திங்கள், 9 பிப்ரவரி, 2015

பாதையெங்கும் மலர்ச்சோலை!



அன்னை கையில் தவழ்ந்திருக்க
   ஆசை எதுவும் மனத்திலில்லை!
முன்னைத் தெய்வம் இதுவென்ற
   மூத்தோர் சொல்லை நம்பவில்லை!
பொன்னைப் பொருளைத் தந்தாலும்
   போற்றி வைத்துச் சேர்க்கவில்லை!
பண்பு பொங்கும் தாய்ப்பிடியில்
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

அடித்த அரட்டை தாங்காமல்
   அன்னை கோபம் கொண்டாலும்
வெடித்த சிரிப்பை அடக்காமல்
   வெண்மை உள்ளம் கொண்டிருந்தும்
நடிப்பு என்ப(து) அறியாமல்
   நட்பை நெஞ்சில் உயர்த்திநின்று
படித்த இளமைக் காலத்தில்
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

உருவ அமைப்பில் இளமைபொங்க
   உருத்தும் கண்ணால் மனம்பொங்க
கரு...மை விழியைக் காந்தமென்று
   கவிதை பாடும் காளையரை
அருகே கண்டும் அலட்சியமாய்
   அழகு கொடுத்த போதையுடன்
பருவ வயதில் நடந்துசென்ற
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

அந்த நாளில் அமைந்ததெல்லாம்
   அதுவே தானாய் முளைத்ததுவே!
இந்த நாளில் நினைப்பதெல்லாம்
   இயற்கை மாற்றுச் செயலதுவே!
சொந்த ஊரின் சுடுமண்ணும்
   சொர்க்கப் பூமி எனப்பாடும்!
வந்த இடத்தில் வளமிருந்தும்
   வளர்ந்த இடத்தை மனம்தின்னும்!

சின்ன வயது நிகழ்வெல்லாம்
   சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
இன்பம் பொங்கும் அந்நாளே
   இனிக்க வருமா எனஏங்கும்!
இன்றும் குழந்தை யாகிவிட
   எண்ணும் நெஞ்சம்! கனவெனினும்
அன்று நடந்த பாதையெல்லாம்
   அழகாய் மலர்ந்த சோலைகளே!


அருணா செல்வம்.

5 கருத்துகள்:

  1. ///சின்ன வயது நிகழ்வெல்லாம்
    சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
    இன்பம் பொங்கும் அந்நாளே///
    எந்நாளும் அந்நாளாய் இனிக்கட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. இளம் பிராயத்தின் இனிமையான நினைவுகள்....

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு