(கவிதைக் கதை)
மாலை மயங்கும் நேரமது
மஞ்சள் குளித்த வானத்தில்
வேலை முடித்த கதிரவனோ
வீடு தேடிப் புறப்பட்டான்.
பாலை வனமாய்க்
காய்ந்திருந்த
பாவை நெஞ்சை நெகிழவைத்த
சோலைக் குயிலின்
கானத்தால்
சொக்கி நுழைந்தேன் சோலைக்குள்!
வனத்தில் உயர்ந்த
சிலமரங்கள்
வானைத் தொடவே முயற்சித்துத்
தனத்தால் உயர்ந்த
குடிமகன்போல்
தலையை நிமிர்த்தி நின்றதங்கு!
மனத்தால் உயர்ந்த
தாயைப்போல்
மாசு வற்றக் கிளைவிரித்தே
சினத்தால் எரிக்கும்
கோடையிலும்
சிலதைக் காக்கும் பலமரங்கள்!
சின்னச் சின்னச்
செடிகளிலே
சிந்தை ஈர்க்கும் புதுமலர்கள்!
தன்னந் தனிமை
நிலையினிலும்
என்னை இழுத்த நறுமணத்தால்
இன்னல் கொஞ்சம்
கூடியது
இன்பத் துணையைத் தேடியது.
கன்னம் சிவக்க
நின்றிருக்க
கண்ணை மயக்கும் காட்சியொன்று!
வட்டப் பூவின்
மையத்தில்
வடிவாய் அமர்ந்து தேன்குடித்த
பட்டாம் பூச்சின்
இறக்கையிலே
படத்தை யார்தான் வரைந்தாரோ!
சொட்டுத் தேனை
உண்டவண்டு
சொல்லில் சேரா இசையினிலே
மொட்டும் மயங்கும் வண்ணத்தில்
மொய்த்துப் பாடிப் பறக்கிறதே!
இதயம் வருடும் மெல்லிசையாய்
காற்றில் கரைந்த
குயிலோசை
காதில் புகுந்து எனைமயக்கி
ஊற்றின் குளிரின்
இதமென்று
உட்கார்ந் திருந்த வேலையிலே
சீற்றம் கொண்ட
கருங்குயிலோ
சினந்து என்னை முறைத்ததுவே!
“சோக கீதம்
பாடுகிறேன்
சுகமாய் அதைநீ ரசிப்பாயா?“
வேக மாகக்
கேட்டதென்னை !
வெறித்தே அதனை நோக்கினேன்நான்!
“தாகம் கொண்ட
பாபொருளைத்
தமிழில் சொல்வேன் கேள்பெண்ணே!“
ஏக வசத்தில்
சொல்லியதை
எடுத்து கவியில் எழுதுகிறேன்!
“சீதை இருந்த
தீவதுதான்!
சீரும் சிறப்பாய் வாழ்ந்தோமே!
கீதை வழியில்
நிலம்கேட்க
கீழோர்க் குணத்தைக் கண்டேனே!
போதைக் கொண்டு
போர்புரிய
பேதைப் பெண்கள் என்செய்வோம்!
பாதை முழுதும்
குண்டிருக்க
பதுங்குக் குழியில் இருந்துவந்தோம்!
கொஞ்சம் கூட
இரக்கமின்றிக்
குஞ்சு மூப்புப் பாராமல்
அஞ்சி நின்ற
அனைவரையும்
அழித்தார் அந்த அரக்கர்கள்.
கெஞ்சி அழுத பெண்ணினத்தைக்
கெடுத்து மேலும் அழவைத்தார்.
மிஞ்சி இருந்த உயிர்காக்க
மேலை நாட்டிற்(கு) ஓடிவந்தோம்!
உண்டு உறங்கி வாழ்ந்தயிடம்
உயிர்கள் துடித்த கொலைக்களமாய்க்
குண்டு பொழியும் நிலமெல்லாம்
குருதி பாயும் வயல்வெலியாய்
வண்டு பாடும் சோலையெல்லாம்
வாசம் நாறும் பிணக்கிடங்காய்க்
கண்டு மனமோ துடித்தாலும்
கனத்தை இறக்கும் இடமேது?“
“என்று நானோ பாடுகிறேன்!
இனிக்கும் சுவையா இதிலுள்ளது?“
என்றே கேட்ட கருங்குயிலின்
ஏக்கம் எனக்குப் புரிகிறது!
என்ன சொல்லி என்னபயன்?
எல்லாம் இழந்தும் நின்றாலும்
என்றும் எனதே எனநினைக்கும்
எழுச்சி மனத்துள் வேண்டுமன்றோ!!
அருணா செல்வம்
18.02.2015
எவ்வித இன்னல்கள் என்றாலும் கண்டிப்பாக எழுச்சி வேண்டும்...
பதிலளிநீக்குகவிதை வடிவில் கதை அருமை! கதை தந்த கருத்தும் அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
அருமையான படைப்பு.
பதிலளிநீக்குபாராட்டுகள்.
நட்புறவுகளே..... உங்களின் கருத்தக்களைத் தெரியாமல் கை தவறி அலைத்து விட்டேன். மன்னிக்கவும்.
நீக்குஇந்தப் பதிவுக்குக் கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.
மிக மிக ரசித்தோம்.....அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு