வியாழன், 30 ஏப்ரல், 2020

கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு!



(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு - எனைக்
கண்டதும் முகமூடிப் போவதேன் விட்டு!
.
(தொடுப்பு)
பொன்னான பொழுதினில் தொடர்ந்திட்டப்
பொலிவான காலங்கள் நினைவில்லையோ!
அன்றாடிய இனிமையை எடுத்தோத
அழகான தமிழிலே சொல்லில்லையோ!
.
எண்ணத்தில் உருவான இனிமையை
எழுதிய அடியெல்லாம் கவியில்லையோ!
அன்பாக அதைக்கூட்டிப் பாடிட
அருளான நெஞ்சிலே இடமில்லையோ!
.
துள்ளாமல் வளர்ந்திட்ட காதலால்
துணிவாகக் கரம்பிடித்த உறவில்லையோ!
தள்ளாத வயதாகி விட்டதனால்
தளர்வாயில் சொல்லுரைக்கப் பல்லில்லையோ!
.
என்னென்றும் ஏதென்றும் அறியாமல்
இளமையினைப் பேசுதல் சரியில்லையோ!
உன்னுயிர் இங்கிருப்பதை உள்ளாடும்
உணர்வெலாம் உன்மனதைக் கொல்லலையோ!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2020

புதன், 22 ஏப்ரல், 2020

நிலம்வாழ அருள்வாயே!



(வண்ணப் பாடல் – 2)
.
தனன தான தனதான
தனன தான தனதான
தனன தான தனதான தனதானா (அரையடிக்கு)
.
விலையி லாத பொருளோடு
  குறையி லாத திருவோடு
    வினையி லாத அழகான பெருமாளே!
விரசி லாத மொழியோடு
  பிழையி லாத அணியோடு
    வெருவி லாத மலைவாழும் பெருவேலே!
.
மலைக ளோடு நிறைந்தாடி
  இணையி லாது கலந்தாடி
    மனதி னோடு வளமான தமிழாலே
மரபி னோடு விளையாடி
  இனி தா கருவோடு
    வழுவி லாத கவிபாடி விழைவேனே!
.
நிலையி லாத உயிரோடு
  நிறைவி லாத வகையோடு
    கிருமி வாழு முலகான நிலையேனோ?
நிழலி லாத அளவோடு
  சுமையி லாத முடியோடு
    நெருட லான உயிரோட வருவாயோ!
.
அலையி லாத கடலேது?
  அடரி லாத இருளேது?
    அரிது வான பதிலேது வடிவேலா!
அகம மாக அதையோதி
  வதையி லாத வழியேகி
    அளவி லாத நிலம்வாழ அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
22.04.2020

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஏனென்று குழம்பினேன்!



(இசைப்பாடல்)
.
ஏனென்று குழம்பினேன் மானே – அச்சம்
தானென்(று) உணர்ந்துடன் மாறினேன் நானே!
.
அன்பு கவியொன்றை வரைவான் – அதில்
அழகென்ற உவமையை அடுக்கியே வைப்பான்!
துன்பம் வருமென்று எண்ணி – நான்
தொடராத இடத்திலே வைத்ததை மறைப்பான்!
.
கூடிக் களித்திட உழைப்பான்  - இதயக்
குளமொன்றைத் தீட்டிக் கூவியே அழைப்பான்!
தேடிக் குளித்திடச் சென்றால் – அதைத்
தேனான தமிழுக்கே தோண்டினேன் என்பான்!
.
யாருக்கும் பயமில்லை என்பான் – எதிராய்
எவரேனும் வந்தாலும் வீழ்த்துவேன் என்பான்!
நேருக்கு நேர்சென்று நின்றால் – பேயின்
நிகராக எனைக்கண்டு அஞ்சியே செல்வான்!
.
உள்ளத்தில் ஆசையை வைத்தான் – அதை
உருவான கருகொண்ட கவிதையில் புதைத்தான்!
துள்ளிடும் குதிரைபோல் ஆசை – அதைத்
தூயதமிழ் சொல்லாலே கடிவாள மிட்டான்!
.
காதலை நினைத்திடும் நெஞ்சம் – அதைக்
கவிதையாய் எழுதியே உயர்த்திட மிஞ்சும்
போதனை செய்திட விஞ்சும் – உயிர்
போகிடும் வேதனை தனக்கென அஞ்சும்!
.
அவனுயிர்த் தமிழாலே இசைப்பேன் – காதல்
அச்சத்தை அதனுள்ளே ஆழப் புதைப்பேன்!
தவறல்ல காதல் மலைத்தேன்! – அதைத்
தழைத்திடும் தமிழாலே அஞ்சாது குடிப்பேன்!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2020

(பாரதியின் “தீராத விளையாட்டுப் பிள்ளை“ என்ற இராகத்தில் பாடிப்பாருங்கள்)

சனி, 18 ஏப்ரல், 2020

இதற்கு தான் காதலென்று பெயரா?



(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
இதற்கு தான் காதலென்று பெயரா? – வாழ்வில்
எதற்கு தான் இதைவைத்தாய் இறைவா?
.
(தொடுப்பு)
தொட்டிடத் தொட்டிடச் சுகமென்றான்! – கைப்
பட்டிடப் பட்டிடச் சுவையென்றான்! - இன்று
எட்டிப்போய் எட்டிப்போய் நில்லென்றான்! – அவளை
விட்டுப்போய் தள்ளிநின்று சொல்லென்றான்!
.
உற்றுனைப் பார்ப்பதே அழகென்றான்! – இதழ்
ஒற்றிட்டும் மென்மையை மலரென்றான்! - இன்று
பற்றிடும் நெருப்பெனச் சுடுகின்றான்! - அவளைத்
தொற்றிடும் நோயென விலகென்றான்!
.
கட்டழகு மேனியைக் காதலித்தான்! – வெறும்
கட்டிலிடும் சுகத்திலே பேதலித்தான்! – வேறு
மெட்டழகு பொட்டழகைக் கண்டுவிட – அவளை
விட்டொழியும் காலமதைக் குறித்துவிட்டான்!
.
பெண்ணறிவு பேதையென எண்ணிவிட்டுப் – பெரும்
விண்ணளவு பழியினைச் சுமத்துகின்றான்! - இதைக்
கண்டறிந்து கொண்டதனால் அழுகின்றாள்! – இந்த
மண்ணளவு வேதனையைச் சுமக்கின்றாள்!
.
அஞ்சியஞ்சி இருந்தவளை ஆசையூட்டித் – தினம்
கொஞ்சிவந்து கெஞ்சிவந்து மோகமூட்டி – அவள்
நெஞ்சமதில் அழியாமல் நிறைந்துவிட்டு – இன்று
வஞ்சகமாய் வலைப்பின்னி மறைந்துகொண்டான்!
.
கற்றவனாய் இருந்திருந்தால் உயர்ந்திருப்பான்! – நட்பை
உற்றவனாய் இருந்திருந்தால் நினைத்திருப்பான்! – அன்பு
அற்றவனை நெஞ்சத்துள் நிரப்பியதால்  - அதைக்
குற்றமென மௌனமாய் அழுகின்றாள்!
.
பாவலர் அருணா செல்வம்
18.04.2020

புதன், 1 ஏப்ரல், 2020

காலோடி நடக்கும் வெண்பா!



.
விண்மாலை நல்லழகில் மண்வாசம் பின்னிவரப்
பண்பாடும் நல்லழகு பாட்டனைய, - கண்கவரும்
இன்மாது கண்டதும் என்பாவம் சுற்றுதடி!
தன்மானம் காட்டிடத் தாங்கு!
.
பொருள்மாலைப் பொழுதின் மண்வாசம் இணைந்துவர நற்பண்புகளைக் கொண்டு பாடிடும் அழகான பாடலைப் போல் கண்ணைக் கவரும் இனிமையான பெண்ணைக் கண்டவுடன் என் எண்ணம் சுற்றுதடி. நல்லன்பைக் காட்டி என்னைத் தாங்கு.
.
காலோடிய வெண்பா!
.
விண்மலை நல்லழகில் மண்வசம் பின்னிவரப்
பண்படும் நல்லழகு பட்டனைய, - கண்கவரும்
இன்மது கண்டதும் என்பவம் சுற்றுதடி!
தன்மனம் கட்டிடத் தங்கு!
.
பொருள்விண்ணளவு மலையின் நல்லழகில் மண்ணும் விரும்பி கலந்திருக்க, பண்படுத்தப்பட்ட அழகான சிற்றூரைப் போல் கண்ணைக் கவரும் இனிமை தரும் மதுவைக் கண்டவுடன் என்னுலகம் சுற்றுதடி. தன்மையான மனத்தைக் கட்டிவிட என்னுள் தங்கு.

பாவம்எண்ணம்
அனையபோல
பவம்உலகம்
வசம்விருப்பம்
பட்டுசிற்றூர்

(தமிழில் அரைக்கால் உள்ள எழுத்துக்களின் சொற்களால் முதலில் பாடலை அமைக்க வேண்டும். அவ்வெண்பாவிலே உள்ள அக்கால்களை மட்டும் நீக்கினால் மற்றொரு வெண்பா வரவேண்டும். இதுவேகாலோடி நடக்கும் வெண்பாஎன்பதாகும். இரண்டு வெண்பாவும் வெவ்வேறு பொருளைத் தர வேண்டும்)
.
பாவலர் அருணா செல்வம்
27.03.2020

இரு சொல் எழிலணி வெண்பா!



.
சீருணவில் சேர்க்க செரிமானம் செய்வதெது?
பேருள்ளம் கொள்ளும் பெயருமெது? – பேருலகில்
மாந்தருட லோடு மனத்தையும் நல்லுயர்வாய்க்
ஏந்திடும் சீரகமே இங்கு!
.
பாவலர் அருணா செல்வம்
01.04.2020
(ஒரே வெண்பாவில் இரண்டு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படிப் பாடப்படுவது “இரு சொல் எழிலணி வெண்பா“ எனப்படும்)