திங்கள், 16 பிப்ரவரி, 2015

கருணையெனும் இறைவன்!!



இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
   இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
   மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
   கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
   நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ?!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
   எம்மதத்தில் உள்ளதென்றும் அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
   உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!
   பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தின் மறைந்திருக்கும் மழையைப் போல
   காலமுடன் உதவுகின்ற எண்ணம் ஓங்கும்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
   அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
   பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
   உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
   கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!

அருணா செல்வம்

16.02.2015

21 கருத்துகள்:

  1. புகைப்படமும் கவிதையும்
    மனதில் தெளிவைத் தந்து போனது
    ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இந்தப் புகைப்படத்திற்காகவே எழுதிய கவிதை ஐயா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  2. //ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
    உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
    பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!
    பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்//

    கஷ்டமான விஷயம். :)))

    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனும் தெய்வமாகுவது கஷ்டமான விஷயம் தான் ஸ்ரீராம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  3. ---\\\அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
    அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன---///
    படம் ஒன்றே போதும் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் உண்மையில் என் நெஞ்சத்தைத் தொட்டது....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. // நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்திருக்கும்... //

    ஆகா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் உண்மையை ரசித்து எழுதியமைக்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. என் தம்பி படத்தில் பாடல் ஒண்ணு இருக்கு..

    முத்துநகையே உன்னை நானறிவேன்னு ஆரம்பிக்கும்.

    கால் நடக்க முடியாத ஒரு சிறுமியின் காலைப் பார்த்து.."காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு கருணை என்றொரு பேர் எதற்கு?"னு வரும்.

    www.youtube.com/watch?v=Abx4gUGqAlU

    இதுபோல் வாழக்கையில் குறையுள்ளவர்களாக பிறந்தவர்கள், அவலட்சணமாகப் பிறந்தவர்கள், எந்தத் தவறும் செய்யாமல் குற்றவாளிக்கப்படுகிறவர்கள் எல்லாம் இறைவனை "கருணையானவன்" என்று நினைப்பது கஷ்டம்னு நான் நினைக்கிறேன்...

    இறைவன் ஒரு சிலருக்கு கருணையானவன்னு வேணா சொல்லலாம். கருணைக்கு மறுபெயர் இறைவன் என்பதெல்லாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வது ரொம்பக் கஷ்டம்ங்க, அருணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வருண் சார்.

      கருணை என்பது.... தனக்கு வரும் இடர்களை நினைக்காமல் அடுத்தவர்க்கு உதவுவது.
      அன்பே சிவம் என்றார் திருமூலர்.
      என்னைப் பொருத்தவரையில் அன்பு என்பதில் கூட கொஞ்சம் சுயநலம் கலந்து தான் உள்ளது.
      ஆனால்.....
      தெருவில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒருவரை..... இவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால்.... ஆயிரம் பிரட்சனை வருமே.... என்று யோசிக்காமல் யாரோ ஒருவரை வேறு யாரோ ஒருவர் எடுத்துச் சென்று உதவினால் அதில் சுயநலம் இல்லை. விபத்துக்குள்ளான அந்த நபரின் மீது திடீரென்று பாசம் அன்பு வந்து விடவில்லை. இங்கே சுயநலமில்லாமல் உதவுவது தான் கருணை.
      அப்படி உதவியவர்.... அந்த விபத்தக்குள்ளான மனிதருக்கும்
      அவரின் குடும்பத்தாருக்கும் கடவுளாகத் தான் தெரிவார். இதெல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளும் உண்மைகள்.

      என் தம்பி... கண்ணதாசன் பாடல்..... அற்புதமான பாடல். கண்ணதாசன் அதை விட அற்புத கவிஞர். அதனால் தான்.... தெய்வத்திற்கு கருணை என்றொரு பேர் எதற்கு.... அவர் அதைவிட உயர்ந்தவர் என்ற பொருளில் பாடியுள்ளார்.

      நண்பரே..... நானும் தெய்வத்தை கருணை உள்ளவர் என்று பாடவில்லை. கருணை உள்ளம் கொண்டவரின் முகத்திலே இறைவனைக் காணலாம் என்றே பாடியுள்ளேன். பாடலைத் திரும்பவும் படியுங்கள்.

      கடைசியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்.... கடவுளைப் படைத்தவர்கள் இன்றும் உளியுடனும் சுத்தியலுடனும் தான் திரிகிறார்கள்.
      நாம் கடவுளைக் காண வேண்டுமென்றால்..... அவரைக் கல்லிலே தேடக்கூடாது.
      நன்றி நண்பரே.

      நீக்கு
  6. \\கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
    கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!//

    அருமையான கவிதை, தீய எண்ணங்களையும் செயல்களையும் களைந்தால் கடவுள் நம் மனதில் குடியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  7. கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
    கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!

    உண்மைதான்! பாடல் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  8. ஒட்டுமொத்த கவிதை வரிகளும் உங்கள் உள்ளத்தில் விரவிக் கிடக்கும் கருணை உணர்ச்சியின் வெளிப்பாடு அருணா.

    பதிலளிநீக்கு
  9. பார்த்தவுடன் சிலிர்ப்பூட்டும் படம்!

    மகிழ்ச்சி அருணா.

    பதிலளிநீக்கு
  10. படமும் அதற்கான கவிதையும் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  11. அழகான படம்.

    படத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் பாவரிகள்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
    எம்மதத்தில் உள்ளதென்றும் அறிய வேண்டாம்!
    ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
    உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
    பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!
    பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்// பிடுங்கி எறிந்து விட முடிந்து எறிந்து விட்டால் இந்த உலகமே எப்படி மாறிவிடும்....ஐடியல் திங்கிங்க் தான்....

    படம் அழகு....வரிகளும்....

    பதிலளிநீக்கு