வெள்ளி, 31 டிசம்பர், 2021

புத்தாண்டு வாழ்த்து! 2022

 



வருக வருக புத்தாண்டே
    வசந்தம் வீசி வாழ்ந்திடவே!
தருக தருக நல்வினைகள்
    தழைக்கும் உலகு மகிழ்ந்திடவே!
பெருக பெருக வளம்யாவும்
    பெருமைச் சிறுமை அகன்றிடவே!
உருகி யுருகி அழைக்கின்றோம்
    ஒளிரும் ஆண்டாய் நிறைந்திடவே!
 
புத்தம் புதிய ஆண்டினிலே
    புவியும் நன்றாய் குணம்பெறட்டும்!
நித்தம் போன வேதனைகள்
    நெஞ்சை விட்டே ஓடட்டும்!
சித்தம் எல்லாம் மகிழ்ந்திருக்க
    செய்யும் ஆண்டாய் இருக்கட்டும்!
சுத்தும் பூமி கேட்கட்டும்
    சொல்லின் ஆழம் உணரட்டும்!
   
இல்ல மெல்லாம் ஒளிரட்டும்
    இணையோர் சேர்ந்து இருக்கட்டும்!
வல்ல நோயும் அழியட்டும்
    வளங்கள் யாவும் சேரட்டும்!
சொல்லில் இனிமை கூடட்டும்!
    சுவையாய்த் தமிழும் வளரட்டும்!
நல்ல தெல்லாம் நடக்குமென
    நானும் பாடி வாழ்த்துகின்றேன்!
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2022   

புத்தாண்டு திருப்பள்ளியெழுச்சி!

 



பொன்னெனும் பூமியில் பூதமாய்  வந்து
      பூவுடல் அழித்தது புதுவித தொற்று!
சின்னவர் பெரியவர் செய்நிலை மறந்து
      சிந்தனைக் கலங்கிடச் சிரிப்பினை இழந்தார்!
நன்மையும் நலத்தையும் நாடிடும் மாந்தர்
      நல்லொளிப் பிறந்திட நாளெலாம் வேண்ட,
பொன்னெழில் பூத்துடன் பொய்வினை அழிக்கும்
    புதியவாண் டே!பள்ளி எழுந்தரு ளாயே!
.
பாவலர் அருணா செல்வம்
31.12.2021

புதன், 29 டிசம்பர், 2021

வந்துவிடு வாழ்வோம் ! 9

 



மார்கழியில் ஆண்டாள் மறைவாக வேண்டினாள்!
நேர்வழியில் வேண்டுகிறேன் நேரிழையே!  - கார்வண்ணன்
ஆழ்வார் கனவில் அழைத்திட்டான்! வந்துவிடு
வாழ்வோம் நினைவில் மகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

நோய் பயந்தோடும் ! 8

 


மார்கழியில் ஆற்றோரம் மாங்குயிலின் இன்னிசையில்
நீர்ச்சொட்டும் ஈரமுடன் நிற்கின்றாய்!  - கார்காலம்
காய்ச்சலுடல் தீண்டிடும்! கட்டிக்கொள் என்னுடலை
நோய்பயந் தோடிடும் நொந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

உன்இறை நான்!

 


மார்கழிப் பூக்களை மாலை தொடுத்தெடுத்துச்
சீர்விளங்கும் சன்னதிக்குச் செல்கின்றாய்! - ஊர்வசியே!
உன்னிறை நானென்(று) உணரவைப்பார் உன்னிறைவன்!
அன்றெனைத் தேடுவாய் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

செவ்வாய், 28 டிசம்பர், 2021

கணபதி திருப்பள்ளியெழுச்சி!

 


கடலடி சிவந்திடக் கதிரவன் பிறந்தான்!

     கார்நிற மங்கையோ கண்துகில் விரித்தாள்!

மடலிடம் வண்டுகள் மதுவினைத் தேட

     மாங்குயில் கிளிகளும் மந்திரம் பாடும்!

உடலிலும் மனத்திலும் உன்னுரு நினைவாய்

     ஓதிடுங் கவியுடன் உன்னெதிர் நின்றேன்!

கடமையும் கருணையும் செய்திட வேண்டி

     கணபதி யே!பள்ளி எழுந்தரு ளாயே!

.

பாவலர் அருணா செல்வம்

28.12.2021

திங்கள், 27 டிசம்பர், 2021

பெண்ணே நவில்!

 



மார்கழியில் நோம்பிருக்கும் மங்கையே! என்னிடத்தில்
ஓர்வார்த்தை பேசா(து) உருகுகிறாய்!  - ஊர்சொன்ன
சொற்களால் உண்டான சூடு தணிந்திடவே
நற்றவத்து பெண்ணே நவில்!
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2021

புதன், 22 டிசம்பர், 2021

கூர்விழியாளே!

 


மார்கழியில் பாடினால் மங்கலஞ் சேருமாம்
சீர்கொண்டு பாடுகிறேன் செந்தமிழில்! - கூர்விழியே
பொன்னும் பொருளும் பொலிந்திடும் ஏற்றமல்ல!
உன்னுயிரைச் சேர்ந்தால் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
20.12.2021

மஞ்சள் நிறமலரே!

 



.
மார்கழிப் பூங்கொடியின் மஞ்சள் நிறமலரே!
வேர்விட நன்னிலம் வேண்டுமா?  - சீர்செய்து
நல்லுரம் ஏற்றிய நல்லிதயம் இங்குண்டு!
செல்லாமல் சேர்ந்தால் செழிப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2021

ஓர்பார்வை!

 



மார்கழியில் பாடுகிறாய் மன்னவனை மாலையிட!
கார்குழலில் பூமணக்கும் கண்ணழகே! - ஒர்பார்வை
கண்விழித்து என்விழியைக் கண்டுவிட்டால் போதுமடி
எண்ணத்தில் ஏற்பாய் இசைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
18.12.2021

வியாழன், 16 டிசம்பர், 2021

வஞ்சி என்செய்வாள் ?

 

.
அன்பு நிறைந்த அன்னை உருவாக
      அன்று கண்டாள் அருமை மனத்தினிலே !
இன்பச் சொற்கள் இணைந்து குழைவாக
       என்றும் கேட்கும் என்றே நினைத்திருந்தாள்!
துன்பம் துயரம் எனுஞ்சொல் அவரிடையே
       துளியும் தொடுமா  என்றும் இறுமாந்தாள் !
வன்மைக் காலம் வந்தத் தடமில்லை !
       வகையாய் பிரிந்தார் ! வஞ்சி என்செய்வாள் ?
.
ஏக்கம் கொண்ட மனத்தை உள்மறைத்தே
       ஏதும் அறியா தவளாய் சிரித்திருப்பாள் !
தூக்கங் கெட்டுத் துவளும் உடல்வெளுத்தும்
       துணிவைப் போர்த்தி துள்ளி வலம்வருவாள் !
ஆக்கம் பொழியும் பண்ணில் பொருள்சேர்த்தே
      அமைதி யாகப் பாடி விழித்திருப்பாள் !
நோக்க மில்லாக் குருட்டு நெஞ்சுடையான்
       நூலில்  புழுவாய் புதைந்து மகிழ்ந்திருப்பான் !
.
தூது சொல்ல தோழி இல்லையென்று
       துணையாய்ப் பண்ணைத் தொடுத்துப் பறக்கவைப்பாள் !
ஏது மறியா தவன்போல் படித்தாலும்
       எழுத்த றிவற்ற மூடன் போலிருப்பான் !
ஓதும் பாடம் வேத மெனஒலிப்பான் !
       உய்யும் வாழ்வில் பேதம் காட்டிடுவான் !
மாது மயங்கி மாலை நினைத்தழுவாள்
      மயக்கும் கவியுள் அவனைப் பதிக்கவைத்தே !
.
(அரையடிக்கு மா + மா + மா + காய் என்ற சீரமைந்த எண்சீர் விருத்தம்)
.
பாவலர் அருணா செல்வம்
17.12.2021

உன்னிணை நான்!

 

.
மார்கழி வெண்பனியில் மாலை வணங்கிடத்
தேர்போல் நடந்துசெல்லும் செந்தேனே! - நேர்விழியால்
என்னைப்பார்! வேண்டிட ஏதுமில்லை என்றறிவாய்!
உன்னிணை நான்என்(று) உணர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.12.2021

புதன், 15 டிசம்பர், 2021

மார்கழி மலர்!

 



.
மார்கழியில் இட்டுவைத்த மாக்கோலப் பூக்களெல்லாம்
யார்பார்க்க செய்தாயோ என்றறியார்! - ஊர்மக்கள்
உன்முகத்தைப் பார்க்க, ஒளிந்திருந்து நானறிந்தேன்
உன்னுள்ளே என்னை உணர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
16.12.2021

செவ்வாய், 14 டிசம்பர், 2021

சிவசிவா வெண்பா!

 


மெய்கண்டார் சொல்லிய மெய்யுயிர் போதமெலாம்
செய்பவன் நீயே சிவசிவா!  - மெய்யாய்
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்!  

      
(குறள் 216)
.
பாவலர் அருணா செல்வம்
15.12.2021

செம்மொழி நாள்!

 



.
வழிதனில் நிறைவுகள் தடமாய்ப் பதிந்து
        வளமிகு அழகுடன் பொலிவாய் தெரிந்தாள்!
பொழிந்திடும் மழையதன் பயனைப் போலே
        புரிந்தவர் பயன்பெற உதவி புரிந்தாள்!
எழிலெனும் அணிகளில் மிளிர்ந்து நடந்தாள்!
        இவளிடம் குறையிலை என்றே அறிந்தும்
மொழிதனில் உயர்வெனத் தமிழைப் புகழ்ந்தும்
       முதல்மொழி இதுவெனத் திருநாள் வகுத்தார்!
.
இதைவிட உலகினில் இனிமை உளதோ!
       இலக்கண இலக்கியம் இனிக்கும் கரும்போ!
எதையிதற் கிணையென இயம்ப முடியும்?
       எழுத்தினை அளகிடம் இயல்பும் உளதே!
விதையெனப் பெருக்கிடுந் தொடர்பும் வளர
       வினைவிய பழையவர் இறைவன் தானோ!
சதைதனில் உலவிடுங் குருதி யெனவே
       தமிழினை அறிந்தவர் தழைத்தே வாழ்வார்!
.
கலைகளும் கவிதையும் உறைந்து வாழ்ந்து
     கலைமகள் உருவென வணங்க வைக்கும்!
இலைகளும் கனிகளும் நிறைந்த மரம்போல்
      இயற்கையின் வளமெனப் பிறருக் குதவும்!
அலைபெறும் கடல்தனில் கலந்த உப்பாய்
      அறிந்தவர் அதன்சுவை உயர்வைக் கண்டும்,
நிலையெனும் நிரந்தரம் தமிழ்தான் என்றே
       நிறைவுடன் முழங்கினார் மொழிநாள் என்றே!
.
(அரையடிக்கு விளம் + விளம் + மா + மா என்றமைந்த எண்சீர் விருத்தம்) 

பாவலர் அருணா செல்வம்
12.12.2024

திங்கள், 6 டிசம்பர், 2021

உடைந்து போனேன்!

 


சித்திரையில் என்சிந்தை குளிர்ந்திடக் கூவியழைப்பாய்!
     செய்தொழிலில் நீயிருந்தால் செயம் என்பாய்!
இத்தரையில் உனையின்றி இன்பமெது வெனச்சொல்லி
     இறைவனிடம் கையேந்தி யெனைய ழைப்பாய்!
நித்திரையே இல்லாத மேலொருவன் சிறைபிடிக்க
     நினைவின்றி உடல்மறைத்து நேரங் காப்பேன்!
உத்தரவு கிடைத்தவுடன் ஓடிவந்து குளிர்வித்தால்
    ஓடிவிடச் சொல்கின்றாய்! உடைந்து போனேன்!
.
எனக்கான நேரத்தில் வந்துநின்று, எனதன்பை
     இணையில்லா உன்னிடத்தில் இறக்கி வைத்தேன்!
தனக்கான பயன்வேண்டும் என்றிருந்தால் அழைத்தவளைத்
     தங்குதர்கோ ரிடங்கொடுத்துத் தடுக்க வேண்டும்!
உனக்கான காரியத்தைத் தவறவிட்டே அலைகழித்தே
     ஓடிவந்த எனைநீயே ஓடச் சொன்னாய்!
மனக்கணக்குப் போட்டுவைத்து, வந்தவளை வாழவைத்தால்
     மனக்குறையே வந்திடாமல் வாழ்ந்தி ருப்பாய்!
.
குடைதிறந்தும் உடல்நனைக்கும் சாரலுடன் விதைமுளைத்துக்
     கொழிக்கவைத்தே உணவுதரக் கொட்டித் தீர்த்து
மடைவழிய நடைநடந்து மன்னவனைச் சங்கமிப்பேன்!
     வழியெல்லாம் தடையிருக்க மருண்டு நின்றேன்!
விடைதெரிய இடமற்றோர் எனையிகழ்ந்து பேசிவிட
     விதியென்றே கதிகலங்கி வீணாய் யுள்ளேன்!
தடையெல்லாம் போனாலும் நான்தேங்க நிலைசெய்தால்
     தடம்புரளா மழைநீராய்த் தழைப்பேன் தானே!
.
(மழை பேசியது)
பாவலர் அருணா செல்வம்
06.12.2021

.
(ஆறுகாய் + மா + தேமா)



வெள்ளி, 3 டிசம்பர், 2021

சேவல் சித்திர கவிதை!

 


ஊக்குவிக்குஞ் சேவலே ஓடியே வான்தேடு!
தேக்கநிலை போக்கியே தேசமதைத் - தூக்கிடுவாய்!
தேடுகின்ற நற்பொழுதின் தேவனொளி யோடும்முன்
கூடுதேன் வாயே,,,நீ கூவு!
.
பாவலர் அருணா செல்வம்
03.12.2021

வியாழன், 2 டிசம்பர், 2021

ஓம் சித்திர கவிதை!

 


இன்பமே வாழ்வென்றே எண்ணுகின்ற பொன்னுலகில்
நின்னருளே வேண்டும்! நிலையில்லாத்  - துன்பத்
தடையைத் துடைத்தெறிக்கத் தைப்பூசக் கந்தன்
நடைநடத்தி டும்நாளை நாடு!
.
பாவலர் அருணா செல்வம்
02.12.2021