புதன், 14 மே, 2014

பதினாறும் பெற்று.....




    மாலினி, திருமணம் முடிந்து முதல் முறையாக சங்கரன் ஐயா காலில் விழுந்து வணங்கினாள்.
   அவர், “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க“ என்று முகம் மலர ஆசி கூறினார்.
   மாலினிக்கு வந்ததே கோபம்..... “என்ன மாமா நீங்க? நீங்க மட்டும் ரெண்டே ரெண்டு பிள்ளைகளோட நிறுத்திக்கிட்டீங்க. என்னைமட்டும் பதினாறு பெத்துக்க சொல்லுறீங்களே....“ என்றாள் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு.
   “அம்மாடி.... இந்த காலத்துல பதினாறு பிள்ளைங்க பெத்தால் என்னவாவது....? நான் பதினாறு பிள்ளைகளைச் சொல்ல வில்லையம்மா. பதினாறு பேருகளைச் சொன்னேனம்மா“ என்றார் சங்கரன் ஐயா சிரித்தபடி.
   “பதினாறு பேருகளா....?“ மாலினி விழித்தாள்.
   “ஆமாம். அந்தப் பதினாறு பேருகளைக் காளமேகப் புலவர் ஒரு செய்யுளில் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் தெரியுமா...?“
   “என்ன காளமேகப் புலவர் சொல்லி இருக்கிறாரா? எனக்குத் தெரியாது மாமா. நீங்களே சொல்லுங்கள்.“ ஆவலுடன் கேட்டாள் மாலினி.

அவர் சொல்லத் துவங்கினார்.

துதிவாணி வீரம் விசயஞ் சந்தானம் துணிவுதனம்
அதிதானியஞ் சௌபாக்கியம் போக – வறிவழகு
புதிதாம் பெருமை யறங்குலநோ வகல்பூண்வயது
பதினாறுபேறும் தருவாய் மதுரைப் பராபரனே.

இது தானம்மா அந்த பாட்டு. பொருளைச் சொல்கிறேன் கேள்.

1 துதி – புகழ்
2. வாணி – கல்வி
3. வீரம் – மனவுறுதி
4. விசயம் – வெற்றி
5. சந்தானம் – மக்கட்பேறு
6. துணிவு – தைரியம்
7. தனம் – செல்வம்
8. அதிதானியம் – அதிகமான தானியவளம்
9. சௌபாக்கியம் – சிறந்த இன்பம்
10. போகம் – நல்ல அனுபோகம்
11. அறிவு – ஞானம்
12. அழகு – பொலிவு
13. புதிதாம் பெருமை – புதியதாக வந்து நாளுக்கு நாள் சேர்கின்ற சிறப்பு
14. அறம் – அறஞ்செய்யும் பண்பு
15. குலம் – நல்ல குடிப்பிறப்பு
16. நோவகல் பூண்வயது – நோயில்லாமையோடு கூடியமைந்த நீண்ட ஆயுள்

என்று சொல்லப்படுகின்ற இந்தப் பதினாறு பேறுகளையும் தந்து எனக்கு அருள் செய்வாயாக.
  
இது தானம்மா அந்தப் பாட்டின் பொருள்.

இவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லி ஆசி கூறாமல், இந்த பதினாறு நல்லவைகளும் கிடைக்கவேண்டும் என்று சுறுக்கமாகப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கஎன்று நம் முன்னோர்கள் ஆசி கூறினார்கள். நானும் அது போலவே உன்னை வாழ்த்தினேன்“ என்றார் சங்கரன் மாமா.
   “ரொம்ப நன்றி மாமா. நீங்க இப்படி விளக்கம் கூறலைன்னா நான் இந்தப் பதினாறும் பெற்று என்பதற்கான விளக்கத்தை அறியாமலேயே இருந்திருப்பேன்“ என்று சொல்லி மகிழ்ந்தாள் மாலினி.

அருணா செல்வம்.
14.05.2014

21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  2. இந்த 16 ல் நீங்கள் எத்தனை பெற்று இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதினாறையும் பெற்றிருக்கிறேன் மதுரைத் தமிழரே.
      என்ன மனித மனத்திற்கு தான் நிறைவு என்பதே இல்லையே. அதனால் மேலும் மேலும் இவையாவும் கிடைக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறது.

      நீக்கு
  3. போட்டாச்சு போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  4. விளக்கத்தை புதுமாதிரியாகச்
    சொல்லிச் சென்றது மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  5. நல்ல பகிர்வு சகோதரியாரே
    குறித்து வைத்துக் கொண்டேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  7. பதினாறு பேரும்..... அறிந்து கொண்டேன். காளமேகப் புலவரின் இப்பாடலையும் முதல் முறையாக படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முன் பதினாறு பேருகளை அறிந்திருந்தேன். ஆனால் காளமேகப் புலவர் தான் எழுதியது என்று தெரியாது. நானும் இப்பொழுது தான் படித்தேன். உடனே உங்களுக்கும் பகிர்ந்தேன்.
      நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  8. பதினாறு பேறுகளையும் அறிவித்த கதை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தளிர்.

      நீக்கு
  9. இந்த பதினாறு பேறுகளை பற்றி முன்னர் படித்தது. மறந்துவிட்டேன் ! உங்களின் இந்த இடுகையின் மூலம் அவற்றை மீன்டும் அறிந்துகொண்டதுடன் மட்டுமல்லாமல், இதன்மூலம் காளமேக புலவர் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

    ஒரு வேண்டுகோள் ! கவிச்சுவைக்கு ஈடாய் நகைச்சுவையும் கலந்த காளாமேக புலவரின் பாடல்கள் அதிகம் பேசப்படுவதில்லை ! முக்கியமாய் இரண்டு... அவர் காரைக்கலையடுத்த பட்டிணத்தில், சத்திரத்தில் இரவு உணவு தாமதமாகிவிட்டது என்ற கோபத்தில் பாடியது மற்றும் ஒளவையாரை நகைப்பது போல தொடங்கி போற்றும் பாடல். இவை இரண்டையும் பல காலங்களுக்கு முன்னால் படித்தது. உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை பற்றியும் எழுதுங்களேன்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமான்யன் அவர்களுக்கு வணக்கம்.

      காலமேகப் புலவரின் பாடல்களில் சிலேடை பாடல்களும், வித்தாரச் செய்யுள்களும் மிகவும் சுவையானவை. கடவுளரைப் பற்றி பாடியிருப்பதும் சிறப்பனவைகள். நேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வொன்றாக வலையில் பதிக்கிறேன்.
      நீங்கள் சொன்ன சத்திரத்துப் பாடல் இருக்கிறது. ஆனால் ஔவையாரைப்பற்றி பாடல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் தேடிப்பார்த்து எழுதுகிறேன்.

      நன்றி.

      நீக்கு