நட்புறவுகளுக்கு வணக்கம்.
நான்
பிரான்சுவிற்கு வந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சி. என்ன அருணா செல்வம்
இதையெல்லாம் எழுதுகிறார்களே என்று நினைக்க வேண்டாம். நான் கண்ட அனுபவங்களை
உங்களுடன் பகிர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஆரோக்கியமானது தானா? என்ற கேள்விகளை
எழுப்பி உங்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு உதவும் என்று நினைத்தே உங்களுடன்
பகிர்கிறேன்.
ஒரு நாள் நான்
என் கணவருடன் சூப்பர் மார்க்கெட் (தமிழில் எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
தெரிந்தவர்கள் எழுதுங்கள்.) சென்றேன். அங்கே வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிவிட்டு பணம்
கட்டுவதற்காக வரிசையில் நின்றிருந்தோம்.
அங்கே
பொருளுக்கான பில் போடும் வெள்ளைக்காரப் பெண் மிக அழகாக இருந்தாள். வயது
இருபதுக்குள் தான் இருக்கும். எங்களுக்கு முன்னால் வெள்ளைக்காரர் ஒருவர். அவருக்கு
வயது முப்பது முப்பத்தைந்து இருக்கும். அந்தப் பெண் பில் போட்டுவிட்டப் பிறகும்
தேவையில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். (நம்ம பாஷையில் சொல்வதென்றால் ஜொல்லு
வடிந்து கொண்டிருந்தார்)
அந்தப்பெண்ணும்
“பணத்தைக் கொடுங்கள். மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்“ என்று நாசுக்காகச்
சொன்னாள். அவர் எங்களைத் திரும்பிப் பார்த்தார். நாங்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது
அவருக்கும் நன்றாகத் தெரிந்தது. அவர் அதைப் பெரிது படுத்தாமல் பணத்துடன் தன்
விசிட்டிங் கார்டையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் பணத்தை எண்ணி வேண்டிய
மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்துடன் கார்டையும் அவரிடமே திருப்பித் தந்தாள்.
அவர் “இது உனக்குத்
தான். வீட்டில் இன்றிரவு யாரும் இல்லை. நீ வா.“ என்றார் பல்லிளித்தபடி.
அவர் அப்படிச்
சொன்னதும் அவள் கோபப் படுவாள் என்று எதிர்பார்தேன். ஆனால் அவள் சிரித்துக்கொண்டே...
“என்னால் அப்படியெல்லாம் வர முடியாது. வீட்டில் என் கணவர் வேலை முடித்துவிட்டு
வந்து காத்திருப்பார்“ என்றாள்.
அவர் உடனே...
“அதனால் என்ன? வந்து சீக்கிரமாக போய்விடு“ என்றார். (எனக்கோ அதிர்ச்சி)
ஆனால் அவளோ
முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல் “சார்... எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.
நான் இல்லையென்றால் தூங்கமாட்டார்கள். தவிர எனக்கு இப்படியான உறவுகள்
பிடிப்பதில்லை. உங்களின் ஆசை நிறைவேறாத்தற்கு வருந்துகிறேன்“ என்றாள்.
அந்த வெள்ளைக்காரர்
அதன் பிறகு எதுவும் பேசாமல் தன் பணத்தையும் கார்டையும் வாங்கிக் கொண்டு
நகர்ந்துவிட்டார். அவர் முகத்தில் எந்த விதமான ஏமாற்றமும் தெரியவில்லை.
இந்தப் பெண்
முகத்திலும் எந்தக் கோபமோ கவலையோ தெரியவில்லை. அவள் தன்பாட்டுக்குத் வேலையைத்
தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.
எப்படி அந்தப்
பெண்ணால் இவ்வளவு சாதாரணமாக இதை ஏற்றுக்கொள்ள முடிந்தது...? ஆனால் என்னால் இதைச்
சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. “அவள் அவனைத் திட்டியிருக்க வேண்டும்.
அப்பொழுது தான் அவன் அடுத்தப் பெண்களிடம்
இப்படியெல்லாம் பேச பயப்படுவான்.“ என்று என் ஆதங்கத்தை என் கணவரிடம்
கொட்டினேன்.
அவர் சொன்னார்.... “இல்லை அருணா.... இது தான்
ஆரோக்கியமான முறை. அங்கே அந்தப் பெண் அவனைத் திட்டிக் கூப்பாடு போட்டிருந்தால்
நாலு பேருக்குத் தெரியும். அவனுக்கும் அது அவமானமாகப் போய்விடும். அதனால் அவனும்
கோபப்படுவான். இவளைப் பழிவாங்க நினைப்பான். தேவையில்லாமல் ஒரு வில்லன் உருவாகி
விடுவான். எதற்கு இதெல்லாம். அவன் விருப்பத்தைச் சொன்னான். அவள் முடிவை அமைதியாகச்
சொன்னாள். கதை முடிந்தது.“ என்றார் இவரும் சர்வ சாதாரணமாக.
இந்த பதில்
சரிதானா என்ற கேள்வி என் மனத்தில் இன்றும் இருக்கிறது.
நட்புடன்
அருணா செல்வம்.
யோசிக்க வேண்டிய அணுகுமுறைதான்
பதிலளிநீக்குநன்றி குட்டன் ஐயா.
நீக்குஏன் அந்த ஆள் கையில் ஆசிட் இல்லையா?
பதிலளிநீக்குஅரக்கர்கள் கையில் தான் ஆசிட் இருக்கும்.
நீக்குநன்றி நம்பள்கி.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஉங்க கணவர் கூறியதுதான் சரி ,இருவருக்கும் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம்தான் தவறில்லையே ? அப்படிதவராக முறையின்றி நடப்பதுதான் கற்பழிப்பு,கொலை ,என்று உருமாறி சமூக கேடுகளை தோற்றுவிக்குது.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவியாழி ஐயா.
அருணா உங்கள் கணவரின் கருத்து மிக சரி. கோபப்படுவதனால் வீண் பிரச்சினைதான், அவள் மிகவும் நாசுக்காக அவனை தவிர்த்திருக்கிறாள்.
பதிலளிநீக்குசூப்பர் மார்கெட்டுக்கு சரியான தமிழ் பெயர் பலபொருள் அங்காடி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
“பல பொருள் அங்காடி“ இந்த வார்த்தையை நான் ரொம்ப நேரம் தேடினேன். நன்றி.
pathil thappu enpathe -
பதிலளிநீக்குsari-
ithu en karuththu...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீனி ஐயா.
எதிராளி நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்துதான் நம் ரியாக்ஷன் அமையும் அருணா! அவன் தகாத விருப்பத்தை வெளியிட்டதும், கணவன் இருப்பவள் என்பதை அறிந்தும் வந்து போ என்று அழைத்ததும் அநாகரீகத்தின் உச்சம் என்றாலும், அவள் மறுப்பைச் சொன்னதும் விலகிச் சென்ற நாகரீகம் எனக்குப் பிடித்தது. அதனால் அவள் பொறுமையாக விளக்கியிருக்கிறாள். மறுப்பைச் சொன்னதும் விலகாமல் அவன் அடம்பிடித்து தொல்லை கொடுத்திருந்தால்.... அந்தப் பெண் அவனை அடித்து உதைத்திருப்பாள். நம்ம ஊர்ப் பெண் என்றால் கூச்சல் போட்டு ஊரைக் கூட்டியிருப்பாள்!
பதிலளிநீக்குஅவன் அடம்பிடித்திருந்தால் நானே அவனைத் திட்டியிருப்பேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.
இதற்கு ரொம்ப பொறுமையும் முதிர்ச்சியும் தேவை. அந்தப் பெண்ணிற்கு இந்த இரண்டும் இருந்திருக்கிறது.
பதிலளிநீக்குஆமாங்க. நானும் எப்படி அவள் அவ்வளவு பொறுமையாக இருந்தாள் என்று பலமுறை யோசித்ததுண்டு.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
“அவள் அவனைத் திட்டியிருக்க வேண்டும்./////////
பதிலளிநீக்குஇதுதான் நம் தமிழ் பெண்களின் பலயீனம்..
உங்கள் கணவர் சொன்னதே சரியானது
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஆத்மா.
எனக்கு என்னவோ சரியான முறையாகத் தோன்ற வில்லை.இப்படிச் சொல்வதால் அந்தப் பெண்ணுக்கும் விருப்பம் இருப்பதுபோலவே தோன்றும். அடுத்த முறை சந்திக்கும்போது மீண்டும் இதே கேள்வி கேட்பான்.
பதிலளிநீக்குஅந்த நேரத்தில் அவள் எப்படி சமாளிப்பாளோ.
நீக்குஒரு சமயம் வேலை செய்யும் இடம் என்று அவ்வளவு பொறுமையாக இருந்தாளோ... தெரியவில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி முரளிதரன் ஐயா.
பதிலளிநீக்குஉலகம் தெரிந்த மனமுதிர்ச்சியுள்ள பெண். அதை அறிந்து கொண்ட சராசரிக்கும் மேலான உங்கள் கணவர்.! வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.
//http://1.bp.blogspot.com/_PBT9eH6cCGw/TIuugKLzgTI/AAAAAAAAFCA/TlP8hPidNRY/s400/20070102-01.jpg //
பதிலளிநீக்குஇப்படி ஒரு சிலையைவைத்து கோயில்களில் கும்பிடும் நமக்கு, நீங்கள் சொன்ன கதையில் உள்ள எதார்த்தங்களை விளங்கிக்கொள்ள்வது கடினம் தான்.
அட நாந்தாங்க . . .
வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி.
அவள் அழகு அவனுக்கு காமத்தை தூண்டியது
பதிலளிநீக்குஆனால் அவளின் விவேகமோ
அவளின் அறிவின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
அருமையான நிகழ்வை பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்.
இதுவே நம் நாட்டில் நிகழ்ந்திருந்தால் நினைத்து பார்க்கவே முடியவில்லை.
ஒரு திரைப்படமே நடந்து முடிந்திருக்கும்.
கடைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கும்
அவனுக்கு தர்ம அடி விழுந்திருக்கும்
ஊடகங்கள் இதை வைத்தே காசு பார்த்திருப்பார்கள்.
மென்மையான ஆனால் உறுதியான சரியான அணுகுமுறை.
மேலைநாட்டிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு அத்தாட்சி
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி பட்டாபி ராமன் ஐயா.
இந்த மாதிரி பக்குவம் இங்குள்ளோருக்கு வர காலமாகும். ஏனெனில் இங்கு அது போன்ற வளர்ப்பு முறை. காதல் கடிதம் நீட்டும் பையனிடம் தெளிவாகத் தனக்கு அப்படி ஏதும் அபிப்பிராயம் இல்லை என்பதை அவனுக்கு புரியும்படி விளக்கினால் ஆசிட் வீச்சிலிருந்து தப்பிக்கலாமே ? என்ன செய்வது நம் கற்பித்தல் அப்படி...
பதிலளிநீக்குநானும் பதினெட்டு வயது வரையில்
நீக்குஅப்படியே வளர்ந்து விட்டதால்
இங்கே வந்ததும் இந்த நிகழ்வு
ஆச்சர்யமாகவும் கோபமாகவும் இருந்தது என்பதே உண்மை.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
அந்த பெண்ணின் அணுகுமுறை சரியே ..
பதிலளிநீக்குஆனா ஒரே வார்த்தையில் எனக்கு விருப்பமில்லை என்பது பெட்டர்
இந்த பெண் அவரை திட்டியோ இல்லை அவரை செக்யூரிடியிடம் பிடித்து கொடுத்தோ இருந்தால் விபரீதம் ஆகியிருக்கும் .
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
hello aruna..ungal kanavar sonathu than sari...பிரான்சில் இன்று இல்லை பல நாட்களாக இப்படிதான்.நானும் உங்களை போன்று பிரான்சில் நீண்டகாலமாக வசிக்கும் ஒரு பெண்தான்.. நான் இந்தியாவை விட இங்கு மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாகவே உணர்கிறேன்.அந்த பெண் சிரித்துகொண்டே முடியாது என்றதும் அவன் சென்றுவிட்டான் ஒருபோதும் அவளை மீண்டும் தொல்லை செய்யமாட்டான்.அந்த பெண் ஒருவேளை கூச்சல் இட்டு இருந்தால் அவளை தான் நகைத்திருப்பார்கள்.உனக்கு விருப்பமில்லை என்றால் அவனிடம் சொல் அதைவிட்டு ஏன் கத்தி அனைவரையும் தொந்தரவு செய்கிறாய் என்று.இதுவே அவர்களின் கலாச்சாரம்..இது நமக்கு விந்தையாக இருக்கலாம்.ஆனால் இந்த கலாசாரத்தில் எவரும் பெண்களை ஏமாற்றியோ, கடத்தி சென்றோ விபசாரத்தில் தள்ளுவதில்லை.பேருந்திலோ ரயிலிலோ எவ்வளவு நெருக்கடியிலும் பெண்களை கண்ட இடத்தில் தீண்டிபார்ப்பதில்லை.
பதிலளிநீக்குதன்னை வேண்டாம் என்றவள் வாழ கூடாது என்று ஆசிட் ஊற்றுவதில்லை.நம் கலாச்சாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு கட்டட்ட சுதந்திரத்தில் வாழும் இவர்கள் நாட்டில் ஒருபோதும் பெண்கள் துன்புருதப்படுவதில்லை.
தனிமனித ஒழுக்கம்,கட்டுபாடான சுதந்திரம்,ஒருத்தனுக்கு ஒருத்தி,குடும்ப மதிப்பு என்று பலவற்றை உள்ளடக்கிய நம் கலாச்சாரத்தில் தான் தவறுகள் அதிகம் நிகழ்கின்றன என்பதே வேதனைக்குரியது.
-கவிதா
கவிதா... (ஆதிரா)
நீக்குஎப்பொழுதுமே மூடி இருக்கிற பொருளுக்குத் தான் மதிப்பதிகம்.
தங்களின் முதல் வருகைக்கும் விரிவான கருத்தோட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி.
அருணா உண்மை சொன்னால் நான் இப்படி நிறையவே தவிர்த்திருக்கிறேன்.எங்கள் ஆண்கள்தான் திரும்பத் திரும்பக் கரைச்சல் தருவார்கள்.இல்லை கதை கட்டி விடுவார்கள்.ஐரோப்பியர்களின் நல்ல குணமென்றே நான் சொல்வேன்.கேட்பதும் தவிப்பதும் அவர்கள் இயல்பு.பிடித்தால் கேட்பார்கள்.இல்லையென்றால் நம்பி அவர்களோடு ஒரு அறையில்கூடத் தங்கலாம்.அப்படி நம்பிக்கையானவர்கள் !
பதிலளிநீக்குஉங்களின் கருத்து உண்மைதான் ஹேமா.
நீக்குஇவர்களின் பக்குவம் நம்மவர்களுக்கு வர
இன்னும் எத்தனை யுகங்கள் தேவையோ...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.