வெள்ளி, 28 ஜூன், 2013

கிழிந்துபோன ஜீன்சு!!





கிழிந்துபோன ஜீன்சுபோட்டு, செம்மண் வண்ண
    கேசத்தைச் சீவிஉடன் அலைத்து விட்டு,
மழித்துவிட்ட தாடிமீசை, பேரண்ட் லவ்லி
    மணக்கின்ற முகம்மின்ன, சோலை பொம்மை
பழிக்கின்ற தொளதொளக்கும் சட்டைப் போட்டு,
    பளீரென்று அடிக்கும்நைக் செருப்பும் போட்டு
விழித்தவுடன் நான்பார்க்க எதிரில் நிற்பான்!
    விடிந்ததேனோ? விதியைநொந்து நானும் பார்ப்பேன்!!


(நமது மதுரை தமிழன் அவர்கள், “எங்களுக்குத் தேவை இந்த காலத்துக் காதலனைப் பற்றி பெண் பாடுவது மாதிரி பாடல் வேணும்“ என்று கேட்டதினால் எழுதினேன். நன்றி.)

அருணா செல்வம்.
28.06.2013
   

வியாழன், 27 ஜூன், 2013

அரும்புமீசை ஆணழகன்!!






அரும்புமீசை ஆணழகன்! ஆசை பொங்க
    அழைக்கின்ற கண்ணழகன்! ஏங்க வைக்கும்
உருவத்தில் கட்டழகன்! எளியோர்க் கெல்லாம்
    உதவுகின்ற உள்ளழகன்! தெருவில் போனால்
திரும்பவைக்கும் நடையழகன்! தீமை என்றால்
    திருத்திவிடும் அறிவழகன்! கண்ணால் பேசிக்
கருத்தாக உள்நுழைந்தான்! கன்னி நானோ
    கவிதொடுத்துப் பாடுகின்றேன்! காதல் கொண்டே!!


(“ போனால் போகிறதென்று காதலனைப் பெண் புகழ்கிற மாதிரி ஒரு பாட்டாவது எழுதக் கூடாதா...“ என்று மூங்கில் காற்று கேட்டதற்காக போனால் போகிறது என்று எழுதினேன். நன்றி)

அருணா செல்வம்.
27.06.2013