மண்ணில் வாழும் மானிடரின்
மனங்கள் செய்த பாவங்களை
எண்ணி எண்ணிக் கலங்கியதன்
இன்னல் போக்க வேண்டுமென்று
விண்ணில் இருந்து இறங்கிவந்தார்
வியக்கும் குழந்தை ஏசுவென!
வண்ணம் கொண்ட அவரருளை
வணங்கி நெஞ்சம் குளிர்கின்றேன்!
காட்டில் வாழும் உயிரெல்லாம்
கருத்தாய் ஒன்றி வாழ்கிறது!
நாட்டுக் குள்ளே பலதலைகள்
நன்மை என்றே பிரிக்கிறது!
வாட்டும் செய்தி வன்புணர்வு
வளர்க்கும் படிப்பில் முறைக்கேடு!
தீட்டும் கவியில் எழுதுகின்றேன்
திருநாள் தன்னை மறந்துவிட்டு!
சின்னக் குடிலில் பிறந்தவரே
சீர்மை செய்ய வந்தவரே!
முன்னே இருந்தோர் உயர்ந்தவரா?
பின்னே வந்தோர் தாழ்ந்தவரா?
என்னே மாற்றம் நடுநடுவே
என்றே கேள்வி இருந்தாலும்
இன்னல் தணிந்தே இவ்வுலகம்
இன்பம் கொள்ள செய்திடுவீர்!
சொந்தம் நட்பும் எல்லோரும்
சுகமாய் வாழ அருள்தரவே
எந்தை நாடும் மனவீடும்
இனிய நலங்கள் நிறைந்திடவே
முந்தும் வித்தை உயர்வுபெற
முயலும் செயல்கள் வளம்பெறவே
வந்து பிறப்பாய் சிறுகுடிலில்
வையம் மகிழ்ந்து வாழ்வதற்கே!
.
பாவலர் அருணா செல்வம்
24.12.2019