புதன், 3 ஜூலை, 2013

கனவு நிறைவேறினால்..!! (நீதிக்கதை)




   ஒரு நாட்டில் மழை இல்லாததால் வறுமை சூழ்ந்தது. மக்கள் உணவும், குடிதண்ணீரும் இல்லாமல் மிகவும் வாடினார்கள். இந்த நாட்டின் மன்னன் மிகவும் நல்லவன். மக்கள் வாடுவதைக் கண்டு அவனும் வாடினான்.
   “காளி தேவிக்குப் பூசை செய்தால் மழை வரும்“ என்று அந்த நாட்டு அரசவை சோதிடர் சொன்னதும், மன்னனும் மாபெரும் பூசை செய்தான். மூன்று நாள் பூசை. முடிந்தது. அன்று இரவு வானத்தில் கொஞ்சம் கருமேகம் கூடியதைக் கண்டதும் மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர்.
   இருந்தாலும் மன்னன் சற்று யோசித்தான். இந்த மழை பெய்து நிலம் ஈரமாகி பின்பு விதை விதைத்து நாற்று வந்து வளர்ந்து அது பயிராகி அதன் பிறகு தான் பசி பிணி போகும். அதுவரை தன் நாட்டு மக்கள் படும் பாட்டை எண்ணி மனம் வருந்தி அப்படியே தூங்கிப் போனான்.
   அப்பொழுது, தன்னை யரோ அழைப்பது போல் குரல் கேட்டு விழிக்க எதிரில் காளி தேவி நின்று இருந்தாள். மன்னனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. எழுந்து வணங்கி நின்றான். காளி, “மன்னனே நீ எனக்குச் செய்த பூசையால் மனம் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேள் தருகிறேன்“ என்றாள்.
   மன்னனும் உடனே “தேவியே... என் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காத வரத்தைக் கொடு“ என்று கேட்டான். உடனே காளியும் “தந்தேன் வரத்தை“ என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
   மன்னன் உடனே தன் மந்திரியை அழைத்து நடந்ததை மகிழ்வுடன் சொன்னான். மந்திரியோ சற்று யோசித்து “நீங்கள் சரியில்லாத வரத்தைக் கேட்டுவிட்டீர்கள் மன்னா“ என்றார்.
   மன்னனுக்கு உடனே கோபம் வந்தது. “என்ன... நான் சரியில்லாத வரத்தைக் கேட்டேனா...? அதைச் சொல்ல உனக்கு எவ்வளவு திமிர். என் நாட்டு மக்கள் என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இனி அவர்களுக்குப் பசியே எடுக்காது. மகிழ்ச்சியாக இருப்பார்கள்“ என்றான். மந்திரியும் பேசாமல் இருந்துவிட்டார்.
   “மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்“ என்று மன்னன் அனுப்பிய ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். மன்னன் சில நாட்கள் கவலை இல்லாமல் இருந்தான். ஆனால் இந்தச் சில நாட்களில் வேலைக்கு வரும் ஆட்கள் குறைந்து விட்டார்கள். காவல் காப்பவர்களும் வரவில்லை. வீர்ர்களும் வரவில்லை. இன்னும் சில நாட்களில் மன்னனையும் அரசியையும் தவிர அரண்மனையில் யாருமே இல்லை. மந்திரியும் வரவில்லை.
   ஓரளவிற்கு மேல் பொறுக்காத மன்னன், அவனே தேரைப் பூட்டிக்கொண்டு மந்திரியின் இருப்பிடம் சென்று மந்திரியிடம் நடந்தவைகளைச் சொன்னான். மந்திரியும் “நீங்கள் சொல்வது உண்மைதான் மன்னா. நம் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காததால் அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது. மழைப் பொழிந்து தானே வளர்ந்த மரம் செடி கொடிகளின் பழங்கள் கூட கேட்பாரற்று கிடக்கிறது. வயலில் பயிரெல்லாம் முற்றி காய்கிறது. அதை வாங்க யாரும் இல்லாததால் பயிர் வயலிலேயே கிடந்து வீணாகிறது.
   மக்கள் தம் போக்கில் வாழுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்...?“ என்றார் மந்திரி. அப்பொழுது தான் மன்னன் தான் காளியிடம் கேட்ட வரத்தால் வந்த வினையை உணர்ந்தான். மனம் வருந்தி திரும்பவும் காளிடம் சென்று “தான் தவறாக வரத்தைக் கேட்டுவிட்டேன்“ என்று சொல்லி அழுதவன் அப்படியே தூங்கிவிட்டான்.

    மறுநாள் கண்விழித்ததும் எதிரில் நின்றிருந்த மந்திரி, “மன்னா... நம் நாட்டில் நேற்று இரவு மழை பொழிந்தது. வயலை உழுவதற்கு உழவர்கள் ஏருடன் செல்லும் கண்கொள்ளா காட்சியை வந்து பாருங்கள்“ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி அழைத்தார்.
   குழப்பத்துடன் எழுந்த மன்னன் சற்று நேரத்தில் தெளிந்தான். இது வரை நடந்தது எல்லாம் கனவு தான் என்று புரிந்ததும், தன்னைத் தானே நொந்து கொண்டான். தான் கனவில் கண்டது போல் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைக்கவே நெஞ்சைப் பயம் கவ்வியது.
   இயற்கையை விட்டு மாறி நடைபெறும் செயல்கள் அனைத்துமே தீங்கைத்தான் விளைவிக்கும் என்பதைப் புரிந்து பெருமூச்சு விட்டு, வயலுக்குப் போகும் உழவர்களைக் கண்டு மகிழ்ந்தான்.

(என்றோ படித்தது)
அருணா செல்வம்.
03.07.2013
   

23 கருத்துகள்:

  1. [[அதுவரை தன் நாட்டு மக்கள் படும் பாட்டை எண்ணி மனம் வருந்தி அப்படியே தூங்கிப் போனான்.]]

    நல்ல மன்னன்! வருந்தியே தூங்கிட்ட மன்னன்!

    [[நம் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காததால் அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது.]]

    அம்மா மெஸ்ஸில் ஒரு ரூபாய்க்கு இட்லி போட்டதால் தமிழ்நாடும் தமிழ்நாடு ஆகப் போகுது!

    லோக்சபா தேர்லதுக்கு அப்புறம் இந்த இலவச இட்லி தமிழ்நாட்டில் நிறுத்தப்படும்; கட்டாயம் நிருத்த வேண்டும்! இல்லாவிட்ட்டால் ஒரு பயலும் உழைக்க மாட்டான்...!

    இது என்னுடய [நீதிக்]மீதிக் கதை!

    இது எப்பூபூ..டி இருக்கு?

    பின்குறிப்பு:
    ஒரு ரூபாய்க்கு இட்லி என்பது முழுக்க முழுக்க இலவசமே; மூன்று வருடம் முன்பு பெசன்ட் நகர் பீச்சுக்கு ஒரு நாள் காலையில் அடையாரில் இருந்து பஸ்ஸில் சென்றபோது..ஒரு ரூபாய் மீதி சில்லறை கேட்டதற்கு என்னை படு கேவலாமாக கண்டக்டர் பார்த்தார்...!

    நானும் மரியாதையாக கண்டக்டரிடம், "keep the change" அப்டின்னுட்டேன்; ஒரு ரூபாய்க்கு அவ்வளவு தான் மதிப்பு அப்போ!
    அப்ப இப்போ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நல்ல மன்னன்! வருந்தியே தூங்கிட்ட மன்னன்!“

      டாக்டர்... தூங்காத மனிதன் கூட உலகில் இருக்கிறானா...?

      “ஒரு ரூபாய்க்கு அவ்வளவு தான் மதிப்பு அப்போ!
      அப்ப இப்போ?“

      பத்து ரூபாய்க்குக் கூட மதிப்பில்லை.

      கருத்திற்கு மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  2. மன்னனின் கனவுக்குள்ளேயே ஒரு கனவா? கதை சொன்ன நீதி அருமை! மிக ரசிக்க வைத்தது! அதுசரி... தொடர்ந்து அருணாவின் மூன்று பதிவுகள் ‘கனவு’ மயமாகவே இரு்க்கே... ரொம்பத் தூங்கறீங்களோ? ஹி... ஹி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ரொம்பத் தூங்கறீங்களோ? ஹி... ஹி...!“

      ஆமாங்க... தூங்கிக்கினே பதிவு போட்டேன்ங்க.

      (“கனவு“ என்ற தலைப்பில் பாடல் எழுதச் சொன்னார்கள். அதுதான் இது. கொஞ்சம் பிரித்துப் போட்டேன்)

      நன்றி பாலகணேஷன் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உண்மையாகி இருந்திருந்தால் நமக்கெல்லாம் எவ்வளவு
      நன்றாக இருந்திருக்கும்... ம்ம்ம்... அந்தக் கொடுப்பினை
      நமக்கு இல்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. அருமையான நீதிக்கதை இது போன்ற நீதிக்கதைகள் படிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க.. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....? கவலையே படாதீங்க.
      நம்மகிட்ட கைநிறைய கதைகள் இருக்கிறது.
      ஆனால் விரும்பிப் படிப்பார்களா.. என்ற சந்தேகத்தில்
      தான் பதிவதில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சங்கவி ஐயா.

      நீக்கு
  5. அருமையான "நீதி"க்கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார் ஐயா.

      நீக்கு
  6. நல்லதொரு நீதிக்கதை அருணா! நீங்களும் பாட்டி ஆகிட்டீங்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பாட்டி ஆகிட்டீங்களோ!

      நீங்களும்....?

      அப்போ... ஏற்கனவே நீங்கள் பாட்டி ஆகிவிட்டீர்களா? வாழ்த்துக்கள்.
      ஆனால் நான் இன்னும் பாட்டி ஆகவில்லை.

      நன்றி ராஜி மேடம்.

      நீக்கு

  7. வணக்கம்!

    வடித்த தமிழ்கண்டு வாக்கொன்று தந்தேன்!
    படித்த தமிழின் பயன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழுக்கே வாக்களிக்கும் தங்கள் மனமோ
      அமிர்தத்தில் தொய்த்த அழகு!

      நன்றி கவிஞர்.

      நீக்கு
  8. கருத்துள்ள கதையை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  9. அருமையான நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  10. //இயற்கையை விட்டு மாறி நடைபெறும் செயல்கள் அனைத்துமே தீங்கைத்தான் விளைவிக்கும்// உண்மையான கருத்துள்ள நீதிக்கதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி தமிழ்த் தாகம்.

      நீக்கு
  11. இயற்கையை பற்றிய மிகவும் அழகான கதை... ரசித்தேன்... மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரவின் புன்னகை.

      நீக்கு
  12. என்றோ படித்ததை நினைவில் வைத்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அருணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு