேல் வீட்டில் என்ன செய்யப் போறீங்களோ... பாவம் தான் நீங்கள்...‘‘ என்று வார்த்தையிலும் கவலை தோய்த்துச் சொல்லிவிட்டு, மாலையை வாங்கிக்கொண்டு போய் சாமி முன் வைத்து மனத்திற்குள் வேண்டிவிட்டு வந்தாள்.
    ‘‘சூடா காபி குடிக்கிறீங்களா...?‘‘ கேட்டாள்.
    இவ்வளவு தணிவாக எல்லாம் அவள் கேட்டது இல்லை. அதிலும் இந்தப் பொழுது சாய்ந்த நேரத்தில் கண்கள் தொலைக்காட்சியை விட்டு அகலாது.
   இன்றும் தொலைகாட்சியில் நாடகம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அவளின் மனம் அதில் லயிக்கவில்லை என்பது அவள் நடந்துக்கொண்ட விதத்திலேயே புரிந்தது.
   ‘‘வேண்டாம் ரேவதி, வழியனுப்பு விழாவில் டீ குடித்துவிட்டேன். கொஞ்சம் பொறுத்து சாப்பாடு போடு‘‘ என்றான் குமரன்.
   ‘‘சரிங்க நீங்கபோய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க....‘‘ கடிகாரத்தைப் பார்த்தபடியே சொன்னாள்.
    இந்த வார்த்தையைக் கேட்டதும் குமரனுக்கு அவன் அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மா எப்பவுமே இப்படித்தான். வேலைவிட்டு இவன் வரும் வரையில் காத்திருப்பாள். வந்ததும், சாப்பிட்டியா, ஏதாவது சாப்பிடுகிறாயா?, எடுத்துக்கொண்டு வரட்டுமா? என்ற இதிலொன்று தான் அவளின் முதல் வார்த்தையாக இருக்கும். அது முடிந்ததும் போய் கொஞ்சம் ஓய்வெடு‘‘ என்பாள்.
    இந்த சுகமெல்லாம் அம்மாவோடு போய்விட்டது.
    ரேவதியும் துவக்கத்தில் வேலைக்குச் சென்றவள் தான். குழந்தை குரு பிறந்ததும் வேலையை விட்டுவிட்டாள். அதன் பிறகும் ரேவதி அம்மாவைப் போல் இவனை இப்படி கவனித்தது இல்லை.
    ‘‘இவ்வளவு நேரமாகக் கதவைத் தட்டுகிறேனே... கொஞ்சம் சீக்கிரம் வந்து திறந்தால் என்ன?‘‘ என்று கேட்டால்.... ‘‘முட்டி வலிக்கிறது. உடனே எழுந்து ஓடிவர முடியாது‘‘ என்றாள்.
    ‘‘தலைவலிக்கிறது. கொஞ்சம் சூடா காப்பி போட்டு தா...‘‘ என்றால், ‘‘சீரியலில் முக்கியமான இடம். நீங்களே போட்டுக்கோங்க‘‘ என்பாள்.
    சற்று நேரம்கழித்து வந்தால்.... ‘‘சாப்பாடு டேபிளில் வச்சிருக்கேன். நீங்களே போட்டு சாப்பிடுங்க‘‘ என்பாள். இதெல்லாமே தொடக்கத்திலேயே... பிறகு இதுவே பழகிவிட்டது. இப்போது அவனாக எதுவும் கேட்பதில்லை.
   ஆனால் இன்று.... ரேவதியின் செய்கைகள் அம்மாவை ஞாபகப் படுத்தவும்.... அந்த நினைவிலேயே நேரம் ஓடியது தெரியவில்லை. பசித்தது. எழுந்து வந்து டேபிளைப் பார்த்தான். எதுவுமில்லை.
   ரேவதி ஏதோ யோசனையில் ஷாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு இருந்தாள். முகம் சற்று வாடி இருந்தது.
   என்ன ஆச்சு இவளுக்கு...? நாம் ரிட்டையர்ட் வாங்கியதால் கவலையாக இருக்கிறாளா...?
   ‘‘ரேவதி....‘‘‘ கூப்பிட்டான்.
   இரண்டாவது முறை கூப்பிட ‘‘என்ன?‘‘ என்றாள்.
  ‘‘ஏன் ஒரு மாதிரியா இருக்கிற ? என்ன யோசனை ?‘‘ என்று கேட்டான்.
‘‘ப்ச்சி… ஒன்றுமில்லை‘‘ என்றாள்.
‘‘சரி. சாப்பாடு செய்தியா… ?‘‘
‘‘ஓ செஞ்சேனே…. அடடா…. நம்ம குருவோட யோசனையில சாப்பாட கொண்டுவந்து டேபிலில் வைக்க மறந்துட்டேன். நீங்களே கிச்சன்ல போய் போட்டுக்கோங்க….‘‘
   ‘‘ஏன் நம்ம குருவுக்கு என்ன ?‘‘ சற்று அவசரமாக கேட்டான் குமரன்.
   ‘‘குரு…. இன்னைக்குத் தான் முதன்முதலா வேலைக்குப் போய் இருக்கிறான். வீட்டில் இருந்தால் வேலாவேலைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுத்துடுவேன். வேலைக்கு சாப்பாடு கட்டி கொடுத்டதேன் தான். அது ஆறி போய்யிருக்கும். புள்ள சாப்பிட்டானோ இல்லையோன்னு தெரியல…‘‘ அவள் கவலையோடு சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கதவு தட்டும் ஓசை கேட்டது. ஓடி போய் கதவைத் திறந்தாள்.
   குரு வீட்டின் உள்ளே நுழைந்ததும்…, ‘‘ ஏம்பா… முகம் வாடி இருக்குது ? நிறைய வேலையா ? சாப்பிட்டியா….
   அவள் கேள்விகள் தொடர்ந்து கொண்டே போனது.
   குமரனுக்குப் புரிந்தது. இவளும் அம்மா தான் என்பது.


அருணா செல்வம் 
19.02.2016

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

காயும் கனியும் – 10



1.
காய்என்று சொல்லாதே கண்ணே! பழமென்று
வாய்நிறைய சொல்லடி! வானிலவே – அய்வின்றி
வாதாடி என்னை வதைக்காதே! என்னுயிர்க்
காதலியே நீயென் கனி!

2.
காய்ச்சிய பால்செம்பைக் கையிலேந்தி வந்துநிற்க
சாய்ந்ததடி என்மனது ! சாகசம் – வாய்த்தவளே !
உண்பதுபோல் பார்க்கின்றாய் ! உள்ளணர்வைத் தீண்டும்உன்
கண்ணெழில் காந்தக் கனி !

3.
காய்போல் தெரிந்திடும் கன்னச் செழுமையில்
வாய்ஊறும் நல்ல வளமையில் ! – தேய்ந்திடும்
என்னுயிர்ப் பெண்ணின் இளநகையில் ! கைதொடக்
கன்னியுடல் உண்ணும் கனி !

4.
காய்வடுகண் ! மூக்கழகைக் கஞ்சமலர் மொட்டெனலாம்!
தேய்ந்த பிறைநெற்றி ! தேடியதில் – ஆய்ந்திழுத்து
இன்புறும் பார்வை ! எனக்காக ஏங்குமந்தக்
கன்னி முகம்தான் கனி !

5.
காய்ச்சல் உடம்பில் ! கவலையோ உள்ளத்தில் !
பாய்கூடக் சூட்டினால் பாழாகும் ! – நோய்தன்
வசமிருந்து வாட்டி வதங்கியவன் வாய்க்குக்
கசக்கும் பழுத்த கனி !

6.
காய்ந்த நிலமோ கவலை கொடுத்தது !
தாய்க்கும் உணவு தரவில்லை ! – சேய்தன்
பசியால் வதங்கியது ! பார்த்தழுவும் கண்ணில்
கசிந்திடும் அன்பே கனி !

7.
காய்த்த மரமென்றும் கல்லடி பெற்றாலும்
வாய்க்குண வாக வழியுண்டு ! – மேய்ந்திடா
முள்ளினை ஒப்பது! மூடர்தம் வாய்தரும்சொல்
கள்ளியில் காய்த்த கனி !

8.
காய்ந்த நிலவும் கடல்தாண்டிப் போனது !
தேய்ந்த மனத்தில் தெளிவில்லை ! – ஆய்ந்தாள்
உலகிலே உண்மையான காதலுண்டோ வென்றே
கலங்கினாள் அந்தக் கனி !

9.
காய்ந்த இலையாய்க் கடலின்மேல் ஆடியாடிப்
பாய்ந்த அலைபோல் பரிதவித்தாள் ! – போய்வருவேன்
என்றுசொல்லிப் போனவன் இன்றும் வரவில்லை
கன்னிமனம் காய்ந்த கனி !

10.
காய்ந்துவிட்ட மீன்தான் கருவாடு ! நல்உரமோ
காய்ந்த சருகு ! கரந்தபால் - காய்ச்சிட
வாய்இனிக்கும்! வாழ்வில் எதுவும் முடிவில்லை,
காய்த்திடும் முற்றல் கனி !



அருணா செல்வம் 
17.02.2016


நட்புறவுகளுக்கு வணக்கம்.

    பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்கள், முகநூலில் ‘‘பாவலர் பயிலரங்கம்‘‘ என்ற தலைப்பில் ஒரு குழுமத்தை அமைத்துள்ளார். அதில் தலைப்புகள் கொடுத்து மரபுக்கவிதைகளை எழுதத் தருகின்றார். அங்குக் கவிஞர்கள் பங்கேற்றுச் சிறப்புடன் கவிதைகளை எழுதுகிறார்கள்.
    அதில் ஒரு தலைப்பு ‘‘காய் கனி‘‘. அதாவது காய் என்ற சொல்லில் பாடலைத் துவங்கி கனி என்ற சொல்லுடன் வெண்பாவை முடிக்க வேண்டும்.
    நான் அந்த முறையில் பத்து வெண்பா எழுதினேன். அதை உங்களுக்கு இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.

நட்புடன்
அருணா செல்வம்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வெண்ணைப் புட்டு செய்முறை!



தேவையான பொருட்கள்

பச்சரிசி -  2 டம்ளர்
சர்க்கரை - 2 டம்ளர்
தேங்காய் - 1
முந்திரி பயிர் - கொஞ்சம்
ஏலக்காய் - 10

செய்முறை


அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.




தேங்காயைத் துறுவி வைத்துக்கொள்ள வேண்டும். ( சிலர் பாலாகவும் பிழிந்து கொள்வார்கள்) முந்திரியை உடைத்துக்கொள்ள வேண்டும். (சிலர் முந்திரிக்குப் பதில் கடலை பயிர் சேர்ப்பார்கள்) ஏலக்காயை நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.



அடுத்து அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எட்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். கொதித்ததும் உடைத்த முந்திரி பருப்புகளைக் கொட்டி பாதி வேக விடவும்.



பிறகு தீயை மிகவும் சின்னதாக்கி.... அரைத்த மாவை மெதுவாகவும் அதே சமயம் தண்ணீரைக் கிளறிக்கொண்டே ஊற்ற வேண்டும். சீக்கிரத்தில் அடி பிடித்துவிடும்.  அதனால் சற்று வேகமாகக் கிளறிக்கொண்டே மாவை ஊற்ற வேண்டும்.



மாவை அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே நன்றாக வேகவிடவேண்டும்.


வெந்தமாவில் சர்க்கரை, நசுக்கிய ஏலக்காய் சேர்த்து கிளறி... மேலும்



துறுவிய தேங்காய் சேர்த்து கிளறி நன்கு வேகவிடவேண்டும். 



 மாவு வாசனை போனதும் மாவு நன்கு கெட்டிப் பட்டு வந்ததும் இறக்கி, சின்னச் சின்ன கிண்ணங்களில் ஊற்றி ஆற விட வேண்டும்.



வெண்ணைப் புட்டு

சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்
12.02.2016

வியாழன், 11 பிப்ரவரி, 2016

மாற்றான் தொட்டத்து மரிக்கொழுந்து ! – 3

   



    முரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா !‘ என்று தோன்றியது.
    ஆறடிக்குக் குறையாத உயரமும், அதற்கேற்ற மாதிரி உடலமைப்பும், தூக்கி வாரின முடியும், எதையும் உன்னிப்பாய்ப் பார்க்கும் கண்களும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லும் முகமும் அமைந்த முரளிதரனைப் பார்த்த பொழுது, பண்ணையார் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறான உருவ அமைப்பு இருந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இவன் இப்படி இருக்க திலகவதி… ?
    இப்படி ஓர் அழகா… ! இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே ! எங்கே ? சற்று நேரத்திற்கு பிறகு ஞாபகத்தில் வந்தது, தன் வீட்டில் தேதி கிழிக்கும் காலண்டரில் உள்ள லட்சுமியின் முகம். ஆமாம்… அதில் இருக்கிற தெய்வீக முக அமைப்பு அப்படியே…
    அவளுடைய முகத்தில் பிரகாசிக்கும் ஒளி ? அவள் இரு பக்க மூக்கிலும் அணிந்திருக்கும் மூன்று மூன்று வைரக்கல் பதித்த மூக்குத்தியினால் வந்த ஒளியா… ?
    இல்லைஎன்றால் தானாகவே முகம் இப்படி ஜொலிக்கிறதா… ? என்னவென்றே சொல்ல முடியாத நினைக்க முடியாத ஓர் உன்னத அமைப்பு அவளிடம் இருந்தது.
    இந்த அழகு, அவளைப் பார்த்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் காந்தர்வ அழகு கிடையாது. அவளைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் உன்னதமான தெய்வீக அழகு !
    இந்த அழகைக் கண்டு மறிக்கொழுந்து மயங்கிவிட்டாலும் அவளுடைய அன்பைக் கண்டு, அவளுக்குப் பணிவிடை செய்வதே பெருமை என நினைக்க ஆரம்பித்தாள்.
   அன்புக்கு அடிபணிவது ஆனந்தமாயிற்றே!
   அப்படி ஓர் அழகும் குணமும் வாய்த்த ஒரு பெண்ணை இனி எப்போது பார்ப்போம்…. ?
    மரிக்கொழுந்தின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.
    ‘‘க்ரீச்…க்ரீச்…‘‘
    கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்.
    பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. பெரிய வீட்டின் கொள்ளைப்புரத்துக் கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்தான் அது. எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
    பெரிய வீட்டின் அதாவது மூரளீதரன் வீட்டிற்கும் அவளுடைய குடிசைக்கும் இடையே ஒன்பது தென்னை மரம், ஆறு வாழை மரம், ஒரு சில பூஞ்செடிகள் தான் இருக்கும்.
    மரிக்கொழுந்து கல்யாணமாகி வந்த சில நாட்களில் சின்னய்யா தன்னுடைய வீட்டின் தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அதில்  வேலுவையும் மரிக்கொழுந்துவையும் குடித்தனம் வைத்தான்.
    குடிசையிலிருந்து பெரிய வீட்டின் தோட்டத்தைப் பார்த்தால் மரங்களுக்கும் வாழைகளுக்கும் நடுவில் அவ்வளவாக எதுவும் தெரியாது.
    இருந்தாலும் அங்கிருந்து வரும் சத்தமும் அடுப்பின் புகையையும் வைத்து எல்லோரும் எழுந்து விட்டார்கள் என்பதை யூகித்துக்கொண்டாள்.
    மரிக்கொழுந்து எழுந்து போய் பல்விளக்கி முகம் கழுவி தலைவாரி பின்னி தன் குடிசையில் இருந்த சின்ன கண்ணாடியை எடுத்து பார்த்துப் பொட்டு வைக்கும் போது சின்னம்மா திலகவதியின் ஞாபகம் வந்தது.

    ல்யாணமாகி வந்த மறுநாள் விடியகாலை…
    ‘‘ஏய் மரிக்கொழுந்து இன்னுமா தூங்குற… எழுந்திரு, சின்னம்மா இந்நேரம் எழுந்திருப்பாங்க. சீக்கிரம் எழுந்து போய் அவுங்க இன்னா வேல செய்ய சொல்றாங்களோ அத செய்யி ?‘‘
    வேலு அவளை உலுக்கி எழுப்பினான்.
    மரிக்கொழுந்து அவசர அவசரமாக எழுந்து சடையைத் தூக்கி கொண்டையாகப் போட்டுக்கொண்டு சேலையைச் சரிசெய்து கொண்டு ஓடினாள்.
    அதற்குள் திலகவதி எழுந்துவிட்டிருந்தாள். அவள் முன்னால் போய் நின்று ‘‘நா என்ன செய்யணும் சின்னம்மா… ?‘‘ என்று கேட்டாள்.
    அவள் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு…
    ‘‘மரிக்கொழுந்து நீ போயி பல்லை வெளக்கி மொகத்த கழுவி பொட்டு இட்டுக்குனு, தலைவாரி பின்னிக்கினு, பொடவைய ஒழுங்கா கட்டிக்கினு வா. அப்புறம் சொல்லுறேன் நீ இன்னா வேல செய்யனுங்கிறத.‘‘
    மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவள் சொன்னதைத் தட்டாமல், உடனே கொள்ளைப்புரம் நோக்கிப் போனாள்.
    போகும் போது தான் வேலைசெய்த வீட்டின் ஞாபகம் வந்தது.
    என்றாவது ஒருநாள் நேரமிருந்தால் தலைவாரி சடை பின்னி முகத்தில் பெளடர் பூசி பொட்டு வைத்துக்கொண்டால் போதும், அன்று முதலாளியின் மகளுக்குப் பொறுக்காது.
    ‘‘ஏண்டி காலையிலேயே ஒனக்கு என்ன மேக்கப் வேண்டி கெடக்குது. ஒரு காபிய ஒழுங்கா போடத் தெரியல, மேக்கப் போட்டுக்கினா… அதுவும் காலையில….‘‘
    பத்து மணியளவில் தூங்கி எழுந்து வந்தவள் இந்த வார்த்தையை சொல்லுவாள். அன்றைக்கு என்று பார்த்து இஸ்திரி மடிப்பு கலையாத துணிகளைக் கொண்டுவந்து போடுவாள்.
    ‘‘இதெல்லாம் ஒழுங்கா தொவைக்கல. நல்லா தொவச்சி அயன் பண்ணி வை‘‘
    இப்படி ஏதாவது ஒரு வேலையை வேண்டுமென்றே அதிகப் படுத்தி விடுவாள்.
    இதையெல்லாம் நினைத்துக்கொண்டே திலகவதி சொன்னது போல் செய்து முடித்து அவள் எதிரில் வந்து நின்றாள்.
    ‘‘இதோ பாரு மரிக்கொழுந்து… இன்னைக்கு மட்டுமில்லை. என்னைக்குமே நீ இதுமாதிரி தான் வரணும். புரியுதா… ?‘‘ என்றாள்.
    ‘‘சரிங்க சின்னம்மா‘‘
    ‘‘என்ன சொன்னே ?‘‘
    ‘‘சரிங்க சின்னம்மான்னுதாங்க…‘‘
    ‘‘ம்…. இதையும் மாத்தணும் நீ. ஒனக்கு நா சின்னம்மாவா… ?‘‘
    புரியாமல் விழித்தாள். மாமா அப்படித்தானே சொன்னது…. வேற என்னன்னு கூப்பிடணும் ? மனதுக்குள்ளேயே எண்ணிப் பார்த்தாள். கேட்க வாய் வரவில்லை. பேசாமல் அவளைப் பார்த்தாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து பயந்துட்டியா… ?‘‘
    இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள்.
    ‘‘பின்னே… ?‘‘
    ‘‘சின்னம்மான்னு இல்லையின்னா… வேற என்னன்னு கூப்பிடறது ?‘‘
    ‘‘ம்… அப்படி கேளு. எல்லாரும் என்னை சின்னம்மான்னு தான் கூப்பிடுறாங்க. ஆனா நீ அப்படி கூப்பிடாத. நீ இனிமே என்னை அக்கான்னு தான் கூப்பிடணும். என்ன சரியா… ?‘‘
    தலையாட்டினாள்.
    ‘‘வாயைத் தொறந்து சொல்லு‘‘
    ‘‘சரிக்கா !‘‘
    ‘‘ம்… போயி வாசல தெளிச்சி கோலம் போடு…‘‘  இப்படி அன்பாக வேலை வங்கினாள். அதுவும் முழுநேர வேலை கிடையாது.
    காலையில் வாசல் தெளித்துக் கோலம் போடணும். இரவு போட்ட பாத்திரங்களைக் கழுவி வைக்கணும், எப்போதாவது கடைக்குப் போய் காய்கறி வாங்கணும், வீட்டைப் பெருக்கணும். மாவை மசினில் அரைக்கணும், இவை எல்லாவற்றையும் விட நான்கு வயது சத்தியாவைக் கவனிக்கணும்.
    இதுதான் வேலை. இதெல்லாம் வேலை என்பது போல் தெரியாமல் ஒரு பொழுது போக்கு போல் இருந்தது மரிக்கொழுந்துவிற்கு.
    எவ்வளவு சந்தோசமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது !
    இத்தனை நாட்களிலும் மரிக்கொழுந்து திலகவதி சொன்னதை மறக்கவில்லை. அன்றாடும் முகம் கழுவி பொட்டு வைத்த பின்னரே பெரிய வீட்டிற்குள் நுழைவாள்.
    மரிக்கொழுந்துவிற்கு மனது வெம்பியது. சத்தம் போட்டு அழுதால் குழந்தைகள் எங்கே விழித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் கவலையை அப்படியே விழுங்கினாள். அடுத்தவர் நலனுக்காக அழுகையை அடக்குவதில் இருக்கும் வலி…. பெரிய பாத்திரத்தில் பொங்கி வர முடியாத பாலைப் போன்று உள்ளேயே கொதிப்பது. அதைவிட அழுது விடலாம்.
    கையில் இருந்த சாந்து குமிழில் ஒரு குச்சால் ஒரு புள்ளியளவு பொட்டு வைத்துக்கொண்டு குடிசையின் கதவை மெதுவாக சாத்திவிட்டு, பெரிய வீட்டின் கொள்ளைப் புரத்தை நோக்கி நடந்தாள்.
    ஏதோ வேலையாக இருந்த காமாட்சி அவளைக் கவனித்துவிட்டாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து… ? நீ எதுக்கு இங்க வந்த ?‘‘
    ‘‘ஏதாவது வேல இருந்தா செய்யலாம்ன்னு வந்தேன் ஆத்தா…‘‘
    ‘‘வேலையா ? அதெல்லாம் ஒன்னும் வேணாம். இங்க சொந்தக்காரங்க எல்லாம் இருக்கிறாங்க இல்ல ? அவங்க செஞ்சிக்குவாங்க. நீ போயி கொழந்தைகள கவனிச்சிக்கோ. அது போதும். போ‘‘
    அதிகாரம் நிறைந்த குரலில் சொன்னாள் காமாட்சி. அவளுடைய சொல்லுக்கு மறுப்பேது… ?
    ‘‘சரி ஆத்தா….‘‘ என்று சொல்லிவிட்டு திரும்பவும் வந்த வழியிலேயே நடந்தாள்.
    குடிசையின் அருகில் நெருங்கிய போது தான் குழந்தையின் அழுகை ஒலி காதில் விழுந்தது.
    அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.
    அவளுடைய குழந்தைதான் அழுதுகொண்டிருந்தது. படுக்கையை ஈரமாக்கி வைத்திருந்தான்.
    குழந்தையைத் தூக்கி படுக்கையைச் சரிபடுத்தி விட்டு அதனை பசியாற்றி விட்டு கிடத்தினாள்.
    பசி போனதும் தூங்காமல் நன்றாக விழித்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டிருந்தான்.
    கண்கள் இரண்டும் மொச்சைக் கொட்டைகள் போல் இருந்தது.
    அந்தக் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தாள். அவளுக்குச் சாதாரண குழந்தையின் கண்களாகத்தான் தெரிந்தது. திலகவதி சொன்னது போல எந்த ஒளியும் அதில் தெரியவில்லை.


(தொடரும்)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழ்ப்பெண்!




இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

(சிந்து)
அருணா செல்வம் 
09.02.2016

புதன், 3 பிப்ரவரி, 2016

ஜவ்வரிசி உருண்டை!



தேவையான பொருட்கள்
---------------------------------------

ஜவ்வரிசி - 500 கிராம்
தேங்காய் - ஒன்று
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 8

செய்முறை
------------------


ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி அது மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும்.



தேங்காயைத் துறுவி ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு வதக்கி.... 



வதக்கிய தேங்காய்த் துறுவலுடன் சர்க்கரை, கொஞ்சமாக உப்பு,  நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 


இப்போது ஊறிய ஜவ்வரிசியைக் கொஞ்சம் எடுத்து உருண்டையாகப் பிடித்து, லேசாகத் தட்டி (படத்தில் காட்டியது போல ) செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து இன்னும் கொஞ்ச மாவால் மூடி....



இப்படி உண்டையாக செய்துக்கொள்ள வேண்டும்.
எல்லா மாவையும் இப்படி உருண்டை பிடித்து விட்டு...



இட்லி பாத்திரத்தில் இட்லி மாவு ஊற்றும் இடத்தில் ஒவ்வொரு உருண்டையாக வைத்து பாத்திரத்தைப் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் வேகவிட வேண்டும்.



 ஜவ்வரிசி வெந்ததும் கண்ணாடி போல பளபளப்பாகப் படத்தில் உள்ளது போல் இருக்கும்.


 சற்று ஆறியதும் இட்லி தட்டிலிருந்து எடுத்து விடலாம்.


ஜவ்வரிசி உருண்டை

இந்தச் சிற்றுண்டி உருண்டைப் பிடிக்கச் சற்று சிரமாக இருந்தாலும்  சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

நன்றியுடன்
அருணா செல்வம்